செக்ஸ் (உடலுறவு) என்பது ஒரு திருமணப் பரிசு மட்டுமே


திருமணத்திற்கு முன்பாக உடலுறவு கொள்வதில் என்ன தவறு?


நன்றி: http://endlessmargrita.wordpress.com/2014/02/21/what-is-so-wrong-in-sex-before-marriage/
(பதிவாளரின் கருத்துகள் பெரும்பாலும் பதிவில் உள்ளவாறு மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளன)

எச்சரிக்கை: எழுத்தாளரின் கருத்துகள், கோட்பாடுகள் ஆகியவற்றுடன் வேறுபட்ட கருத்துகளைக் கொண்டிருப்போருக்கு இப்பதிவு சங்கட உணர்வை ஏற்படுத்தலாம். ஆகவே, நீங்கள் உங்கள் சொந்த கருத்துகளைக் கொண்டிருக்க வரவேற்கப்படுகின்றீர்கள். நீங்கள் கொண்டிருக்கும் அக்கருத்துகளை தற்காத்திட வேண்டிய அவசியமில்லை. நன்றி

அன்பார்ந்த நண்பர்களே,

இன்று எனது பதிவு, குறிப்பிட்ட சிலருக்காக எழுதப்பட்டுள்ளது. ஆனால், நீங்களும் அதைக் கண்டிப்பாகப் படிக்கலாம்.

அன்பார்ந்த ஜோடிகளே,

Wedding Clipart 21
புதுமண ஜோடி

உங்களை எனக்குத் தெரியாது, என்னை உங்களுக்குத் தெரியுமா என்பதும் தெரியாது. சில விஷயங்களை நான் உங்களிடம் கூற விரும்புகிறேன், அவற்றைத் தயவு செய்து கவனமாகப் படிக்கவும். சில நேரங்களில் நான் எழுத விரும்புவதால் எழுதுகிறேன், ஆனால், சில நேரங்கள் எழுத வேண்டியதால் எழுதுகிறேன். அவ்வாறு எழுத வேண்டுமென தோன்றுவதற்கான காரணம், அஃது என்னுள் எழுகின்ற, என்னால் தவிர்க்கவியலாத ஒரு மர்மமான உந்துதலே காரணமாகும்.

இவ்வுலகில் அனைவரும் ஏங்கிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம் என்னவென்பது நமக்குத் தெரியும். அதாவது அன்பு. ஆனால், இவ்வுலகம் எவ்வாறு அன்பை பாலுறவோடு (செக்ஸ்) தொடர்புபடுத்துகிறது என்பது வேடிக்கையாக உள்ளது. அஃது உண்மையிலேயே அவ்வாறுதானா?

அன்பு என்றால் உண்மையில் என்னவென்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்களா என்பது எனக்குத் தெரியாது. வெகு எளியமையாகக் கூற வேண்டுமானால், அன்பு என்பது தியாகத்திற்குச் சமமான ஒன்றாகும். எனக்குத் தெரியும், இஃது உங்களால் கிரகிக்கப்பட முடியாத ஒன்றாக இருக்கும். ஆனால், நீங்கள் ஒருவரை உண்மையிலேயே விரும்பினால் நீங்கள் அவருக்கு எது சிறந்ததென நினைக்கின்றீர்களோ அதையே செய்திடுவீர்கள் அல்லவா? உங்களுடைய தேவைகளைவிட அவர்களுடைய தேவைகளுக்கே நீங்கள் முதன்மை அளிப்பீர்கள். நீங்கள் உங்களுடைய மகிழ்ச்சியைவிட அவர்களுடைய மனமகிழ்ச்சியைப் பற்றியே அதிகமாகச் சிந்திப்பீர்கள். உதாரணமாக, என் தாயார் எனக்கு மிகவும் பிடித்தவர் என்பதால், தமக்கும் மிகவும் பிடித்த சுவையான உணவில் பெரும் பகுதியை எனக்களித்துவிட்டு, தாம் அதில் சிறிதளவே உண்கின்றார். என்ன செய்வது, அன்பு தியாகத்தையும் உள்ளடக்கியுள்ளது. ஒருவரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக உங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றை நீங்கள் தியாகம் செய்கிறீர்கள். அது கஷ்டமான ஒன்றுதான்… ஆனால், நீங்கள் உண்மையிலேயே ஒருவரை அதிகம் நேசித்தீர்களானால், நீங்கள் நிச்சயமாக அவருக்கு இதைச் செய்வீர்கள். ஆனால், அஃது உங்களுக்கு சிரமமாகத் தெரிந்தால், ம்ம்ம்ம… ஒருவேளை உங்கள் அன்பு உண்மையான அன்பெனும் தரத்தை இன்னமும் அடையாது இருக்கலாம்.

