பஹாய்கள் அனுதினமும் கூற வேண்டிய கட்டாயப் பிரார்த்தனைகளுள் ஒன்றில் பின்வரும் வாசகம் உள்ளது: உம்மை அறிந்து வழிபடுவதற்கனவே என்னைப் படைத்திருக்கின்றீர்… இதை வேறு விதமாக, ‘அறிந்து அன்புசெலுத்துவதற்கென…என்றும் பஹாய் திருவாக்குகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு மனிதப் பிறவியின் நோக்கம் இந்த சில வார்த்தைகளில் அடங்கியுள்ளது. மனிதன் தன்னைப் படைத்தவரை அறிந்து அன்பு செலுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளான். ஆனால், எளிமையாகத் தோன்றும் இச்சில வார்த்தைகளில் பொதிந்து கிடக்கும் உள்ளர்த்தங்கள் எண்ணிலடங்காதவை.
இங்கு மனிதனுக்கு இரண்டு இயல்பான திறனாற்றல்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை நாம் பார்க்கின்றோம். ஒன்று, ‘அறிதல்’ மற்றது ‘அன்புசெலுத்தல்’. இவை கடவுளிடமிருந்த நமக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு முக்கிய ஆற்றல்கள்; மனிதனை மனிதனாக்கும் ஆற்றல்கள்.
இங்கு ஒரு சிக்கல் யாதெனில், கடவுள் மனித அறிவுக்கு அப்பாற்பட்டவர் என்பதாகும். நமது சிருஷ்டிகர்த்தா சாராம்சத்தில் அறியப்பட முடியாதவர், அவரை அவரது பண்புகளினால் மட்டுமே நாம் அறிந்துகொள்ள இயலும். அப்பண்புகளில் ஒன்றுதான் ‘அறிதல்’ ஆனால் அறிதலுக்கு அஸ்திவாரமாக இருப்பது கற்றல். கற்றல் இல்லையெனில் அறிதலும் இல்லை. இதன் காரணமாகவே, பஹாவுல்லா தமது விசுவாசிகளை அனுதினமும் தம்மால் வெளிப்படுத்தப்பட்டுள்ள திருவாக்குகளை காலையிலும் மாலையில் படிக்குமாறு ஆணையிட்டுள்ளார். அவ்வாறு செய்யாதவன் தமது திருவொப்பந்தத்திற்கு விசுவாசமாக இ்லலாதவன் என்றும் அவர் கூறியுள்ளார். அதாவது ஒரு மனிதனின் ‘அறிதலுக்கு’ மூலாதாரமாக இருப்பது கடவுளின் திருவாக்கே. அதிலிருந்துதான் ஒரு மனிதன் தன்னைப் பற்றியும், அவன் எதற்காக படைக்கப்பட்டுள்ளான் என்பதையும் அறிந்துகொள்ள இயலும்.
அடுத்தது, அன்பு செலுத்துவது. எல்லா சமயத்தவர்களும் கடவுள் மீதான தங்களின் அன்பை வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்திவருகின்றனர். கடவுள் மீது நாம் அன்புசெலுத்தினாலும் அன்புசெலுத்தாவிட்டாலும் அவருக்கு ஆகப்போவது எதுவுமில்லை. ஆனால், அவர் மீது நாம் அன்பு செலுத்தினால் மட்டுமே அவரது அன்பு நம்மை வந்தடைய முடியும், நாம் படைக்கப்பட்டதன் பயனை நாம் பெற முடியும். ஆனால் அவரிடம் நாம் எவ்வாறு அன்புகொள்வது? உணர்வினால் அன்புகொள்வதா, அல்லது செயல்களினால் அன்பை வெளிப்படுத்துவதா?
கடவுள் மீது அன்பு செலுத்துவதென்பது அவரது சிருஷ்டியின் மீது அன்பு செலுத்துவதாகும். முக்கியமாக, நாம் நமது சக மனிதர்களின் மீது அன்பு செலுத்துவதன் மூலமாக மட்டுமே கடவுள் மீதான நமது அன்பை வெளிப்படுத்த முடியும்.
மனிதர்கள் மீது எவ்வாறு அன்பு செலுத்துவது? முதலாவதாக, மனிதப் பிறவியின் நோக்கத்தை மனிதர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்–கடவுள் நம்மை எதற்காக படைத்துள்ளார், நம்மிடமிருந்து என்ன எதிர்ப்பார்க்கின்றார்? மனிதர்கள், தொடர்ந்து மேம்பாடு காணும் ஒரு நாகரிகத்தை முன்னெடுத்துச் செல்லவே படைக்கப்பட்டுள்ளனர் என பஹாவுல்லா கூறுகின்றார். இந்த நாகரிகத்தை உருவாக்குவதற்கு மனிதர்களுக்கு திறனாற்றல் தேவை. இன்று உலகம் முழுவதுமுள்ள பஹாய்கள் இதற்கு ஆவன செய்வது வருகின்றனர், முக்கியமாக குழந்தைகள் கல்வி, இளைய இளைஞர் ஆன்மீக சக்தியளிப்பு திட்டங்கள், முதியோருக்கான சக்தியளிப்பு பயிற்சிகள், வழிபாட்டுக் கூட்டங்கள் ஆகியவற்றின் மூலம் திறனாற்றல் உருவாக்கத்தை மேற்கொண்டு வருவதன் மூலம் கடவுளின் மீதான தங்களின் அன்பை மனித சேவையின் மூலம் வெளிப்படுத்துகின்றனர்.
தனிமனிதர்கள் எனும் முறையில் நாம் நமது வாழ்க்கையில் தினசரி கடைப்பிடிக்கவேண்டிய சில விஷயங்களும் உள்ளன. ஒவ்வொரு காலையும் மாலையும் கடவுளின் திருவாக்குகளைப் படித்தல், நாளுக்கு ஒரு முறையாவது பிரார்த்தனை செய்தல், அனுதினமும், பிறருடனான நமது தொடர்பில் அன்பு, பொறுமை, கருணை, இரக்கம், போன்று நற்பண்புகளைக் கடைப்பிடித்தல், பிறருக்கு நன்மை செய்தல்க–டவுள் நம்மிடம் விரும்புவது இவற்றையே, நமது செல்வத்தையோ பொருளையோ அவர் கேட்கவில்லை. ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வது, கடவுள் மீது அன்பு செலுத்துவது ஆகியவற்றின் அர்த்தமும் இதுவே.