
2019-ஆம் ஆண்டு, பாப் பெருமானரின் இருநூறாவது பிறந்தநாளைக் குறிக்கின்றது. அவ்வருடம் ஒரு புனித ஆண்டாக உலகம் முழுவதுமுள்ள பஹாய்களால் கொண்டாடப்பட விருக்கின்றது. ஆனால், அவரது காலத்தில் அவருக்கு நடந்த அவமரியாதையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அவரது சமயம் பரவிய வேகத்தைக் கண்ட பாரசீக அதிகாரிகள், அவரை 9 ஜூலை 1850-இல் 750 துப்பாக்கிகளின் குண்டுகளுக்கு இறையாக்கினர்.

பாப் பெருமானார் மரணமடைந்த நேரத்திலிருந்து அவரது உடல் எப்படியெல்லாம் பாதுகாக்கப்பட்டு, இறுதியில் எவ்வாறு கார்மல் மலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது என்பதன் வரலாற்றை இக்கட்டுரை வரையறுக்க முயல்கின்றது.
இன்று அவரது திருவுடல் கார்மல் மலைச் சரிவில் மிகவும் பொருத்தமான முறையில், ஒரு பிரமிக்க வைக்கும் அழகுடைய நினைவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள், பஹாய்களும், வருகையாளர்களுமென அவ்விடத்திற்குப் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர், அல்லது அங்கு சுற்றுப் பயணிகளாக

வருகையளிக்கின்றனர். ஆனால், இதற்கெல்லாம் மாறாக ஆரம்பத்தில் அவரது புனித உடல், ஓர் இறை அவதாரத்தின் திருமேனி, எவ்விதமான அவமரியாதைக்கு ஆளாகி, பிறகு அவரது விசுவாசிகளால் எவ்வாறு காப்பாற்றப்பட்டு ஒவ்வொரு இடமாக கொண்டுசெல்லப்பட்டு, பிறகு இஸ்ரேல் நாட்டின், ஹைஃபா நகரில், கார்மல் மலைச் சரிவில், அப்துல்-பஹாவினால் நிர்மாணிக்கப்பட்ட புனிதக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது என்பதைப் பார்ப்போம்.
பாப் பெருமானார் மற்றும் அவருக்கு துணையாகவிருந்த அனிஸ் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு பாப் பெருமானாரின் முகத்தைத் தவிர சிதைந்து போன அவர்களின் உடல்கள் நகருக்கு வெளியே இருந்த ஓர் அகழியின் ஓரத்தில் கிடத்தப்பட்டன. சில குறிப்புகளின்படி அவ்வுடல்கள் கொல்லப்பட்ட

இடத்திலேயே இரண்டு நாள்கள் வைக்கப்பட்டிருந்து பிறகு நகருக்கு வெளியே இருந்த அகழிக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. பாரசீக நாட்டில் குற்றவாளிகள் மரண தன்டனைக்கு ஆளாகும் போது, அவர்களின் உடல்கள் பொதுமக்களுக்கு ஒரு பாடமாக சில நாள்களுக்கு ஒரு பொதுவிடத்தில் பார்வைக்காக வைக்கப்படும். அவ்விதமாக பார்க்கையில் பாப் பெருமானாரின் உடல அவர் கொல்லப்பட்ட இடத்திலேயே பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டதாக கூறப்படுவது உண்மையாகவே இருக்கலாம்.
பாப் பெருமானாரின் உடல் அகழியில் கிடந்த போது, ரஷ்ய நாட்டின் தூதரக அதிகாரி ஒருவர் சித்திரக்காரர் ஒருவரை அழைத்துச் சென்று உடலை வரையச் செய்தார்.

அச்சித்திரம் பாப் பெருமானாரின் முகத்தை அப்படியே படம்பிடித்து காட்டியது போன்றிருந்தது என்பர். இதே அதிகாரி உடல்கள் அவ்வாறு மரியாதையின்றி கிடப்பது பொறுக்காமல், அருகிலேயே அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.
பாப் பெருமானாருக்கு பிரதம மந்திரி மரண தன்டனைக்கான ஆணையை பிறப்பித்திருந்தார் என்பது பற்றி கேள்விப்பட்ட அவரது விசுவாசிகளுள் ஒருவரான ஹாஜி சுலைமான் காஃன் தாப்ரிஸி, பாப் பெருமானாரைக் காப்பாற்றுவதற்காக தெஹரானிலிருந்து புறப்பட்டு தப்ரீஸ் வந்து சேர்ந்தார், ஆனால் வருவதற்கு ஒரு நாள் தாமதமாகிவிட்டது. அதற்குள் மரண தன்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது. குறைந்த பட்சமாக

உடலையாவது காப்பாற்ற முடிவெடுத்தார. ஆனால், அவ்வாறு செய்ய வேண்டாம் என அவருடைய நண்பரான ஓர் அதிகாரி அறிவுறுத்தி,மக்களால் அச்சங்கொள்ளப்பட்ட ஹாஜி அல்லா யார் எனும் ஒரு குண்டர் கும்பல் தலைவனுக்காக காத்திருக்கும்படி கூறினார்.
அன்றிரவு, ஹாஜி அல்லா-யார் ஆயுதம் தாங்கிய ஒரு கும்பலுடன் பாப் பெருமானார் கிடத்தப்பட்டிருந்த அந்த அகழிக்குச் சென்றார். அங்கிருந்த படைவீரர்கள் ஹாஜி அல்லா-யாரைக் கண்டவுடன், பயந்து பின்வாங்கினர். ஹாஜி அல்லா-யாரிடம் பாப் பெருமானாரின் உடலைப் பறிகொடுத்த வீரர்கள், உடல் மிருகங்களால் தூக்கிச் செல்லப்பட்டதெனும் வதந்தியை தங்களைப் பாதுகாத்துகொள்வதற்காக பரப்பிவிட்டனர். பாப் பெருமானாரின் விசுவாசிகளும் அச்செய்தி உண்மைதான் என அவ்வதந்திக்கு அவர்களும் உடன்சென்றனர். அதன் மூலம் பாப் பெருமானாரின் கதை ஒரு முடிவுக்கு வந்து அரசாங்கம் உடல் காப்பாற்றப்பட்டது தெரியாமல் அவ்விவகாரத்தை அதோடு விட்டுவிடுவதற்காக அவ்வாறு செய்யப்பட்டது.

ஹாஜி அல்லா-யார் பாப் பெருமானாரின் உடலை உடனடியாக எடுத்துக்கொண்டு அருகிலிருந்த ஒரு பட்டு தொழிற்சாலைக்கு கொண்டு சென்றார். அங்கு உடல் விசேஷமாக தயாரிக்கப்பட்ட ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு, ஹாஜி சுலைமான காஃனின் வழிகாட்டலோடு ஒரு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. உடல் காப்பாற்றப்பட்ட விஷயம் பஹாவுல்லாவுக்கு தெரியப்படுத்தப்பட்டது. பஹாவுல்லா,உடலை தெஹரானுக்கு கொண்டுவரப்பட தப்ரீஸுக்கு ஆள் அனுப்ப ஏற்பாடு செய்தார்.
பாப் பெருமானாரின் தியாகமரணத்திலிருந்த அவரது திருவுடல் ஹைஃபா நகரில் நல்லடக்கம் செய்யப்படும் வரையிலான அதன் பயணத்தைப் பின்வருமாறு பட்டியலிடலாம்:
ஜூலை 1850 | தியாக மரணமும் உடல் காப்பாற்றப்படுவதும் |
1850–67 கோடை | (இபுன் பாபுய்யி நினைவாலயம் எனவும் பெயர்கொண்டது, தெஹரான் நகருக்கு தெற்கே) |
1867 | (சில நாள்கள் மட்டும் ) மாஷாவுல்லா பள்ளிவாசல் (தெஹரானுக்கு தெற்கே) |
1867–8 | ஆஃகா மிர்ஸா சாய்யிட் ஹஸான் வஸீர் (தெஹரானில்) |
1868–90 | இமாம்ஸாடே சைட் (தெஹரான் அருகே) |
1890–5 | ஆஃகா ஹுஸேய்ன் அலி நூர் (தெஹரானில்) |
1895–9 | முகம்மத் கரீம் அத்தர்-இன் இல்லம் (தெஹரானில்) |
1899 | தெஹரான், இஸ்ஃபாஹான், கிர்மான்ஷா, பாக்தாத், டமாஸ்கஸ், பெய்ரூட், பிறகு கடல் வழியாக அக்கநகர் 31 ஜனவரி |
1899–மார்ச் 1909 | அப்துல்லா பாஷா இல்லம் (அக்கா நகரில்) |
21 மார்ச் 1909 | பாப் பெருமானார் நினைவாலயம் (ஹைஃபாவில்) |
தப்ரீஸ் நகரிலிருந்து காப்பாற்றப்பட்ட பாப் பெருமானாரின் உடல் கொண்டு செல்லப்பட்ட இடங்களும், நடந்த சம்பவங்களும் அடுத்த கட்டுரையில் விவரிக்கப்படும்.