அவளுக்குஅவன் (HeForShe) – 20 செப்டம்பர் 2014ல் எம்மா வாட்ஸன் (Emma Watson) ஐநா-வில் ஆற்றிய ஓர் உரை
(இது ஒரு தற்காலிக மொழிபெயர்ப்பு)
இன்று, HeForShe எனப்படும் ஓர் இயக்கத்தை ஆரம்பிக்கின்றோம். எங்களுக்கு உங்கள் உதவி தேவைப்படுவதால் உங்களை அணுகுகின்றோம். மாற்றத்திற்கான பேச்சாளர்களாக முடிந்த அளவு அதிகமான முதிய மற்றும் இளம் ஆண்களைத் திரட்ட வேண்டும். அதைப் பற்றி பேசிக்கொண்டிருக்க மட்டும் முடியாது. அதை நடைமுறையான ஒன்றாக ஆக்கிட நாங்கள் முயலுகின்றோம். ஐநா-வின் நல்லெண்ணத் தூதுவராக நான் ஆறு மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்டேன்
பெண்ணியம் (feminism) குறித்து நான் அதிகமாகப் பேசப் பேச, பெண்கள் உரிமைக்காகப் போராடுவது பெரும்பாலும் ஆண்களை-வெறுத்தல் என்பதன் இணைபொருளான ஒன்றாக ஆகிவிட்டது. ஒன்று மட்டும் எனக்கு உறுதியாகத் தெரிகிறது, இந்த நிலைமை ஒரு முடிவிற்கு வரவேண்டும். பெண்ணியம் என்பது பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமவுரிமையும் வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டும். இதுவே அரிசியல், பொருளாதார மற்றும் சமூக நிலையிலான பாலின சமத்துவம் குறித்த கோட்பாடாகும்.
எங்களின் பெற்றோருக்காக ஒரு நாடகத்தை நானே இயக்க விரும்பியதால் எனது 8 வயதில், நான் போஸ்ஸியாக (bossy) இருக்கின்றேன் என்றனர். எனக்கு 14 வயதானவுடன், ஊடகத்தின் சில பகுதியினர் என்னை பாலியல் பகுப்பிற்கு உட்படுத்தப்படுத்திட ஆரம்பித்தனர். எனது 15 வயதில் என் தோழிகள், ஆண்மைத்தனத்தோடு தங்களைக் காண்பித்துக்கொள்ள விரும்பாமல் விளையாட்டுக் குழுக்களிலிருந்து விலக ஆரம்பித்தனர். என் 18 வயதில் என் ஆண் தோழர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திட முடியாமல் தவித்தனர்.
ஆகவே, நான் ஒரு பெண்ணியல்வாதி என நான் முடிவு செய்தேன். அது சிக்கலான ஒன்றென எனக்குப் படவில்லை. ஆனால் நான் சமீபமாக மேற்கொண்ட ஆய்வின்படி பெண்ணியம் என்பது ஒரு வேண்டத்தகாத வார்த்தையாக ஆகியுள்ளது தெரியவருகின்றது. பெண்கள் தங்களை பெண்ணியல்வாதிகளாகக் காண்பித்துக்கொண்டிட விரும்புவதில்லை. உண்மையில் பெண்ணிய வெளிப்பாடு வன்மைமிக்க, அடாவடியான, தனிமைப்படுத்துகின்ற மற்றும் ஆண்-எதிர்ப்பாகவும் கவர்ச்சியற்ற ஒன்றாகவும் கருதப்படுகின்றது.
இந்த வார்த்தை ஏன் மனதில் ஓர் அசௌகர்ய உணர்வைத் தோற்றுவிக்கவேண்டும்? என் ஆண் சகப்பணியாளர்களுக்குச் சமமாக எனக்கு ஊதியம் வழங்கப்படுவது நியாயமே என நான் நினைக்கின்றேன். என் உடல் குறித்த சொந்த முடிவுகளைச் செய்திடும் உரிமை எனக்கு வேண்டு. என் வாழ்வைப் பாதிக்கக்கூடிய தீர்மாணங்களிலும் முடிவுகளிலும் பெண்கள் சம்பந்தப்பட்டிருப்பது சரியே. சமூக ரீதியில் ஆண்களைப் போன்றே எனக்கும் சம மரியாதை வழங்கப்படுவது சரியே.
ஆனால் துரதிர்ஷடவசமாக, பெண்கள் இவ்வுரிமைகள் அனைத்தையும் அனுபவிக்கக்கூடிய ஒரு நாடு கூட இவ்வுலகில் இல்லை என்றே நான் கூறுவேன். பாலின சமத்துவத்தை அடைந்துவிட்டதாக எந்த ஒரு நாடும் இன்று கூறிக்கொள்ள முடியாது. இவ்வுரிமைகள் மனிதவுரிமைகளைச் சார்ந்தவை, ஆனால் நான் மட்டும் அதிர்ஷ்டம் செய்தவளாக இருக்கின்றேன்.
நான் ஒரு பெண்ணாகப் பிறந்ததினால் என் பெற்றோரின் அன்பு எனக்கு எவ்விதத்திலும் குறைந்துவிடவில்லை. அவ்விதத்தில் நான் கொடுத்து வைத்தவள். நான் பெண் என்பதால் என் பள்ளி வாழ்க்கையும் ஓர் எல்லைக்குட்படவில்லை. எனது அறிவுறையாளர்கள் வருங்காலத்தில் நான் ஒரு தாயாகும் சாத்தியத்தினால் வாழ்க்கையில் நான் பெரும் சாதனைகள் புரிந்திட முடியாது என்று நினைக்கவில்லை. இச்சூழல்களே இப்போது நான் அடைந்துள்ள மேம்பாட்டிற்கான பால்மை சமத்துவத்திற்கான பாலங்கள். அவர்களுக்கு அது தெரியாதிருக்கலாம், ஆனால் அவர்களே இன்று உலகிற்குத் தேவைப்படும் மற்றும் தெரியாமலேயே செயல்படும் பெண்ணியர்களாவர். இவர்கள் மேலும் அதிகமாத் தேவைப்படுகின்றனர்.
பெண்ணியம் எனும் வார்த்தை இன்னமும் உங்கள் மனதில் ஓர் அசௌகர்யத்தை ஏற்படுத்தினாலும் அவ்வார்த்தையானது முக்கியமன்று. அதன் கருத்தும் அதன் பின்னணியில் வீற்றிருக்கும் பேரார்வமுமே முக்கியமாகும், ஏனெனில் நான் பெற்றிட்ட அதே உரிமைகளை எல்லா பெண்களுமே பெற்றிடவில்லை. வெகு சிலரே அந்நிலையை அடைந்துள்ளனர்.
1997ல் பெய்ஜிங் நகரில் பெண்கள் உரிமை குறித்து ஹில்லரி கிலின்டன் ஒரு பிரபலமான உரையாற்றினார். துரதிர்ஷ்ட வசமாக, அவர் அன்று கோரியிருந்த மாற்றங்கள் இன்றும் தேவைப்படுகின்றன. அக்கூட்டத்தில் ஆண்களின் பங்கேற்பு 30 விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருந்தது. ஆகவே, உலகின் பாதி மட்டுமே அவ்வுரையாடலில் பங்கேற்றிட அழைக்கப்படுகையில் அல்லது வரவேற்கப்படுவதாக உணரும் நிலையில் உலகில் மாற்றங்களைக் கொண்டுவருவது எவ்வாறு?
ஆண்களே, இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி உங்களுக்கு முறைப்படியான அழைப்பு ஒன்றை விடுக்கின்றேன். பால்மை சமத்துவம் உங்களையும் சார்ந்த ஒரு பிரச்சினையாகும். ஏனெனில், பெற்றவர் எனும் முறையில் என் தந்தையின் பங்கு சமுதாயத்தால் சற்று குறைவாகவே மதிப்பிடப்படுவதை நான் காண்கின்றேன். மனநோய்க்கு ஆளான ஆண்களைக் கண்டிருக்கின்றேன். அவர்கள் தங்களின் ஆண்மைக்குப் பங்கம் விளைந்துவிடுமோ எனும் உணர்வில் உதவி கேட்க முடியாமல் தவிக்கின்றனர். பொருண்மையாக, ஐக்கிய அரசில் (UK) 20லிருந்து 49 வயதுக்கு உட்பட்டோரின் மரணத்திற்குச் சாலைவிபத்துகள், புற்றுநோய், இருதயநோய் ஆகியவற்றிற்கும் மேற்பட்டு தற்கொலையே முக்கிய காரணமாக இருக்கின்றது. ஆண்மையின் வெற்றி என்கையில், நலிந்துபோன மற்றும் மனவுறுதியற்ற ஆண்களை நான் கண்டிருக்கின்றேன். ஆண்களுக்கும் சமத்துவத்தின் பலன்கள் கிடையாது.
ஆண்களும் ஆண் பால்மைத்தன்மைக்கு அடிமைப்பட்டுள்ளதாக நாம் பெரும்பாலும் கூறுவதில்லை, ஆனால் அவர்கள் அவ்வாறு அடிமைப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மை. அவர்கள் அதிலிருந்து விடுபடும்போது, அதன்விளைவாகப் பெண்கள் நிலையும் இயல்பாகவே மாற்றம் காணும். ஆண்கள் தங்கள் நிலையை நிலைநாட்டிக்கொள்ளக் கடுமையாக நடந்துகொள்ளவிட்டால் பெண்களும் கீழ்ப்படிந்திட வற்புறுத்தலுக்கு உட்பட வேண்டியதில்லை. ஆண்கள் கட்டுப்படுத்த வேண்டியதில்லை எனும்போது, பெண்களும் கட்டுப்படுத்தப்பட வேண்டியதில்லை.
ஆண் பெண் இருவருமே உணர்திறத்தில் தயக்கம் காண்பிக்கக்கூடாது. இருவரும் உறுதிப்பாடு உடையவர்களாக இருக்கவேண்டும். பால்மையை நேரெதிரான இரண்டு இலட்சியத் தொகுப்புகளாகக் காண்பதினின்று அதை ஒரு நிறமாலையாகக் (spectrum) காணவேண்டிய காலம் கனிந்துவிட்டது. நாம் யாராக இல்லையோ அதை விடுத்து நாம் யார் என்பதைக் கொண்டே நம்மை நாம் வரையறுத்துக்கொள்ள வேண்டும். நாம் அனைவரும் மேலும் சுதந்திரமாக இருக்கலாம், இதுவே “அவளுக்குஅவன்” என்பதின் கருப்பொருளாகும். அது சுதந்திரம் பற்றியது. ஆண்கள் இந்நிலையை அடைந்திட வேண்டும். அதன் மூலம் அவர்களின் மகள்களும் சகோதரிகளும் தாய்மார்களும் தப்பெண்ணங்களிலிருந்து விடுபடுவதோடு அவர்களின் மகன்களும் இழகியமனம் பெறவும் மனிதர்களாகச் செயல்படவும் வாய்ப்புகள் பெற்றும் தாங்கள் இயல்பாகப் பெற்றிரிருந்தும் கைவிட்டுமிருந்தவற்றை மீண்டும் பெற்றும் அதன்மூலம் தங்களின் உண்மையான மற்றும் பூரணமான நிலையை அடையலாம்.
இந்த ஹேரி பொட்டர் பெண் யார் என நீங்கள் நினைக்கலாம். இவளுக்கு ஐ;நாவில் என்ன வேலை? நானும் எனக்கு நானே அதே கேள்வியைத்தான் கேட்டு வந்துள்ளேன். எனக்குத் தெரிந்ததெல்லாம், இப்பிரச்சினை குறித்து நான் அக்கறை கொண்டுள்ளேன் மற்றும் அதை சரிபடுத்திடவும் விரும்புகின்றேன். வாழ்க்கையில் நான் கண்டுள்ளவற்றின் அடிப்படையில், வாய்ப்பளிக்கப்படுமானால், என் பங்கிற்கு நானும் எனக்குத் தெரிந்ததைக் கூறு விரும்புகின்றேன். நல்ல ஆண்கள், பெண்கள் ஆகியோரின் செயல்படாமையே தீய சக்திகள் வெற்றிபெறுவதற்குத் தேவையான சூழலாகும் என அரசியல் மூதறிஞரான எட்மன்ட் பர்க் கூறியுள்ளார்.
இவ்வுரைக்காக நான் நடுங்கியும் நம்பிக்கையிழந்திருந்தபோது, நானின்றி வேறு யார் என எனக்கு நானே கூறிக்கொண்டேன். இப்பொழுதில்லாவிட்டால் எப்பொழுது? வாய்ப்புகள் ஏற்படும்போது சந்தேகங்கள் எழுகையில் அவ்வார்த்தைகள் உபயோகமாக இருக்கும் என நான் நம்புகின்றேன். நாம் ஒன்றும் செய்யாது இருந்தால் ஒரே விதமான பணிக்கு, பெண்கள் ஆண்களுக்குச் சமமான ஊதியம் பெறுவதற்கு இன்னும் 75 அல்லது 100 ஆண்டுகள் கடந்திடலாம் என்பதே உண்மை. அடுத்த 16 வருடங்களுக்குள் 15.5 மில்லியன் பெண் பிள்ளைகள் பால்ய விவாகத்திற்கு உட்படுத்தப்படுவார்கள். இப்போதுள்ள நிலையில், ஆப்பிரிக்கப் பெண்கள் அனைவரும் உயர்நிலை கல்வி பெறுவதற்கு வருடம் 2086 ஆகிவிடும்.
நீங்கள் பால்மை சமத்துவத்தை விரும்புகிறவர் என்றால் நான் ஏற்கனவே கூறிய, அதிர்ஷ்டவசமாக உதித்த பெண்ணியவாதிகளுள் நீங்களும் ஒருவராக இருக்கக்கூடும். அதற்காக நான் உங்களை வாழ்த்துகின்றேன். நாம் ஓர் ஒற்றுமையான உலகிற்காகப் பாடுபட வேண்டும். இதில் ஒரு நற்செய்தி என்னவென்றால் நமக்கு அதற்கான ஒரு தளம் அமைத்துள்ளது. <http://www.heforshe.org/>அதுதான் “HeForShe” என அழைக்கப்படுகின்றது. முன்னெழுந்து, முன்வந்து, நான் இல்லையெனில் வேறு யார்? இப்பொழுது இல்லையெனில் வேறு எப்பொழுது? என உங்களை நான் கேட்கின்றேன்.
இதுபோன்ற கருத்தில் ஓர் உரை: http://goo.gl/D8Scpd