மெய்ம்மையைத் தேடுவோருக்கான வழிகாட்டி


காலங்காலமாக மனிதன் உண்மையை அல்லது மெய்மையைத் தேடி காடு, மேடு, வனவாசம், துறவறம், சன்னியாசம் என பலவகைகளில் முயற்சித்து வந்துள்ளான். கடவுள் மனித அறிவுக்கு அப்பாற்பட்டவர், மனிதன் அவரை சமநிலையிலிருந்து அறிந்துகொள்ள முடியாது. ஆனால், கடவுளின் பண்புகளின் வாயிலாக அவரை அறிந்துகொள்ளலாம். சூரியனை அதன் வெப்பம், வடிவம், ஒளி ஆகியவற்றின் மூலம் நாம் தெரிந்துகொள்வதற்கு இது சமமானதாகும். படைப்பனைத்தும் அதனதன் சாயலில் படைக்கப்பட்டுள்ளன, ஆனால் மனிதன் மட்டும் இறைவனின் சாயலில் படைக்கப்பட்டுள்ளான் என புனித நூலான விவிலியத்தில் பதிக்கப்பட்டுள்ளது. இதன் தாத்பரியம் யாதெனில் மனிதன் கடவுளின் பண்புகள் அனைத்தையும் பிரதிபலிக்க வல்லவன் என்பதே ஆகும். ஆனால் இ்ந்த நிலையை அவன் அடைவதற்கு அவன் முயல வேண்டும். இம்முயற்சிக்கு முதல் படி இறைவனைத் தேடுதலாகும். இவ்வாறு இறைவனை அல்லது மெய்ம்மையைத் தேடும் ஒருவர் அப்பிரயாணத்தை எவ்வாறு துவங்குவது மற்றும் அப்பிரயாணத்தின்போது மனிதன் செய்யக்கூடியவற்றை பஹாவுல்லா பின்வரும் அறிவுரையின் மூலம் விவரிக்கின்றார்

எனது சகோதரனே,

(இதயத்தைத் தூய்மைப்படுத்திக்கொள்ளல்)

உண்மையாகத் தேடும் ஒருவர், ‘தொன்மையான நாள்களின்’ அறிவின்பால் அழைத்துச் செல்லும் தேடுதல் என்னும் பாதையில் அடியெடுத்து வைக்க உறுதி கொள்ளும் பொழுது, மற்றெல்லாவற்றிற்கும் முன், அவர், இறைவனின் உள்ளார்ந்த மர்மங்களின் வெளிப்படுத்துதலுக்கு இருப்பிடமாகிய தனது இதயத்தைக் கற்றக் கல்வி என்னும் புழுதியிலிருந்தும் சாத்தானின் கற்பனை என்னும் உருவங்களின் நிலைக்கலன்களாக விளங்கிடுபவற்றிலிருந்தும் அவசியம் துப்புரவாக்கித் தூய்மைப் படுத்த வேண்டும். அன்புக்குரியவரின் நிலையான இருப்பிடமாயுள்ள தமது நெஞ்சத்தினை மாசு ஒவ்வொன்றிலிருந்தும் துப்புரவாக்கி, தமது ஆன்மாவை நீரும், களிமண் சார்ந்த அனைத்திலிருந்தும், மாயையிலிருந்தும், நிலையற்ற பற்றுக்களிலிருந்தும், புனிதப்படுத்த வேண்டும். அதனில் விருப்பும், வெறுப்பும் கிஞ்சிற்றும் எஞ்சியிராத அளவு தன் உள்ளத்தினைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவேண்டும். இல்லயெனில், விருப்பம், கண்மூடித்தனமாகத் தவறிழைத்திடவோ, வெறுப்பு அவரை உண்மையைவிட்டு விலகிச் சென்றிடவோ செய்திடக்கூடும். இன்றும், நீங்கள் காண்பது போலவே, பெரும்பான்மை மனிதர்கள் இவ்வித விருப்பு, வெறுப்பு ஆகியவையின் காரணமாக, நித்திய வதனத்தை இழந்து, தெய்வீக மர்மங்கள் என்னும் திருவுருவங்களிலிருந்து வெகுதூரத்திற்கப்பால் வழிதவறிச் சென்றோராகி, வழிகாட்டுவாரின்றி, மறதி, தவறு என்னும் வனாந்தரத்தில் அலைந்து திரிந்தவாறு இருக்கின்றனர்.

(பற்றின்மையைக் கடைப்பிடித்தல்)

அத் தேடுபவர், எல்லாவேளைகளிலும் இறைவனிடத்தில் நம்பிக்கை வைத்து, உலக மக்களைத் துறந்து, புழுதி என்னும் உலகிலிருந்து தன்னைப் பற்றறுத்துக் கொண்டு, பிரபுக்களுக்கெல்லாம் பிரபுவாகிய அவரை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும். எவருக்கு மேலாகவும் அவர் தன்னை உயர்த்திக்கொள்ள என்றுமே முயற்சி செய்யலாகாது. தனது இதயமெனும் நிருபத்திலிருந்து செருக்கு, வீண் பெருமை ஆகியவற்றின் சுவடுகள் அனைத்தையும் அவர் முற்றாகத் துடைத்தொழிக்க வேண்டும்; பொறுமை, சகிப்பு ஆகியவற்றை இறுகப்பற்றிக்கொண்டு மௌனமாய் இருப்பதோடு, வீண் பேச்சுகளிலிருந்தும் விலகியிருக்க வேண்டும். ஏனெனில், மனிதனின் நா உள்ளூர கனன்று எரியும் நெருப்பாகும்; அளவற்ற பேச்சோ ஒரு கொடும் விஷமாகும். தீ உடலை எரிக்கும்; ஆனால், நாவின் நெருப்போ, உள்ளம், ஆன்மா ஆகிய இரண்டையுமே அழித்திடும். முன்னதன் ஆற்றல் சிறிது காலத்திற்கேயாகும். ஆனால், பின்னதன் விளைவுகளோ ஒரு நூற்றாண்டு நீடிக்கும்.

(புறங்கூறுதலிலிருந்து விடுபட்டிருத்தல்)

மேலும், அத் தேடுபவர், புறங்கூறுதலைக் கடுந் தவறாகக் கருதி, அதன் தாக்கத்திற்கு உட்படாது ஒதுங்கிட வேண்டும். ஏனெனில், புறங்கூறுதல் உள்ளத்தின் ஒளியை அணைத்து ஆன்மாவின் ஜீவனையும் அழித்திடுகின்றது. குறைவில் மனநிறைவுப்பெற்று, மிதமிஞ்சிய ஆசைகள் அனைத்தினின்றும் தன்னை விடுவித்துக் கொள்ளவேண்டும். உலகைத் துறந்தோரின் தோழமையைப் பொக்கிஷமாகப் போற்றி, அவர், தற்பெருமை பேசித்திரிவோர், உலக இன்பங்கள் மீது பாசம்வைத்தோர் ஆகியோரைத் தவிர்ப்பதை ஓர் அரிய நன்மையாகக் கருத வேண்டும். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் அவர் இறைவனோடு தொடர்புக் கொள்ள வேண்டும்; தனது அன்புக்குரியவரைத் தேடும் முயற்சியில் அவர் சிறிதும் மனந் தளரலாகாது. ஒழுங்கற்ற எண்ணம் ஒவ்வொன்றையும், அவர்பாலுள்ள அன்பின் உச்சரிப்பு என்னும் ஒளிப்பிழம்பினைக் கொண்டு எரித்துவிட்டு, அவரைத் தவிர மற்றதனைத்தையும் மின்னல் வேகத்தில் கடந்து சென்றிட வேண்டும். அவர் பறிகொடுத்திட்டோருக்கு உதவிக்கரம் நீட்டி, வறியோருக்கு மறுக்காது என்றும் ஆதரவு நல்க வேண்டும். அவர் பிராணிகளுக்கே அன்பு காட்ட வேண்டும் என்றால், பேசுந்திறன் வழங்கப்பெற்ற தன் சக மனிதரிடம் நடப்பது எத்தகையதாய் இருத்தல் வேண்டும். தனது அன்புக்குரியவருக்காக அவர் தன் உயிரையே அர்ப்பணிக்க தயங்கலாகாது; அன்றியும், மனிதரின் கண்டனம் தன்னை உண்மையிலிருந்து விலகிச் சென்றிட அனுமதிக்கலாகாது. தனக்காகத் தான் விரும்பாதததை அவர் மற்றவர்களுக்காக விரும்பலாகாது; அன்றியும், நிறைவேற்ற முடியாததனை வாக்களிக்கவுங் கூடாது. அவர், தீமை இழைப்போரின் தோழமையை முழுமனதாகத் தவிர்த்து, அவர்களின் பாவமன்னிப்புக்காகப் பிரார்த்திக்கவும் வேண்டும். அவர் பாவியை மன்னிக்க வேண்டும்; என்றுமே அவனது தாழ்ந்த நிலையை இழித்துரைக்கலாகாது; ஏனெனில், தனது சொந்த முடிவு எவ்வாறிருக்கும் என்று யாருக்குமே தெரியாது. எத்தனை முறை, பாவி, தான் சாகுந் தறுவாயில், நம்பிக்கையின் சாரத்தைப் பெற்று, நித்திய ஜீவநீரினைப் பருகி, விண்ணவர் கூட்டத்தின் முன்னிலைக்குச் சிறகடித்துப் பறந்திருக்கின்றான். அதே வேளையில், எத்தனை முறை பக்திமிக்க ஒரு நம்பிக்கையாளன் தனதான்மா பிரியும் வேளையில் நரகத் தீயில் விழுமளவு மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கின்றான்.

நம்பிக்கையூட்டக் கூடிய, கருத்து நிறைந்த இத் திருச்சொற்களை வெளிப்படுத்துவதன் நோக்கம், உண்மையைத் தேடுபவர், இறைவனைத் தவிர மற்றனைத்தையும் நிலையற்றவையாகக் கருதிடவும், சகல போற்றுதலுக்கும் உரிய அவரைத் தவிர மற்ற அனைத்தையும் முற்றிலும் வெறுமை எனக் கருதிடவும் வேண்டும் என்பதுதான்.

(கடவுளின் பண்புகளை கடைப்பிடித்தல்)

இவை மேன்மைமிக்கோனின் இயல்புகளுள் சில; அவையே ஆன்மீக மனம் படைத்தோரின் தரக்குறியீடாகும். ஆக்கமுறையான அறிவின் பாதையில் நடப்போருக்கான தேவைகள் சம்பந்தமாக முன்பே குறிப்பிடப்பட்டுவிட்டன. பற்றற்ற வழிப்போக்கரும், உண்மையாகத் தேடுபவருமான அவர் அத்தியாவசியமான இந்நிபந்தனைகளை நிறைவேற்றிய பிறகேதான், அவர், உண்மையாகத் தேடுபவர் என அழைக்கப்பட முடியும். “எவரொருவர் எமக்காக முயற்சிகளை மேற்கொள்கின்றாரோ,” என்னும் வசனம் குறிப்பிடுகின்ற நிபந்தனைகளை எப்போது அவர் நிறைவேற்றுகின்றாரோ அப்போதெல்லாம், “உறுதியாகவே அவரை யாம் எமது வழியில் நடத்திடுவோம்,” என்னும் சொற்கள் வழங்கிடும் அருட்பாலிப்புகளால் இன்புறுவார்.

(தேடுபவரின் உள்ளத்தில் பதிய வேண்டிய ஆன்மீகப் பண்புகள்)

தேடுதல், பேரார்வமிகு முயற்சி, ஏக்கமிகு வேட்கை, உணர்ச்சிமிகு ஆழ்ந்த பக்தி, முனைப்புமிகு அன்பு, பேருவகை, ஆனந்தப் பரவசம் என்னுந்தீபம் உண்மையைத் தேடுபவரின் உள்ளத்தில் ஏற்றப்பட்டு, இறைவனின் அன்பு என்னும் தென்றல் அவரது ஆன்மாவின் மீது வீசினாலன்றி, தவறு என்னும் இருள் அகற்றப்பட மாட்டாது; ஐயப்பாடுகள், அவநம்பிக்கைகள் என்னும் பனிமூடங்கள் விலக்கப்படமாட்டா; அறிவு, உறுதிப்பாடு ஆகியவற்றின் ஒளிகள் அவரை ஆட்கொள்ளவும் இயலாது. அந் நேரத்தில் மெய்யறிவுமிகு முன்னறிவிப்பாளர் ஆவியின் நற்செய்திகளைத் தாங்கியவராக, இறைவனின் திருநகரத்திலிருந்து ஒளிமிக்கக் காலையைப்போன்று பிரகாசித்து, அறிவெனும் எக்காள முழக்கத்தின் வாயிலாக, கவனமின்மை என்னும் உறக்கத்திலிருந்து இதயத்தையும், ஆன்மாவையும், ஆவியையும், தட்டி எழுப்பிடுவார். அதன் பின்னர், புனிதமானதும், நித்தியமானதுமான ஆவி தேடுபவர்பால் வழங்கிடும் அருட்கொடைகளும், பெருங்கருணையும் அத்தகையதொரு புதிதான வாழ்வினைத் தந்திடுமாதலால் ஒரு புதிய கண்ணும், ஒரு புதிய செவியும், ஒரு புதிய உள்ளமும், ஒரு புதிய மனமும் தனக்கு அருளப்பட்டுள்ளதை அவர் உணர்ந்திடுவார். பிரபஞ்சத்தில் தோன்றியுள்ள தெளிவான அடையாளங்கள் குறித்து ஆழ்ந்து சிந்தித்து, ஆன்மாவினுள் மறைந்துள்ள மர்மங்களை அவர் ஊடுருவுவார். இறைவனின் கண்கொண்டு பார்த்து, நிச்சயமான உறுதிப்பாட்டின் ஸ்தானங்களின்பால் தன்னை வழிநடத்திச் செல்லவல்ல கதவினை ஒவ்வோர் அணுவினுள்ளும் கண்டுணர்வார். சகல பொருள்களிலும் அவர் தெய்வீக வெளிப்பாட்டின் மர்மங்களையும், நித்தியமான ஓர் அவதரிப்பின் சான்றுகளையும் காண்பார்.

(நேர்மையான நடத்தையின் நல்விளைவுகள்)

இறைவன் மீது ஆணை! அவர், வழிகாட்டுதல் என்னும் பாதையில் நடந்து, மகிமைமிக்கதும், அதி உயரியதுமான இந்த ஸ்தானத்தை அடையும் பொருட்டு நேர்மை என்னும் உச்சத்தை அடைய முற்படுவாராயின், ஆயிரக்கணக்கான மைல்கள் தூரத்திலிருந்துங் கூட அவர் இறைவனின் நறுமணத்தினை நுகர்ந்து, அனைத்துப் பொருள்களின் பகலூற்றுக்கும் மேலாக தெய்வீக நல்வழிகாட்டலின் பிரகாசமான காலை உதயமாவதைக் காண்பார். ஒவ்வொரு பொருளும், அது எத்துணைச் சிறியதாயினும், தேடுதலின் இலக்கான தனது அன்புக்குரியவரின்பால் தன்னை அழைத்துச் சென்றிடும் ஒரு வெளிப்பாடாகவே விளங்கும். அத் தேடுபவரின் உய்த்துணரல் அந்தளவு பெரிதாக இருக்குமாதலின், மெய்ம்மைக்கும் பொய்ம்மைக்குமுள்ள வேறுபாட்டினைச் சூரியனை நிழலிலிருந்து பிரித்துப் பார்ப்பதுபோல் காண்பார். கிழக்குத் திசையில், அதி தொலைவில், இறைவனின் நறுமணம் வீசுமாயின், அவர் மேற்குத் திசையின் அதிதூரத்து எல்லைகளில் இருந்தபோதும், அவற்றின் நறுமணத்தை நிச்சயமாக உணர்ந்திடுவார். அதே போன்று, அவர், இறைவனின் அடையாளங்கள் அனைத்தையும் — அவரது அற்புத வெளியிடுகைகள், அவரது பெரும் வேலைப்பாடுகள், அவரது வலிமைமிகு செயல்கள் ஆகியவற்றை மனிதர்களின் செயல்களிலிருந்தும், அவர்களின் சொற்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றிலிருந்தும், ஒரு நகைவியாபாரி, வைரம், கல் இவற்றிற்கிடையேயுள்ள வேறுபாட்டைத் தெரிந்திருப்பது போன்றும், இளவேனிற் காலத்திலிருந்து வசந்தத்தையும், வெப்பத்திலிருந்து குளிரையும் அறிந்திருப்பது போன்றும் தெளிவாக வேறுபடுத்திக் காண்பார். மனிதனின் ஆன்மீகத்திற்கான நுழைவழி, இம்மைக்குரியதும் தடுக்கவியலாததுமான பற்றுக்களிலிருந்தும் தூய்மைப்படுத்தப்படுமாயின், அது அளவிடற்கரிய தூரங்களுக்கப்பால் இருக்கும் நேசரின் மூச்சினைத் தவறாது உணர்ந்து, அதன் நறுமணத்தால் வழிநடத்தப்பட்டு, மெய்யுறுதி என்னும் நகரையடைந்து அதனுள் பிரவேசித்திடும்.

(ஆன்மீக இரகசியங்கள் வெளிப்படுத்தப்படும்)

அவர், அதனில், இறைவனின் புராதன விவேகத்தின் அற்புதங்களை உணர்ந்து, அம் மாநகரில் செழித்து வளர்ந்திடும் திருவிருட்சத்தின் இலைகளின் சலசலப்பில் மறைக்கப்பட்டுள்ள போதனைகள் அனைத்தையும் உணர்வார். அதன் மகிமை என்னும் தூசியிலிருந்து போற்றுதல் என்னும் கீதங்கள் பிரபுக்கெல்லாம் பிரபுவாகியவரின்பால் உயர்வதைத் தன் உட்செவி, புறச்செவி ஆகியவற்றின்வழி செவிமடுத்து, தனது அகக்கண் துணைக்கொண்டு “மீண்டும் வருதல்,” மற்றும் “மறுமலர்ச்சி” ஆகியவையின் மர்மங்களைக் கண்டுணர்வார்.

