இதுநாள் வரை பஹாய் நாள்காட்டியான ‘படீ நாள்காட்டி ஆங்கில நாள்காட்டியான கிரேகோரிய நாள்காட்டியோடு பிணைக்கப்பட்டு வந்திருந்தது. ஆனால், ‘படீ நாள்காட்டியின் அமுலாக்கத்தோடு, இந்த இணைப்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டுவிட்டது. ‘படீ நாள்காட்டியின் முதல் நாளான நவ்-ருஸ் திருநாள், வானசாஸ்திர கணக்கின்படி நிர்ணயிக்கப்படுகின்றது. அதாவது, ஒவ்வொரு வருடமும் ‘மஹா விஷுவமாகிய’, சூரியன் மேஷ ராசிக்குள் பிரவேசிக்கும் அத்தருணத்திற்கு ஏற்ப நவ்-ருஸ் புத்தாண்டு நிர்ணயிக்கப்படும். பஹாய் நாள்கள் சூரிய அஸ்தமனத்தில் ஆரம்பிக்கின்றதன் காரணமாக, சூரியன் மேஷ ராசிக்குள் அஸ்தமனத்திற்கு முன்பாக பிரவேசிக்கின்றதா அல்லது அதற்கு பிறகு பிரவேசிக்கின்றதா என்பதைப் பொறுத்து நவ்-ருஸ் பண்டிகை நிர்ணயிக்கப்படும். இனி நவ்-ருஸ் பண்டிகை மார்ச் 21-ஆம் தேதிக்கு ஒன்று அல்லது இரண்டு நாள்களுக்கு முன்பு அல்லது அதற்குப் பிறகு வரக்கூடும். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு பஹாய் புனிதநாளும், பிற முக்கிய நாள்களும் கடந்தகாலத்தில் நடந்தது போன்று, இனி சூரிய நாள்காட்டிக்கு இணங்கவல்லாமல், இனி ‘படி நாள்காட்டிக்கு இணங்கவே வரும். இதில் இரட்டைப் பிறந்தநாள்கள் குறித்த தினங்கள் சற்று விசேஷமானவையாக இருக்கும். அதன் விவரத்தைக் கீழே காணலாம்.
பாப் பெருமானார் மற்றும் பஹாவுல்லாவின் பிறந்தநாள்கள் இதுநாள் வரை ஒவ்வொரு வருடமும் முறையே அக்டோபர் 20, நவம்பர் 12 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட்டு வந்தன. ஆனால், பஹாய்களின் நாள்காட்டியான ‘படீ நாள்காட்டியின் அமுலாக்கத்தோடு, இந்தப் பிறந்த நாள்கள் “நவ்-ருஸ் புத்தாண்டிற்கு அடுத்த எட்டாவது அமாவாசையைத் தொடர்ந்து வரும் முதலாம் மற்றும் இரண்டாம் நாள்களில் இனி கொண்டாடப்படும். பாப் பெருமானார் முஹாரம் 1-ஆம் தேதி, 1819-இல் பிறந்தார் (நவ்-ருஸ்சிற்குப் பிறகு வந்த எட்டாவது அமாவாசைக்கு அடுத்த நாள்). பஹாவுல்லா, நவ்-ருஸ்சிற்குப் பிறகு வந்த எட்டாவது அமாவாசையைத் தொடர்ந்த இரண்டாவது நாளான முஹாரம் 2, 1817-இல் பிறந்தார். இதையே வேறு வார்த்தைகளில் கூறுவதானால் இவ்விரண்டு கிரேகோரிய வருடங்களிலும், சூரிய நாள்காட்டியின்படி, ஐந்தாவது இஸ்லாமிய மாதமான ஜோமாடா அல்-உலாவில் நவ்-ருஸ் வந்தது. இதன்படி, தொடர்ந்து வரும் முஹாரம் மாதத்தின் (முதல் சந்திர மாதத்தின்) அமாவாசை நவ்-ருஸ் புத்தாண்டிற்குப் பிறகு தோன்றிய எட்டாவது அமாவாசையாகும்.
பாப் பெருமானாரும், பஹாவுல்லாவும் முறையே முஹாரம் முதல் மற்றும் இரண்டாம் நாள்களில் பிறந்ததன் காரணமாக, இஸ்லாமிய சந்திர நாள்காட்டியைப் பயன்படுத்தும் நாடுகளிலுள்ள பஹாய்கள் இவ்விரண்டு பஹாய் புனிதநாள்களையும் இரட்டைப் புனிதநாள்களாகக் கொண்டாடி வந்துள்ளனர். சூரிய வருட நாள்காட்டியைக் கொண்ட இரான் நாட்டின் பஹாய்களும், இஸ்லாமிய சந்திர நாள்காட்டியிலுள்ள தேதிகளை இரண்டு புனிதநாள்களுக்கான தேதிகளாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். கடந்காலத்தில், உலகின் பிற பாகங்களிலுள்ள பஹாய்கள் இவ்விரண்டு புனித நாள்களையும் அக்டோபர் 20 மற்றும் நவம்பர் 12-ஆம் தேதிகளில் கொண்டாடி வந்துள்ளனர். 2015 முதற் கொண்டு, ‘இரட்டைப் பிறந்தநாள்கள்’ கிரேகோரிய நாள்காட்டியின்படி, அக்டோபர் மாத மத்தியிலிருந்து நவம்பர் மாத மத்தி வரை, அடுத்தடுத்து வரும் நாள்களில், ஒரு ‘நகரும் விருந்தாக’ (ஈஸ்டர் புனிதநாளைப் போன்று) கொண்டாடப்படும். அடுத்த வருடம், இரட்டைப் பிறந்தநாள்கள் நவம்பர் 13 மற்றும் 14-ஆம் தேதிகளில் (குட்ராட் 10 மற்றும் குட்ராட் 11) வரும்.
உலக நீதிமன்றத்தின் இத்தீர்மானத்தின்படி, விழாக்காலங்கள் இளவேனிற் காலத்திலும், இலையுதிர் காலத்திலும் வரும் மற்றும் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள பஹாய்கள் அவற்றை ஒரே நேரத்தில் கொண்டாடுவர். இம்மாற்றத்தின் காரணமாக, கிழக்கத்திய பஹாய்களுக்கு நேர்ந்தது போன்று இரட்டைப் பிறந்தநாள்கள் இனி உண்ணா நோன்பு காலத்தில் வரவே வராது. மேலும் கடந்தகாலங்களில், ஷீயா இஸ்லாமியர் கர்பிலா போரில் இமாம் ஹுசேய்னின் வீரமிகு தற்காப்பு மற்றும் தியாகமரண நிகழ்ச்சிகளை நினைவுகூறும் நாள்களான முஹாராம் 10-நாளன்று வரும் ‘அஷுரா நாளை’ அணுகிவரும் நாள்களின் போது கிழக்கத்திய பஹாய்கள் இரண்டு விழாக்களையும் கொண்டாடி வந்தனர். இந்த பஹாய் புனித நாள்கள் சூரிய நாள்காட்டியோடு இணைக்கப்பட்டுவிட்டதால், சந்திர மாதமான முஹாரத்திற்கு மாறாக, 354 நாள்களைக் கொண்ட இஸ்லாமிய வருடத்தை விட சூரிய வருடம் 11.25 நாள்கள் அதிகமாகும் என்பதன் காரணமாக, ஒரு 32 காலவட்டத்தில் ஒன்று அல்லது இரண்டு தடவைகள் மட்டுமே இவ்விழாக்கள் அஷுரா நாளிற்கு அணுக்கமாக வரும்.
19-ஆம் நூற்றாண்டில் கிருஸ்துவ சமயத்தினரிடையே மட்டுமல்லாது, இஸ்லாமியரிடையிலும் கூட 1844-ஆம் ஆண்டில் இயேசுநாதர் அவதரிக்கவிருக்கின்றார் என்னும் நம்பிக்கை பரவலாக நிலவியிருந்தது. முக்கியமாக, ஐக்கிய அமெரிக்காவில் பிறந்த (1782-1849) வில்லியம் மில்லர் என்பவர் கி.பி.1844-இல் இயேசுநாதரின் மறுவருகை கண்டிப்பாக நடைபெறும் என உறுதியாக நம்பினார். அவரைப் பின்பற்றியோர் எண்ணற்றோர். அதே போன்று மத்திய கிழக்கிலும் ஹிஜ்ரி 1260 (கி.பி.1844) இயேசு நாதர் மறுபடியும் தோன்றுவார் என சுன்னப் பிரிவினரிடையிலும், 12-வது இமாமாகிய இமாம் மஹதி ஹிஜ்ரி 1260-இல் உலகில் தோன்றப்போகின்றார் என்னும் நம்பிக்கை ஷியா வர்க்கத்தினரிடையிலும் நிலவியது. ஆனால், அவரவர் புனித வேதங்களில் இந்த 1844-ஆம் ஆண்டு வெளிப்படையாகக் கூறப்படவில்லை. மறைமுகமான வார்த்தைகளிலேயே கூறப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் தானியேலின் நூலில், புனிதஸ்தலம் எப்பொழுது பரிசுத்தமாகும் என்பது குறித்து, அது 2300 நாள்களுக்குப் பிறகு நடைபெறும் என்னும் தீர்க்கதரிசனம் உள்ளது. இங்கு ‘நாள்’ எனக் குறிப்பிடப்படுவது, விவிலிய திருநூலில் கடவுளின் ஒரு நாள் என்பது மனிதரின் ஒரு வருடமாகும் என கூறப்பட்டுள்ளது. ஆதலால் புனிதஸ்தலம் 2300 வருடங்களுக்குப் பிறகு புனிதப்படுத்தப்படும் என்பது அர்த்தமாகும். ஆனால், இந்த 2300 வருடங்கள் எப்பொழுது ஆரம்பித்தன என்பதைப் பார்க்கையி்ல், அது கி.மு.457-இல் ஆரம்பித்தது. அதாவது புனிதஸ்தலத்தை மறுசீரமைக்கும்படி அர்டிஷேர் விடுத்த மூன்றாவது ஆணையிலிருந்து ஆரம்பித்தது. கி.மு. 457-லிருந்து கி.பி. 1844 வரை சரியாக 2300 வருடங்கள் உள்ளன. இதையெல்லாம் மேலும் ஆழமாக விவரிப்பதற்கு இங்கு இடம் போதாது. சுருங்கக் கூறின் கி.பி.1844 எல்லா சமயங்களுக்கும் ஒரு முக்கியமான, தீர்க்கதரிசனங்களுக்கு உட்பட்ட ஓர் ஆண்டாகும். இதன் அடிப்படையில், இந்து சமயத்தில் இந்த 1844-ஆம் ஆண்டு ஏதாவது ஒரு வகையில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதைப் பார்ப்போம்.
உலகளாவிய எதிர்ப்பார்ப்பு
கிருஷ்னரின் வின்னேற்றத்திற்கும், கலியுகத்தின் ஆரம்பத்திற்கும் ஒரு தொடர்புள்ளது. அதாவது, புராணங்களின் கூற்றுப்படி, கிருஷ்னர் உலக வாழ்வை நீத்த மறுணமே கலியுகம் பிறந்தது. கலியுகத்தின் ஆரம்பம் சில மிகவும் விசேஷமான கிரக சேர்க்கைகளின் போது ஆரம்பித்ததாக சில வானசாஸ்திர வல்லுனர்கள் கூறுகின்றனர். உண்மையில் இந்து சமய புனிதநாள்கள் எல்லாமே கிரக சேர்க்கைகளின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு கலியுகம் எப்போது முடிவுறும் என்பதை, மகாபாரதத்தை எழுதிய பராசர முனிவர் பின்வருமாறு கூறியுள்ளார்:
யதா சந்திரஸ்ச ஸூர்யஸ்ச ததா திஷ்யோ ப்ருஹஸ்பதி| ஏக ராஸௌ ஸமேஷ்யந்திததா பவதிக்ருதம்|| சந்திரனும் சூரியனும் அதே போன்று குருவும் ஒரே ராசியில் ஒன்றுகூடும் போது அது கிருத யுகம் ஆகும். ஸ்ரீ விஷ்ணுபுரானம்(4-24-102)
ஆனால், மேற்கண்ட கிரக சேர்க்கையானது பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நிகழ்கின்றது. இதில் விசேஷம் ஒன்றுமில்லை. ஒரு பஹாய் ஆன வடமொழி பண்டிதர் டாக்டர் முஞ்ஜே இதற்கு வேறு விளக்கம் அளிக்கின்றார். அதாவது, பஹாய் சமயத்தின் மூன்று மையநாயர்களான பாப் பெருமானார், பஹாவுல்லா, அப்துல்-பஹா ஆகியோர் வரிசையாகத் தோன்றிய காலமே இங்கு குறிப்பிடப்படுகின்றது. சந்திரன் என்பது பாப் பெருமானார், பஹாவுல்லாவின் முன்னோடியாக செயல்பட்டவர். பஹாவுல்லா தமது திருவெளிப்பாட்டின் மூலம் உலகிற்கு ஒளியூட்டும் சூரியனைப் போன்றவர். ப்ருஹஸ்பதி எனப்படும் குரு கிரகம் பஹாய் சமயத்தின் வழிகாட்டும் உதாரண புருஷரான அப்துல்-பஹாவைக் குறிக்கின்றது. இவர்கள் கி.மு. 1844 முதல் 1921 வரை பஹாய் சமயத்திற்குத் தெய்வீக வழிகாட்டலை வழங்கிவந்தனர்.
