பஹாவுல்லாவின் குழந்தைப் பருவம்
பஹாவுல்லா சிறைவாசத்திற்காக அக்காநகர் வந்தடைந்த சில காலத்திற்குப் பின், அலி பாஷாவிற்கு ஒரு நிருபத்தை வெளிப்படுத்தினார். அதில், அவரது உயர்பதவியின் அதிகார சுகபோகங்களில் சிக்கிக் கொள்ளாது, மக்களின் தேவைகளைக் கவனிப்பதில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளுமாறு அறிவுரை வழங்கிட. தமது பால்ய பருவத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை பஹாவுல்லா விவரித்துள்ளார்.
நான் சிறுபிள்ளையாகவும், முதிர்ச்சியுறாத பிராயத்தில் இருந்த போது, என் மூத்த அண்ணன்களுள் ஒருவரின் திருமணத்திற்கான ஏற்பாட்டை என் தந்தையார் செய்திருந்தார். அந்நகரில் வழக்கமாக நடப்பது போன்று, திருமண கொண்டாட்டங்கள் ஏழு பகல்களும் ஏழு இரவுகளும் நீடித்தன. கடைசி நாளின் போது “ஷா சுல்தான் சலீம்” எனும் ஒரு பொம்மலாட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. பெரும் எண்ணிக்கையிலான அரசகுமாரர்கள், பிரமுகர்கள், கனவான்கள் ஆகியோர் அந்நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடியிருந்தனர். நான் அம்மாளிகையின் மேல்மாடியிலுள்ள அறை ஒன்றில் அமர்ந்தவாறு, அக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இந்த நிகழ்ச்சிக்காகக் கூடாரம் ஒன்று முற்றத்தில் அமைக்கப்பட்டது. விரைவில், உள்ளங்கையளவுள்ள, மனித வடிவிலான சில உருவங்கள் அதிலிருந்து வெளிப்பட்டு, “அரசர் வருகிறார்! இருக்கைகளை உடனே வரிசைப்படுத்துங்கள்!” எனக் குரல் எழுப்பின. பின்னர், வேறு பல உருவங்கள் தோன்றின. அவற்றுள் சில சுத்தம் செய்து கொண்டிருந்தன, மற்றவை தண்ணீரைத் தெளித்துக் கொண்டிருந்தன. பின்னர், நகர முரசறைவோன் என அறிவிக்கப்பட்ட ஓர் உருவம், காட்சியில் தோன்றி அரசரைச் சந்திப்பதற்காக ஒன்றுகூடும்படி மக்களைக் கேட்டுக் கொண்டது. பிறகு பல உருவங்கள் குழுக்களாகத் தோன்றி, அதனதன் இடங்களில் அமர்ந்தன. அவற்றுள் முதல் குழு பாரசீக பாணியில் தலையில் தொப்பியும், இடையில் கச்சையும் அணிந்திருந்தது. இரண்டாவது குழு, போர்க்கோடரியுடனும், மூன்றாவது குழு காலாட்கள் சிலருடனும், ‘பாஸ்டினாடோ’ கட்டைகளை ஏந்திய சிரச்சேதம் செய்பவர்களுடனும் தோன்றியது. இறுதியாக, அரசகம்பீர அணிகளுடன், ராஜகிரீடம் தரித்து, ராஜரீகமான ஓர் உருவம், கர்வத்துடனும், ஆடம்பரமாகவும், நடக்கும் போது முன்னேறியும் பிறகு நிதானித்தும், பெரும் மரியாதை, அமைவடக்கம், கண்ணியம் ஆகியவற்றுடன் தனது அரியணையில் வந்து அமர்ந்தது.
அத்தருணம், சரமாரியாக துப்பாக்கிகள் சுடப்பட்டன; வரவேற்பு எக்காளங்கள் முழங்கின. அரசருடன் கூடாரமும் புகையால் சூழப்பட்டது. புகை கலைந்த பின், அரசர் தமது சிம்மாசனத்தின் மீது அமர்ந்துகொண்டு, அவரது முன்னிலையில் கவனத்துடன் நிமிர்ந்து நின்றுகொண்டிருந்த மந்திரிகள், இளவரசர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோரால் சூழப்பட்டிருக்கக் காணப்பட்டார். அவ்வேளையில், கைதுசெய்யப்பட்ட திருடன் ஒருவன் அரசனின் முன் கொண்டு வரப்பட்டான். திருடனைச் சிரச்சேதம் செய்திட அரசன் ஆணையிட்டான். எவ்வித தாமதமுமின்றி, தலைமை சிரச்சேதம் செய்பவன் திருடனைச் சிரச்சேதம் செய்தான். அப்போது இரத்தம் போன்ற திரவம் வெளிப்பட்டது. சிரச்சேதத்திற்குப் பின் அரசன் தம்முடைய அரசவையினரோடு உரையாடினார். அப்போது, திடீரென்று எல்லைப்புறம் ஒன்றில் புரட்சி ஏற்பட்டுள்ளதாக உளவுச்செய்தி வந்தது. உடனே, அரசர் தமது படையணியைப் பார்வையிட்டு, அந்தப் புரட்சியை முறியடிப்பதற்காக, கனரக ஆயுதமேந்திய படையணிகளை அனுப்பினார். சில நிமிடங்களூக்குப் பிறகு, கூடாரத்தின் பின்னாலிருந்து பீரங்கிகளின் ஒலி கேட்கப்பட்டது; பிறகு போர் மூண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இவ்விளைஞர் (பஹாவுல்லா) இந்தக் காட்சியின் தன்மையால் மிகவும் வியப்படைந்தார். அரச தரிசனம் முடிந்தவுடன் திரைச்சீலை இழுத்து மூடப்பட்டது. சுமார் இருபது நிமிடங்களுக்குப் பின், கூடாரத்தின் பின்புறத்திலிருந்து, ஒரு மனிதன் தனது கையிடுக்கில் ஒரு பெட்டியை வைத்துக் கொண்டு வந்தான்.
