அப்துல்-பஹாவின் விண்ணேற்றம்-1


தமது முதுமையில், உலக வாழ்வின் நிலையற்றமையை அப்துல்-பஹா அடிக்கடி பஹாய்களுக்கு ஞாபகப்படுத்தி வந்தார். தம்மால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டதாகவும், பஹாவுல்லாவின் சமயத்திற்காக இரவும் பகலுமாக உழைத்தும், தாம் மேற்கொண்டுவந்த பணிகளை இனி நம்பிக்கையாளர்களே தொடர்ந்து மேற்கொள்வர் எனும எதிர்ப்பார்ப்பையும் தெரிவித்தார். “அப்துல்-பஹா எனும் மனிதரைப் பற்றி கவலைப்படாதீர்கள், ஏனெனில் இறுதியில் அவர் உங்களிடமிருந்து விடைபெற்றுக்கொள்வார்; உங்கள் பார்வையை கடவுளின் திருவாக்கின்மீது பதித்திடுங்கள்…” என்றே அறிவுறுத்தி வந்தார். எத்தகைய சூழ்நிலையிலும், எத்தகைய தாக்குதல்கள் நேரிட்ட போதும், சமயத்திற்கான சேவையிலிருந்து சற்றும் வழுவாதிருக்கும்படி கூறினார்.

abdul-baha-original-color-photo

தமது விண்ணேற்றத்திற்கு சில நாள்களுக்கு முன், அமெரிக்க அன்பர்களுக்கு எழுதிய ஒரு நிருபத்தில், இம்மையை விடுத்து மறுமையை அடைவதற்கான தேக்கி வைத்திருந்த தமது ஆவலை வெளிப்படுத்தினார்: “நான் இவ்வுலகையும், அதன் மக்களையும் துறந்துவிட்டேன்… இவ்வுலகமெனும் கூன்டில், வெருளடைந்த ஒரு பறவையைப் போன்று சிறகடிக்கின்றேன், அனுதினமும் உமது இராஜ்யத்தை நோக்கிப் பறந்திட ஆவலுறுகின்றேன். யா பஹாவுல்-அப்ஹா! தியாகமெனும் கிண்ணத்திலிருந்து என்னைப் பறுகச் செய்து, எனக்கு விடுதலையளிப்பீராக!”

அவர் கண்ட கனவுகளின் மூலமாகவும், அவர் ஈடுபட்டிருந்த உரையாடல்கள் மூலமாகவும், அவர் வெளிப்படுத்திய நிருபங்கள் மூலமாகவும், அவர் தமது உலக வாழ்வின் இறுதிப் பகுதியை நெருங்கிக்கொண்டிருந்தார் என்பது தெளிவாகியது.

அவர் கண்ட ஒரு கனவில், பஹாவுல்லா தோன்றி, “இந்த அறையை அழித்துவிடு” எனக் கூறியதாகத் தெரிவித்தார். ‘அறை’ என பஹாவுல்லா கூறியது அப்துல்-பஹாவின் உடலைக் குறிப்பிட்டே என்பதை அவரது விண்ணேற்றம் வரை எவருமே புரிந்துகொள்ளவில்லை.

தமது உலக வாழ்வின் கடைசி நாள் வரை எல்லார் மீதும், உயர்ந்தோர் தாழ்ந்தோர் அனைவர் மீதும் அவர் அதே அன்பை வெளிப்படுத்தியே வந்தார்; எழைகளுக்கும், வறியோருக்கும் அதே உதவிக்கரத்தை நீட்டினார், தமது பால பருவத்திலிருந்து அவர் ஆற்றிவந்த அதே கடமைகளைத் தமது தந்தையின் சமயத்திற்கு ஆற்றி வந்தார்.

தமது விண்ணேற்றத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமையன்று, பெரும் சோர்வையும் கருதாமல், பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகளில் கலந்துகொண்டும், அதன் பிறகு ஏழைகளுக்கான தான தர்மங்களில் ஈடுபட்டார்; இறுதி நிருபங்களாக விளங்கிய–சில நிருபங்கள் எழுதப்படுவதற்கு ஆணையிட்டார்; அன்றே நடைபெறவேண்டுமென அவர் வலியுறுத்திய ஒரு நம்பகமான பணியாளரின் திருமணத்தை ஆசீர்வதித்தார்; தமது இல்லத்தில் எப்போதும் போல் நண்பர்களைச் சந்தித்தார்; அடுத்த நாள் காய்ச்சல் கண்டது; தொடர்ந்து வந்த ஞாயிற்றுக்கிழமை வெளியில் செல்வதற்கு இயலாத நிலையில் பாப் பெருமானாரின் சமாதிக்குச் சென்று அங்கு திருவொப்பந்தம் பிரகடனப்படுத்தப்பட்ட நாளையொட்டி பார்சி அன்பர் ஒருவர் வழங்கிய விருந்து ஒன்றில் கலந்துகொள்வதற்காக நம்பிக்கையாளர்கள் அனைவரையும் அனுப்பி வைத்தார்; அதே பிற்பகலில், அதிகரித்து வந்த தமது சோர்வையும் கருதாமல், ஹைஃபா நகரின் முஃப்தி, நகரத்தலைவர், போலீஸ் தலைவர் ஆகியோரை அதே தவறாத பணிவுடனும், அன்போடும் வரவேற்று உபசரித்தார்; தமது இறுதி இரவான—அன்றிரவு படுக்கச் செல்வதற்கு முன் தமது குடும்பத்தினர் ஒவ்வொருவரைப் பற்றியும், இல்லத்தின் பணியாளர்கள், புனிதப் பயணிகள், ஹைஃபா நகரிலிருந்த நண்பர்கள் அனைவரைப் பற்றியும் விசாரித்தார்.

அதிகாலை 1.15 மணிக்கு அவர் எழுந்து, தமது அறையிலிருந்த ஒரு மேஜைக்குச் சென்று, சிறிது நீரைப் பருகிவிட்டு மீண்டும் தமது படுக்கைக்குத் திரும்பினார். சிறிது நேரத்திற்குப் பிறகு அங்கு அவரைப் பார்த்துக்கொள்வதற்காக இருந்த மகள்கள் இருவரில் ஒருவரிடம், கட்டிலைச் சுற்றிலுமிருந்து திரைகளை தூக்கிவிடும்படி கூறி, மூச்சு விடுவதற்கு தமக்கு சிரமமாக இருப்பதாகக் கூறினார். அப்போது அவருக்கு சிறிது பன்னீர் கொண்டுவரப்பட்டும், அதில் சிறிதை அவர் பருகினார்; பிறகு சிறிது உணவு வழங்கப்பட்ட போது, “நான் விடைபெறப் போகின்றேன், எனக்கு உணவு வழங்குகின்றீர்கள்,” என மிகத் தெளிவுடன் கூறினார். இறுதியில், ஒரு நிமிடத்திற்குப் பிறகு, தமது அன்பார்ந்த தந்தையாரின் பேரொளியில் ஒன்றுசேர்க்கப்படவும், அவருடனான என்றும் நிலையான மறு இணைவு எனும் களிப்புணர்வை சுவைத்திடவும் அவரது ஆவி அதன் நித்திய உரைவிடத்திற்குச் சிறகடித்துப் பறந்து சென்றது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: