இன்று மனிதன் லௌகீக செல்வங்களை சேர்ப்பதிலேயே தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை செலவிடுகின்றான். போதுமான பணம் சேர்ந்திடும் போது, அவனுக்கு வயதாகி விடுகின்றது. இறக்கும் போது அவன் சேர்த்தவற்றை அவன் தன்னுடன் எடுத்துச் செல்லவும் முடியவில்ல. இது குறித்து பஹாவுல்லா:
“…எமது வருகையின் போது அதன் ஆளுநர்களும், மூத்தோர்களும் சிறுவர்களும் ஒன்றுகூடி பொழுதுபோக்குக்கான விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தனர்.” இறைவன் எமக்குக் கற்பித்த உண்மைகளை எம்மிடமிருந்து பெற்றுக்கொள்ளவோ, எமது வியத்தகு, விவேகமிக்க, திருமொழிகளை ஏற்கவோ முதிர்ச்சியடைந்திட்டோர் எவரையுமே யாம் காணவில்லை.” அவர்களுக்காகவும், எதற்காக அவர்கள் படைக்கப்பட்டனரோ அதன்பால் அவர்களின் முழுமையான அக்கறை இன்மைக்காகவும், அவர்களின் பழிச் செயல்களுக்காகவும் எமது உள்ளம் வேதனையுற்றுக் கண்ணீர் வடித்தது.
இதனைத்தான் யாம் அம்மாநகரில் கண்டோம்; அது அவர்களுக்கும் மற்ற மனிதர்களுக்கும் ஓர் எச்சரிக்கையாக இருக்கக்கூடும் என்பதற்காகவே அதனை யாம் எமது திருநூலில் குறித்து வைக்க முடிவுசெய்தோம். கூறுவீராக: நீங்கள் இவ்வாழ்வையும் அதனையொட்டிய ஆடம்பரங்களையும் தேடுபவர்களாயின் உங்களின் தாய்மார்களின் கர்ப்பங்களில் இருக்கும் பொழுதே அவற்றைத் தேடியிருக்க வேண்டும். இதனை நீங்கள் உணரக்கூடுமாயின், அப்பொழுதுதான் நீங்கள் அவற்றை நோக்கி வந்துகொண்டிருந்தீர்கள். மாறாக, நீங்கள் பிறந்து, முதிர்ச்சியடைந்த காலத்திலிருந்து, தொடர்ந்து இவ்வுலகிலிருந்து பின்னிட்டுச் சென்றவாறு புழுதியினை நெருங்கிக் கொண்டிருக்கின்றீர்கள். உங்களின் காலமோ முடிவை நெருங்கிக் கொண்டிருக்கின்றது; உங்களின் வாய்ப்போ இழப்புக்காளாகும் கட்டத்தை அடைந்து கொண்டிருக்கும் பொழுது எதனால் நீங்கள் உலகத்தின் செல்வங்களைக் குவிப்பதிலேயே அத்தகையப் பேராசைக் காட்டுகின்றீர்? கவனமற்றோரே, உங்களின் ஆழ்ந்த உறக்கத்தை உதறித்தள்ளமாட்டீரா?
இறைவனின் பொருட்டு, இவ்வூழியன் உங்களுக்கு வழங்கிடும் அறிவுரையின்பால் செவிசாயுங்கள்.”