(draft)
இப்பூமியில் வாழ்ந்து காலம் கனிந்தவுடன் உடலைவிட்டு உயிர் பிரியும்போது மரணம் சம்பவித்துவிட்டது எனக் கூறப்படும். உலகில் எதற்காக வாழ்கிறோம், உடல் என்றால் என்ன? உயிர் என்றால் என்ன? உடல் தூலப்பொருளால் ஆனது, உயிர் சூக்ஷ்மம் அல்லது ஆவியாகும். தூலப்பொருளுக்கு அழிவுண்டு ஆனால் ஆவியினால் உருவான ஒன்றை அழிக்க முடியாது. உடலிலிருந்து ஆவி பிரிந்தவுடன் உடல் மண்ணோடு மண்ணாகின்றதென்பது நமக்குத் தெரியும். ஆனால் சூக்ஷ்ம உடலாகிய ஆவி அல்லது ஆன்மா என்னவாகின்றது? இறப்பிற்குப் பின் அதன் நிலை என்ன? இது போன்ற பல கேள்விகளுக்கு பஹாய் திருவாக்குகளிலும் பிற மூலங்களிலும் பல குறிப்புகளைக் காணலாம். அவற்றில சிலவற்றை இப்போது காண்போம்.
ஆன்மாவின் தோற்றம்:
கடவுளின் ஆன்மீக உலகங்களில்தான் ஆன்மாவின் ஆரம்பம் உள்ளது. அது பொருள் மற்றும் பெளதீக உலகம், ஆகியவற்றைவிட மேம்பட்டது. இந்த ஆன்மீக உலகங்களிலிருந்து ஆன்மாவானது தாயின் கர்ப்பத்தில் கரு உருவாகும்போது சேர்ந்து, ஒருவரின் வாழ்வு ஆரம்பமாகிறது. ஆனால் இச்சேர்க்கை பெளதீக நிலையில் ஏற்படும் ஒன்று அல்ல. ஆன்மா ஒன்று உடலில் நுழைவதும் இல்லை; அதைவிட்டு வெளியேறுவதும் இல்லை. மேலும் பெளதீக நிலையில் எவ்வித இடத்தையும் நிரப்புவதும் இல்லை. ஆன்மா பொருள் உலகோடு சேர்ந்ததல்ல. ஒரு கண்ணாடிக்கும் அதில் ஓர் ஒளி பிரதிபலிப்பதற்கும் இடையே உள்ள தொடர்புக்கு ஒப்பானது ஓர் ஆன்மாவிற்கும் உடம்பிற்கும் உள்ள தொடர்பு. கண்ணாடியில் தோன்றும் ஒளி அதனுள் இருப்பதில்லை. அது வெளியே உள்ள ஓர் ஒளியூற்றிலிருந்து வருகிறது. இதைப் போலவே, ஆன்மாவும் உடலின் உள் இருப்பதில்லை. உடலோடு அதற்குத் தனிப்பட்ட சிறப்பானதோர் தொடர்பு இருக்கிறது. அவை சேர்ந்து மனித உயிர் ஒன்றினைத் தோற்றுவிக்கின்றன.
ஆன்மாவும் உடலும்
ஆன்மா உடல் இவற்றினிடையே ஒரு மிகச் சிறப்பான தொடர்பு உண்டு. இவ்விரண்டின் இணைப்பால் மனிதப்பிறவி உண்டாகிறது. இத்தொடர்பானது வாழ்வின் இறப்புவரை நீடித்து நிற்கிறது. இது முடிவடையும் போது உடல் மண்ணின் புழுதிக்கும், ஆன்மா இறைவனின் தெய்வீக உலகிற்குமாக ஒவ்வொன்றும் தாம் தோன்றிய இடத்திற்கே திரும்பிவிடுகின்றன. தெய்வீக இராஜ்ஜியத்திலிருந்து தோற்றுவிக்கப்பட்டு, கடவுளின் சாயல் மற்றும் பிரதிபிம்பமாக உண்டாக்கப்பட்டு, ஆன்மீக நற்பண்புகள் மற்றும் தெய்வீக இயல்புகளை அடைந்திடும் ஆற்றலும் பெற்றுள்ள ஆன்மா உடலிலிருந்து பிரிந்தபின் நித்தியகாலமும் வளர்ச்சி அடைகிறது.
