தென் கெரோலினாவில் பஹாய் சமயம் இரண்டாவது பெரிய சமயம்


மூலம்: http://venitism.blogspot.com/2014/07/bahai-second-largest-religion-in-south.html

மொழிபெயர்ப்பு: B. சுப்பையா

(அமெரிக்காவின்) எல்லா 50 மாநிலங்களிலும் கிருஸ்துவ சமயம் மிகப் பெரிய சமயமாக இருப்பது ஆச்சரியமேயில்லை. ஆனால், எனது சொந்த மாநிலமான தென் கெரோலினாவில் பஹாய் சமயம் இரண்டாவது பெரிய சமயமாக இருப்பது ஓர் ஆச்சரியமே! இச்செய்தி, ச்சால்ஸ்டன் போஸ்ட் மற்றும் விரைவுத்தூது, ச்சால்ஸ்டன் மாநகர் நாளிதழ் எனும் இரு உள்ளூர் நாளிதழ்கள் பஹாய்களைப் பற்றி கட்டுரை வெளியிட தூண்டியுள்ளது. ஒரு நாஸ்திகனான என்னையும் ஓர் உள்ளூரளவிலான பஹாய் கூட்டத்தில் பங்கேற்கத் தூண்டியது.

தென் கெரோலினாவில் ஒட்டுமொத்த யூதர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் பஹாய்கள் அதிகமாகவே இருந்தனர்; ஆயினும், அவர்கள் நாஸ்திகர்கள் மற்றும் உலோகாயத வாதிகளைக்(agnostics) காட்டிலும் எண்ணிக்கையில் குறைவாகவே இருந்தனர்.

லூயிஸ் கிரேகரி என்பவரால் பஹாய் சமயம் தென் கெரோலினாவில் பிரபலமடைந்தது. 1874ல் பிறந்த இவர் ச்சால்ஸ்டனில் வளர்ந்தார். அமெரிக்காவில் பஹாய் சமயத்தை ஸ்தாபித்தவர்களில் இவரும் ஒருவராவார். அடிமை ஒருவரின் பேரனான இவர் 1909ல் பஹாய் சமயத்தை ஏற்றுக்கொண்டார். இனங்களுக்கிடையே ஒற்றுமையை மேலோங்கச் செய்வதற்காக நாட்டின் பல பாகங்களுக்குப் பயணம் மேற்கொண்டார். இவர் 1912ல் வெள்ளை இனத்தைச் சார்ந்த பெண்மணி ஒருவரை மணந்தார். அக்கால கட்டத்தில் அந்நாட்டின் பல பாகங்களில், இது போன்ற கலப்புத் திருமணம் செய்துகொள்வது ஒரு குற்றச் செயலாகவே கருதப்பட்டது. லூயிஸ் கிரெகரி பஹாய் அரும்பொருள் காட்சியகம் ச்சால்ஸ்டன் நகரின் மையத்தில் இருக்கின்றது.

அண்டை அயலார் மத்தியில் பஹாய்களும் நாஸ்திகர்களும் சாத்தான்களாகக் கருதப்பட்டதால், அவர்கள் தங்கள் கருத்தை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்வதில்லை. பஹாய் சமயம் 1844ல் “பாப்” எனும் இளைஞர் ஒருவரால் நிறுவப்பட்டது. அரேபிய மொழியில் “பாப்” என்பதன் பொருள் “வாசல்” என்பதாகும். இவர் இஸ்லாம் சமயத்தின் இரட்சகராகத் தம்மைக் கோரிக்கொண்டார். இஸ்லாத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது போல் அமைதி மற்றும் நீதி யுகத்தில் இரண்டாவது தேவதூதர் தோன்றிடுவார் எனவும் பாப் அறிவித்தார். இஸ்லாமிய மதகுருக்களால் பாப் அவர்கள் அன்னியப்படுத்தப்பட்டு, 1850ல் தமது 30வது வயதில் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். பாப் அவர்களின் நம்பிக்கையாளர்களுள் ஒருவரான பஹாவுல்லா, 1863ல் தாம்தான் பாப் அவர்களால் முன்னறிவிக்கப்பட்ட இறைத்தூதரென அறிவித்தார். பஹாவுல்லாவின் போதனைகள்தான் பஹாய் சமயத்தின் அஸ்திவாரமாகும்.

சமீபத்தில், டேவ் மற்றும் போனீ ஸ்பிங்கர் தம்பதியர் இல்லத்தில் 15 பேர் பங்கேற்ற ஒரு பஹாய் கூட்டத்தில் நானும் கலந்துகொண்டேன். அவர்கள் அனைவரும் உள்ளூர் தலைவர்களென என நான் எண்ணினேன். ஆனால், பஹாய் தலைவர் என்று எவருமில்லையென அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். பஹாய்கள் அவ்வப்போது தங்கள் இல்லங்களில் பஹாய் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தனர். அவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கூட்டத்தில்தான் நான் கலந்துகொண்டேன். நாங்கள் ஒரு வட்டத்தில் அமர்ந்திருந்தோம். வழிபாடு தொடங்கியது, டேவ் இசைப்பதிவுக் கருவியை முடுக்கினார். அதிலிருந்து இன்னிசை ஒலித்தது. அதனைத் தொடர்ந்து “ஒற்றுமை உணர்வு பற்றிய பிரதிபலிப்பு” எனும் துண்டுபிரசுத்திலிருந்து வருகையாளர்கள் ஒவ்வொருவரும் உரக்க வாசித்தனர். மற்றவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று சொல்வதைவிட திருவாசகங்கள் நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது என்பதைப் பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டுமென டேவ் கேட்டுக்கொண்டார். இக்கருப்பொருள் தொடர்பாகக் கருத்துக் கூற வேண்டுமாய் நாங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டோம்.

பஹாவுல்லாவின் போதனைகள் கடவுளின் ஒற்றுமை, சமயங்களின் ஒற்றுமை மற்றும் மனிதகுல ஒற்றுமை பற்றி விவரிக்கப்பட்டிருந்தது. அவை மனிதர்கள் அனைவரின் மதிப்பு மற்றும் சமத்துவத்தை மையப்படுத்தியிருந்தன. இனங்கள் மற்றும் கலாச்சாரங்களின் பல்வகைத்தன்மை போற்றப்பட்டன; இனவெறி, தேசியவாதம், சமூக அந்தஸ்து மற்றும் ஆண் பெண் எனும் பேதம் யாவும் ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கு செயற்கையான முட்டுக்கட்டைகளாகும். உண்மையில் எங்களது வழிபாட்டுக்கூட்டத்தில் வெள்ளையர் மற்றும் கருப்பர், ஆண்கள் மற்றும் பெண்கள், இளையோர் மற்றும் முதியோர், செல்வந்தர் மற்றும் வறியவர் என அனைத்து தரப்பினரும் பங்கேற்றிருந்தனர்.

ஆழ்சிந்தனைக்குப் பிறகு, நாங்கள் இரவு விருந்தில் பரிமாறப்பட்ட பல்வகை உணவினை உண்டு மகிழ்ந்தோம். வழக்கமாகப் புதியவர்கள் பங்கேற்கும் ஒரு நிகழ்வில் அவர்களுள் ஒருவனாக இருப்பது எனக்கு அசௌகரியமாகவே இருக்கும். ஆனால், அன்றைய நிகழ்வு ஒரு விதிவிலக்காக இருந்தது. எல்லோருக்கும் எல்லோரையுமே பிடித்திருந்தது. என்னைத் தவிர எவருமே இன மற்றும் நிற வேற்றுமையை ஒரு பொருட்டாகக் கருதவே இல்லை.

இரவு உணவின்போது டேவ், போனீ இன்னும் பிறரோடு நான் பஹாய் சமயம் குறித்து விவாதித்தேன். கடவுள் நம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மை தொடர்பான கேள்விகள் கேட்பதும் கேட்கப்படுவதையும் நான் பெரிதும் விரும்பினேன். சில வேளையில் ஒருசிலர் உணர்ச்சிவசப்பட்டு பேசத்தொடங்கினர். அதுபோன்ற சந்தர்ப்பத்தில் நான் சற்று பின்வாங்கிவிடுவேன். இந்த பஹாய்களின் மனதைப் புண்படுத்தும் எதையும் வெளிப்படுத்த நான் விரும்பவில்லை. இயற்பண்புடைய தனியொருமைக் கோட்பாட்டாளர்கள், இயற்பண்புடையோர் யூதமார்க்கம் மற்றும் ஒழுங்குநெறி கலாச்சாரம் போன்ற கடவுளை நம்பாத, மனித நலனுக்கு முக்கியத்துவமளிக்கும் சமயமே எனக்குப் பிடித்தமான சமயமாகும். பஹாய் சமயம் கடவுள் நம்பிக்கையோடு மனிதநலனுக்கு முன்னுரிமையளிக்கும் ஒரு சமயமாக இருப்பதால், அஃது எனக்குப் பிடித்தமான சமயமாகத் திகழ்ந்தது.

சமயங்கள் அதிக மதிப்பளிப்பது நடத்தைக்கா அல்லது நம்பிக்கைக்கா என்பதை வைத்தே நான் சமயங்களைப் பெரும்பாலும் எடைபோடுவேன். பஹாய் சமயம் நம்பிக்கையைக் காட்டிலும் நடத்தைகளுக்கே முக்கியத்துவளிக்கின்றது என மிகத் தெளிவாக என்னிடம் தெரிவித்தார்கள். நான் ஏற்கனவே எழுதியிருந்ததுபோல் நான் கடந்த காலத்தில் விஜயம் செய்த ஒரு தேவாலயத்தின் நடைமுறைக்கு இது சற்று மாறுபட்டு இருந்தது. கடவுளுக்கு அண்மையில் அல்லது தூரத்தில் எனும் “ஆன்மீக” நிலையைப் பொருள்படச் செய்யும் சுவர்க்கம் மற்றும் நரகம் எனும் உருவக வடிவத்தில் பஹாய்கள் நம்பிக்கைகொண்டுள்ளனர். மக்கள் தங்கள் இறப்புக்குப்பின் கடவுளுக்கு நெருக்கமாக அல்லது தூரமாக இருப்பார்கள் என்பதில் நம்பிக்கையுண்டா என டேவிடம் கேட்டேன். அவரும் அவ்வாறு இருக்கலாம் என்றார். நான் சாட்சியங்களை வைத்தே ஒன்றில் நம்பிக்கைகொள்வதால், இறந்த பிறகு நான் அவரையோ அவளையோ சந்தித்தால் அவரை நம்புகிறேன் என்று கடவுளிடம் செஒல்வேன் என சொன்னேன். அதைக் கேட்ட டேவ் சிரித்துவிட்டார். அன்புதான் பஹாய் கடவுள், சினமல்ல.

ஆப்ரஹாம், கிருஷ்ணா, ஜொரோஸ்டர், மோஸஸ், புத்தர், இயேசு மற்றும் முகம்மது உட்பட தொடர்ச்சியாக தெய்வீக இறைத்தூதர்களாக கடவுள் அவதரித்துள்ளார் எனும் பஹாய்களின் நம்பிக்கை பற்றி நான் கேள்வியெழுப்பினேன். கலாச்சாரம் பரிணாமம் காண்பதால் கடவுள் வெவ்வேறு செய்திகளை அனுப்புகின்றார். அவை விளங்கிக்கொள்வதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் சுலபமாக இருக்கின்றன. அத்துடன் ஒற்றுமை முக்கியம் என்பதோடு எல்லா சமயங்களுக்கிடையேயும் ஒற்றுமை நிலவிடும்போது உலக சமாதானம் அடையப்படும் எனும் அவர்களின் நம்பிக்கையோடும் இது பொருந்துகிறது என டேவ் நியாயப்படுத்தினார்.

தன்பாலினருக்கு இடையிலான திருமணம் (gay marriage) பற்றி நான் கேள்வி கேட்டேன். கணவன், மனைவியர்க்கிடையில் மட்டுமே உடலுறவு அனுமதிக்கப்படுகிறது என்றும் திருமணத்துக்கு முன்பும் திருமண பந்தத்திற்கு வெளியிலும் தன்பாலினத்தினரோடும் உடலுறவு தடைசெய்யப்பட்டுள்ளது எனவும் கூறினர். இங்கு ஒரு நற்செய்தி என்னவென்றால் பஹாய்கள் ஒவ்வொருவரையும் மதித்து கண்ணியப்படுத்த முயல்கின்றனர். அவர்கள் தன்பாலினத்தாரைத் தாழ்ந்த சாதியனராக கருதுவதில்லை. அதே வேளையில் பஹாய் அல்லாதோர் பஹாய் சட்டங்களைப் பின்பற்ற வேண்டுமெனவும் எதிர்பார்ப்பதில்லை.

பஹாய்கள், கட்சி அரசியலிலிருந்து விலகியிருக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அவர்கள் வேட்பாளர்களை வழிமொழிவதோ அரசியல் பதவி வகிப்பதோ அனுமதிக்கப்படவில்லை. இது கவலையளிக்கிறது ஏனெனில், சில பஹாய்களை — குறிப்பாகத் தென் கெரோலினாவில், வேட்பாளர்களாகக் காண நான் விரும்புகிறேன்.

(உங்கள் சிந்தனைக்கு: கட்சி பொறுப்பு வகிப்பதற்காகக் கிருஸ்தவர்கள் தங்களுக்குத் தாங்களே 10 ஆண்டு தற்காலிகத் தடை விதித்துக்கொள்கின்றனர். அப்படியானால் எப்படி நம் நாடு மாற்றம் காணும்.)

இது பஹாய்களுடனான முதல் சந்திப்பல்ல. 1997ல் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, புது டில்லியிலுள்ள பஹாய் வழிபாட்டு இல்லத்திற்கு விஜயம் செய்தேன். உலக சமாதானத்திற்காகப் பாடுபடுவதும் இனவெறியையும் ஏழ்மையையும் துடைத்தொழிப்பதுவுமே பஹாய்கள் முன்னுரிமை வழங்குகின்றனர் என்பதை அங்குதான் முதன்முதலில், நான் தெரிந்துகொண்டேன். நான் அங்கிருந்து புறப்படுவதற்கு முன், ஒரு சிறுதொகையை நன்கொடையாக வழங்க எண்ணினேன். அப்பொழுதுதான், வேறெந்த சமயமோ சமய சார்பற்ற இயக்கங்களிடமிருந்தோ கேள்விப்படாத ஒன்றை முதன்முறையாகக் கேள்வியுற்றேன். “உங்கள் நன்கொடையை ஏற்காததற்காக என்னை மன்னியுங்கள். நிதி வழங்குவது ஒரு பாக்கியமென நாங்கள் கருதுகின்றோம். பஹாய்களுக்கு மட்டுமே இவ்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.”

அதனால்தான் பஹாய்கள் அரசியலில் ஈடுபடாமல் இருக்கின்றனரோ!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: