வரும் 25 மற்றும் 27 நவம்பரில், உலகம் முழுவதுமுள்ள பஹாய்கள் முதலில் திருவொப்பந்த தினத்தையும், அதற்கடுத்து அப்துல்-பஹாவின் விண்ணேற்ற தினத்தையும் அனுசரிக்கவிருக்கின்றனர்.
உலக சமயங்கள் எதிலுமே நிகழ்ந்திராத ஒன்றாக, பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லா, உலக மக்களுக்குத் தமது போதனைகளை வழங்கியதோடு மட்டுமல்லாமல், அப்போதனகளின் முன்மாதிரியாக தமது மூத்த மகனான அப்துல்-பஹாவையும் உலகிற்கு வழங்கினார். அப்துல்-பஹா, பஹாய் சமயத்தின் முன்னோடியான பாப் பெருமானார் தமது சமயத்தைப் பிரகடனம் செய்த நாளான 23 மே 1844-இல் பிறந்தவராவார்.

திருவொப்பந்த நாள் என்பது, அப்துல்-பஹா பஹாவுல்லாவின் வாரிசாகவும், பஹாய் திருவாசகங்களின் விளக்கவுரையாளராகவும், பஹாவுல்லாவின் போதனைகளின் உதாரன புருஷராகவும் நியமிக்கப்பட்ட தினமாகும். இதை உலகம் முழுவதுமுள்ள பஹாய்கள் ஒவ்வொரு வருடமும், பஹாய் தேதியான ‘கௌல்’ (உரை) மாதத்தின் 4-ஆம் நாள் கொண்டாடுகின்றனர். இது ஆங்கில திகதிகளான நவம்பர் 25 அல்லது 26-க்கு ஒப்பான தினமாகும். இவ்வருடம் இந்த நாள் நவம்பர 25-ஆம் தேதி கொண்டாடப்படும்.
அதே சமயம், மே மாதல் 23-ஆம் தேதி பாப் பெருமானார் தமது சமயத்தைப் பிரகடனம் செய்த நாளாகையால், அந்த நாள் பாப் பெருமானாரோடு மட்டுமே தொடர்புப்படுத்தப்பட வேண்டுமெனவும், எந்த சூழ்நிலையிலும் தமது பிறந்த நாள் அதே தேதியில் கொண்டாடப்படக்கூடாது எனவும் அப்துல்-பஹா அறிவித்துவிட்டார். இருப்பினும் அவரது பிறந்த நாளின் அடையாளமாக வேறு ஒரு நாளை பஹாய்கள் கேட்டுக்கொண்டதன் விளைவாக, பஹாவுல்லாவின் திருவொப்பந்தத்தின் மையமாக தாம் நியமிக்கப்பட்ட நாளைக் கொண்டாடுவதற்கு அவர் ஒப்புதல் அளித்தார். இங்கும், இந்த நாள் பஹாவுல்லாவின் திருவொப்பந்தத்தைப் பற்றியே பஹாய்கள் பிரதிபலிப்பார்களே ஒழிய அப்துல் பஹாவின் பிறந்தநாள் பற்றிய அடையாளம் ஏதும் அந்த நாளின் போது இருக்காது.

அப்துல்-பஹா பற்றிய ஒரு சுருக்க விவரம்
பஹாவுல்லாவுக்கும் அவருடைய மனைவியான ஆசிய்யா காஃனுமிற்கும் பிறந்த பிள்ளைகளுள் உயிரோடிருந்தவர் மூன்று பேர். அம்மூவரில் அப்துல்-பஹாவே மூத்தவராவார். சிறு வயது முதற்கொண்டே தமது தந்தையாரின் உயர்ந்த ஸ்தானத்தை அவர் உணர்ந்திருந்தார். பிற்காலத்தில் பஹாவுல்லா இவரையே தமது சமயத்தை வழிநடத்திச் செல்லவும் தமது போதனைகளின் அதிகாரபூர்வ விரிவுரையாளராகவும், பிழைபடா எடுத்துக்காட்டாளராகவும் நியமித்தார். இவரது இயற்பெயர் அப்பாஸ் என்ற போதிலும் இவர் தமது பெயரை அப்து’ல்-பஹா அல்லது கடவுளின் சேவகன் எனவே வைத்துக்கொண்டார்
பஹாவுல்லா சியாச் சால் சிறையில் அடைக்கப்பட்டபோது, அப்துல்-பஹாவுக்கு எட்டு வயது. அவர் தமது தந்தையை அங்கு சென்று கண்டபோது, அவரது கழுத்தில் சங்கிலி இணைக்கப்பட்ட இரும்புவளையம் மாட்டப்பட்டிருந்ததைக் கண்டார்.