சரி, இப்போது நான் இதுவரைப் பதிவு செய்யாத ஒரு விஷயமான, பாலுறவு அல்லது செக்ஸ் பற்றி உரையாடுவோமே. உலகம் செக்ஸ் உறவை மிகக் கெட்டதாகவும் அருவருக்கத்தக்கதாகவும் வருணிக்கின்றது. செக்ஸை சுயநலமான ஒன்றெனவும் இன்பம் பெறுவதையே, அஃது உள்ளடக்கியுள்ளது என்றும் பறைசாற்றுகின்றது. ஒருவரின் சிற்றின்பக் குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்வதே அதன் நோக்கமாகவுள்ளது எனும் ஒரு தோற்றத்தையும் அஃது ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மனிதர்கள் எனும் முறையில் நமது உடல் சார்ந்த தேவையான, காம இச்சைக்கு நாம் ஆளாகிவிடுகின்றோம். இன்று உலகம் செக்ஸ் எனும் சொல்லுக்கு வேறு வார்த்தை ஒன்றோடு, ஆங்கிலத்தில் ‘F’ எனும் ஒரு வார்த்தையில் ஆரம்பிக்கும் ஒரு சொல்லோடு தொடர்புப்படுத்தியுள்ளது. சில காரணங்களினால், மக்கள் அவ்வார்த்தையை ஒவ்வொரு வாக்கியத்திலும் பயன்படுத்தும் நிலைக்கு வந்துவிட்டனர். அவர்களைப் பொறுத்தவரை அவ்வார்த்தையைப் பயன்படுத்துவது ‘கூல்’ (cool) அதாவது சகஜமான ஒன்றெனக் கருதுகின்றனர்.
சரி இப்போது சில அடிப்படைகளைப் பார்ப்போம். கடவுள் உடலுறவு எனும் ஒன்றை ஏன் படைக்க வேண்டும், பிறகு அது நமக்கு கெடுதலான ஒன்றென ஏன் கூறவேண்டும்? அஃது அவ்வாறுதான் என்பதை நான் ஒப்புக்கொள்ளவில்லை. புனித நூல்கள் உலக மரபுகள் பலவற்றோடு முரண்படுகின்றன. உலகம் செக்ஸை கெட்டதெனக் கூறுகின்றது! ஆனால், புனித நூல்களோ அதற்கு நேர்மாறான ஒன்றாக அதைப் பார்க்கின்றன! செக்ஸ் என்பது ஒரு பரிசாகும்! நேற்று ஒரு சொற்பொழிவைச் செவிமடுத்தேன். அங்கு சொற்பொழிவாற்றியவர், ‘செக்ஸ் என்பது திருமணமான ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் கடவுள் அருளியுள்ள திருமணப் பரிசு!’ எனக் குறிப்பிட்டார்.

மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. அவ்வார்த்தைகளை நான் செவிமடுத்தபோது அது மிகவும் அழகானதொரு கருத்தாக எனக்குத் தோன்றியது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் பாலுறவு எனும் ஒன்றைக் கடவுள் படைத்ததானது, முதலாவதாக, அஃது இனப்பெருக்கத்திற்காகவும் இரண்டாவதாக, அது கணவனுக்கும் மனைவிக்கும் இடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்துவதற்காகவும் ஆகும்.
அதாவது, பாலுறவு என்பது கொடுக்கும் தன்மை குறித்த ஒன்றாகும். அது கொடுத்தல் பற்றிய குறிக்கோளுக்குத் துணைபோகின்றது. அதாவது பிள்ளைகள் பெறுவதும் உங்கள் துணைவர் அல்லது துணைவிக்காக உங்களை நீங்கள் அர்ப்பணிப்பது. அஃது (உடலுறவு) உங்கள் வாழ்நாள் முழுவதையும் யாருடன் கழித்திட விரும்புகின்றீர்களோ அவர்களோடு நீங்கள் இன்புற்றிருக்க வேண்டிய ஒரு விஷயமாகும். அது புனிதமானது, பிரத்தியேகமானது, உண்மையில் அது பவித்திரமிக்கது. ஒருவரை ஆழமாக விரும்பும்போது அவர்களுடன் உள்ளம், உடல், ஆன்மா ஆகியவற்றால் ஐக்கியமாகிட விரும்புவீர்கள். “என்னையே நான் உனக்கு முற்றாகக் கொடுக்கின்றேன். நான் கொடுக்க முடியாததென எதுவுமே இல்லை,” என்றும் கூறுவீர்கள்.
ஆனால், அதை (உடலுறவை) திருமணத்திற்கு வெளியே வைத்துக்கொண்டால் என்னவாகும்? அஃது அதன் குறிக்கோளை முற்றாக நாசப்படுத்திவிடுகின்றது. கொடுப்பதற்குப் பதிலாக நீங்கள் எடுத்துக்கொள்கின்றீர்கள். நீங்கள் திருப்தியடைய விரும்புகின்றீர்கள். ஆகவே, வேறு ஒருவரைப் பயன்படுத்தி உங்கள் இச்சையைப் பூர்த்தி செய்துகொள்கின்றீர்கள். ஆம், ‘பயன்படுத்துகின்றீர்கள்’. ‘பயன்படுத்துவது’ எனும் வார்த்தை மிகவும் கஷ்டப்படுத்தும் ஒரு வார்த்தையாகும். ஆனால், அஃது உண்மைதானே? இல்லையா? உங்கள் காதலியோ காதலனோ உங்கள் இச்சையைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு ஒரு கருவியாக, ஒரு பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றார், அவர் உங்கள் இச்சைக்கு ஆளாகின்றார். இருவரும் ஒருவர் மற்றவரைத் தங்கள் இச்சைக்காகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். அதாவது இது, “நான் என் உடலை உனக்கு வழங்குகின்றேன், ஆனால் நான் என்னை உனக்குத் தரப்போவதில்லை” என்றோ “நான் வேறொருவருக்கு சொந்தமாகும் வரை நான் உன்னுடையவளே(னே) எனக் கூறுவது போன்றோ இருக்கின்றது. பிறகு, அன்பென்பது இதுதான் என வெகு சாதாரணமாகக் கூறிடுவார்கள்..

(தோழமை ரீதியில் ஒன்றாக வாழும் ஜோடிகள்) அவ்வாறு திருமணம் ஆகாதிருக்கும் போது பிரிந்துபோவது சிரமமல்ல. ஏனெனில், அங்கு வாழ்நாள் முழுவதற்குமான ஒரு கடப்பாடு கிடையாது. ஆகவே, ஜோடிகளுள் ஒருவர் வேண்டும் போது அத்தோழமைத் திருமணத்திலிருந்து விடுபட்டுக்கொள்ளலாம். அங்கு ஒரு கட்டாயம் கிடையாது. ஒருவர் அத்தோழமையிலிருந்து வெளியேறும்போது… அங்கு ஏற்படும் உணர்வுப்பூர்வமான மனப்போராட்டம் தாங்கமுடியாததாக இருக்கும். பாலுறவு என்பது திருமணத்திற்கு உட்பட்டதாக இருப்பதனால், அஃது ஓர் ஆழ்ந்ததும் வலுவானதுமான தாம்பத்ய பந்தத்தை உருவாக்குகின்றது. ஆகவே, அதனால்தான் அது திருமணத்திற்கு வெளியே நடைபெறும்போது, அவ்வித உறவில் ஈடுபட்டுள்ள இருவரும் பிரியும்போது அவர்கள் மனக்காயங்களுக்கு ஆளாகின்றனர்.

ஆனால், பல ஜோடிகள் பாலுறவை ஒழுங்காகப் பயன்படுத்தாமலும் அதை ஏதோ ஒரு பொழுதுபோக்காகவும் கருதுவது மனதிற்குக் கவலையை ஏற்படுத்துகின்றது. பல இளம்பெண்களும் (ஆண்களும்) பாலுறவின் விளைவாக மனமுடைந்து போவதைக் காண கவலையாக இருக்கின்றது. பல திருமணங்களும் இதனால் சிதைந்து போவதும் கவலையளிப்பதாக இருக்கின்றது. மக்கள் ஒருவரை ஒருவர் ஏதோ பொருள்கள் போன்று பயன்படுத்துவதும் கவலையளிப்பதாக இருக்கின்றது.

கடவுள் நம்மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கின்றார். அவர் நமது பாதுகாப்பிற்காக, நமக்கு தீங்கு விளைவிக்கும் யாவற்றிலிருந்தும் நம்மைப் பாதுகாப்பதற்காக அனைத்தையும் செய்கின்றார். திருமணத்திற்கு முன்பாக உடலுறவில் ஈடுபடுவது பல வழிகளில் தீங்கு விளைவிக்கக்கூடும் என்பதை அவர் நன்கு அறிவார். அதற்காக அவர் நமது சுதந்திரத்தைப் பறிக்கின்றார் என்பது பொருளல்ல. மாறாக, நாம் சுதந்திரமாகவும் முழுமையாகவும் வாழ்வதற்காக அவர் நமக்கு சுயக்கட்டுப்பாடு, அடக்கம், தூய்மை, கற்புடைமை ஆகியவற்றைப் பரிசாக வழங்கியுள்ளார் என்பதாகும்.

ஆகவே, இதைப் படிக்கும் ஆண்கள் அனைவருக்கும் நான் உண்மையில் கூற விரும்புவது இதுதான்.
பெண்களின் உடலுக்கு மதிப்பளியுங்கள். அவள் ஒரு கொடை, ஒரு பொருளல்ல. நீங்கள் உங்கள் இச்சையை அடக்க இயலாததால் நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருளுமல்ல. அவள் ஒருத்தி மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கையில் குறுக்கிடும் எல்லாப் பெண்களும் அவ்வாறானவர்களே. நீங்கள் இணையத்திலோ சஞ்சிகைகளிலோ காணும் பெண்களும் கூட இதிலடங்குவர். அவர்கள் கொடைகள் போன்றவர்கள், பொருள்களல்ல.

இதைப் படிக்கும் பெண்கள் அனைவருக்கும்

உங்கள் தோழர் உங்களிடம் கோரக்கூடியவற்றிற்கு இணங்கிடாதீர்கள். உறுதியாக இருங்கள். உங்களுக்கென நெறிமுறைகளை வைத்துக்கொள்ளுங்கள். அவர் உங்களை உண்மையில் விரும்பினால் அவர் புரிந்துகொள்வார். அவ்வாறில்லையென்றால் அவர் உங்களை விட்டுப் பிரிந்து செல்வார். அவ்வாறு நடக்குமானால் அதற்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில், கடவுள் உங்களை ஒரு சிம்ம சொப்பனத்திலிருந்து காப்பாற்றியுள்ளார்.

ஜோடிகள் அனைவருக்கும்

நீங்கள் ஒருவரை உண்மையில் நேசித்தால், நீங்கள் அவருக்காக நிச்சயமாகக் காத்திருப்பீர்கள். எவர் வேண்டுமானாலும் “நான் உன்னை நேசிக்கின்றேன்” எனக் கூறிட முடியும்… ஆனால் ஓர் உண்மையான ஆண் அல்லது பெண்ணால் மட்டுமே பொறுமை காத்திட முடியும். உண்மையான அன்பு தியாகத்தை உட்படுத்தியதாகும். உண்மையான அன்பு பொறுமை மிக்கதாகும். உண்மையில் நீங்கள் கோருவது போன்று நேசிக்கின்றேன் எனக் கூறும்போது நீங்கள் காத்திருப்பீர்கள். நீங்கள் நேசிப்பவரை இழக்காதிருக்கும் பொருட்டு நீங்கள் அவருக்காகக் காத்திருப்பீர்கள். ஆகவே, அவரைப் பாதுகாத்திட நீங்கள் உங்களால் முடிந்த அனைத்தையும் செய்வீர்கள்.

சரி, உங்கள் இருவருக்குமே திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொள்வதில் பிரச்சனைகள் ஏதும் இல்லையெனும்போது என்னவாகின்றது? ஒரு முறை பாலுறவு என்பது ஒரு ஜோடியினரின் உறவிற்குள் ஊடுறுவிவிட்டால் அதுவே பிறகு அந்த உறவிற்கு மையமாக அமைந்துவிடும். நீங்கள் ஒவ்வொரு முறையும் சந்திக்கும்போது உங்கள் மனதில் பாலுறவே ஓங்கியிருக்கும். இச்சையின் அடிப்படையில் அமைந்திருக்கும் நேசமானது நீடிக்காது. ஆகவே, உங்கள் உறவை ஏன் அபாயத்திற்குள்ளாக்க வேண்டும்.

“நாம் உடலுறவு கொள்ளவில்லையெனில்.. மற்ற அம்சங்கள் அனைத்தும் ஒழுங்காக இருக்கின்றதா?” அல்லது, “நமது உறவிற்கு எல்லையென்பது எது?” ஆனால், கேட்கப்பட வேண்டிய கேள்வி, நாம் எந்த எல்லைவரை செல்லமுடியும் என்பதல்ல. “நமது கற்புடைமையை நாம் எந்த அளவிற்குக் காத்திட முடியும்?” என்பதே கேட்கப்பட வேண்டிய கேள்வி. நீங்கள் ஒரு புதிய கார் வாங்கும் போது, அதைக் குழிகள் நிறைந்த ஒரு சாலையில் ஓட்டிப்பார்க்க விரும்பமாட்டீர்கள், அல்லவா? உங்கள் வாகனத்தை அதற்குப் பக்கத்தில் கூட கொண்டு செல்ல மாட்டீர்கள். வாகனத்தைப் பேணுவதிலிருந்து, அதைச் சுத்தமாக வைத்திருப்பது வரை அனைத்தையும் நீங்கள் ஒழுங்காகச் செய்வீர்கள். ஏன்? உங்கள் வாகனத்தின் மீது ஏதாவது கீறல்கள் விழுந்துவிட்டால் என்னவாகும்? ஒரு சிறு கீறல் விழுந்துவிட்டால்கூட சிலரால் பொறுத்துக்கொள்ள முடியாது. இப்போது அதே சூழலை உங்கள் துணைவி அல்லது துணைவருடன் பொருத்திப் பாருங்கள். உங்கள் உறவைப் பாதுகாப்பதில் நீங்கள் எந்த அளவிற்குச் செயல்பட முடியும்?

கற்புடைமையைக் கடைப்பிடியுங்கள். கற்புடைமை என்பது உடலுறவைத் தவிர்ப்பது என்பதல்ல. நீங்கள் இப்போது என்ன செய்ய முடியும்? எது முறையானது? என்பதன் மீது கவனம் செலுத்துவதற்கான ஓர் அறமுறையாகும் அது. அது சுதந்திரம், மரியாதை, அமைதி மற்றும் காதலையும் வழங்கிடும் ஒரு வாழ்வுமுறையாகும். நீங்கள் உடலுறவின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டுள்ளதால், அதை ஒழுங்கான முறையில் கடைப்பிடிப்பதற்கான எதையும் எல்லா வழிகளையும் நீங்கள் பின்பற்றிட விரும்புகின்றீர்கள். அதாவது, (கற்புடைமை) உண்மையான அன்பை அனுபவிப்பதற்கு உங்களுக்கு உதவிடும் ஒரு வழியாகும்.
தூய்மையைக் கடைப்பிடியுங்கள். தூய்மையாக இருங்கள். உள்ளம், இதயம், செயல்கள் ஆகியவற்றில் தூய்மையோடு இருக்கவேண்டும். “நீங்கள் புனிதத் தன்மையோடு இருக்கவேண்டுமென்பது கடவுளின் விருப்பமாகும்: நீங்கள் பாலுணர்வு சார்ந்த ஒழுக்கக்கேடுகளைத் தவிர்த்திட வேண்டும்.” (தெஸ்ஸலோனியர் 4:3)

இறுதியாக

காதல் என்பது சரசமாடுதல், தழுவல்கள், முத்தங்கள், உடலுறவு ஆகியன பற்றியதல்ல. அவை அனைத்தும் இல்லாத போதும் உங்கள் காதலி அல்லது காதலன் மீது நீங்கள் நேசம் கொண்டிருப்பதே உண்மையான காதலாகும்.

பாலுறவு அறநெறி சார்ந்த பஹாய் போதனைகள் திருமணம், குடும்பம் இரண்டும் மனித சமுதாய கட்டமைப்பு முழுமைக்குமான அடிதளம் என்பதை மையமாகக் கொண்டும் அத்தெய்வீக ஸ்தாபனத்தைப் பாதுகாப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆகவே, பஹாய் சட்டமானது இசைவுடனான பாலுறவை ஓர் ஆணுக்கும் அவன் திருமணம் செய்துகொண்டுள்ள பெண்ணுக்குமிடையில் மட்டுமே அனுமதிக்கின்றன. (பஹாவுல்லா)

“…திருமணத்திற்குப் பிறகு சோரம் போகக்கூடாது. திருமணத்திற்கு முன்னரும் கள்ளப்புணர்ச்சியில் ஈடுபடக்கூடாது. …திருமணம் செய்துகொள்ளாவிட்டால் அஃது ஒரு பாவமல்ல, ஆனால், திருமணம் புரிந்துகொள்ள வேண்டுமென்பது… …ஊக்குவிக்கப்பட்டுள்ளது. …ஓர் ஆழமான ஆன்மீக நட்பிற்குத் திருமணம் வழிகோலும்… அஃது… மனித உறவின் வெறும் உடல்சார்ந்த பந்தத்தைப்போல் அல்லாத, என்றுமே நீடிக்கவல்ல ஆழமானதோர் ஆன்மீக பந்தமாகும். (உலக நீதிமன்றம்)

One thought on “செக்ஸ் (உடலுறவு) என்பது ஒரு திருமணப் பரிசு மட்டுமே”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: