பஹாவுல்லா இராக் நாட்டில் வாசம் செய்திருந்த போது, பஹாவு்லலா கடவுளின் அவதாரம் என நம்பாத மதகுருக்கள் அவரை சோதிப்பதற்காக ஒருவரை அவரிடம் அனுப்பினர். அப்போது என்ன நடந்தது என பஹாவுல்லா தமது வார்த்தைகளிலேயே விவரிக்கின்றார்:

“இதற்கு முன் தோன்றியிராதவை இவ்வெளிப்பாட்டினில் தோன்றியுள்ளன. வெளிப்படுத்தப் -பட்டுள்ளவற்றைக் கண்ணுற்ற சமய நம்பிக்கை-யற்றோரைப் பொறுத்த வரையில், அவர்கள் முணுமுணுத்து இவ்வாறு கூறுகின்றனர்: “இவர், மெய்யாகவே, இறைவனுக்கெதிராக ஒரு பொய்யை உருவாக்கியுள்ள ஒரு மந்திரவாதி.” உண்மையாகவே, அவர்கள் சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்கள். பண்டைய காலத்தின் எழுதுகோலே, ஈராக்கில் நிகழ்ந்தவற்றை நாடுகளுக்கு எடுத்துரைப்பீராக. அந்நாட்டின் மதகுருமார் கூட்டத்தினர் தங்களைப் பிரதிநிதிக்க அனுப்பிய தூதரைப் பற்றி அவருக்குத் தெரிவிப்பீராக. அவர், எமது முன்னிலையை அடைந்ததும் சில அறிவியல் ஞானங்களைக் குறித்து எம்மிடம் கேள்விகள் கேட்டார்; இயறக்கையாய்க் கொண்டுள்ள அறிவின் திறத்தினைக் கொண்டு யாம் அவருக்குப் பதிலளித்தோம். இறைவன், மெய்யாகவே, கண்ணுக்குப் புலப்படாதவற்றை அறிந்தவர். அவர், “நீங்கள் கொண்டுள்ள அறிவுடன் எவருமே ஒப்பிடப்படார் என்பதற்கு நான் சாட்சியமளிக்கின்றேன். இருப்பினும், மக்கள் உங்களுக்கு அளித்திடும் உயரிய ஸ்தானத்தை மெய்ப்பித்துக் காட்டுவதற்கு அது போதுமானதல்ல. நீங்கள் உண்மை உரைப்பவராயின், உலக மக்களனைவரின் ஒருங்கிணைந்த ஆற்றல்களே உண்டுபண்ண சக்தியற்று இருக்கும் ஒன்றினை நிரூபித்துக் காட்டுங்கள்” என அவர் கூறினார். உங்களின் பேரொளிமயமான, அன்புமிகு பிரபுவானவரின் முன்னிலை என்னும் அரசவையினில் இவ்வாறுதான் இம்மாற்றவியலாத கட்டளை விதிக்கப் பட்டுள்ளது. “பாரும்! நீர் காண்பது என்ன?” அவர் வாயடைத்துப் போய்விட்டார். மீண்டும் சுயநினைவு வந்ததும், அவர் கூறினார்: “நான் பேரொளிமயமான, போற்றுதலனைத்திற்குமுரிய இறைவனை உண்மையாக நம்புகின்றேன்.” “மக்களிடம் சென்று இவ்வாறு கூறும்: ‘ நீங்கள் விரும்பியது எதுவாயினும், கேளுங்கள். தான் விரும்பியதைச் செய்திடும் ஆற்றலுடையவர் அவர். கடந்த காலத்தவையோ, எதிர்காலத்தவையோ, அவை எவையுமே அவரது விருப்பத்தைச் செயலற்றுப் போகச் செய்ய இயலா. ‘கூறுவீராக: ‘மதகுருமார் கூட்டத்தினரே! நீங்கள் விரும்பியதைத் தேர்ந்தெடுங்கள்; அதனை உங்களுக்கு வெளிப்படுத்துமாறு கருணைமிக்கக் கடவுளான உங்கள் பிரபுவைக் கேளுங்கள். அவர், தனது மாட்சிமையின் சக்தியைக் கொண்டு உங்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்திடுவாராயின், அவரில் நம்பிக்கைக் கொள்ளுங்கள்; அவரை நிராகரிப்போரில் சேர்ந்திடாதீர்.’ “அவர், “புரிந்துணர்வு என்னும் அதிகாலைப் புலர்ந்து விட்டது; கருணைமயமானவரின் சான்று பூர்த்தி செய்யப்பட்டுவிட்டது.” எனக் கூறினார். பேரொளிமயமான, நன்கு நேசிக்கப்படுபவரான இறைவனின் கட்டளைக்கிணங்க அவர் எழுந்து, தன்னை அனுப்பியவர்களிடம் திரும்பிச் சென்றார் நாள்கள் பல கடந்தன; அவர் எம்பால் திரும்பி வரவே இல்லை. இறுதியில், வேறொரு தூதர் எம்மிடம் வந்து, ஆரம்பத்தில் அவர்கள் கொண்டிருந்த நோக்கத்தைக் கைவிட்டுவிட்டனரெனக் கூறினார். உண்மையிலேயே அவர்கள் வெறுக்கத்தக்க மனிதர்கள். ஈராக்கில் நடந்தது இதுவே; நான் வெளியிடுவதற்கு நானே சாட்சி. இச்சம்பவம் வெளியிடங்களில் எல்லாம் பரவலாகத் தெரியவந்தது, இருந்தும், அதன் அர்த்தத்தினைப் புரிந்திட்டோர் எவரையுமே காணவில்லை. யாம் அவ்வாறுதான் விதித்திருந்தோம். இதனை நீங்கள் அறிந்திடக் கூடுமாக. எமது மெய்ம்மை சாட்சியாக! கடந்த காலங்களில், எவரெல்லாம் எம்மை இறைவனின் அடையாளங்களைக் காண்பிக்குமாறு கேட்டனரோ, அவர்கள், யாம் அவற்றை வெளிப்படுத்தியதுதான் தாமதம், அக்கணமே இறைவனின் மெய்ம்மையையே மறுத்து விட்டுள்ளனர். இருப்பினும், மனிதர்கள், பெரும்பாலும், கவனமற்றே இருந்திட்டனர். எவரது கண்கள் புரியுந் திறனெனும் தீபத்தினால் ஒளிர்விக்கப்பட்டுள்ளனவோ, அவர்கள், கருணைமயமானவரின் இனிய நறுமணத்தினை அறிந்து உண்மையை ஏற்றுக்கொள்வர்., உண்மையில் இவர்களே தூய உள்ளம் படைத்தோர்.”
பஹாவுல்லாவின் திருவாக்குகளிலிருந்து சில பொறுக்குமணிகள் – பகுதி 67)