இறப்பிற்குப் பின் ஆன்மாவின் நிலை
“…ஆத்மா உடலைவிட்டுப் பிரிந்த பின்பும் அது, காலங்கள் நூற்றாண்டுகள் ஆகியவைகளின் புரட்சிகளோ இவ்வுலகின் மாற்றங்களோ, தற்செயல் நிகழ்ச்சிகளோ மாற்ற இயலாத ஸ்திதியிலும், நிலையிலும், இறைவனின் முன்னிலையை அடையும் வரை தொடர்ந்து வளர்ச்சிப் பெற்று வரும் என்ற உண்மையினை நீ அறிவாயாக. ஆண்டவனின் இராஜ்ஜியம், அவரது மாட்சிமை, அவரது அரசாட்சி, அதிகாரம் ஆகியவைகள் நிலைத்திருக்கும் வரை அதுவும் நிலைத்திருக்கும். ஆண்டவனின் அடையாளங்களையும் அவரது இயல்புகளையும் வெளிக்கொணர்ந்து, அவரது அன்பு கருணை, வள்ளன்மை ஆகியவைகளை வெளிப்படுத்தும்.”(பஹாவுல்லா)
மரணத்தின் புதிர்
“மனிதனுடைய பெளதீக மரணம் மற்றும் அவனுடைய திரும்புதல் ஆகியவற்றின் புதிர்கள் வெளிப்படுத்தப்படவில்லை, இன்னும் புரிந்துகொள்ள முடியாமல் உள்ளன. இறைவனுடைய நேர்மைத்தன்மையின் சாட்சியாக! அவை வெளிப்படுத்தப்படுமாயின் சிலருக்கு அழிந்துபோகும் அளவிற்கு, அச்சத்தையும் துன்பத்தையும் அவை வருவிக்கும், ம
ற்றவர் இறப்பினை விரும்பி, தங்கள் முடிவினை விரைவுபடுத்துமாறு, ஒரே உண்மையான கடவுளிடம் – அவரது மகிமை மேன்மைபடுத்தப்படுமாக – ஓயாத ஏக்கத்துடன் வேண்டிக்கொள்ளும் அளவிற்கு மகிழ்ச்சியால் நிரப்பப்படுவர்.”(பஹாவுல்லா)கடவுளை அறிந்துகொள்வதின் நன்மை
“ஒரே உண்மையான இறைவனை – அவரது மகிமை மேன்மைபடுத்தப்படுமாக – அறிந்து கொள்வது என்ற மனிதனின் இவ்வுலக வாழ்க்கைக் கனியைச் சுவைத்துள்ளோர் சம்பந்தமாக, மறுமையில் அவர்களது வாழ்க்கை நாம் வருணிக்க முடியாதவாறு இருக்கின்றது. உலகங்கள் அனைத்தின் தேவரான இறைவனிடம் மட்டுமே, அதைப் பற்றிய மெய்யறிவு உள்ளது.”(பஹாவுல்லா)
இவ்வுலக வாழ்வின் நோக்கம்
“மனிதன் தன்னுடைய மனித வாழ்வின் ஆரம்பத்தில் கர்ப்ப உலகில் கருவாக இருந்தான். அங்கு மனித வாழ்வெனும் மெய்ம்மைக்கான தகுதியும், பேறும் பெற்றுக் கொண்டான். இவ்வுலகிற்கான சக்திகளும் திறன்களும் அவனுக்கு அந்த வரம்புக்குட்பட்ட நிலையில் வழங்கப்பட்டன. இவ்வுலகில் அவனுக்குக் கண்கள் தேவைப்பட்டன, அவற்றை அவன் மற்றதிலிருந்து இயல்திறமுறையில் பெற்றுக் கொண்டான். அவனுக்குச் செவிகள் தேவைப்பட்டன. அவன் தனது புதிய வாழ்விற்கு ஆயத்தமாகவும் தயார்படுத்திக் கொள்ளும் வகையிலும், அவற்றை அங்குப் பெற்றுக் கொண்டான். இவ்வுலகில் தேவைப்படும் திறன்கள் அவனுக்குக் கருவுலகில் வழங்கப்பட்டன.”(பஹாவுல்லா)
“ஆகவே, இவ்வுலகில், அவன் மறுமையிலுள்ள வாழ்விற்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இராஜ்ஜியத்தின் உலகத்தில் அவனுக்குத் தேவைப்படுகின்றவற்றை அவன் இங்குப் பெற வேண்டும். இம்மண்டல வாழ்விற்குத் தேவைப்படும் சக்திகளை அவன் கருவுலகில் எவ்வாறு தயார்படுத்திக் கொண்டானோ, அவ்வாறே தெய்வீக வாழ்விற்கான இன்றியமையாத சக்திகள் இவ்வுலகிலேயே இயல்திற முறையில் பெற்றுக் கொள்ளப்படவேண்டும்.”(பஹாவுல்லா)
