
பஹாய் சமயத்தின் ஒன்பது முக்கிய புனித நாள்களுள், பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லா, அவருக்கு முன்னோடியாக விளங்கிய பாப் பெருமானார் இருவரின் பிறந்த நாள்களும் அடங்கும். இவ்வருடமான கி.பி. 2017 பஹாவுல்லாவின் பிறப்பு குறித்த 200-வது நினைவாண்டாகும். அதே போன்று கி.பி. 2019 பாப் பெருமானார் பிறப்பின் 200-வது நினைவாண்டாகும். இவ்விருவரின் பிறந்தநாள்களைப் பற்றி குறிப்பிடுகையில், அவை இரண்டும் ஒன்றே, அவை ஒன்றாகவே கொண்டாடப்பட வேண்டுமென பஹாவுல்லா வலியுறுத்தியுள்ளார். இஸ்லாமிய நாள்காட்டியைப் பின்பற்றிவந்த பஹாய்களுக்கு இதில் சிரமம் ஏதும் கிடையாது. ஏனெனில், பாப் பெருமானார் முஹாரம் முதல் நாள் பிறந்தார், பஹாவுல்லா முஹாரம் இரண்டாம் நாள் பிறந்தார். அப்பிறந்தநாள்கள் இரண்டையும் ஒன்றாக இரண்டுநாள்களுக்குக் கொண்டாடுவதில் பிரச்சினை கிடையாது. ஆனால், ஆங்கில நாள்காட்டியான, கிரெகோரிய நாள்காட்டியைப் பின்பற்றும் நாடுகளில் இந்த இரட்டைப் பிறந்தநாள்களை ஒன்றாகக் கொண்டாட இயலாது. ஏனெனில், பாப் பெருமானார் ஆங்கில நாள்காட்டிக்கு இணங்க அக்டோபர் 20-ஆம் தேதியும், பஹாவுல்லா நவம்பர் 12-தேதியும் பிறந்தனர். இதன் காரணமாகவே, சென்ற வருடம் (2015) வரை இவர்களின் பிறந்தநாள்கள் பெரும்பாலான நாடுகளில் வெவ்வேறாகக் கொண்டாடப்பட்டு வந்தும், பஹாய் உலகம் அது குறித்து ஒரு முடிவுக்கு வர இயலாமலும் இருந்தது. ஆனால், சென்ற வருடம் பஹாய்களின் தலைமைத்துவமான உலக நீதிமன்றம், இதற்கு ஒரு தீர்வைக் கண்டது. அது என்னவென பார்ப்பதற்கு முன் அதற்கு முன்பாக பஹாய் பஞ்சாங்கம் குறித்த சில முக்கிய விஷயங்களைப் பரசீலிப்போமாக.
நாள்கள்
பஹாய் நாள்கள் சூரிய அஸ்தமனத்தில் ஆரம்பித்து அடுத்த நாள் சூரிய அஸ்தமனத்தோடு முடிகின்றன. ஆதலால் நாள்களின் ஆரம்பம் சூரிய அஸ்தமன நேரத்தைச் சார்ந்துள்ளன. நாளுக்கு நாள் இது சிறிது வேறுபடும்.
பஹாய் வருடம்
பஹாய் வருடமானது தலா பத்தொன்பது நாள்கள் கொண்ட, பத்தொன்பது மாதங்கள் அடங்கிய, அல்லது 361 நாள்களையும், சில சந்திர வருட அம்சங்களையும் உள்ளடக்கிய சூர்ய அல்லது சௌர வருடமாகும். அதாவது, ஆங்கில கிரெகோரிய வருடத்தைப் போன்று அது 365.242 நாள்கள் கொண்டதாகும். (இஸ்லாமிய வருடத்திற்கு 354.37 நாள்கள் மட்டுமே) கூடுதலாக வரும் 4 நாள்கள் (சாதாரண வருடம்) அல்லது 5 நாள்கள் (லீப் வருடம்) பஹாய் வருடத்திற்குள் உபரி நாள்களாகச் சேர்க்கப்படுகின்றன. பஹாய் வாரங்கள் இப்போது இருப்பதைப் போன்று ஏழு நாள்கள் கொண்டவை. இவற்றுக்கும் மேற்பட்டு, 19 பஹாய் வருடங்கள் ஒரு ‘வஹீட்’ (unique) எனவும், பத்தொன்பது வஹீட்கள் ஒரு ‘குல்-இ-ஷே’ (All-things) எனவும் பாப் பெருமானார் வகுத்துள்ளார். பஹாய் சகாப்தம் ஆரம்பித்த கி.மு.1844 முதல் சென்ற வருடம் (2016) மார்ச் மாதம் வரை 9 வஹீட்கள் கழிந்துள்ளன.
