லிடியா ஸாமென்ஹோஃப்
யூத இனத்தவரான லிடியா ஸாமென்ஹோஃப் (1904-1942) எஸ்பரான்டோ (Esperanto) துணைமொழியின் உருவாக்குனரான லுட்விக் ஸாமென்ஹோஃப்’இன் மகளாவார், தாயாரின் பெயர் கிலாரா ஸாமென்ஹோஃப். இவர் போலாந்து நாட்டின் வார்ஸோ நகரில் ஜனவரி 29, 1904ல் பிறந்தவராவார். போலாந்து நாடு அப்பொழுது ருஷ்ய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. இவர் தமது தந்தை உருவாக்கிய எஸ்பரான்டோ துணை மொழியின் தீவிர ஆதரவாளராக இருந்ததோடு திரு ஸாமென்ஹோஃப் வரையறுத்திருந்த ‘ஹோமாரானிஸ்மோ’ எனப்படும் மதச் சார்புடைய ஒருவித மனிநேயத்தின் மேம்பாட்டை ஊக்குவிப்பவராக இருந்தார்.
ஏறக்குறைய 1925ல் இவர் பஹாய் சமயத்தில் ஓர் உறுப்பினரானார். பிறகு 1937ல் பஹாய் சமயத்தையும் எஸ்பரான்டோ மொழியையும் போதிப்பதற்காக ஐக்கிய அமெரிக்காவிற்கு விஜயம் செய்தார். அதே வருடம் டிசம்பர் மாதத்தில் அவர் போலாந்து நாடு திரும்பினார், தொடர்ந்து பஹாய் சமயத்தைப் போதித்தும் பல பஹாய் திருவாசகங்களை போலாந்து மொழிக்கு மொழிபெயர்க்கவும் செய்தார். போலாந்து நாட்டின் இன அழிப்புப் பேரிடரின் போது 1942ல் இவர் டிரெப்லிங்கா (Treblinka) மரணமுகாமில் கொலை செய்யப்பட்டார்.
லிடியா ஸாமென்ஹோஃப் தமது ஒன்பது வயதிலேயே எஸ்பரான்டோ மொழியை கற்றார். பதினான்கு வயதில் பல இலக்கியங்களைப் போலாந்து மொழிக்கு மொழிபெயர்த்தார். பல வருடங்களுக்கு இவரின் மொழிபெயர்ப்புகள் தொடர்ச்சியாகப் பிரசுரமாயின. 1925ல் தமது பல்கலைக்கழக சட்டப்படிப்பை முடித்தவுடன், எஸ்பரான்டோ மொழியின் மேம்பாட்டிற்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டார். அதே வருடம் 1925ல் ஜெனேவாவில் நடந்த உலக காங்கிரசின்போது பஹாய் சமயத்திப்பால் அறிமுகமானார். போலாந்து நாட்டின் மனிதநேய/எஸ்பரான்டோ சங்கத்தின் இணக்க நிகழ்வின்போது அதன் செயலாளராகி, பல நிகழ்வுகளுக்குப் பேச்சாளர்களையும் உரைகளையும் ஏற்பாடு செய்தார். 1924 வியன்னா உலக காங்கிரஸிலிருந்து அதற்குப் பிறகு நடந்த எல்லா மாநாடுகளிலும் கலந்துகொண்டார். (அவ்வேளை அவர் ஐக்கிய அமெரிக்காவில் இருந்ததால், 1938ல் நடந்த மாநாட்டில் மட்டும் அவர் கலந்துகொள்ளவில்லை.) ‘ட்ஸே’ முறையில் எஸ்பரான்டோ மொழியைக் கற்பிப்பவர் எனும் முறையில் அவர் பல்வேறு நாடுகளுக்கு ஊக்குவிப்பு விஜயங்கள் செய்தார், பல பயிற்சிகளையும் நடத்தினார்.
அனைத்துலக மாணவர் கூட்டு, ஐக்கிய அரபு எமிரேட், ட்சே பயிற்சிக்கழகம் மற்றும் பஹாய் சமூகங்களில் தமது பணிகளை அவர் ஆக்கத்துடன் ஒருங்கிணைத்தார். ‘லிட்டெராட்டுரா மொன்டோ’ பத்திரிகைக்கு பல கட்டுரைகளை, பெரும்பாலும் போலாந்து இலக்கியங்களை, எழுதியதோடு ‘போலா எஸ்பெரான்டோ’, ‘லா பிராக்டிகோ’, ‘ஹெரால்டோ டெ எஸ்பரான்டோ’, ‘என்சிக்லோபீடியோ டெ எஸ்பரான்டோ’ ஆகியவற்றுக்கும் கட்டுரைகள் எழுதினார். 1933ல் பிரசுரிக்கப்பட்ட சியென்கியெவிச் எழுதிய ‘குவோ வாடிஸ்’ நூலின் மொழிபெயர்ப்பு மிகவும் பிரபலமான ஒன்றாகும்.
