தமது “மருத்துவருக்கான நிருபத்தில்” (https://goo.gl/gyBjMb) பஹாவுல்லா பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
- மக்களே, பசித்தால் ஒழிய உணவருந்தாதீர்கள். உறங்கச் சென்ற பிறகு நீர் அருந்தாதீர்கள்.
- ஜீரண(செயற்பாடு) நிறைவுற்றால் தவிர ஆகாரம் அருந்தாதீர்கள். நன்கு அரைபடும்வரை உணவை விழுங்காதீர்கள்.
- வெவ்வேறு நேரெதிரான உணவு வகைகள் இரண்டு மேசைமீது வைக்கப்பட்டால் அவற்றை கலக்கவேண்டாம். அவற்றில் ஒன்றுடன் மட்டும் மனநிறைவுகொள்ளுங்கள். கெட்டிவகை உணவை உட்கொள்ளும் முன் திரவவகை உணவை முதலில் அருந்துங்கள். நீங்கள் ஏற்கணவே உண்ட உணவு ஜீரணமாவதற்குள் மறுபடியும் உணவு உண்பது ஆபத்தானதாகும்…
இந்த அறிவுரைகளின் அடிப்படையில் பின்வருவனவற்றைக் காண்போம்:
வயிற்றுக்கோளாறுகளால் அவதியுறாத மனிதர்கள் கிடையாது என நாம் அறுதியிட்டுக் கூறலாம். எல்லா மனிதர்களுமே ஏதாவது ஒரு நேரத்தில் வயிற்று வலி, நெஞ்செரிவு, வயிற்றுப்போக்கு போன்றவற்றால் பாதிக்கப்படுகினறனர். இவற்றுக்குக் காரணமென்ன?
எந்நேரத்திலும், வயிற்றிலும் சரி குடல் சார்ந்த உணவுப்பாதையில் பலவிதமான கிருமிகள் வாசம் செய்கின்றன. இவை நல்ல கிருமிகள் எனவும் கெட்டகிருமிகள் எனவும் பிரிக்கப்படுகின்றன. கெட்ட கிருமிகளின் வகையில் e-coli என அழைக்கப்படும் கிருமிகள் உள்ளன. இத்தகைய கிருமிகள் ஒரு குறிப்பி்டட அளவு ஜீரணத்திற்கு அவசியமே. இக்கிருமியும் பல வகைப்படும். வயிற்றில் இவற்றன் அளவு தேவைக்கு மேல் அதிகரித்திடும் போது, வயிற்றுப்போக்கு, இரத்த சோகை, சிறுநீரகக் கோளாறு போன்றவை ஏற்படலாம். இக்கிருமிகள் குடலில் அதிகரிக்கும் போது அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதைப் பிறகு பார்க்கலாம். இந்த இ-கோலி கிருமி, பெரும்பாலும் மலத்தின் (faeces) மூலமாகப் பரவுகின்றது. சில இடங்களில் பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லாத இடங்களில் வீட்டிலேயே குழிகள் வெட்டப்பட்டு கழிவுநீர் தேக்கப்படுகின்றது. குழி நிறையும் போது கழிவுநீர் அகற்றப்படுகின்றது. அதே வேளை நீர்ப்பாசனம் இ்ல்லாத இடங்களில் கிணறுகள் வெட்டப்படுகின்றன. அத்தகைய கிணறுகள் கழிவுநீர்க் குழிகளிலிருந்து குறைந்தபட்சம் 30 அடி தூரத்திலாவது அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத போது இ-கோலி கிருமிகள் கிணற்று நீரில் கலக்கப்படும் ஆபத்து உள்ளது. அத்தகைய நீரை கொதிக்க வைக்காமல் பயன்படுத்துவது ஆபத்தானது. சிலருக்கு அது பழகியிருக்கும், ஆனால் பழக்கமில்லதோர் வயிற்றுப்போக்கை எதிர்நோக்க நேரிடும். மிகவும் வினோதமாக, சிறு குடலில் ஏற்படும் கிருமிகளின் அதிகரிப்பு, உடல் பருமனை அதிகரிக்கின்றது எனவும் கூறப்படுகின்றது.
நம்மில் பலர் உணவு உண்பதை அவசியமாகவின்றி, அதை ஒரு பழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். பசிக்காவிட்டாலும் அவர்களால் சாப்பிடாமல் இருக்க முடியாது. அப்படியே உணவு அருந்தினாலும், வயிற்றில் சிறிதும் இடைவெளியின்றி அருந்துவோரும் இருக்கின்றனர். இதன் விளைவு என்ன? நெஞ்செரிப்பு, வயிற்று உப்பிசம், வாயுப் பிரச்சினை, மலம் மிகவும் மென்மையாக வெளிவருதல், தூக்கமின்மை போன்றவற்றை உடனடி பிரச்சினைகளாகவும், உடல் பருமன் அதிகரித்தல், இருதய நோய் ஆகியவற்றை காலப்போக்கில் ஏற்படும் பிரச்சினைகளாகவும் குறிப்பிடலாம். ஒரே நேரத்தில் அதிகமாக உண்ணுவதற்குப் பதிலாக பசியெடுக்கும் போதெல்லாம் சிறிதளவு உணவை, ஒரு நாளுக்கு நான்கு அல்லது ஐந்துமுறை உண்ணுவது சிறந்ததாகும்.
சரி, பசியெடுத்து உணவு அருந்துவதனால் என்ன நன்மை? பசியெடுக்கும் போது, வயிறு உணவை ஏற்பதற்குத் தன்னை தயார் செய்து கொள்வது முதன்மையான ஓர் அம்சமாகும். உடல் முழுவதுமே இந்தச் செயல்முறைக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொள்கின்றது. வயிற்றில் ஜீரணத்திற்கான திரவங்கள் சுரக்கின்றன. உணவு நன்கு அரைக்கப்பட்டு உமிழ்நீர் கலந்து விழுங்கப்படும் போது ஆகாரம் சீராக ஜீரணிக்கப்படுகின்றது. உமிழ் நீரில் ‘டாயலின்’ (ptyalin) போன்ற என்ஸைம் அல்லது ‘நொதி’ உள்ளது. இது மாவுச் சத்தையும், கொழுப்புச் சத்தையும் கரைத்திட உதவுகின்றது. ஆகவே, உணவை நன்கு அரைத்துச் சாப்பிடுவது முக்கியமாகும்.
இதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ஒரு முக்கிய விஷயம் யாதெனில், நன்கு பசியெடுத்துச் சாப்பிடும் போது, தேவைக்கும் அதிகமாக உண்ணும் ஆபத்து உள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டும். முக்கால் வயிறு உணவு உண்ணும் பழக்கம் ஏற்படுத்திக்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு உண்ணும்போது, செரிமானத்திற்கான திரவங்கள் நன்கு உணவில் கலந்து ஜீரணம் சுமுகமாக நடைபெறுகின்றது. உணவு வயிற்றில் புளித்துப் போவது தவிர்க்கப்படுகின்றது, வாயு தொல்லையும் இல்லை.
பலவகை உணவு வகைகளை ஒரே நேரத்தில் உண்பதும் சரியல்ல. இது ஜீரண சுரப்பிகளை அழுத்தத்திற்குள்ளாக்குகின்றது. ஒரே வித உணவு உண்ணும் போது சுரப்பிகளிலிருந்து பலவித என்ஸைம்கள் சுரப்பது தவிர்க்கப்படுகின்றது. இறைச்சி வகைகளையும் தாவர வகைகளையும் ஒன்றாக உண்பதற்குப் பதிலாக, மாமிசத்தை மாவு அல்லது கார்போஹைடிரேட் வகையோடு அல்லது தாவர உணவை கார்போஹைடிரேட் வகையோடு உண்ணுவது நலம் பயக்கும்.
அடுத்து, உணவு உண்டபின் சுமார் அரை மணிநேரத்திற்கு நீர் அருந்தாமல் இருக்க வேண்டும். இது ஜீரண திரவங்கள் நீர்த்திடுவதைத் தவிர்க்கின்றது. இதன் தொடர்பில், நீர்மமான உணவு வகைகள் முதலில் உட்டொள்ளப்பட்ட பிறகே திண்ம உணவு வகைகள் உட்கொள்ளப்பட வேண்டும். பழங்கள் சாப்பிடுவதும் உணவு உண்பதற்கு முன்பே சாப்பிடுவது நன்று. இது அப்பழங்கள் வயிற்றில் நொதித்திடுவது அல்லது புளித்திடுவதையும் அதன் பயனான வாயு பிரச்சினையை தவிர்க்கின்றது. உறங்கச் சென்ற பின் நீர் அருந்துவதும் நல்லதல்ல. விழித்திருக்கும் போது இல்லாத பல செயல்முறைகள் தூங்கும் போது செயல்பாட்டிலுள்ளன. தூங்கச் சென்றபின் நீர் அருந்துவது இச்செயல்முறைகளைக் கெடுக்கின்றது.
ஆகவே, ஆரோக்கியமான முறையில் உணவை உட்கொண்டு உடல் நலத்தைப் பேணுவோமாக.