பஹாய் வருடப் பிறப்பு
அதிப் புனித நூலாகிய கித்தாப்-இ-அஃடாஸில் பஹாய் வருடப் பிறப்பு எப்பொழுது நிகழ வேண்டும் என்பதை பஹாவுல்லா வரையறுத்துள்ளார். பஹாய் வருடம் வெப்பமண்டல (Tropical) வருடமாகும். இது பூமி, சூரியன், இராசிகள் ஆகியவற்றைச் சார்ந்துள்ளது. சூரியன் ஒவ்வொரு இராசியாகக் கடந்து மேஷ இராசிக்குள் பிரவேசிக்கும் அத்தருணம் பஹாய் வருடப் பிறப்பாகும். இந்த நேரம் சூரிய அஸ்தமனத்திற்கு ஒரு நிமிடத்திற்கு முன்பாக நிகழ்ந்தாலும் அந்த நாளே வருடப் பிறப்பாகும் அல்லது அது சூரிய அஸ்தமனத்திற்கு ஒரு நிமிடம் கழித்து நிகழ்ந்தால் அதற்கு அடுத்த நாளே புது வருடத்தின் முதல் நாளாகும். (இந்த நாளே ஆங்கிலத்தில் ‘Vernal Equinox’ எனவும் பஞ்சாங்கத்தில் ‘விஷுவ தினம்’ எனவும் குறிப்பிடப்படுகின்றது. இது சம பகல், சம இரவு உடைய நாளும், இளவேனிற்காலத்தின் முதல் நாளும் ஆகும்.) இதன் காரணமாக, பஹாய் வருடப் பிறப்பானது ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம், தேதிகள் 19-லிருந்து 22 வரை இந்த விசுவ தின கணிப்பிற்கு ஏற்பவே நிகழும். (2017-இல் மார்ச் மாதம் 19-ஆம் தேதி சூரிய அஸ்தமனத்தில் ஆரம்பித்து மார்ச் 20-ஆம் தேதி சுரிய அஸ்தமனம் வரை நவ்-ருஸ் (பஹாய் வருடப் பிறப்பு) கொண்டாடப்பட்டது.

இந்த விஷுவம் எப்பொழுது நேருகின்றது என்பது உலகின் வெவ்வேறு பகுதிகளில் அந்தந்த நேரத்திற்கு ஏற்பவே நிகழும். ஆதலால், பஹாய் தலைமைத்துவமான உலக நீதிமன்றம், விஷுவம் நிகழும் நேரத்தைக் குறிப்பதற்கு பஹாவுல்லாவின் பிறந்தகமான பாரசீகத்தின் தெஹரான் நகரைத் தேர்ந்தெடுத்துள்ளது. ஆதலால், தெஹரான் நகரை மையமாக வைத்து, அதற்கு ஒப்ப விஷுவம் கணக்கிடப்படுகின்றது.
இரட்டைப் பிறந்த நாள்கள்
இப்பொழுது, இரட்டைப் பிறந்த நாள்களை ஒன்றென எவ்வாறு கொண்டாடுவது என்பது பற்றிய பிரச்சினைக்கு வருவோம். பின்வரும் பொருண்மைகளைக் காண்போம்:
- இரண்டு பிறந்தநாள்களும் ஒன்றே என பஹாவுல்லா கூறியுள்ளார்
- பஹாய் வருடம் சௌர (Solar) வருடமாகும்; புனித நாள்கள் இவ்வருடத்தின்படியே அனுசரிக்கப்படும்
- சௌர வருடத்திற்குள் சந்திர வருட அம்சங்கள் இணைக்கப்பட வேண்டும்
- அப்துல்-பஹாவும், ஷோகி எஃபெண்டியும் இதற்கான தீர்வை உலக நீதிமன்றத்திடமே விட்டுவிட்டனர்.
சந்திர வருட அம்சங்கள்
பாப் பெருமானார் அக்டோபர் 20-ஆம் தேதி பிறந்தார். இதற்கு சமமான இஸ்லாமிய தேதி முஹராம் முதல் நாளாகும். மேலும் சந்திர வருட கணக்கின்படி, மாதங்கள் அமாவாசையன்று (புது நிலவின் தோற்றம்) ஆரம்பிக்கின்றன. அப்படி பார்க்கும் போது பாப் பெருமானாரின் பிறப்பு அவ்வருட நவ்-ருஸ்-சிலிருந்து எட்டாவது அமாவாசையன்று நிகழந்தது. அதே போன்று பஹாவுல்லாவின் பிறப்பு முஹாரம் இரண்டாவது நாளில், நவ்-ருஸ்ஸிலிருந்து எட்டாவது அமாவாசைக்கு அடுத்த நாள் நிகழ்ந்தது. இரண்டு பிறந்த நாள்களும் ஒன்று மற்றதைத் தொடர்ந்து வருகின்றன. இப்பொழுது இரட்டைப் பிறந்தநாள்களின் சந்திர வருட அம்சங்களை சௌர வருடத்திற்குள் எவ்வாறு சேர்ப்பது:
- பாப் பெருமானாரும், பஹாவுல்லாவும் முறையே முஹாரம் முதல் நாளிலும் இரண்டாம் நாளிலும் பிறந்தனர்
- பிறப்புகள் நவ்-ருஸ்-சிலிருந்து எட்டாவது அமாவாசையன்றும் அதற்கு அடுத்த நாளும் நிகழ்ந்தன.
- பஹாய் வருடம் சௌர வருடமாகும்

நாள்கள்
மேற்கண்ட மூன்று பொருண்மைகளின் அடிப்படையில் உலக நீதிமன்றம் ஒரு தீர்மானத்திற்கு வந்தது. இஸ்லாமிய நாள்காட்டியின் முஹாரம் மாதத்தைக் கருத்தில் கொள்ளாமல், எட்டாவது அமாவாசையை மட்டும் கருத்தில் கொண்டு, நவ்-ருஸ்ஸிலிருந்து எட்டாவது அமாவாசை முதல் மற்றும் இரண்டாம் நாள்களில் இரட்டைப் பிறந்த நாள்கள் கொண்டாடப்படும் என உலக நீதிமன்றம் அறிவித்தது. இது ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாத மத்தியிலிருந்து நவம்பர் மாத மத்தி வரை மாறி மாறி வரும். சந்திர வருடம் சௌர வருடத்திற்கு சுமார் 10.9 நாள்கள் குறைவு என்பதே இதற்கான காரணமாகும். இதன் மூலமாக சௌர வருடத்தில் இரட்டைப் பிறந்த நாள்களின் சந்திர அம்சங்களை சிறிதும் இடையூறின்றி உலக நீதிமன்றம் இணைத்து விட்டது.