(மெய்யுறுதி என்னம் நகரை அடைதல்)

நாமங்கள், நற்பண்புகள் ஆகியவற்றின் மன்னரானவர் அம் மாநகருக்கு ஈந்துள்ள அடையாளங்கள், சின்னங்கள், வெளிப்பாடுகள், பிரகாசங்கள் ஆகியன எந்தளவு சொல்லொணா மகிமை மிகுந்தவை! இம்மாநகரை அடைதலானது நீரின்றித் தாகந் தணிக்கும்; நெருப்பின்றி இறைவன்பால் அன்பு என்னும் தீயை மூட்டும். புல்லின் ஒவ்வோர் இதழினுள்ளும் அறிவுக்கெட்டாத விவேகத்தின் மர்மங்கள் புதையுண்டுள்ளன; ஒவ்வொரு ரோஜாப் புதரின் மீதிருந்து பல்லாயிரம் இராப்பாடிகள் தங்களின் பேரின்பக் களிப்பில் இனிய கீதங்களைப் பொழிகின்றன. அதன் அற்புதமிகு மணிமலர்ச்செடிகள் எரியும் புதரின் அணையா நெருப்பின் மர்மத்தினை வெளிப்படுத்துகின்றன; அதன் புனிதமெனும் இனிமைச் சுவைகளின் சுகந்தம் இரட்சகரின் திருஆவியின் நறுமணத்திணைச் சுவாசிக்கின்றது. அது தங்கமின்றிச் செல்வம் வழங்குகின்றது; மரணமின்றி நித்திய வாழ்வினை வழங்குகின்றது. அதன் ஒவ்வோர் இலையிலும் விவரிக்க இயலா மகிழ்ச்சிகள், பேரானந்தங்கள், புதைந்து கிடக்கின்றன; ஒவ்வொரு பகுதியிலும் எண்ணிறந்த மர்மங்கள் மறைந்து கிடக்கின்றன.

(மெய்யுறுதியின் வாயிலாக அடையப்படக்கூடியவை)

இறைவனின் நல்விருப்பத்தினை நாடும் பொருட்டுத் துணிவுடன் பெருமுயற்சி செய்திடுவோர், அவரைத் தவிர மற்றதனைத்தையும் துறந்தபின், அம் மாநகரோடு அந்தளவு அணுக்கமாக ஐக்கியமாய் இருப்பார்களாதலின், ஒரு கணமேனும் அதனை விட்டுப் பிரிந்திருப்பது என்பது அவர்களுக்கு நினைத்துக் கூடப்பார்க்க முடியாததாகும். அச்சபையின் செந்நீல மலரிலிருந்து தவறில்லா நிரூபணங்களை அவர்கள் செவிமடுப்பர்; அதன் ரோஜாவின் அழகிலிருந்தும், அதன் இராப்பாடியின் இன்னிசையிலிருந்தும் நம்பத்தகுந்த அத்தாட்சிகளைப் பெறுவர்.

(ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை கடவுள் தம்மை வெளிப்படுத்திக்கொள்கின்றார்)

சுமார் ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை இம் மாநகர் புதுப்பிக்கப்பட்டு, மீண்டும் அழகுப்படுத்தப்படும். அந்நகர் ஒவ்வொரு சகாப்தத்திலும், ஒவ்வோர் அருளாட்சியிலும் வெளிப்படுத்தப்படும் இறைவனின் திருவாக்கேயன்றி வேறெதுவுமன்று. மோஸஸின் நாள்களில் அது பெந்தாத்தியூக்; இயேசுவின் நாள்களில் அது விவிலிய நூல்; இறைவனின் திருத்தூதரான முஹம்மதுவின் நாள்களில் அது குர்-ஆன்; இந் நாளில் அது பாயான்; கடவுள் வெளிப்படுத்தவிருக்கும் அருளாட்சிக் காலமான அவரது காலத்தில் அவரது நாளின்போது அவரது சொந்தத் திருநூலாகும். இத்திருநூல், கடந்தகால அருளாட்சிகளின் திருநூல்கள் அனைத்திற்கும் மேற்கோளாகவும், அவற்றுக்கெல்லாம் அதிவிழுமியதும் அதிவுயரியதுமாகும்.