இமாம் மஹதி தோன்றப்போகிறாரா?


ஈரான் நாட்டின் தலைமைத்துவம், முக்கியமாக அஹமதிநிஜாட், ஆயாத்துல்லா காமேனி இருவருமே ஷீயா இஸ்லாத்தில் முன்கூறப்பட்டுள்ள இமாம் மஹதி இப்பூமியில் வெகு விரைவில் தோன்றப்போவதாக கூறிவருகின்றனர்.

“இமாம் மஹதி குறித்த விஷயம் அதி முக்கியமானது, மற்றும் அவரது மறுதோன்றல் புனித இஸ்லாம் சமயத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாம் காலமுடிவு மற்றும் இமாம் மஹதியின் சகாப்தம் குறித்து கற்றும் நினைவூட்டிக்கொள்ளவும் வேண்டும்… நாம் சூற்றுச்சூழலை அவ்வருகைக்காக தயார் செய்ய வேண்டும், அதனால் அப்பெருந்தலைவர் வருவது சாத்தியமாகும்,” என காமேனி கூறிவருகிறார்.

ஷீயா சமய சித்தாந்தத்தில் உலகைப் பெரும்போர்கள் சூழவிருப்பதாகவும், அதன் விளைவாக உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் அச்சண்டையில் மாண்டுபோவர் எனவும், மேலும் மூன்றில் ஒரு பங்கினர் பசியாலும், சட்டமின்மையாலும், பேரழிவாலும் மடிவர் எனவும் கூறப்பட்டுள்ளது. “இஸ்ரேல் நாடு அழிக்கப்பட வேண்டும் எனவும், அதன் பிறகுதான் 12வது இமாமாகிய இமாம் மஹதி மறுபடியும் தோன்றி நாஸ்திகர்கள் அணைவரையும் கொன்று, இஸ்லாத்தின் விருதுகொடியை உலகின் எல்லா மூலைகளிலும் ஏற்றிடுவார்,” என்பது காமேனியின் கூற்று.

“இப்போது அவருடைய வருகைக்காக தயார் செய்வது நமது கடமையாகும்… நாம் 12வது இமாமின் வீரர்களாக இருப்பின் நாம் போரிடுவதற்கு தயாராக இருக்கவேண்டும்,” என காமேனி மேலும் கூறியுள்ளார்.

“அல்லாவின் வழிகாட்டலிலும், அவரது கண்ணுக்கு கட்புலனாகாத உதவியினாலும், உலகளாவிய நிலையில் இஸ்லாமிய நாகரிகத்திற்கு பெருமை தேடி தருவோம்… இதுவே நமது விதி… இளைஞர்களும், விசுவாசிகளும் இத்தகைய பெரும் நடவடிக்கைக்குத் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.”

திருக்குரானைக் குறிப்பிட்டு, இவ்வருகை அல்லாவினால் வாக்களிக்கப்பட்டுள்ளது என காமேனி கூறுகிறார். “உலகில் உள்ள கொடுங்கோண்மை சக்திகள் அழிக்கப்படும் மற்றும் இமாம் மஹதியின் சகாப்தம் குறித்து மானிடம் அறிவொளி பெறும்,” என காமேனி மேலும் கூறியுள்ளார்.

இன்று இரான் நாட்டின் நடத்தைக்கான விளக்கம் இந்த இமாம் மஹதியின் வருகை குறித்த கருத்தின் அடிப்படையிலேயே காணப்படுக்கூடும்.

மேலும் தொடர்வதற்கு முன்பாக இந்த இமாம் மஹதி என்பவர் யார் என்பதைப் பார்ப்போம். இறைத்தூதர் முகம்மது அவர்கள் தமக்குப் பின் தமது வாரிசாக எழுத்துப்பூர்வமாக யாரையும் நியமிக்கவில்லை. ஆனால், சில வேளைகளில் தாம் தமக்குப் பின் தமது குடும்பத்தினரை விட்டுசெல்வதாக கூறியுள்ளதாக ஷீயா வர்க்கத்தினர் கூறுகின்றனர் ஆனால் சுன்ன வர்க்கத்தினர் இதை ஒப்புக்கொள்வதில்லை. நபியவர்களின் மரணத்திற்குப் பின் தலைமைத்துவ பிரச்சனைகள் உருவாக்கிய வேறுபாடுகளினால் இஸ்லாம் சமயம் இரு கூறாகப் பிரிந்தது. ஒரு சாரார் முகம்மத் அவர்களுக்குப் பின் அவரின் மருமகனும் பாத்திமா அம்மையாரின் கனவருமாகிய அலி அவர்களே இஸ்லாத்தின் தலைவர் மற்றும் அதன் முதல் இமாமும் ஆவார் என வாதிட்டனர். ஆனால் முதல் கலீஃபாவான அபு பாக்கரைச் சுற்றியிருந்தோர் அக்கருத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தனர், மாறாக அபு பாக்கர் முதல் கலீஃபாவாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

முதல் இமாமாகிய அலியவர்களின் மகன்களும் நபியவர்களின் பேரர்களுமாகிய ஹாஸானும் அவருக்கு பிறகு ஹுஸேய்னும் ஷீயா மரபினரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது இமாம்களானார்கள். ஆனால், இஸ்லாம் சமயத்துள் ஏற்பட்ட தலைமைத்துவ வேறுபாடுகளினால் விளைந்த போர்களில் முதல் மூன்று இமாம்களும் கொடூரமாக கொல்லப்பட்டும் அதற்குப் பின் வந்த எட்டும் இமாம்களின் கதியும் இத்தகையதாகவே ஆயிற்று. பன்னிரண்டாவதாக வந்த இமாம் சிறு வயதிலேயே மறைந்துவிட்டார் எனவும் இந்த பன்னிரண்டாவது இமாமே பூமியில் மறுபடியும் இமாம் மஹதியாக அவதரிப்பார் என்பது ஷீயா ஐதீகமாக இருந்துவந்துள்ளது. இப்போது இரான் நாட்டு அரசாங்கமும் அதற்காகத்தான் தயாராகி வருகின்றது.

ஆனால், இங்கு விந்தை என்னவெனில், 1844ல் (ஹிஜ்ரி 1260)ஷிராஸ் நகரைச் சார்ந்த சையிட் அலி முகம்மத் எனும் ஓர் இருபத்துநான்கு வயது இளைஞர் சமயங்கள் அனைத்திலும் வாக்களிக்கப்பட்ட அந்த ‘மறுவருகை’ தாமே எனவும் அதன்றி தாம் தமக்குப் பின் தோன்றவிருக்கும் ஒரு மாபெரும் இறைத்தூதருக்கு வெறும் முன்னோடியே எனவும் அறிவித்தார். இதன் பயனாக அப்போதைய ஈராண் நாடு பெரும் கொந்தளிப்பிற்கு ஆளாகி இந்த ஸையிட் அலி முகம்மத் அல்லது பாப் என்பாரின் விசுவாசிகளில் சுமார் முப்பதாயிரம் பேர்கள் தங்கள் உயிர்களை இழந்தனர். இரான் நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் பாப் அவர்களை அப்போது ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகின்றது. இந்த ஹிஜ்ரி 1260 (கி.பி.1844) பல ஹதீசுக்களில் இந்த இமாம் மஹதி, இயேசு போன்றோரின் மறுவருகைக்கான வருடம் என சிலேடையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாப் அவர்களுக்குப் பிறகு 1863ல் மிர்ஸா ஹுஸேய்ன் அலி என்பவர் பாப் அவர்களால் முன்கூறப்பட்ட இறைத்தூதர் தாமே என டைகிரிஸ் நதிக்கரையில் உள்ள நஜிப்பிய்யி பூங்காவில் தம்மைச் சுற்றியிருந்தோரிடம் அறிவித்தார். தமது ஒரே குறிக்கோள் அல்லது இறைப்பணி உலகத்தை ஒரே கடவுள் நம்பிக்கையின் கீழ் ஒற்றுமைப் படுத்துவதே ஆகும் என கூறினார். கடவுள் மனிதனை அன்பின் காரணமாகவே படைத்துள்ளார் எனவும், மனிதனின் இவ்வுலக வாழ்வு தன்னைப் படைத்த கடவுளை அறிந்து அவருக்கு சேவை செய்வதுமே நோக்கமாகும் என போதித்தார். பஹாய்கள் எக்காரணத்திற்காகவும், தற்காப்பிற்காகக்கூட பிறரை கொலை செய்வதை பஹாவுல்லா முற்றாக தடை செய்துள்ளார் — கொல்வதைவிட கொல்லப்படுவதே மேலாகும். ஒரு புதிய உலகை உருவாக்குவதற்கு யாரும் யாரையும் கொல்லவேண்டிய அவசியம் இல்லை.

கடவுள் தூதர்கள், என்றுமே மக்கள் தங்கள் மனதில் உருவாக்கிக்கொள்ளும் கற்பனா ரூபத்தில் தோன்றுவதில்லை. உதாரணமாக இயேசு நாதர் டேவிட்டின் அரியனையில் அமர்ந்து கையில் செங்கோல் பிடித்து ஆட்சிபுரிவார் என பழைய ஏற்பட்டு நூலில் உள்ள தீர்க்கதரிசனங்கள் கூறுகின்றன. ஆனால் அவர் பிறந்ததோ ஒரு மாட்டுத் தொழுவத்தில், அவர் தகப்பனார் தச்சுவேலைக்காரர். டேவிட்டின் அரியனை என்பது ஆன்மீக சாம்ராஜ்யம் சார்ந்தது. ஆனால், அதை அகக்கண்ணால் காண முடியாத யூதர்கள் அவரை நம்பாமல் கேலி செய்து இறுதியில் அவர் மரணத்திற்கே காரணமாயினர். அதே போன்று அவரின் மறுவருகையின் போது அவர் வானத்தில் தமது தேவகனங்கள் எக்காளம் இசைக்க பூமிக்கு வருவார் என புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்கள் கூறுகிறன. ஆனால் இது பௌதீக ரீதியில் எவ்வாறு சாத்தியப்படும் என்பது தெரியவில்லை. ஆன்மீக ரீதியான விஷங்களை லௌகீக ரீதியில் உருவகப்படுத்தி மனித வார்த்தைகளில் வடித்திடும் போது ஏற்படும் தடுமாற்றமே இது. இதன் காரணமாகவே பாப் அவர்கள் அகாலத்தில் மரணமுற நேர்ந்தது, பஹாவுல்லா கைதியாகவும், நாடுகடத்தலுக்கு ஆளாகவும் நேர்ந்தது. இரான் நாட்டிலிருந்து பாக்தாத்திற்கும், பிறது இஸ்தான்புல்லிற்கும், அங்கிருந்து எடிர்னே நகருக்கும், பிறகு பாலஸ்தீனத்தின் ஆக்கோ நகரின் சிறைக்கோட்டையில் அடைக்கப்பட்டார். இன்று அவரது நல்லடக்க நினைவாலயமும் பாப் அவர்களின் நல்லடக்க நினைவாலயமும் சரித்திரத்தின் கோலாறால் இஸ்ரேல் நாட்டில் இருக்கின்றன.

இமாம் மஹதி தோன்றிவிட்டாரா இல்லையா எனும் கேள்விக்கான பதில் மனத்தூய்மையோடு செய்யப்படும் தன்னிச்சையான ஆய்வில்தான் காணப்பட வேண்டும். அன்றி, மனிதர்கள் தங்கள் மனதின் கற்பனைகளுக்கு ஏற்ப அவதாரங்களை எதிர்பார்த்திடும்போது மிஞ்சுவது பெரும் துன்பமே.