ஜூலை 10, 1850’இல் பஹாய் சமயத்தின் அவதாரங்களில் ஒருவரான பாப் பெருமானார், கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். அவ்வேளை இரான் நாட்டில் தூதரக அதிகாரிகளுள் ஒருவர் பின்வருமாறு எழுதியுள்ளார்:

“ஏசுநாதர் சிலுவையிலிருந்து இறங்கி வர நினைத்திருந்தால் அவர் சுலபமாக அவ்வாறு செய்திருக்க இயலும் என கிருஸ்த்துவர்கள் நம்புகின்றனர்; அவர் அவ்வாறுதான் செய்ய வேண்டும் எனவும், தீர்க்கதரிசனங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் எழுதப்பட்டுள்ளதே அவர் சுயவிருப்பத்துடன் இறந்ததற்கான காரணமாகும். பாப் பெருமானாரைப் பொறுத்தவரையில், அவர் நிலையும் அதேதான் என பாப்’யிக்கள் கூறுகின்றனர்;
அதன் மூலம் அவர் தமது போதனைகளுக்குத் தெளிவான அங்கீகாரம் அளித்துள்ளார்.
அவரும் (ஏசுவைப் போன்றே) தாமாகவே தன்விருப்பத்தோடு அவ்வாறு செய்தார், ஏனெனில் அவரது மரணம் மானிடத்தின் மீட்சிக்காகும்…
மானிடத்தின் கண்களில் பார்ப்பதற்குப் பெரும்பேறாக விளங்கும் அவரது வாழ்க்கை, மனவுறுதி குறித்த ஒரு மிகவும் மகத்தான உதாரணமாக இருப்பதோடு, அது பாப் பெருமானார் தமது சக நாட்டவர் மீது கொண்டிருந்த அன்பின் வியத்தகு சான்றாகவும் திகழ்கின்றது.

அவர் மானிடத்திற்காகத் தம்மைத் தியாகம் செய்தார்;
அதற்காகத் தமது உடலையும் ஆன்மாவையும் அர்ப்பணித்தார்,
அதற்காக அவர் தனிமைப்படுத்தப்பட்டார்,
அவமானத்திற்கு உட்படுத்தப்பட்டார்,
சித்திரவதை செய்யப்பட்டார்,
இறுதியில் தியாகமரணமும் அடைந்தார்.
அவர் சர்வலோக சகோதரத்துவத்திற்கான உடன்பாட்டை தமது இரத்தத்தினால் முத்திரையிட்டார்.
இயேசுவைப் போலவே, அவர் சமாதானம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவ அன்பின் பிரகடனத்திற்காக தமது உயிரைத் தியாகம் செய்தார்.
அவர் தம்மீது எத்தகைய அபாயங்களை வருவித்துக்கொள்கின்றார் என்பதை எல்லாரையும் விட அவரே நன்கு அறிந்திருந்தார்.
சூழ்ச்சியுடன் தூண்டப்படும் ஒரு வெறித்தனமானது, எவ்வளவு கொதிப்புணர்வை உண்டாக்க முடியும் என்பதை அவர் சுயமாக கண்டிருந்தார்;
ஆனால் இவ்விஷயங்கள் அவரது மனவுறுதியை சிறிதும் பலவீனப்படுத்த முடியவில்லை.
அச்சம் அவரது ஆன்மாவைப் பற்றிக்கொள்ள வில்லை,
பூரண சாந்தமாக, திரும்பிப் பார்க்காமல், தமது சக்திகள் அனைத்தையும் கொண்டு, அவர் உலைக்களத்திற்குள் பிரவேசித்தார்.”