பொதுவாக கலியுகம் கி.மு.3102-இல் கிருஷ்னரின் மறைவோடு ஆரம்பித்ததாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த போதும், இது இன்னமும் சர்ச்சைக்குறிய ஒரு விஷயமாகவே இருக்கின்றது. வேறு பல தேதிகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. பின்வரும் பட்டியலைப் பார்க்கவும்.
• ஆர்யபட்டர், 18 பிப்ரவரி கி.மு. 3102 • டாக்டர் அபியங்கர் & டாக்டர் வல்லபா – 7 பிப்ரவரி கி.மு. 3104 • வேதாங்க ஜோதிஷம் – 1173 B.C. • கர்காச்சாரியர் – கி.மு. 3104’க்கு சில வருடங்களுக்கு முன் • கல்ஹனா – கி.மு. 2500
கலியுகம் எப்பொழுது ஆரம்பித்தது என்பதைப் பார்க்கும் போது, அது சில மிகவும் விசேஷமான கிரக சேர்க்கைகளின்படி கி.மு.3104-இல் ஆரம்பித்ததென வானசாஸ்திர மற்றும் கணித வல்லுனரான K.D. அபியங்கர் கூறுகின்றார். இவர் கலியுக ஆரம்பம் கி.மு.3102 என்பதை முற்றாக மறுக்கவில்லை. மாறாக, தற்போது இருக்கும் கணிணி தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலத்தில் கணிக்கப்பட்ட இந்த கலியுக ஆரம்பத்தை அவர் நவீன முறைகளைப் பயன்படுத்தி, சரிசெய்து, கலியுகம் உண்மையில் கி.மு.3104, பிப்ரவரி 7-இல் ஆரம்பித்ததென கணித்துள்ளார். [1]
ஒரு வல்லுனர் எனும் முறையில் அபியங்கரின் கூற்றை நாம் ஏற்றுக்கொண்டு வேறு சில அடிப்படையான விஷயங்களை இப்பொழுது பார்ப்போம்.
கலியுகத்திற்கு 4,32,000 வருடங்கள் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அதில் இதுவரையிலும் சுமார் 5000 வருடங்களே கழிந்துள்ளன என கூறப்படுகின்றது. இந்த 4,32,000 ஆண்டுகளுக்குப் பிறகே உலகின் கலி தீர்க்க கிருஷ்னர் கல்கி அவதாரமாக தோற்றமளிப்பார் என நம்பப்படுகின்றது. உண்மையில், இன்று உலகைப் பார்க்கையில், கிருஷ்னர் 4,32,000 வருடங்களுக்குப் பிறகு தோன்றுவார் எனக் கூறுவது சற்று அபத்தமாக உள்ளது. உலகம் அத்தகைய மோசமான, விஷ்ணு புராணத்தில் கூறுப்பட்டுள்ள மோசமான, நிலையில் இன்று இருக்கின்றது. இந்த 4,32,000 வருடங்கள் எங்கிருந்த வந்தன மற்றும் கலியுகத்திற்கு, சந்தி சந்தியாம்ச காலங்கள் உட்பட 4800 வருடங்களே என்பதற்கான விளக்கத்தை இதே வலைப்பதிவின் https://prsamy.wordpress.com/2009/09/22/கலியுக-முடிவும்-கல்கி-அவ -இல் காண்க.)