1937ல் அவர் அமெரிக்கா சென்று அங்கு நீண்டகாலம் தங்கியிருந்தார். அதன் பிறகு 1938 டிசம்பர் மாதத்தில் குடிநுழைவுத் துறை அவரின் விசாவை நீட்டிக்க மறுத்ததால் அவர் போலாந்து திரும்ப வேண்டியிருந்தது. அவ்வேளை அவர் ஓர் அமெரிக்கரை திருமணம் செய்துகொண்டால் அமெரிக்காவில் தங்கமுடியும் எனும் ஆலோசனை வழங்கப்பட்டது ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார். தாயகமான போலாந்து திரும்பியவுடன், அவர் நாடு முழுவதும் பிரயாணம் செய்து எஸ்பரான்டோ மொழியையும் பஹாய் சமயத்தையும் போதித்தார்.
1939ல் ஜெர்மன் ஆக்கிரம ஆட்சியின் கீழ், வார்சொ நகரில் இருந்த அவருடைய வீடு வார்சொ யூத ஒதுக்கச் சேரியின் ஒரு பகுதியாகியது. அமெரிக்காவுக்குச் சென்று நாஸி எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார, ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டு, தமது சொந்த நகருக்குத் திரும்பினார். ஆனால், கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே அவரும் அவரது குடும்பத்தினரும் வாழ்ந்து வந்தனர். அங்கும் அவர் பிறருக்குத் தம்மால் ஆன உதவிகளைச் செய்து உணவும் மருந்தும் கிடைப்பதற்கு உதவி செய்தார். போலாந்து நாட்டின் எஸ்பரான்டோவினர் பலமுறை அவருக்கு அடைக்கலம் அளிப்பதற்கு அல்லது தப்பிச் செல்வதற்கு உதவிட முன்வந்தனர் ஆனால், அவர் அவ்வுதவிகளை மறுத்துவிட்டார். பல சமயங்களில் லிடியாவிற்கு உதவியளிக்க முன்வந்த ஒரு பிரபல போலாந்து நாட்டு எஸ்பெரான்டினரான ஜோஸெஃப் ஆர்ஸென்னிக்கிடம், “ஒரு யூதரை ஒளித்துவைக்கும் எவரும் அந்த யூதர் கண்டுபிடிக்கப்படும் போது அந்த யூதரோடு சேர்ந்து அவரும் அவரின் குடும்பத்தினரும் அவர்களின் உயிரை இழக்க நேரிடும்,” என விளக்கமளித்தார். மற்றொருவருக்கு, இறுதியாக அவர் எழுதியதென நம்பப்படும் ஒரு கடிதத்தில் அவர் பின்வருமாறு விளக்கமளித்திருந்தார்: “உங்களை அபாயத்திற்குள்ளாக்கிட நினைக்காதீர்கள்; நான் சாக வேண்டும் என்பது எனக்குத் தெரியும்,ஆனால் நான் என் மக்களோடு இருக்க வேண்டியது என் கடமையாகும். எங்களின் துன்பங்களின் மூலமாக இவ்வுலகம் சீர்படுவதற்கு கடவுள் அருள்வாராக. நான் கடவுளை நம்புகிறேன். நான் ஒரு பஹாய், ஒரு பஹாய் ஆகவும் இறப்பேன். எல்லாமே அவர் கரங்களில் உள்ளது.”
இறுதியில், ஹிட்லரின் கீழ் செயல்படுத்தப்பட்ட வார்ஸொ நகர யூத ஒழிப்புத் திட்டத்தின் கீழ் யூதர்களைக் கொல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த மரணமுகாம்களில் ஒன்றான டிரெப்லிங்காவுக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு 1942 இலையுதிர்காலத்திற்குப் பிறகு கொல்லப்பட்டார்.
நினைவாஞ்சலி
லிடியாவின் நினைவாக, 1955ல் ஐக்கிய அமெரிக்காவின் வாஷிங்டன் நகரின் ஹோலோகோஸ்ட் மியூசியத்தில் ஒரு நினைவாஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது. அங்கு இரண்டாவது உலகப்போரின்போது கொடுங்கோன்மைகளுக்கு உள்ளான யூதர்களை காப்பாற்றுவதற்கு எஸ்பரான்டினர் மேற்கொண்ட முயற்சிகள் நினைவுகூறப்பட்டன.