வயது ஆக ஆக அப்து’ல்-பஹா தமது தந்தையாரின் மிக நெருக்கமான துணைவராக இருந்து பல முக்கிய காரியங்களை அவருக்காக செயல்படுத்தினார். தமது தந்தையாரைக் காண வருவோரை முன்கூட்டியே நேர்காணல் செய்து, துர்நோக்கம் கொண்டோர்களை அடையாளம் கண்டு, அவரது காரியங்களுக்கு தடைகள் நேரா வண்ணம் தகுந்தவர்களை மட்டும் அவருடைய முன்னிலைக்கு அனுப்பிவைப்பார்.
அக்காநகரில், அங்கு சிறையில் இருந்த அனைவரும் டைஃபாய்ட், மலேரியா, மற்றும் வாந்திபேதியால் பாதிக்கப்பட்ட போது சிறிதும் ஓய்வில்லாமல் நோயாளிகளுக்கு ஸ்நானம் செய்வித்து, பேணி, உணவளிக்கவும் செய்தார். இறுதியில், பெரிதும் களைத்துப் போனவராக, தாமும் நோய்வாய்ப்பட்டு சுமார் ஒரு மாத காலம் ஆபத்தான நிலையிலிருந்தார்.
தன்னலமின்மை, கற்றறிந்தமை, மிகுந்த பணிவு ஆகிய நற்பண்புகளுடன் பஹாவுல்லா அப்துல்-பஹா அவர்மீது கொண்டிருந்த வெளிப்படையான மதிப்பு ஆகியவை, அவரை ‘மாஸ்டர்’ என எல்லாரும் அழைத்திட காரணமாக இருந்தது. இன்றளவும், பஹாய்கள் அவரை இவ்வாரே அழைத்து வருகின்றனர்.

பஹாவுல்லா விண்ணேற்றம் அடைந்தபோது அவரது உயில் மற்றும் சாசனத்தின் வெளிப்படையான நிபந்தனைகளையும் மீறி, பொறாமை கொண்ட சில உறவினர்கள் அப்து’ல்-பஹாவின் ஸ்தானத்தை கைப்பற்ற முயற்சித்தனர். பேராசையுடைய இந்த நபர்கள் தங்களைச் சுற்றிலும் ஆதரவாளர் கூட்டம் ஒன்றை உருவாக்கவும் முனைந்தனர்.
உலகின் பிற சமயங்களில் வெகு விரைவாக உட்பிரிவுகள் ஏற்பட்டதைக் காண்கையில், இத்தகைய பிரிவினைவாதக் கும்பல்கள் எதுவுமே தங்களை நிலைப்படுத்திக்கொள்ளவோ பஹாய் சமயத்துள் உட்பிரிவுகளை உண்டாக்கவோ இயலாமல் போயினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இறுதியில், அத்தகைய உட்பிரிவுகளை உருவாக்க முனைந்த அப்பிரிவினைக் கும்பல்களின் தலைவர்கள் மடிந்த போது அக்கும்பல்களும் சிதைந்து போய் எந்த உட்பிரிவோ சமயப்பிரிவோ நீடித்திருக்கவில்லை. பஹாய்கள் இத்தகைய ஐக்கியத்தை பஹாய் ‘திருவொப்பந்தத்தின்’ ஆற்றலாகக் கருதுகின்றனர்.