கலியுகத்திற்கு 4800 வருடங்களே என்பதை ஏற்றுக்கொண்டோமானால், இந்த கி.மு. 1844-ஆம் ஆண்டு இதில் எப்படி வருகின்றது? (புராணங்களில் யுகங்கள் சார்ந்த வருடம் திவ்யாப்தம் என குறிப்பிடப்படுகின்றது. திவ்யம் என்பது சூரியனைக் குறிக்கும் சொல்லாகும். ஆதலால் யுகங்கள் சூரிய வருடங்களன்றி சந்திர வருடங்கள் அல்ல)
புனித வேதங்களிலும், புராணங்களிலும் வருடங்கள் குறித்த தீர்க்கதரிசனங்கள் வெளிப்படையான மொழிகளில் கூறப்படவில்லை. அந்தந்த காலத்தின் மக்கள் புரிந்துகொள்ளக்கூடிய வகையிலேயே வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அல்லது, அக்கால மக்கள் அறிந்திராத சில வருங்கால நிகழ்வுகளின் அடிப்படையில் அக்காலத்து மக்களுக்கு சில விவரங்கள் மறைமுகமாக வழங்கப்பட்டிருந்தன. இதன்படி, கலியுகத்தின் முடிவில் கிருஷ்னர் கல்கியாக அவதரிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது. சரி, கலியுகம் எப்பொழுது முடிவுற்றது என்பதைப் பார்ப்போம்?
கலியுகத்திற்கு 4800 சூர்ய வருடங்களே என்பதை ஏற்றுக் கொண்டோமானால், இந்த 4800 வருடங்கள் கி.மு. 3104-இல் ஆரம்பித்து கி.பி. 1696-லேயே முடிவுற்றிருக்கவேண்டும். ஆனால், 1844-ஆம் வருடம் இதில் எங்கும் வரவில்லை. இதை எப்படி விளக்குவது?
சுமார் 5000 வருடங்களுக்கு முன்பு தற்போது வழக்கிலிருக்கும் 365.242 நாள்களைக்கொண்ட சூர்ய வருடங்களோடு 354.367 நாள்களைக் கொண்ட சந்திர வருடமும் வழக்கில் இருந்தது, இன்றும் பிரபலமாகவுள்ள விக்கிரம ஆண்டின் வருடப்பிறப்பு, சில மாற்றங்களுடன் இந்த சந்திர வருடத்தின் அடிப்படையிலேயே கணிக்கப்படுகின்றது. (அதே போன்று கிருஷ்ன சம்வத்சரமும் சந்திர வருடத்தையே பின்பற்றி வருகின்றது.) சந்திர வருடத்தை சூரிய வருடத்திற்கு இணையாக்குவதற்காக, சந்திர வருடம் சூரிய வருடத்தைவிட சுமார் பதினொரு நாள்கள் குறைவானது என்பதன் காரணமாக, சந்திர நாள்காட்டி சில முறைகளின்படி சரிசெய்யப்பட்டு சூரிய வருடத்திற்கு இணைவாக்கப்படுகின்றது. இது சில கணிப்புகளின்படி அவ்வப்போது சில வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும். ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இது ஒவ்வொரு வருடத்திற்கும் 10.875 நாள்களைச் சேர்ப்பதற்குச் சமமாகும்.
ஏற்கனவே கூறியுள்ளபடி, தீர்க்கதரிசனங்கள் உடனடியாக விளங்கிக்கொள்ள முடியாத, மறைமுகமான மொழிகளிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்படி பராசர முனிவர் கி.மு. 1844-ஆம் ஆண்டை இந்த கலியுக வருடங்களுக்கிடையில் மறைமுகமாக வைத்திருக்கலாம்.
கி.மு. 3104 பிப்ரவரி 7-ம் தேதியிலிருந்து கி.பி.1844, 23-ஆம் தேதி வரை சரியாக, 4947.302 வருடங்கள் உள்ளன. அதாவது தன்னிச்சையாக மனிதர்களால் இடைச் செருகப்படும் ‘அதிக மாதம்’ எனப்படும் அவ்வப்போது பஞ்சாங்கத்தில் வரும் அந்த ஒரு மாதத்தை விட்டுவிடுவோமானால் மீதமிருப்பது 354.367 நாள்கள் கொண்ட வருடமே. இது ஒரு சந்திர வருடத்திற்குச் சமமாகும். இந்த 4947.302 வருடங்களை வழக்கில் தற்போது இருக்கும் சூரிய வருடங்களாக ஓர் எண்ணிக்கை முறையில் மாற்றிப் பார்ப்போம்:
சந்திர வருடத்திற்குச் சரியாக 354.367 நாள்கள் உள்ளன.
சூரிய வருடத்திற்குச் சரியாக 365.242 நாள்கள் உள்ளன
கிருண்னர் மறைந்ததிலிருந்து பாப் பெருமானார் பிரகடனம் வரை சரியாக 4947.302 சந்திர வருடங்கள் உள்ளன, அல்லது 4947.305 சந்திர வருடங்களாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில், பாப் பெருமானாரின் பிரகடனம் 23 மே 1844 சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு தொடங்கி அடுத்த நாள் மே 24 காலை பொழுது வரை நீடித்தது. பொதுவாக, சந்திர வருடங்கள் என்னும் போது அவை கிரிகோரிய வருடங்களைப் போன்று நடுநிசி 12 மணிக்கு ஆரம்பிப்பதில்லை, மாறாக அவை சூரிய அஸ்தமனத்துடன் ஆரம்பிக்கின்றன. ஆதலால், இங்கு மே 23 என்னும் போது, அது மே 24, 1844-ஐயும் உள்ளடக்கியுள்ளது.
இந்த 4947.305 வருடங்களை சூரிய வருடங்களாக மாற்றுவோமானால் அது பின்வருமாறு இருக்கும்:
4947.305 சந்திர வருடங்களை சூரிய வருடங்களாக மாற்றுவதற்கு அவற்றை 354.367’ஆல் பெருக்கி 365.242’ஆல் வகுக்க வேண்டும்:
4947.305 x 354.367)/365.242=4800, அதாவது சரியாக 4800 சூரிய வருடங்கள்.
நாம் ஏற்கனவே கூறியுள்ளபடி புராண தீர்கதரிசனங்கள் இந்த 4800-ஐ மறைமுகமாக குறிப்பிட்டிருப்பினும் அதை தகுந்த கணிப்புகளுடன் நாம் வெளிக்கொணர்ந்துள்ளோம்.
மேற்கண்டவற்றிலிருந்து, பஹாய் சமயம் பிறந்த ஆண்டான கி.மு.1844, ஹிந்து சமயத்தின் 1000 வருடங்களைக் கொண்ட சத்திய யுகம் பிறந்த ஆண்டும் ஆகின்றது.
பஹாய் சமயம் கி.பி.1844-இல் மே மாதம் 23-ஆம் தேதி தோற்றம் கண்டது. பாப் அல்லது ‘திருவாசல்’ என்பார் எல்லா சமயங்களிலும் வாக்களிக்கப்பட்ட இறைவனின் அவதாரம் தாமே எனவும், தனக்குப் பின் தோன்றவிருக்கும் மற்றொரு அவதாரத்திற்கு (பஹாவுல்லா) தாம் ஒரு முன்னோடி எனவும் அறிவித்தார். (bahai.org)
அதாவது, கி.பி. 1844-உடன் கலியுகம் மறைந்து சத்திய யுகம் ஆரம்பித்துவிட்டது. கல்கி விஷ்ணு யாஷா அவதரித்து விட்டார். பாரசீக சொல்லான பஹாவுல்லா எனும் திருநாமத்தை சமஸ்கிருதத்திற்கு மொழிபெயர்ப்போமானால் அது ‘விஷ்ணு யாஷா’ என்றே வரும், அதாவது ‘கடவுளின் பேரொளி’ அல்லது ‘கடவுளின் ஜோதி’
[1] According to KD Abhyankar, the starting point of Kaliyuga is an extremely rare planetary alignment, which is depicted in the Mohenjo-Daro seals[citation needed]. Going by this alignment the year 3102 BCE is slightly off. The actual date for this alignment is February 7 of 3104 BCE. There is also sufficient proof to believe that Vrdhha Garga knew of precession at least by 500 BCE. Garga had calculated the rate of precession to within 30% of what the modern scholars estimate. (https://en.wikipedia.org/wiki/Kali_Yuga)