புத்தரின் முகத்தில் எச்சிலை உமிழ்ந்த மனிதன்
http://www.perfectz.net/2014/10/the-man-who-spit-in-buddhas-face.html
புத்தர் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து தமது சீடர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் ஒரு மனிதன் அங்கே வந்து புத்தரின் முகத்தில் எச்சிலை உமிழ்ந்தான்.
புத்தர் அதைத் துடைத்துவிட்டு, “அடுத்தது என்ன” என்று அம்மனிதனைக் கேட்டார். அந்த மனிதன் குழப்பமடைந்தான். ஒருவர் முகத்தில் எச்சிலைத் துப்பினால், “அடுத்து என்ன (செய்யப்போகின்றாய்)” என அம்மனிதர் கேட்பார் என அம்மனிதன் எதிர்ப்பார்க்கவே இல்லை. இம்மாதிரி ஓர் அனுபவத்தை அம்மனிதன் பெற்றதில்லை. அவன் பலரை இவ்வாறு அவமதித்துள்ளான், அவர்களும் ஆத்திரம் அடைந்து, எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர். அல்லது, கோழைகளாகவோ, பலவீனமானவர்களாகவோ இருந்தவர்கள், புன்னகைத்தும், அம்மனிதனைக்கு ஏதாவது கையூட்டல் வழங்கி அவரைச் சாந்தப்படுத்திடவும் முயலுவர். ஆனால், புத்தரோ அவ்விருவரைப் போன்றும் இல்லாது, ஆத்திரமடையவோ, புண்படவோ, கோழைத்தனமாகவோ நடந்துகொள்ளவில்லை. ஆனால், சர்வ சாதாரணமாக “அடுத்து என்ன” என்று கேட்கின்றார். அவரிடமிருந்து எவ்வித எதிர்ச்செயலும் இல்லை.
ஆனால், புத்தரின் சீடர்கள் ஆத்திரமடைந்தனர். புத்தரின் நெருங்கிய சீடரான ஆனந்தர், “இது அத்துமீறிய செயல். இதை நம்மால் தாங்கிக்கொள்ளவே முடியாது. இம்மனிதன் தண்டிக்கப்பட வேண்டும், இல்லையெனில், எல்லாருமே இவ்விதமாக நடந்துகொள்வர்!” என்றார்
அதற்கு புத்தர், “நீர் சற்று பேசாமல் இரும். இம்மனிதன் என்னைப் புண்படுத்தவில்லை. அவன் புதியவன், அந்நியன். அவன் மக்களிடமிருந்து என்னைப் பற்றி ஏதாவது செவிமடுத்திருக்க வேண்டும், அல்லது இம்மனிதன் ஒரு நாஸ்திகனாகவோ, மக்களை அவர்களின் பாதையிலிருந்து வழிதவறச்செய்யவோ, ஒரு புரட்சியாளனாகவோ, குழப்பவாதியாகவோ இருக்கலாம். அவன் என்னப் பற்றிய ஒரு கருத்தையோ ஓர் எண்ணத்தையோ உருவாக்கிக்கொண்டிருக்கலாம். அவன் என் முகத்தில் எச்சிலை உமிழவில்லை, அவன் என்னப் பற்றி கொண்டிருந்த தன் கருத்தின் மீதே எச்சிலை உமிழ்ந்துள்ளான். ஏனெனில், அவனுக்கு என்னைப் பற்றி எதுவுமே தெரியவில்லை, ஆகவே அவன் என் முகத்தின் மீது எவ்வாறு எச்சிலை உமிழ்ந்திருக்க முடியும்.
“இதைப் பற்றி நீர் ஆழச் சித்திப்பீரானால், அம்மனிதன் தன் உள்ளத்தின் மீதே எச்சிலை உமிழ்ந்துள்ளான். எனக்கு அதில் எந்தப் பங்கும் இல்லை, மற்றும் இந்த மனிதன் கூறுவதற்கு வேறு ஏதாவது இருக்கக்கூடும், ஏனெனில் ஒன்றைக் கூறுவதற்கு இது ஒரு வழியாகும். எச்சிலை உமிழ்வதும் ஒரு விஷயத்தைத் தெரிவிப்பற்கான ஒரு வழியாகும். ஆழ்ந்த அன்பு, கடுங்கோபம், வெறுப்பு, பிரார்த்தனை ஆகியவற்றின்றபோது மொழி செயலற்றதாகிவிடும். அவ்வேளை எதையாவது செயலில் செய்தாக வேண்டும். கோபப்படும்போது, கடுங்கோபத்துடன் இருக்கும் போது, ஒருவரை அடித்துவிடுகின்றோம், அவர் மீது எச்சிலை உமிழ்கின்றோம், அதன் மூலமாக ஒரு விஷயத்தைத் தெரிவிக்கின்றோம். அவனை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது. அவன் ஏதோ ஒன்றைச் சொல்ல விரும்புகின்றான், அதனால்தான் “அடுத்து என்ன” என்று வினவுகின்றேன்.
அந்த மனிதன் மேலும் குழப்பமடைந்தான்! புத்தர் தமது சீடரான ஆனந்தரிடம், “நான் உம்மால்தான் புண்ப்பட்டுள்ளேன், ஏனெனில் உமக்கு என்னைத் தெரியும், நீர் என்னோடு பல வருடங்கள் வாழ்ந்துள்ளீர், இருந்தும் நீர் ஏன் கோபம்கொள்கின்றீர்,” எனக் கூறினார்.
புரியாமலும், குழப்பத்துடனும் அம்மனிதன் இல்லம் திரும்பினான். அன்றிரவு முழுவதும் அவனால் தூங்க முடியவில்லை. ஒரு புத்தரை ஒரு முறை பார்த்தவுடன், முன்பு தூங்கியது போன்று தூங்கவே முடியாது, சிரமமாகிவிடும். அம்மனிதனுக்கு ஏற்பட்ட அந்த அனுபவத்தினால் அவன் மீண்டும் மீண்டும் அவஸ்தைக்குள்ளானான். என்ன நடந்தது என அவனால் தனக்குத் தானே விளக்கம் சொல்லிக்கொள்ள முடியவில்லை. அவன் உடல் முழுவதும் நடுங்கியது, வியர்வை அவன் போர்வையை நனைத்தது. அத்தகைய ஒரு மனிதனை அவன் தன் வாழ்க்கையில் கண்டதே இல்லை; அவன் மனதை, அவன் (வாழ்க்கை)மாதிரியை, அவன் கடந்தகாலம் முழுவதையும் புத்தர் முற்றாகச் சிதைத்துவிட்டிருந்தார்,
அடுத்த நாள் அம்மனிதன் மீண்டும் புத்தரிடம் சென்றான். புத்தரின் கால்களில் நெடுஞ்சான் கிடையாக வீழ்ந்தான். “அடுத்து என்ன?” என புத்தர் மீண்டும் கேட்டார். “வார்த்தைகளால் சொல்ல முடியாததைச் சொல்வதற்கு இதுவும் ஒரு வழியாகும். நீர் வந்து என் பாதங்களைத் தொட்டபொழுது, சாதாரணமாகச் சொல்ல முடியாத ஒன்றை நீர் என்னிடம் சொல்கின்றீர்; அதற்கு வார்த்தைகள் போதாதவை; அது வார்த்தைகளுக்குள் அடங்காது.” “ஆனந்தா, இம்மனிதன் இங்கு மீண்டும் வந்துள்ளான், அவன் ஏதோ ஒன்றச் சொல்கின்றான். இம்மனிதன் ஆழ்ந்த உணர்வுகள் உடையவன்,” என்றார்.
அம்மனிதன் புத்தரைப் பார்த்து, “நான் நேற்று நடந்துகொண்ட விதத்திற்கு என்னை மன்னியுங்கள்,” என்றான்.
“மன்னிப்பா?” என்றார் புத்தர். நீர் நேற்று எச்சிலை உமிழ்ந்த அதே அம்மனிதன் நானில்லை. கங்கையின் நீர் வழிந்து கொண்டே இருக்கின்றது. அகவே, அது அதே கங்கையல்ல. ஒவ்வொரு மனிதனும் ஓர் ஆறைப் போன்றவன். நீர் நேற்று எச்சிலை உமிழ்ந்த அதே மனிதன் இன்று இங்கு இல்லை. நான் உருவத்தில்தான் அம்மனிதனைப் போன்று இருக்கின்றேன், ஆனால் நான் அதே மனிதனல்ல; இந்த இருபத்து நான்கு மணிகளில் நிறையவே நடந்துள்ளது! ஆறு நிறையவே வழிந்தோடியுள்ளது. ஆகவே, நான் உன்னை மன்னிக்க முடியாது ஏனெனில், உன்மேல் எனக்கு எந்த மனவறுத்தமும் கிடையாது.
“நீயும் ஒரு புதிய மனிதன். நேற்று இங்கு வந்த மனிதன் நீரல்ல; அந்த மனிதன் ஆத்திரத்துடன் இருந்தான், எச்சிலை உமிழ்ந்தான், ஆனால் நீரோ என் கால்களில் விழுந்து வணங்குகின்றீர், என் கால்களைத் தொடுகின்றீர். ஆகவே, நீர் அதே மனிதனாக எவ்வாறு இருக்க முடியும்? நீர் அதே மனிதனல்ல, ஆகவே அந்த நிகழ்ச்சியை நாம் மறந்துவிடுவோம்.அந்த இரண்டு மனிதர்களும், எச்சிலை உமிழ்ந்தவரும், உமிழப்பட்டவரும் இனி கிடையாது. நெருங்கி வா. நாம் வேறு எதைப் பற்றியாவது பேசுவோம்.