மேற்கத்திய நாடுகள் புரிந்துகொள்ளும் வகையில் தமது தந்தையாரின் உலகந்தழுவிய தூரநோக்கை விளக்கிடுவதில் அப்து’ல்-பஹா முக்கிய பங்காற்றினார். இந்த நடவடிக்கையின் வெற்றி சிறிய, மத்திய கிழக்கு சார்ந்த ஒரு இயக்கமென இருந்த பஹாய் சமயத்தை இன்றிருப்பதைப் போன்று ஓர் உலக சமயமாக தன்மைமாற்றம் அடைவதை பெரிதும் துரிதப்படுத்தியது. தமது தந்தையாரின் மறைவுக்குப் பிறகும் அப்து’ல்-பஹா ஒட்டோமான் அரசின் கைதியாகவே இருந்தார். கடிதங்கள் வாயிலாகவும், நேரடித் தொடர்புகளின் வாயிலாகவும், பாலஸ்தீனத்திற்கு பயணம் மேற்கொண்ட மேற்கத்திய விசுவாசிகளுடனான தொடர்பின் வழியாக அவர் பஹாய் சமயத்தை மத்தியக் கிழக்கிற்கும் அப்பால் பரவச் செய்தார்.
இளந்துருக்கியர் புரட்சிக்குப் பின், அப்து’ல்-பஹா நாட்டிற்கு வெளியே பிரயாணம் செய்யக்கூடிய சுதந்திரத்தை அடைந்தார். ஆகஸ்ட் 1911-இல், அவர் புனித நிலத்தை விட்டு மேற்கத்திய நாடுகளுக்கான நான்கு மாத பிரயாணம் ஒன்றை மேற்கொண்டார். அப்போது அவர் லண்டன் மற்றும் பாரீஸ் நகர்களுக்கு விஜயம் செய்தார். அங்கு அவர் மேற்கத்திய நம்பிக்கையாளர்களுடன் சந்திப்புகள் நடத்தி, தினமும் பஹாய் சமயம் பற்றியும், அதன் குறிக்கோள்கள் குறித்தும் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.

பின்வந்த இளவேனிற் காலத்தில், ஒரு வருடகால பயணம் ஒன்றை அப்துல்-பஹா மேற்கொண்டார். அவ்வேளை அவர் ஐரோப்பாவுக்கு மீண்டும் பிரயாணம் செய்தும், பிறகு ஐக்கிய அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் பயணங்கள் மேற்கொண்டார். இந்தப் பயணங்கள் அந்த இரு நாடுகளிலும் பஹாய் சமயத்தின் விரிவாக்கத்தை பெரிதும் தூண்டின.
வட அமெரிக்காவின் 40க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு அவர் பிரயாணம் செய்தார். அவ்வேளைகளில் நம்பிக்கையாளர் மற்றும் நம்பிக்கையாளர் அல்லாதார் அனைவராலும் அவர் பெரும் மரியாதையுடனும் ஆரவாரத்துடனும் வரவேற்கப்பட்டார். நகரம் நகரமாக அவர் தேவாலயங்களிலும், யூதக்கோவில்களிலும், புகழ்வாய்ந்தோர் முன்னிலையிலும் இயக்கங்கள் முன்னிலையிலும் சொற்பொழிவாற்ற அழைக்கப்பட்டார்.
இதன் முடிவான விளைவுகளாக, பஹாய் சமயம் சமுதாய மற்றும் சமய சீர்திருத்தங்களுக்கான ஒரு புதிய மகத்தான சக்தியாக நிலைப்பாடு கண்டது. ஒரு புதியதும், அமைதியானதுமான மனித சமுதாயத்திற்கான பஹாய் சமயத்தின் அறைகூவலை உள்ளடக்கிய பஹாவுல்லாவின் செய்தி தொழில்துறை நாடுகளில் பிரகடணப்படுத்தப்பட்டதோடு, ஒரு புதிய தலைமுறையான நம்பிக்கையாளர்கள் பதிவு செய்யப்பட்டனர்.