“இப்பெட்டியில் என்ன உள்ளது” என்றும், இந்தப் பொம்மலாட்டத்தின் அர்த்தமென்ன,” என நான் வினவினேன்.
“நீங்கள் கண்ட இந்த ஆடம்பரக் காட்சிகளும், விரிவான கருவிகளும், அரசர், இளவரசர்கள் மற்றும் மந்திரிகள், அவர்களுடைய ஆடம்பரம் புகழ், அவர்களூடைய வலிமை, சக்தி, ஆகிய அனைத்துமே இப்போது இந்தப் பெட்டிக்குள் அடங்கியுள்ளன,” என அம்மனிதன் பதிலளித்தான்.
எல்லா படைப்புப் பொருள்களையும் அவரது திருவாயுதிர்த்திட்ட ஒரே வார்த்தையின் மூலம் உருவாக்கிய, என் பிரபுவின் பெயரால் நான் சத்தியம் செய்கிறேன்! “அந்நாள் முதற்கொண்டு, இந்த இளைஞரின் பார்வையில், உலகின் ஆடம்பரங்கள் அனைத்தும் அதே பொம்மலாட்டத்திற்குச் சமமாக இருந்துள்ளன. ஒரு கடுகளவாயினும், அவை என்றுமே எவ்வித மதிப்பையோ, முக்கியத்துவத்தையோ கொண்டிருந்ததில்லை, என்றுமே கொண்டிருக்கப் போவதுமில்லை. மனிதர்கள் அத்தகைய ஆடம்பரங்களில் தங்களைப் பெருமைப்படுத்திக்கொள்வது கண்டு நான் பெரிதும் வியப்படைகின்றேன்; அதே வேளை, ஞானம் பெற்றோர், மனிதப் புகழுக்குறிய எவ்வித ஆதாரங்களையும் அவர்கள் காண்பதற்கு முன்பாக, அவற்றின் நிலையற்ற தன்மையின் தவிர்க்கவியலாமையை உறுதியாக உணர்கின்றனர். நான் காணும் எப்பொருளும், அதன் அழிவை எதிர்நோக்கிடாதிருப்பதாக, நான் என்றுமே கண்டதில்லை. மெய்யாக கடவுளே இதற்குப் போதுமான சாட்சியாவார்.
ஒவ்வொருவரும் இக்குறுகியகால வாழ்வை ஒவ்வொருவரும் நேர்மையுடனும், நியாயத்துடனும் கடக்க வேண்டியது கடமையாகும். நித்திய உண்மையாகிய அவரை, ஒருவர் கண்டுணரத் தவறுவாரேயானால், குறைந்த பட்சமாக அவர் பகுத்தறிவோடும், நீதியோடும் நடந்துகொள்வாராக. விரைவில், இவ்வெளித்தோற்றமானபகட்டுகள், இக்காணக்கூடிய பொக்கிஷங்கள், இந்த லௌகீக ஆடம்பரங்கள், அணிவகுத்துள்ள இப் படைகள், அலங்கரிக்கப்பட்ட இவ்வஸ்திரங்கள், அகங்காரமும் கட்டுப்பாடும் அற்ற இந்த ஆன்மாக்கள் அனைவரும், அப்பெட்டிக்குள் அடங்கியது போன்று, சவக்குழியின் கட்டுக்குள் அடங்கிடுவர். ஞானமுடையோரின் பார்வையில், இந்தப் பூசல், கருத்துவேறுபாடு, வீண்பகட்டு ஆகியவை, குழந்தைகளின் விளையாட்டும், பொழுபோக்கும் போன்றவையாகவே என்றும் இருந்துவந்துள்ளன; இனி அவ்வாறே இருந்தும் வரும். கவனமாக இருங்கள், கண்ணால் கண்டும் அதை மறுப்போரில் ஒருவராகிடாதீர்.
எமது அழைப்பு இந்த ‘இளைஞரைப்’ பற்றியும், கடவுளின் அன்புக்குரியவரைப் பற்றியுமல்ல, ஏனெனில், அவர்கள் கடுந் துன்பங்களினால் சூழப்பட்டும், சிறையில் அடைக்கப்பட்டும் உள்ளனர்; அவர்கள் உம்மைப் போன்ற மனிதர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. எமது நோக்கம், நீர் கவனமின்மை எனும் மஞ்சத்திலிருந்து உமது தலையை நிமிர்த்தி, அலட்சியம் எனும் துயிலைக் களைந்து, கடவுளின் ஊழியர்களை அநீதியாக எதிர்க்காமல் இருப்பதே ஆகும். உமது அதிகாரமும், ஆதிக்கமும் நிலைத்திருக்கும் வரை, ஒடுக்கப்பட்டோரின் துன்பங்களைக் களைந்திடப் பாடுபடுவீராக. நீர் நியாயமாக ஆராய்ந்தும், நுண்ணறிதல் எனும் கண்ணைக் கொண்டும் காண்பீரானால், நிலையற்ற இவ்வுலகின் முரண்பாடுகளும், நாட்டங்களும், யாம் ஏற்கனவே வர்ணித்துள்ள அப்பொம்மலாட்டம் போன்றவையே என்பதை நீர் தயக்கமின்றி ஒப்புக்கொள்வீர்.