ஆன்மாவின் தன்மை
“ஆத்மாவின் தன்மையினைப் பற்றித் தாங்கள் எம்மிடம் கேட்டிருக்கிறீர். ஆத்மாவானது ஆண்டவனின் ஓர் அடையாளம்; ஒரு விண்ணுலக இரத்தினக்கல். அதன் மேன்மையினைக் கல்வியில் மிகச் சிறந்த மனிதர்களும் புரிந்து கொள்ளத் தவறியுள்ளனர். அதன் மர்மத்தினை ஒருவரது புத்தி எத்துணை கூர்மையாக இருப்பினும், தெளிவுப் படுத்த வழியே கிடையாது என்பதை மெய்யாகவே அறிவீர்களாக. சிருஷ்டி கர்த்தாவின் உயர்வினை ஒப்புக் கொள்வதில் படைப்புப் பொருட்கள் அனைத்திலும் அதுவே முதன்மையானது. அவரது ஒளியினை அறிந்து கொள்வதிலும், அவரது மெய்ம்மையினைப் பற்றிக் கொள்வதிலும் அவர் முன்னிலையில் தலை குனிந்து பூஜிப்பதிலும் அது முதன்மையானது. அது ஆண்டவனிடத்தில் விசுவாசத்துடன் இருக்குமாயின் அவரது ஒளியினைப் பிரதிபலித்து, இறுதியில் அவரிடமே திரும்பிச் செல்லும். இருப்பினும் தனது சிருஷ்டி கர்த்தாவிடம் கொள்ளும் விசுவாசத்தினில் தவறுமாயின் அது தான் என்னும் அகங்காரத்திற்கும், உணர்ச்சிக்கும் அடிமையாகி, இறுதியில் அவற்றின் ஆழத்தில் மூழ்கி விடும்.”(பஹாவுல்லா)
ஆன்மா உடலைவிட்டுப் பிரியும் போது…
“ஓர் ஆத்மா உடலை விட்டுப் பிரியும் வேளையில் உலக மனிதர்களின் வீண்கற்பனைகளில் இருந்து தூய்மைப் படுத்தப்பட்டிருக்குமாயின் அது பேறு பெற்றதாகும். அப்படிப்பட்ட ஆத்மா அதன் படைப்போனின் விருப்பத்திற்கிணங்கவே வாழ்ந்து, இயங்கி மிக உயரிய சொர்க்கத்தினுள் பிரவேசிக்கும். விண்ணுலகக் கன்னிகளும் மிக உயர்வான மாளிகைகளின் வாசிகளும் அதனைச் சுற்றி வலம் வருவர். இறைவனின் தீர்க்கதரிசிகளும், அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் அதன் உறவை நாடுவர். அவர்களுடன் அவ்வாத்மா தங்குதடையின்றிச் சம்பாஷித்து அது எல்லா உலகங்களிலும் தேவராகிய ஆண்டவனின் பாதையில் சகித்துக் கொண்டவைகளை எல்லாம் அவர்களுக்கு எடுத்துரைக்கும்.”(பஹாவுல்லா)
“இருப்பினும் நாத்திகர்களின் ஆன்மாக்கள், கடைசி மூச்சு விடும் வேளையில் அவர்களது கவனத்தை ஈர்க்காதிருந்த நற் செயல்கள் அனைத்தும் நினைவிற்கு வரும். தங்களது நிலையினை எண்ணி வருந்துவர். இறைவனின் முன்னிலையில் பணிவு காட்டுவர். இதற்கு யாமே சாட்சியம் கூறுகிறோம். உடலை விட்டுத் தங்களது ஆத்மாக்கள் பிரிந்த பின்பும் தொடர்ந்து அவ்வாறே செய்து வருவர்.”(பஹாவுல்லா)
“அவன் பாவிகளை மன்னித்து அவர்களது தாழ்வான நிலையினை நிந்திக்கச் செய்யலாகாது; ஏனெனில் இறுதியில் தன் நிலை எவ்வாறு இருக்கும் என்பது ஒருவருக்கும் தெரியாது. எத்தனை முறை ஒரு பாவி மரணத்தறுவாயில் இருக்கும்போது, நம்பிக்கையின் சாராம்சத்தினைப் பெற்று நிலையான நீரினைப் பருகி விண்படையினரின் முன்னிலைக்கு உயர்ந்திருக்கின்றான்! மற்றும் எத்தனை முறை பக்தியுடைய ஒரு நம்பிக்கையாளன் தனது ஆத்மாவின் பிரிவு நேரத்தில் நரகத்தீயில் விழுமளவு மாற்றம் அடைந்திருக்கின்றான்!”(பஹாவுல்லா)
புரியாத புதிர்களை மறுமையில் அறிந்துகொள்வோம்
“இந்த லெளகீக உலகில், எந்தப் புதிர்களைப் பற்றி மனிதன் கவனமில்லாமல் இருக்கின்றானோ, அவற்றை அவன் விண்ணுலகில் கண்டுபிடிப்பான், மெய்ம்மையின் இரகசியத்தை பற்றி அவன் அங்கு அறிவிக்கப்படுவான்: அப்படியென்றால் தான் நெருங்கி பழகியவர்களை அவன் இன்னும் எவ்வளவு அதிகமாக அடையாளங்காணவோ, கண்டுபிடிக்கவோ முடியும். சந்தேகமின்றி தூய்மையான கண்ணைக்கொண்டு, உட்பார்வைகளைக் கொண்டிருக்கும் சலுகையைப் பெற்ற புனித ஆன்மாக்கள் ஒளிகளின் இராஜ்ஜியத்தில் எல்லா புதிர்களைப் பற்றியும் அறிமுகப்படுத்தப்பட்டு, ஒவ்வோர் உயர்வுமிக்க ஆன்மாவுடைய மெய்ம்மையினைப் பார்க்கும் வெகுமதியை நாடுவார்கள். மேலும் அவர்கள் அவ்வுலகில் இறைவனுடைய பேரழகினை வெளிப்படையாகக் கண்ணுறுவார்கள். அவ்வாறே, கடந்த மற்றும் சமீபத்திய காலங்கள் ஆகிய இரண்டினையும் சார்ந்த இறையன்பர்கள் அனைவரும் விண்ணுலகக் கூட்டத்தினரின் சந்நிதானத்தில் இருப்பதை அவர்கள் காண்பார்கள்.”(பஹாவுல்லா)
“எல்லா மனிதர்களுக்கிடையே உள்ள வேறுபாடும், தனிச்சிறப்பும் இயற்கையாகவே, அவர்கள் இந்த லெளகீக உலகிலிருந்து பிரிந்து சென்றபிறகு, உணரப்படும். ஆனால் இது (தனிசிறப்பு) இடம் சம்பந்தமானதல்ல; ஆன்மா மற்றும் மனசாட்சி சம்பந்தமானதாகும். ஏனெனில் இறைவனுடைய இராஜ்ஜியமானது நேரம் மற்றும் இடம் ஆகியவற்றிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. அது வேறோர் உலகம் வேறொரு பிரபஞ்சம். ஆனால் புனித ஆன்மாக்களுக்காகப் பரிந்துரைப்பு எனும் பரிசு வாக்களிக்கப்பட்டுள்ளது. மேலும் தெய்வீக உலகங்களில் ஆன்மீக அன்பிற்குரியவர்கள் (நம்பிக்கையாளர்கள்) ஒருவரை ஒருவர் அடையாளங்கண்டு (ஒருவரோடு ஒருவருக்கான) இணக்கத்தை – ஆன்மீக இணக்கத்தை நாடுவார்கள் என்பதனை நீங்கள் நிச்சயமாகவே அறிவீர்களாக. அதுபோலவே ஒருவர் மற்றொருவர் பால் செலுத்தப்படும் அன்பானது இராஜ்ஜியத்தின் உலகத்தில் மறக்கப்படாது. அவ்வாறே, நீங்கள் லெளகீக உலகில் வாழ்ந்த வாழ்க்கையை (அங்கே) மறக்க மாட்டீர்கள்.”(பஹாவுல்லா)
உடலைவிட்டுப் பிரிந்தபின் ஆன்மாவின் நிலை
“உடலைவிட்டுப் பிரிந்தபின் ஆத்மாவின் நிலை சம்பந்தமாக மேலும் தாங்கள் என்னைக் கேட்டிருந்தீர்கள். ஒரு மனிதனின் ஆத்மா ஆண்டவனின் வழியில் சென்றிருக்குமாயின், அது நிச்சயமாக அன்பரின் ஒளியின்பால் திரும்பி அவரால் ஒன்று சேர்த்துக் கொள்ளப்படும் என்பதனை மெய்யாக நீங்கள் அறிந்து கொள்வீர்களாக. ஆண்டவனின் மெய்ம்மைத் தன்மை சாட்சியாக! அது, எந்த எழுதுகோலும் விளக்கவோ எந்த நாவும் வர்ணிக்கவோ இயலாத நிலையினைச் சென்றடையும். ஆண்டவனின் சமயத்தின்பால் விசுவாசத்தோடு இருந்து அவரது வழியில் அசையாத வலுவுடன் நிற்கும் ஓர் ஆத்மா மேலுலகை எய்தியதும், எல்லாம் வல்லவர் படைத்துள்ள உலகங்கள் அனைத்தும் அவர் மூலம் பயன் பெறும் அளவு அத்துணைச் சக்தியினைப் பெறும்.”(பஹாவுல்லா)