சமயத்தை அனைத்துலகமயமாக்குவதற்கான தொடர்ந்து செயல்பட்டுவரும் ஒரு திட்டத்தை அப்துல்-பஹா நிறுவினார். வட அமெரிக்க நம்பிக்கையாளர்களுக்கான கடிதங்களின் வரிசை ஒன்றில், உலகம் முழுவதும் சென்று பஹாய் சமயத்தையும் அதன் கோட்பாடுகளையும் பிரகடனப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

முதலாவது உலக யுத்தம் மூள்வதற்கு முன்பாகவே அப்து’ல்-பஹா புனித நிலம் திரும்பிவிட்டிருந்தார். மேற்கு நாடுகளுக்கான அவருடைய செய்திகளில், உலகம் விரைவில் எதிர்நோக்கும் அப் போர் குறித்து எச்சரிக்கை விடுத்தும், அத்தகைய போர்களை தவிர்க்கக்கூடிய உலக காமன்வெல்த் அமைப்பு ஒன்றை நிறுவுவதன் அவசியத்தையும் தொடர்ந்தாற் போன்று எடுத்தியம்பினார். போர்க்காலத்தின் போது, அவரும் அவரது தந்தையாரும் போதித்து வந்த கோட்பாடுகளை செயல்படு்த்துவதில் அப்துல்-பஹா ஈடுபட்டிருந்தார். உதாரணமாக, அவர் டிபீரியாஸ் எனும் இடத்தில் வெகு விரிவான விவசாயத் திட்டம் ஒன்றை தாமே ஏற்பாடு செய்தார். இத்திட்டம் அப்பிரதேசத்திற்குத் தேவையான கோதுமை தானியத்திற்கான முக்கிய மூலாதாரமாக விளங்கி அப்பிரதேசத்தில் பஞ்சம் ஏற்படுவதையும் தவிர்த்தது. இதன் காரணமாக அப்துல்-பஹா பிரிட்டிஷ் அரசினால் ‘சர்(Sir)’ பட்டமளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
அப்து’ல்-பஹா நவம்பர் 28, 1921-இல் விண்ணேற்றம் அடைந்தார். சதா சச்சரவுகளும் சண்டைகளும் நிறைந்திருக்கும் புனித நிலம், அப்து’ல்-பஹாவின் மறைவின் விளைவால் அதுவரை கண்டறியாக ஒற்றுமையையும் கூட்டு உணர்ச்சிவயப்படுதலையும் கண்டது. யூதர்கள், கிருஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், ‘ட்ருஸ் சமயத்தவர் போன்ற அனைத்து சமயக்கோட்பாட்டினர் மற்றும் சமயப்பிரிவினர்கள்; அராபியர்கள், துருக்கியர்கள், குர்ட் இனத்தவர், ஆர்மீனியர்கள் மற்றும் பிற இனத்தவர்களும் அப்துல் பஹாவின் மறைவினால் ஒன்றுசேர்க்கப்பட்டு தங்கள் அனைவருக்குமே பொதுவாக நேர்ந்த அவரது மறைவினால் துக்கம் கொண்டனர்.
அப்துல் பஹாவின் மறைவு பாலஸ்தீனம் தனது வரலாற்றிலேயே கண்டறியாத ஒரு நிகழ்வாக இருந்தது. அவரது இறுதி ஊர்வலத்தில் எல்லா சமய, இனத்தையும் சார்ந்த 10,000 பேர்களுக்கும் அதிகமாகவே கலந்துகொண்டனர். “அவரது மறைவால் துக்கவசமாகியிருந்த ஒரு பெரும் கூட்டம் கூடியது, ஆனால் அதே வேளைஅவர் வாழ்ந்த வாழ்க்கைகாக அவர்கள் களிப்புணர்வைக் காட்டவும் தவறவில்லை,” என பாலஸ்தீனத்திற்கான அன்றைய பிரிட்டிஷ் தூதர் குறிப்பிட்டார். ஜெருசலத்தின் ஆளுனர், “அந்த ஈம நிகழ்வின் மிகுந்த எளிமை அறைகூவிய ஒன்றுபட்ட வருத்த உணர்வையும் மரியாதையையும் நான் இதுவரை கண்டதேயில்லை,” என எழுதினார்.
அப்து’ல்-பஹாவின் பூதவுடல் கார்மல் மலையின் மீது அமைக்கப்பட்டிருந்த ‘பாப் பெருமானாரின் கல்லறையிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ‘பாப் பெருமானாரின் கல்லறைக்குச் செல்லும் பஹாய்கள் அப்து’ல்-பஹா அங்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் அறைக்கும் சென்று பிரார்த்தனைகள் கூறுவர்.