யார் ஏழை


மனிதனின் தனிச்சிறப்பு ஆபரணங்களிலும் செல்வச்செழிப்பிலும் இல்லை, மாறாக அது நல்லொழுக்கத்திலும் உண்மையான புரிந்துகொள்ளலிலுமே உள்ளது. (பஹாவுல்லா)

rural scene

ஒரு நாள் ஒரு பணக்கார குடும்பத்தின் தந்தை மக்கள் எத்தகைய ஏழ்மை நிலையில் வாழ்கிறார்கள் என்பதை தன் மகனுக்குக் காண்பித்திட அவனை  நாட்டுப்புறமான ஓர் இடத்திற்குக் கூட்டிச் சென்றார். அங்கு ஓர் ஏழை என கருதப்படக்கூடிய குடியானவரின் இல்லத்தில் இரண்டு நாள்கள் தங்கியிருந்தனர். அவ்விஜயத்திற்குப் பின்னர், “பயணம் எப்படியிருந்தது?” எனத் தன் மகனிடம் தந்தை வினவினார்.

அதற்கு அவரின் மகன்:

“வெகு நன்றாக இருந்தது அப்பா,” என்றான்

“அங்கு மக்கள் எத்தகைய  நிலையில் வாழ்கிறார்கள் என்பதைக் கவனித்தாயா?” எனத் தந்தை கேட்டார்.

“ஆம், கவனித்தேன்,” என்றான் மகன்.

“சரி, நமது பயணத்திலிருந்து நீ என்ன கற்றுக்கொண்டாய்?” என்றார் தந்தை.

“நமக்கு ஒரு நாய்தான் உள்ளது, அவர்களிடமோ நான்கு நாய்கள் உள்ளன.

நமது தோட்டத்தின் நடுமத்தி வரை நீண்டிருக்கும் ஒரு நீச்சல் குளம் உள்ளது, ஆனால் அவர்களுக்கோ கண்ணுக்கு எட்டாத தூரம் வரை நீண்டிருக்கும் ஓர் நீரோடை உள்ளது.

நமது தோட்டத்தில் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட அலங்கார விளக்குகள் உள்ளன, அவர்களுக்கோ இரவில் அளவற்ற பிரகாசமான நட்சத்திரங்கள் உள்ளன.

நமது முற்றம் வீட்டின் வாசற்படி வரை நீண்டிருக்கின்றது, ஆனால் அவர்களின் முற்றமோ வானெல்லை வரை நீண்டிருக்கின்றது.

வாழ்வதற்கு நமக்கிருப்பதோ ஒரு சிறிய நிலம் மட்டுமே, ஆனால் அவர்களுக்கோ கண்ணுக்கெட்டாத தூரம் வரை திறந்தவெளிகள் உள்ளன.

நமக்கு உதவியாக வீட்டில் வேலைக்காரர்கள் உள்ளனர், ஆனால் அவர்களோ பிறருக்குச் சேவை செய்கின்றனர்.

நமது உணவை நாம் வாங்கவேண்டியுள்ளது, ஆனால் அவர்களோ அவற்றைச் சொந்தமாகப் பயிர் செய்கின்றனர்.

பாதுகாப்பிற்கு நமது வீட்டைச் சுற்றி சுவர்கள் உள்ளன, ஆனால் அவர்களின் பாதுகாப்பிற்கு அவர்களைச் சுற்றி  நிறைய நண்பர்கள் உள்ளனர்,” என்றான் மகன்.

அது கேட்டு தந்தை வாயடைத்து நின்றார்.

“அப்பா, நாம் எவ்வளவு ஏழைகள் என்பதை எனக்குச் சுட்டிக் காண்பித்ததற்கு மிகவும் நன்றி,” என்றான் மகன்.