விரும்பத்தகாத பழக்கங்களை ஒழிப்பது


மனிதன் என்பவன் இருமை நிலையில் படைக்கப்பட்டுள்ளான். உலகில் ஒளி மற்றும் இருள், கருப்பு மற்றும் வெள்ளை, நல்லது மற்றும் கெட்டது என இருப்பது போன்று, மனிதனும் இருமை நிலையில் வாழ்கின்றான். பௌதீக ரீதியில் மனிதன் என்பவன் சந்தேகமின்றி ஒரு மிருகமே. மிருகங்களுக்கு இருக்கும் எல்லா குணங்களும் அவனுள்ளும் இருக்கின்றன–பசி, தூக்கம், கோபம், பொறாமை, பேராசை மற்றும் இதர. மிருகங்களைப் போன்றே அவனது காலம் முடியும் போது அவன் மரணமெய்துகிறான், அவன் உடல் மண்ணோடு மண்ணாகின்றது.

அறிது அறிது மானிடராய் பிறத்தல் அறிது… என ஔவையார் பாடியுள்ளார். மனிதனும் ஒரு மிருகம் என்றிருந்தால் ஔவையார் அவ்வாறு பாடியிருக்க வேண்டியதில்லை. மனிதப் பிறவி ஓர் அறிதான பிறவி என்பதன் அர்த்தமென்ன? ஆம், மனிதன் மட்டுமே தன்னைப் படைத்த கடவுளை அறிந்து வழிபட முடிந்தவன். அவனுக்கு மட்டுமே இந்த ஆற்றல் உள்ளது. மனிதன் மட்டும் கடவுளின் எல்லா பண்புகளை பெற்றுள்ளவன், கடவுளின் பண்புகள் அனைத்தையும் தன்னிச்சையாகப் பிரதிபலித்திடக் கூடிய ஆற்றல் அவனுக்குள்ளது. ஆனால் மிருகங்களால் அது இயலாது. அவை ஒவ்வொன்றும் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளனவோ, அவ்வாறே வாழ்ந்திட வேண்டும், அதை மீறிடும் ஆற்றல் அவனுக்குக் கிடையாது. ஆனால், மனிதனுக்கோ தேர்வு செய்யும் ஆற்றல் உள்ளது. அவன் விரும்பியதை அவனால் தேர்வு செய்திட முடியும், அவன் நல்லதையும் செய்யக்கூடியவன் கெட்டதையும் செய்யக்கூடியவன்.

கடவுள் மனிதனைப் படைத்ததன் நோக்கமே அவன் தன்னைப் படைத்தவரை அறிந்து அவர் மீது அன்பு செலுத்துவதற்காகவே. இந்த ஆற்றலை அவன் இயல்பாக அடைந்திட முடியாது. அதற்கு அவனுக்குப் பொருத்தமான கல்வி அவசியம், முயற்சியும் அவசியம். இதனால்தான் மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என கூறப்படுகின்றது.

மனிதன் தனது மெய்ம்மையை அறிந்துகொள்ளாமல் வாழும்போது, அவன் வாழ்க்கை கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்றிருக்கும். ஆனால், அவன் தன் மெய்ம்மையினை அறிந்துகொள்ளும் போது அவன் பாதை சரியான திசையில் செல்லக்கூடியதாக இருந்திடும்.

மனிதனுக்கு தேர்வு செய்யும் ஆற்றல் இருப்பதன் காரணமாக, அவனுக்குத் தன்விருப்பாற்றல் இருப்பதன் காரணமாக அவன் நல்ல பழக்கங்களையும் உருவாக்கிக்கொள்கின்றான் அதே சமயம் கெட்ட பழக்கங்களையும் உருவாக்கிக்கொள்கின்றான். அவ்வாறு அவனுக்கு கெட்ட பழக்கங்கள் சேர்ந்திடும் போது, அவற்றை அவன் எவ்வாறு திருத்திக் கொள்வது?

கெட்ட பழக்கங்கள் பல வகையானவை. சில பழக்கங்களை திருத்திக் கொள்ளலாம், சிலவற்றை திருத்துவதற்கு பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டும். திருத்திக் கொள்ளக்கூடியவற்றை சிறிது முயற்சி செய்து மாற்றிக்கொள்ளலாம், ஆனால் திருத்துவதற்கு பெரும் முயற்சி செய்ய வேண்டிய பல பழக்கங்கள் உள்ளன. வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்து அவற்றைத் திருத்திக்கொள்ளலாம். ஆனால், கெட்ட பழக்கங்களை நேரடியாக திருத்திக் கொள்வதற்கு பதிலாக, வேறு ஏதாவது வழிகள் உள்ளனவா?

ஒரு வீட்டில் இருள் சூழும் போது அதை நீக்குவதற்கு ஒரு சுவிட்சைப் போடுகின்றோம், இருள் நீங்கி ஒளி வீசுகின்றது. அதே போன்று கெட்ட பழக்கங்களும் அந்த இருளைப் போன்றவையே. சில நல்ல காரியங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் அந்த கெட்ட பழக்கங்களை சிறிது சிறிதாக நீக்கிக்கொள்ளலாம்.

பஹாய்களுக்குப் பின்வரும் ஆலோசனை வழங்கப்படுகின்றது:

“…கெட்ட பழக்கங்கள் …மேன்மேலும் அதிகமான ஆன்மீக ஈர்ப்பினால் வெற்றிகொள்ள முடியும்.” நாம் “…பஹாவுல்லாவின் போதனைகளின்பால் மேன்மேலும் அதிகமான ஈர்ப்புகொள்ளும் போது,” நாம் “…அவரது போதனைகளுடன் முரண்பாடு கொள்ளும் பழைய வழிகளிலிருந்து மனவுறுதியோடு அப்பால் திரும்பிடுவது சாத்தியமாகின்றது.” (28 அக்டோபர் 1990, உலக நீதிமன்றத்தின் சார்பாக ஒரு தனிநபருக்கு எழுதப்பட்ட கடிதம்.)

அதாவது, இருளை நீக்குவதற்கு ஒளியை நாடுவது போன்று கெட்ட பழக்கங்களை நீக்குவதற்கு நற்காரியங்களில் ஈடுபட வேண்டும் என்பதே இதன் பொருளாகும். அவ்வாறு நற்காரியங்களில் கவனத்தை செலுத்தும் போதும், காலப்போக்கிலும், கெட்ட பழக்கங்கள் மறைந்து நல்ல பழக்கங்கள் இயல்பாகவே உருவாகிவிடும். இந்த நல்ல காரியங்களினால் உலகிற்கும் நன்மை, அதை மேற்கொள்ளும் தனிமனிதனுக்கும் நன்மை.

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: