குழந்தைகளை அடிப்பது கூடாது


குழந்தைகளின் மனதில் கடவுள் பயத்தை ஏற்படுத்த வேண்டும் என பஹாய் புனிதவாசகங்கள் கூறுகின்றன:

ஆதாலால், ஒரு தோட்டக்காரன் தனது இளஞ் செடிகளைப் பேணுவது போன்று, தாய்மார்களும் தங்களின் சிறார்களைப் பராமரித்திட வேண்டும். அவர்கள் இரவு பகலாக, தங்களின் பிள்ளைகளுள் நம்பிக்கையுறுதி, மெய்யுறுதி ஆகியவற்றையும், கடவுள் பயத்தையும், உலகங்களின் அன்பரின் மீதான அன்பையும், எல்லா நல்லியல்புகளையும், பண்புகளையும் நிறுவிட முயல வேண்டும்.  (அப்துல்-பஹா, அப்துல்-பஹாவின் உரைப்பகுதிகளின் தேர்வுகள், பக். 125)

கடவுள் பயம் என்பது, தவறு செய்தால் கடவுள் தண்டித்து விடுவார் என்பதல்ல. மாறாக, தவறு செய்தால் கடவுளின் அன்பை இழந்துவிடுவோம் என்னும் பயமே இங்கு வலியுறுத்தப்படுகின்றது. அதே போன்று, குழந்தைகளுக்குப் பெற்றோர் மீதும் அதே விதமான, தவறு செய்தால் பெற்றோரின் அன்பை இழந்துவிடுவோம் என்னும் பயம் இருக்கவேண்டும். அடி உதவுவது போன்று அண்ணன் தம்பி உதவமாட்டார்கள் என்பது பழமொழி. ஆனால், இது திரிந்து வந்துள்ள, தவறான அர்த்தம் வழங்கப்பட்ட ஒரு பழமொழியாகும்.

ஒரு குழந்தையை அடிப்பதோ, தரக்குறைவாகத் திட்டுவதோ அனுமதிக்கப்படவில்லை, எனெனில் அடி மற்றும் தகாத வார்த்தைகளுக்கு ஒரு குழந்தை  உட்படுத்தப்பட்டால், அதன் நடத்தை முற்றாக நெறிபிறழ்வுக்கு ஆளாகிடும். (அப்துல்-பஹா, திரட்டுகளின் திரட்டு, தொகுப்பு 1, பக். 289-290)

இதே கருப்பொருளில் பின்வரும் கட்டுரையைப் பார்ப்போம்:

ஏன் குழந்தைகளுக்கு தண்டனை கொடுக்கக்கூடாது என தெரியுமா?

By: Aruna Saravanan Updated: Friday, November 27, 2015, 18:32 [IST]
http://tamil.boldsky.com/pregnancy-parenting/kids/2015/why-punishments-for-kids-don-t-work-009869-009869-009870.html

தண்டனைகள் குழந்தைகளைத் திருத்துமா? குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் அனைவருக்கும் இந்த கேள்வி வந்திருக்கும். பிள்ளைகளை நன்முறையில் வளர்க்க வேண்டும் என நினைத்து அவர்களை கண்டிப்புடன் வளர்க்கும் பெற்றொர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் தண்டனை. நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். பேச்சை கேட்காத பிள்ளையை திருத்துகின்றேன் பேர்வழி என அதிக தண்டனைகள் வழங்கினால் உங்கள் பேச்சை இன்று வேண்டுமானால் கேட்பார்கள். ஆனால் பிற்காலத்தில் உங்களைப் பற்றிய தப்பான கருத்தும், தண்டனையின் வலியும் வடுவாக அவர்கள் இதயத்தில் பதிந்துவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

கடவுளை வேண்டி பெற்றெடுக்கும் பிள்ளையை வளர்க்கும் போது மட்டும் பொறுமை எங்கே போய் விடுகின்றது என்று தான் தெரியவில்லை. இன்று மரம் செடி கொடிகளுக்கெல்லாம் உயிர் இருக்கின்றது என பேசும் நாம் நம் உயிரை கொடுத்து பெற்ற குழந்தைகளை வளர்க்க தெரியாமல் தவிக்கின்றோம். இதைச் செய்யாதே அதைச் செய்யாதே என கூறி எதற்கு எடுத்தாலும் தண்டனை வழங்கி சித்திரவதை செய்கின்றோம். இதில் கவலை என்னவென்றால் நாம் செய்வது தவறு என்பது கூட தெரியாமல் இதை செய்வதுதான்.

