பஹாய் தலைமையகம் இஸ்ரேல் நாட்டில் அமைந்திருப்பது ஏன்?


பஹாய் புனித ஸ்தலங்கள் இஸ்ரேல் நாட்டில் இருப்பது ஏன்?

அன்பான பிரபுவே, நீர் மனிதர்கள் யாவரையும் ஒரே இனத்திலிருந்து  ஆக்கியுள்ளீர். அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினராக வாழ விதித்துள்ளீர். உமது தெய்வீக முன்னிலையில் அவர்களெல்லாரும் உமது ஊழியர்களே…(பஹாய் பிரார்த்தனைகள்-பஹாவுல்லா)

இன்று இரான் நாட்டிலுள்ள பஹாய்கள் பல கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர். பலவிதமான குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்படுகின்றன. பஹாய்கள் அமெரிக்க ஒற்றர்கள், இஸ்ரேலின் ஒற்றர்கள், பிரிட்டிஷ் ஒற்றர்கள், ரஷ்ய நாட்டோடு அரசியல் தொடர்புகொண்டவர்கள், அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்படுகின்றனர் எனப் பலவாறாக குற்றஞ் சாட்டப்படுகின்றனர்.

bab_34-Shrine2-460
பாப் பெருமானாரின் நினைவாலயம்

அதுமட்டுமல்லாது, பஹாய்கள் கடைப்பிடிக்கும் ஆண் பெண் சமத்துவத்தின் காரணமாக, அவர்கள் ஒழுக்கக் கேடுடையவர்கள் எனவும் குற்றஞ்சாட்டுகின்றனர். இன்று இரானிய பஹாய் நம்பி்க்கையாளர்கள் பஹாய்கள் எனும் காரணத்தினால் பணிநீக்கம் மற்றும் வியாபார முடக்கம் ஆகியவற்றை எதிர்நோக்குகின்றனர். பள்ளிகளில் துன்புறுத்தப்படுவதோடு பல்கலைக்கழகங்களிலிருந்து நீக்கப்படுவது போன்ற பல கொடுமைகளுக்கும் பஹாய் மாணவர்கள் ஆளாகிவருகின்றனர்.

பஹாய்கள் மீது சுமத்தப்படும் முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று, பஹாய்களின் உலக நிலையம் இஸ்ரேல் நாட்டில் உள்ளது என்பதேயாகும். இதனால், பஹாய்கள் இஸ்ரேல் நாட்டிற்கு விசுவாசமாக இருப்பவர்கள், அவர்கள் அந்நாட்டின் ஒற்றர்கள் என இரான் அரசாங்கம் குற்றம் சுமத்துகின்றது. இக்குற்றச்சாட்டு உட்பட மற்ற மற்ற அனைத்துமே பொய்யென நிரூபிக்கப்பட்போதும், இரான் அரசாங்கம் இத்தகைய குற்றச்சாட்டுகளையும் இவை போன்று மேலும் பல கற்பனையான குற்றச்சாட்டுகளையும் கைவிடவில்லை. இவ்விதமான பொய்க் குற்றச்சாட்டுகளுக்கான மூலகாரணம், ஒன்று மட்டுமே. நபியவர்கள் எல்லா நபிகளின் வரிசையில் இறுதியானவர் என்பதாகும். அவருக்குப் பிறகு வேறு நபி எவரும் கிடையாது எனக் கூறப்படுகின்றது. ஒரு வகையில் இஃது உண்மைதான். நபியவர்கள் தீர்க்கதரிசிகளுள் இறுதியானவராவார். அவருக்குப் பிறகு இனி தீர்க்கதரிசிகள் அல்லது நபிகள் என எவருமே உலகில் தோன்றப்போவதில்லை.

ஆனால், இஸ்லாம் சமயத்தில் இறைத்தூதர்களுள் இருவகையினர் உள்ளனர் எனக் கூறப்படுகின்றது, அதாவது நபி, இரஸூல் என இரு வகையினராவர். இவர்களுக்கிடையே பல ஒற்றுமைகள் உள்ளன அதே சமயம் வேற்றுமைகளும் உண்டு. இதன் தொடர்பில் நபியவர்கள் இனி நபிகள் யாரும் கிடையாது எனக் கூறினாலும் இனி இரஸூல்கள் யாரும் கிடையாது எனக் கூறவில்லை. மேலும், இஸ்லாத்தில் சுன்ன வகுப்பினரிடையே இயேசு பிரான் உலகில் மீண்டும் தோன்றுவார் எனும் நம்பி்க்கையுள்ளது. அதே போன்று ஷியா வர்க்கத்தினரிடையே அவர்களின் 12வது இமாமாகிய இமாம் மஹதி மீண்டும் பூமியில் அவதரிப்பார் எனும் நம்பிக்கையும் உண்டு. ஆகவே, நபியவர்களுக்குப் பிறகு வேறு இறைத்தூதர்கள் இனி கிடையாது எனும் கூற்று சற்று முரண்பாடான ஒன்றாக இருக்கின்றது.

1844ல் சையிட் அலி முகமது அல்லது பாப் (திருவாசல்) எனும் பெயருடைய ஓர் இளைஞர் உலகம் எதிர்ப்பார்த்திருந்த, எல்லா சமயங்களும் முன்கூறிய அவதாரம், தாமே எனப் பிரகடனம் செய்தார். தமக்குப் பிறகு தோன்றவிருக்கும் மற்றொரு மாபெரும் அவதாரத்திற்குத் தாம் ஒரு ‘வாசல்’ அல்லது முன்னோடி என அறிவித்தார். அதைத் தொடர்ந்து நாடே அல்லோல கல்லோலப்பட்டது. ஆயிரக்கணக்கான பாப் பெருமானாரின் சீடர்கள் கொலை செய்யப்பட்டனர். பாப் அவர்களும் மரண தன்டனைக்கு ஆளானார்.

baha_shrine_2
பஹாவுல்லாவின் நினைவாலயம்

பாப் அவர்களைக் கொலை செய்ததோடு மட்டுமின்றி, அவருடைய திருவுடல் ஒரு மதகில் வீசப்பட்டதுடன் அது மிருகங்களுக்கு இறையாகக்கூடும் எனவும் அதிகாரிகள் நினைத்தனர். ஆனால், கடவுளின் திருவருளால் அவரது உடல் மீட்கப்பட்டு சுமார் அறுபது வருட காலம் இங்கும் அங்குமாகப் பாதுகாக்கப்பட்டு இறுதியில் அந்நாளில் ஓட்டமான் அரசாங்கத்தின் கீழிருந்த பாலஸ்தீனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கு ஹைஃபா நகரின் கார்மல் மலைமீது நல்லடக்கம் செய்யப்பட்டது.

பாப் அவர்களின் மறைவுக்குப் பிறகு பஹாவுல்லாவை பாப் அவர்களின் நம்பிக்கையாளர்களின் தலைவர் எனத் தீர்மானித்த இரான் அரசாங்கம் அவரை ஒரு பாதாளச் சிறையில் நான்கு மாதகாலம் அடைத்துவைத்தது. பிறகு அவர் நாட்டை விட்டே வெளியேற வேண்டுமெனவும் உத்தரவிட்டது. இதனால், அவர் முதலில் இராக் நாட்டின் பாக்தாத் நகருக்கும், பிறகு துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லிற்கும் அதன் பிறகு அதே நாட்டின் எடிர்னே எனப்படும் ஏட்ரியாநோப்பிளிற்கும் நாடுகடத்தப்பட்டார். இறுதியில் அவரது நம்பிக்கையாளர் எண்ணிக்கையின் அதிகரிப்பினாலும் அவரை எதிர்த்தவர்களின் செயல்களாலும் ஓட்டமான் அரசாங்கத்தின் சிறை நகரான ஆக்காவிற்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்குச் சிறை வைக்கப்பட்டார். இந்த நகரின் விசேஷம் என்னவெனில், இந்நகரின் மீது ஒரு பறவை பறந்தால் அஃது அப்பொழுதே அங்கேயே வீழ்ந்து இறந்துவிடும் என்பதாகும். அவ்வளவு மோசமான நிலையில் அந்த நகரம் அன்றிருந்தது.

பஹாய் உலக நிலையம்
பஹாய் உலக நிலையம்

பஹாவுல்லா ஆக்கா சிறை சென்றது 1868 ஆகஸ்ட் மாதம். பாலஸ்தீனம் எனப்படும் அப்பிரதேசம் கி.பி. 1918 வரை துருக்கியர் வசமிருந்தது. கி.மு. 1920க்குப் பிறகு முறைப்படி பிரிட்டிஷ் மேலாதிக்கத்தின் கீழ் வந்தது. அதன் பிறகு யூதப் பகுதியையும் அரபுப் பகுதியையும் தனித் தனியாகப் பிரித்து இரண்டு நாடுகளாக்கிட ஐ.நா தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வாக்கெடுப்பினை நடத்தியது. வாக்கெடுப்பு யூதர்களுக்குச் சாதகமாக அமைந்தது. ஆனால், அரபு நாடுகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. 1948ல் யூதர்கள் சுதந்திரப் பிரகடனம் செய்து தங்கள் நாட்டிற்கு இஸ்ரேல் எனப் பெயரிட்டனர். பிறகு போர் மூண்டு யூதர்கள் தங்கள் வசமிருந்த சிறிது நிலத்தையும் பன்மடங்காகப் பெருக்கிக்கொண்டு இஸ்ரேல் எனும் நாட்டை நிலைநிறுத்திக்கொண்டனர்.

இதன் விளைவாக ஹைஃபா மற்றும் ஆக்கோவிலிருந்த பஹாய் புனிதஸ்தலங்கள் இஸ்ரேல் நாட்டிற்குள் சிக்கிக்கொண்டன. பஹாவுல்லாவின் ஒரு முக்கிய போதனை என்னவெனில், பஹாய்கள் எங்கெங்கு வசித்த போதிலும் அவர்கள் தாங்கள் வசிக்கும் நாட்டிற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதே ஆகும். நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் கடவுளுக்கே துரோகம் செய்பவர்கள் என பஹாவுல்லா வலியுறுத்தியுள்ளார். ஆகவே, பஹாய்கள் அவரவர் நாட்டிற்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்பதோடு, இஸ்ரேலில் உள்ள பஹாய் தலைமையகமும் இஸ்ரேல் அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு கீழ்ப்படிந்தே ஆகவேண்டும்.

300px-Map_iran_ottoman_empire_banishment
திஹரானிலிருந்து ஆக்கா வரையிலான பஹாவுல்லாவின் நாடுகடப்பு

உலகம் முழுவதுமுள்ள பஹாய் சமூகத்தினர் தாங்கள் வசிக்கும் நாடுகளில் கொண்டிருக்கும் சுமுகமான உறவுகள் போன்று பஹாய் தலைமயையகமும் இஸ்ரேல் நாட்டோடு ஒரு சுமுகமான உறவைக் கொண்டுள்ளது. அதே சமயம் பஹாய் தலைமையகம் இஸ்ரேல் நாட்டிடமிருந்து எவ்வித உதவியையும் பெறவுமில்லை எதிர்ப்பார்க்கவுமில்லை. பஹாய் தலைமையகம் பொருளாதார ரீதியின் தன்னிச்சையானது. அது இஸ்ரேல் அரசாங்கத்தோடு எவ்வித தொடர்பும் கொண்டிருக்கவில்லை என்பதோடு அதனுடன் எதற்காகவும் ஒத்துழைக்கவுமில்லை. இஸ்ரேலிலுள்ள பஹாய் சொத்துடைமைகள் அனைத்துமே பஹாய்கள் வழங்கிடும் நிதிகளின் மூலமாகக் கொள்முதல் செய்யப்பட்டவை.

ஆக, பஹாய் தலைமையகம் இஸ்ரேல் நாட்டில் இருப்பதற்கு நிச்சயமாகவே பஹாய்கள் காரணமல்ல, அதற்கு அரசியல் பிரச்சினைகளே காரணம். பஹாவுல்லாவின் கோட்பாடான “உலகம் ஒரே நாடு மனிதர்கள் அதன் பிரஜைகள்” என்பதற்கிணங்க மனிதர்கள் வாழும் காலம் வரும்போது இத்தகைய இன, சமய மற்றும் அரசியல் பிரச்சினைகள் கடவுளின் திருவிருப்பத்திற்கு இணங்க  நீங்கிவிடும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: