இரட்டை புனித நாள்கள்
இதுநாள் வரை பஹாய் நாள்காட்டியான ‘படீ நாள்காட்டி ஆங்கில நாள்காட்டியான கிரேகோரிய நாள்காட்டியோடு பிணைக்கப்பட்டு வந்திருந்தது. ஆனால், ‘படீ நாள்காட்டியின் அமுலாக்கத்தோடு, இந்த இணைப்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டுவிட்டது. ‘படீ நாள்காட்டியின் முதல் நாளான நவ்-ருஸ் திருநாள், வானசாஸ்திர கணக்கின்படி நிர்ணயிக்கப்படுகின்றது. அதாவது, ஒவ்வொரு வருடமும் ‘மஹா விஷுவமாகிய’, சூரியன் மேஷ ராசிக்குள் பிரவேசிக்கும் அத்தருணத்திற்கு ஏற்ப நவ்-ருஸ் புத்தாண்டு நிர்ணயிக்கப்படும். பஹாய் நாள்கள் சூரிய அஸ்தமனத்தில் ஆரம்பிக்கின்றதன் காரணமாக, சூரியன் மேஷ ராசிக்குள் அஸ்தமனத்திற்கு முன்பாக பிரவேசிக்கின்றதா அல்லது அதற்கு பிறகு பிரவேசிக்கின்றதா என்பதைப் பொறுத்து நவ்-ருஸ் பண்டிகை நிர்ணயிக்கப்படும். இனி நவ்-ருஸ் பண்டிகை மார்ச் 21-ஆம் தேதிக்கு ஒன்று அல்லது இரண்டு நாள்களுக்கு முன்பு அல்லது அதற்குப் பிறகு வரக்கூடும். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு பஹாய் புனிதநாளும், பிற முக்கிய நாள்களும் கடந்தகாலத்தில் நடந்தது போன்று, இனி சூரிய நாள்காட்டிக்கு இணங்கவல்லாமல், இனி ‘படி நாள்காட்டிக்கு இணங்கவே வரும். இதில் இரட்டைப் பிறந்தநாள்கள் குறித்த தினங்கள் சற்று விசேஷமானவையாக இருக்கும். அதன் விவரத்தைக் கீழே காணலாம்.
பாப் பெருமானார் மற்றும் பஹாவுல்லாவின் பிறந்தநாள்கள் இதுநாள் வரை ஒவ்வொரு வருடமும் முறையே அக்டோபர் 20, நவம்பர் 12 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட்டு வந்தன. ஆனால், பஹாய்களின் நாள்காட்டியான ‘படீ நாள்காட்டியின் அமுலாக்கத்தோடு, இந்தப் பிறந்த நாள்கள் “நவ்-ருஸ் புத்தாண்டிற்கு அடுத்த எட்டாவது அமாவாசையைத் தொடர்ந்து வரும் முதலாம் மற்றும் இரண்டாம் நாள்களில் இனி கொண்டாடப்படும். பாப் பெருமானார் முஹாரம் 1-ஆம் தேதி, 1819-இல் பிறந்தார் (நவ்-ருஸ்சிற்குப் பிறகு வந்த எட்டாவது அமாவாசைக்கு அடுத்த நாள்). பஹாவுல்லா, நவ்-ருஸ்சிற்குப் பிறகு வந்த எட்டாவது அமாவாசையைத் தொடர்ந்த இரண்டாவது நாளான முஹாரம் 2, 1817-இல் பிறந்தார். இதையே வேறு வார்த்தைகளில் கூறுவதானால் இவ்விரண்டு கிரேகோரிய வருடங்களிலும், சூரிய நாள்காட்டியின்படி, ஐந்தாவது இஸ்லாமிய மாதமான ஜோமாடா அல்-உலாவில் நவ்-ருஸ் வந்தது. இதன்படி, தொடர்ந்து வரும் முஹாரம் மாதத்தின் (முதல் சந்திர மாதத்தின்) அமாவாசை நவ்-ருஸ் புத்தாண்டிற்குப் பிறகு தோன்றிய எட்டாவது அமாவாசையாகும்.
பாப் பெருமானாரும், பஹாவுல்லாவும் முறையே முஹாரம் முதல் மற்றும் இரண்டாம் நாள்களில் பிறந்ததன் காரணமாக, இஸ்லாமிய சந்திர நாள்காட்டியைப் பயன்படுத்தும் நாடுகளிலுள்ள பஹாய்கள் இவ்விரண்டு பஹாய் புனிதநாள்களையும் இரட்டைப் புனிதநாள்களாகக் கொண்டாடி வந்துள்ளனர். சூரிய வருட நாள்காட்டியைக் கொண்ட இரான் நாட்டின் பஹாய்களும், இஸ்லாமிய சந்திர நாள்காட்டியிலுள்ள தேதிகளை இரண்டு புனிதநாள்களுக்கான தேதிகளாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். கடந்காலத்தில், உலகின் பிற பாகங்களிலுள்ள பஹாய்கள் இவ்விரண்டு புனித நாள்களையும் அக்டோபர் 20 மற்றும் நவம்பர் 12-ஆம் தேதிகளில் கொண்டாடி வந்துள்ளனர். 2015 முதற் கொண்டு, ‘இரட்டைப் பிறந்தநாள்கள்’ கிரேகோரிய நாள்காட்டியின்படி, அக்டோபர் மாத மத்தியிலிருந்து நவம்பர் மாத மத்தி வரை, அடுத்தடுத்து வரும் நாள்களில், ஒரு ‘நகரும் விருந்தாக’ (ஈஸ்டர் புனிதநாளைப் போன்று) கொண்டாடப்படும். அடுத்த வருடம், இரட்டைப் பிறந்தநாள்கள் நவம்பர் 13 மற்றும் 14-ஆம் தேதிகளில் (குட்ராட் 10 மற்றும் குட்ராட் 11) வரும்.
உலக நீதிமன்றத்தின் இத்தீர்மானத்தின்படி, விழாக்காலங்கள் இளவேனிற் காலத்திலும், இலையுதிர் காலத்திலும் வரும் மற்றும் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள பஹாய்கள் அவற்றை ஒரே நேரத்தில் கொண்டாடுவர். இம்மாற்றத்தின் காரணமாக, கிழக்கத்திய பஹாய்களுக்கு நேர்ந்தது போன்று இரட்டைப் பிறந்தநாள்கள் இனி உண்ணா நோன்பு காலத்தில் வரவே வராது. மேலும் கடந்தகாலங்களில், ஷீயா இஸ்லாமியர் கர்பிலா போரில் இமாம் ஹுசேய்னின் வீரமிகு தற்காப்பு மற்றும் தியாகமரண நிகழ்ச்சிகளை நினைவுகூறும் நாள்களான முஹாராம் 10-நாளன்று வரும் ‘அஷுரா நாளை’ அணுகிவரும் நாள்களின் போது கிழக்கத்திய பஹாய்கள் இரண்டு விழாக்களையும் கொண்டாடி வந்தனர். இந்த பஹாய் புனித நாள்கள் சூரிய நாள்காட்டியோடு இணைக்கப்பட்டுவிட்டதால், சந்திர மாதமான முஹாரத்திற்கு மாறாக, 354 நாள்களைக் கொண்ட இஸ்லாமிய வருடத்தை விட சூரிய வருடம் 11.25 நாள்கள் அதிகமாகும் என்பதன் காரணமாக, ஒரு 32 காலவட்டத்தில் ஒன்று அல்லது இரண்டு தடவைகள் மட்டுமே இவ்விழாக்கள் அஷுரா நாளிற்கு அணுக்கமாக வரும்.