திருமணம், குடும்பவாழ்வு ஆகியவற்றுக்கான அப்துல்-பஹாவின் அறிவுரை


(தற்காலிக மொழிபெயர்ப்பு)

திருமணம் மற்றும் குடும்ப வாழ்வு குறித்து ஒரு பஹாய் அன்பருக்கு அப்துல்-பஹா வழங்கிய அறிவுரை
22 டிசம்பர் 1918
ஹைஃபா

…நீர் …திரும்பிச் செல்லவிருக்கின்றதனால், நீர் (திருமணத்தில் ஈடுபட்டு) ஒரு மனைவியை அடைவது பற்றி சிந்திக்க வேண்டும். உமது அறிவாற்றல் மற்றும் ஆன்மீக இலட்சியங்களுக்கு ஏற்ற ஒரு பெண்ணைத் தேர்வு செய்வீராக. அவள் விவேகம், அறிவுக்கூர்மை, பூரணத்துவத்தை இலட்சியமாகக் கொண்ட ஓர் சின்னமாக இருத்தல் வேண்டும். அவள் உமது வாழ்வு குறித்த பிரச்சினைகள் அனைத்திலும் அக்கறை கொண்டவளாக இருக்கவேண்டும்; உமது வாழ்வின் எல்லா கட்டங்களிலும் உமது தோழியாகவும் துணைவியாகவும் இருக்க வேண்டும். அவள் இரக்கம், கனிவான உள்ளம், மற்றும் மகிழ்ச்சி மிக்கவளாகவும், குணத்தில் களிப்பு மிகுந்தவளாகவும் இருக்க வேண்டும். பிறகு, நீர் அவளுடைய மகிழ்ச்சிக்காக உம்மை அர்ப்பணித்து, அவளை ஒரு பேரொளிமிக்க ஆன்மீக அன்பைக் கொண்டு அன்பு செலுத்திட வேண்டும்.

happycouple

ஒரு மனைவியைத் தேர்ந்தெடுக்குமுன், அப்பெண் தனது வாழ்நாள் முழுவதும் அவனுக்கு உற்ற தோழியாக இருப்பாளாவென தெளிவாகவும் தீவிரமாகவும் சிந்திக்க வேண்டும். இது ஒரு தற்காலிக விஷயமல்ல. அவள், (ஒரு கணவன்) தனது வாழ்நாள் முழுவதும் சேர்ந்துவாழ வேண்டிய ஓர் ஆன்மா; அவள் அவனது துணைவியாகவும் அவனது அந்தரங்கமான நம்பிக்கைக்குறியவளாகவும் இருப்பாள்; ஆதலால், நாளுக்கு நாள் அவர்களின் அன்பும் அவர்களுக்கிடையிலான பிணைப்பும் அதிகரித்திட வேண்டும்.

ஒரு கணவனையும் மனைவியையும் இணைக்கின்ற அதிபெரும் பந்தம் நம்பிக்கையும் விசுவாசமுமாகும். இருவரும் அவர்களுக்கிடையில் மிகுந்த நம்பிக்கையும் விசுவாசத்தையும் கடைப்பிடித்து, அவர்களுக்கிடையில் பொறாமையின் எந்த சுவடும் ஊடுருவாமல் இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும்; ஏனெனில், இது விஷம் போல் அன்பின் அடித்தலத்தையே பாழாக்கிவிடும்.

கணவனும் மனைவியும், தங்களின் அறிவு, திறன்கள், செல்வங்கள், பட்டங்கள், உடல்கள், ஆன்மாக்கள் அனைத்தையும் முதலில் பஹாவுல்லாவுக்கும், பிறகு ஒருவருக்கு ஒருவரும் அர்ப்பணித்துக்கொள்ளவும் வேண்டும். அவர்களின் எண்ணங்கள் மேன்மையாகவும், இலட்சியங்கள் பிரகாசமாகவும், உள்ளங்கள் ஆன்மீகமாகுவம், ஆன்மாக்கள் மெய்ம்மைச் சூரியனின் கதிர்கள் உதயமாகும் இடங்களாக இருக்க வேண்டும். மாறுதல்மிக்க இவ்வாழ்வின் நிலையற்ற மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளின் காரண்தினால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் மனஸ்தாபம் கொள்ளக்கூடாது. அவர்களின் உள்ளங்கள் விசாலமாக, இப்பிரபஞ்சத்தைப் போன்று விசாலமாக இருக்க வேண்டும்; ஏனெனில், மக்கள் சுிறு துளியைக் கூட பெருவெள்ளமாக ஆக்கிடக்கூடியவர்கள். மேலும், ஏதோ ஒரு சூழ்நிலை இருவருக்கிடையிலும் அதிருப்தியை தோற்றுவிக்குமானால், அதை அவர்களின் உள்ளங்களில் வைத்திருக்கக்கூடாது, மாறாக, அதன் உண்மையான இயல்பை ஒருவருக்கு ஒருவர் விளக்கிக்கொண்டு, முடிந்த விரைவில் அதை அகற்றிடவும் முயல வேண்டும். அவர்கள், போறாமை, பாசாங்குத்தனத்திற்குப் பதிலாக, தோழமையையும், நட்புறவையும் விரும்ப வேண்டும்; அவர்கள் இரண்டு தூய கண்ணாடிகளைப் போன்று அன்பும், அழகுமுடைய விண்மீன்களின் ஒளியை ஒருவருக்கு ஒருவர் பிரதிபலித்திட வேண்டும்.

நீங்கள் ஒருவருக்கு ஒருவர் உங்களின் மேன்மையான மற்றும் தெய்வீகமான கருத்துக்களை பகிர்ந்துகொள்ள வேண்டும். உங்களுக்கிடையில் எந்த இரகசியங்களும் இல்லாமல் பார்த்துகொள்ளுங்கள். உங்கள் இல்லத்தை ஓய்வுக்கும், அமைதிக்குமான அடைக்கலமாக்குங்கள். விருந்தோம்பிகளாக இருந்து, நண்பர்களுக்கும் அந்நியர்களும் உங்கள் இல்லத்தின் கதவுகள் திறந்திருக்குமாறு செய்ய வேண்டும். எல்லாரையும் புன்சிரிப்புடன் வரவேற்று, அவர்கள் என் (அப்துல்-பஹாவின்) இல்லத்தில் இருப்பது போன்று உணரவேண்டும்.

ஓர் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் கடவுள் உறுவாக்கியுள்ள ஐக்கியம் மற்றும் நல்லிணக்கமானது, இவ்வுலகில் ஐக்கியத்திற்கு அவற்றை விட மேலான ஒரு தளம் கிடையாது. உங்கள் ஐக்கியமெனும் விருட்சத்திற்கு அன்பு, வாஞ்சை எனும் நீரைக் கொண்டு தொடர்ச்சியாக நீர் பாய்ச்சிட வேண்டும்; அதனால், அவ்விருட்சம் எல்லா காலங்களிலும் பச்சையாகவும், பசுமையாகவும் இருந்து, நாடுகளின் நிவாரணத்திற்கு இனிய கனிகளை ஈன்றிடும்.

சுருங்கக் கூறின், உங்கள் இல்லம் அப்ஹா சுவர்க்கத்தின் ஒரு பிம்பமாகுமளவு நீங்கள் இருவரும் அத்தகையதொரு வாழ்க்கை வாழ்திட வேண்டும்; அதனால் அங்கு விரவேசிக்கும் எவரும் தூய்மை மற்றும் சுத்தத்தின் சாரத்தை அங்கு உணர்ந்து: “இதுவே அன்பெனும் இல்லம், இதுவே அன்பெனும் மாளிகை, இதுவே அன்பெனும் கூடு, இதுவே அன்பெனும் பூங்கா,” என தம்மையறியாமல் கூவிடுவார்களாக. நீங்கள் இருவரும், அன்பு மற்றும் மகிழ்ச்சி எனும் பாடல்களால் சுற்றுப்புறத்தை நிறப்பிடும், இனிய கீதமிசைக்கும் இரண்டு பறவைகள் போன்று, வாழ்க்கை எனும் மரத்தின் அதி உயர்ந்த கிளைகளின்  மீதமர்ந்திருக்க வேண்டும்.

உங்களால் முடிந்த அளவு, உங்களின் ஆன்மீக உயிருருவின் மையத்தில், உங்கள் விழிப்புணர்வின் நடு மையத்தில், உங்கள் அன்பின் அடித்தலத்தை அமைத்திட முயல வேண்டும். அந்த அன்பின் அடித்தலம் சிறிதளவு கூட அசைந்திடுவதை அனுமதியாதீர்கள்.

பிறகு கடவுள் உங்களுக்கு அழகிய குழந்தைச் செல்வங்களை அருளும் போது, அவர்கள் தெய்வீக ரோஜாவனத்தின் அமரபுஷ்பங்களாக, இலட்சிய சுவர்க்கத்தின் இராப்பாடிகளாகவும், மானிட உலகின் ஊழியர்களாகவும், ஜீவவிருட்சத்தின் கனகளாகவும் ஆகிட, அவர்களின் கல்வியிலும் பயிற்சியிலும் கவனம் செலுத்துங்கள்.

Card with wedding rings and two doves

நீங்கள் வாழ்ந்திடும் விதத்தினால், பிறர் உங்களை உதாரனமாக எடுத்துக்கொண்டு:  “அன்புடனும், வயப்பட்டும், நல்லிணக்கத்துடனும் ஒரே கூட்டில் வாழும் இரண்டு வெண்புறாக்களைப் போன்று அவர்கள் வாழ்வதைப் பாருங்கள். ஒருவருக்கொருவர் மீதான அன்புக்காகவே ஆதியிலிருந்து இவர்களின் உயிருருக்களின் சாராம்சத்தை கடவுள் உருவாக்கியுள்ளார் என்றே தோன்றுகிறது,” என அவர்கள் ஒருவருக்கு ஒருவர் கூறிக்கொள்ள வேண்டும்.

இத்தகைய சூழ்நிலை நிலவிடும் போதும், இத்தகைய இலட்சியங்கள் மேலோங்கிடும் போதும், நீங்கள் நித்திய வாழ்விலிருந்து ஒரு பெரும் பகுதியை எடுத்துக்கொண்டுள்ளீர், மெய்ம்மை  எனும் நீரூற்றிலிருந்து ஆழப்பருகியுள்ளீர், பேரொளி எனும் சுவர்க்கத்தில் தெய்வீக மர்மங்கள் எனும் அமரபுஷ்பங்களை சேகரித்திட உங்கள் வாழ்நாள்களை அர்ப்பணித்துள்ளீர்.

நீங்கள் ஒருவருக்கு ஒருவர் சுவர்க்கத்தின் காதலர்களாகவும், தெய்வீக அன்பர்களாகவும் இருந்திடுக.
உங்கள் வாழ்க்கையை அன்பெனும் சுவர்க்கத்தில் கழித்திடுக.
அன்பெனும் விருட்சத்தில் இலைகள் நிறைந்த கிளைகளின் மீது உங்கள் கூட்டைக் கட்டுக.
அன்பெனும் தெளிவான விண்வெளியில் உயரப் பறந்திடுக.
அன்பெனும் கரைகளில்லா கடலில் நீந்திடுக.
அன்பெனும் நிந்திய ரோஜாவனத்தில் நடந்திடுக.
அன்பெனும் சூரியனின் பிரகாசித்திடும் கதிர்களினூடே இயங்கிடுக.
அன்பெனும் பாதையில் நிலையாகவும் பற்றுறுதியோடும் இருந்திடுக.
அன்பெனும் மலர்களின் இனிய நறுமணத்தினால் உங்கள் நாசிகளை சுகந்தமாக்கிக்கொள்க.
அன்பெனும் இராகங்களினால் ஆன்மாவை பரவசமாக்கிக்கொள்க.
அன்பெனும் மதுரசத்தினால் போதைகொண்டிடுக.
அன்பெனும் அமுதத்தை ஆழப்பருகிடுக.
உங்கள் இலட்சியங்கள் அன்பெனும் பூச்சென்டாகவும், உங்கள் உரையாடல்கள் அன்பெனும் சமுத்திரத்தின் வெண்முத்துகளாகவும் இருந்திடட்டுமாக.

(அப்துல்-பஹா, ஓர் உரையிலிருந்து, டிசம்பர் 22, 1918, ஹைஃபா; Star of the West, vol. 11, no. 1, மார்ச் 21, 1920)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: