லூயிஸா மற்றும் லூயி கிரெகரி

பஹாவுல்லா வெளிப்படுத்திய பஹாய் சமயம் மனிதகுல ஒருமையை மையமாகக் கொண்டது. அதன் தொடர்பில் பஹாய்கள் மனிதர்களை ஒரே குடும்பத்தினர் எனக் கருதுவதால் நிறம், மொழி, சமயம் போன்றவற்றின் அடிப்டையில் மனிதர்களுக்கிடையே பிரிவினைகளை ஏற்படுத்துவது கடவுளின் விருப்பத்திற்கு முற்றிலும் எதிரானதாகும் என நம்புகின்றனர்.
ஓர் ஆப்பிரிக்க அமெரிக்க ஆணாகிய லூயி கிரெகரி, ஒரு பிரிட்டிஷ் பெண்மணியான லூயிஸா மேத்யூஸ், இருவரும் பஹாய் சமய நம்பிக்கையாளர்களாவர். பஹாய் சமயம் ஒற்றுமையை மையமாகக் கொண்ட ஒரு சமயமாகும். இவர்கள் இருவரும் புனித நிலத்திற்குப் புணித யாத்திரை செல்லும் போது எகிப்து நாட்டில் 1911ல் சந்தித்துக் கொண்டனர். குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவில் இனவெறி தீவிரமாக இருந்த நிலையில் இவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பு பொது மக்களின் வரவேற்பைப் பெறவில்லை. “மனிதகுல ஒருமை” என்பது பஹாய் சமயத்தின் மையக் கோட்பாடாக இருந்தபோதிலும், வாஷிங்டன் நகரில் வாழ்ந்து வந்த பஹாய் சமயத்தவர்கள் பலர் அப்போது மிகவும் பரவலாக இருந்த இனப் பாகுபாடு குறித்த மனப்பாங்கையே இன்னமும் கொண்டிருந்தனர்.
பஹாய் சமயத்தின் தலைவராக விளங்கிய அப்துல்-பஹா கலப்புத் திருமணத்திற்கு வழங்கிய தீவிர ஆதரவோடு, லூயி, லூயிஸா இருவரும் நியூ யார்க் நகரில் 1912ல் மணந்து கொண்டு அதன் மூலம் முதல் பஹாய் கலப்பினத் தம்பதியராகினர். லூயி கிரெகரி ஐக்கிய அமெரிக்காவிலும் அதே வேளை பஹாய் சமூகத்திலும் இன ஒற்றுமைக்கான மிகவும் தீவிரமான ஆதரவாளரானார். அவரது திருமணமே அவரது சமய நம்பிக்கையின் மிகவும் தனிச்சிறப்பான ஒரு வெளிப்பாடாக விளங்கியது. பன்மடங்கான தடைகளுக்கிடையே, 1951ல் லூயி கிரெகரியின் மரணம் வரை அத்தம்பதியினர் ஏறத்தாழ 40 ஆண்டுகள் ஒன்றாகவே வாழ்ந்து இனப்பாகுபாடு குறி்த்த மூட நம்பி்க்கைக்கு எதிரான ஓர் உதாரணமாகத் திகழ்ந்தனர்.