ஆகையால் தண்டனை கொடுப்பதை விட்டு விட்டு அறிவுரைகளால் திருத்துவதையும், வளர்ப்பதையும் பெற்றோர்கள் கடைப்பிடிக்க வேண்டும். சரியாக சிந்திக்க தெரியாத பெற்றோர்கள் அமைதியாகவும், அன்புடனும், மிகுந்த பொறுமையுடனும் கண்டிக்கப்பட வேண்டிய பிள்ளைகளை அடக்கு முறையில் தண்டனை கொடுத்து தீய வழியில் அவர்கள் செல்ல தூண்டுகின்றார்கள்.

ஏன் தண்டனைகள் சரிபட்டு வராது என்பதைப் பார்ப்போம் குழந்தைகளுக்குத் தண்டனை வேண்டாம், ஏன் தெரியுமா? தண்டனைகள் கசப்புணர்வை வளர்க்கும்.  குழந்தையை அடித்து பல வித தண்டனைகள் வழங்கினால் உங்கள் குழந்தைகள் உங்களை முன்புபோல் நேசிப்பார்கள் என நினைக்கின்றீர்களா? கண்டிப்பாக இல்லை. உங்களை வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள். பின் என் குழந்தை என் மீது அன்பாகவே இல்லை என்றால் பயன் இல்லை. அன்பை கொடுத்துதான் அன்பை பெற வேண்டும். கொஞ்சம் அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்து பேசுங்கள் போதும் புரிந்து கொள்வார்கள். தண்டனை குழந்தைகளுக்குப் பெற்றோர்களை எதிர்க்க சொல்லி தரும்.

சில குழந்தைகள் தண்டனைகளை ஆரம்ப காலத்தில் பொறுத்து கொள்வார்கள். ஆனால் போகப் போக அதுவே வெறுப்பாக மாறி பெற்றோர்களை எதிர்க்கும் அளவிற்கு வந்து விடும். இது மிகவும் ஆபத்தானது. இதனால் அவர்களால் வீட்டிற்கு மட்டுமில்லை நாட்டிற்கும் தொல்லையே. சமுதாயத்தில் ஆபத்தான காரியங்களை செய்ய அவர்கள் முனைந்து விடுவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் பெற்றோர்களே.

தண்டனை பயத்தை அதிகரிக்கும்.  தண்டனைகளைத் தாங்கி வளரும் குழந்தைகள் பிற்காலத்தில் பயந்த சுபாவம் அடைவார்கள் என ஆராய்ச்சிகள் தெளிவு படுத்துகின்றன. இதனால் எப்பொழுதும் பயத்துடனே காணப்படும் பிள்ளைகள் எதை சாதிப்பார்கள் என நினைத்து பாருங்கள். இதனால் உளவியல் ரீதியான பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொள்ளக் கூடும் என்பதை மறந்து விடாதீர்கள்.

தண்டனை தாழ்வு மனப்பான்மையை அதிகரிக்கும்.  தாழ்வு மனப்பான்மை கொண்ட பல குழந்தைகள் சிறு வயதில் அதிக தண்டனைகளை அனுபவித்தவர்கள். குழந்தைகள் செய்யும் சிறிய தவறுக்கு பெரிய அளவில் தண்டனை கொடுக்கும் பெற்றோர்களே ஒன்றை மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள். இதனால் உங்கள் பிள்ளைகள் தாழ்வு மனப்பான்மை அடைவார்கள். மேலும் வாழ்வில் வேறு எந்த முன்னேற்றமும் இல்லாமல் வாழ்வின் மீது வெறுப்பு கொண்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்குக் கூட தள்ளப்படுவார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்

ஆகவே, அன்பைக் கொண்டு குழந்தைகளை வளர்க்க வேண்டும். அடக்கு முறை கொண்டால் நீங்கள் பெறப் போவது, யானை தன் தலையில் தானே மண்ணை வார்த்தது போல் தான் ஆகும். என்ன புரிந்ததா?

தண்டனைகள் பயன்தருவதில்லை: ஆங்கிலத்தில்

மேலும் படிக்க: http://tamil.boldsky.com/pregnancy-parenting/kids/2015/why-punishments-for-kids-don-t-work-009869-009869-009870.html

பின்னூட்டமொன்றை இடுக