நாடுகடத்தலுக்கு அப்பால், உலகிற்கு ஒளி – புனித நிலத்திற்கு பஹாவுல்லா வருகையின் 150’வது நினைவாண்டு.

இங்குதான் அவர் உலகின் மன்னர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் சில செய்திகளை வெளிப்படுத்தினார்.
வலையொளியை செவிமடுப்பதற்கு, கதையை இணையத்தில் படிப்பதற்கு, அல்லது மேலும் படங்களைப் பார்ப்பதற்கு, news.bahai.org செல்லவும்
பஹாய் உலக செய்தி சேவை புனிதநிலத்திற்கு பஹாவுல்லாவின் வருகை குறித்த 150’வது நினைவாண்டைப் பற்றிய ஒரு வலையொளி (பொட்காஸ்ட்) வரிசையைப் பிரசுரிக்கவிருக்கின்றது. இந்த சுருக்கமான கட்டுரை, அந்த வரிசையில் வரும் மூன்றாம் வலையொளிக்கான அறிமுகமாகும்.
பஹாய் உலக நிலையம், 14 செப்டம்பர் 2018,(BWNS) – சுமார் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன், மிகவும் கடுமையான சூழலில் ஒரு கைதியாக பஹாவுல்லா புனித நிலத்தை வந்தடைந்தார். அவரது பெரும் துன்பங்களையும் கருதாமல், தமது காலத்தின் அரசர்கள் மற்றும் ஆட்சியாளர்களுக்கு அசாதாரன திருவாக்குகளின் வரிசை ஒன்றை எழுதினார்.
அந்த வரலாற்று முக்கியத்துவம் சார்ந்த படைப்புகள், மானிடத்தின் தலைவர்களின் மூலம், மனிதகுலத்தின் ஒருமையில் அடித்தலமிடப்பட்ட ஒரு நேர்மையான உலக நாகரிகத்தை உருவாக்கிட பாடுபடுமாறு மானிடத்திற்கு அழைப்பு விடுத்தன. அக்காலத்து அரசர்கள் தங்களின் வேறுபாடுகளைக் கலையவும், ஒரு கூட்டு பாதுகாப்பு முறையை ஸ்தாபிக்கவும், ஆயுதக்கலைவை நோக்கிய ஓர் இயக்கம், நீதிக்காக பாடுபடுவது, ஏழைகளின் பொதுநலம் மற்றும் உரிமைகளுக்கு மிகுந்த அக்கறை மற்றும் கவனத்தை வெளிப்படுத்தி, நிலையான அமைதிக்கு பாடுபடுமாறு வலியுறுத்தினார். பிரதிநிதித்துவ அரசாங்க முறை மற்றும் அடிமைமுறை ஒழிப்பை பாராட்டினார்.
புனித நிலத்திற்கான பஹாவுல்லா வருகையின் 150’வது நினைவாண்டின் மூன்றாவதும் இறுதியானதுமான வலையொளி இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க செய்திகளை ஆராயும் நேர்காணல்களை உள்ளடக்கியுள்ளது. இந்த படைப்புகளில் காணப்படும் தொலைநோக்கு 19’வது நூற்றாண்டு மற்றும் இன்றைய உலகோடு சம்பந்தப்பட்டுள்ளது மட்டுமின்றி, மாறாக இத்தலைமுறைக்கும் வெகு அப்பால், உலகம் முழுமையின் மறுசீரமைப்பு மற்றும் தன்மைமாற்றத்தையும், ஆன்மீக ரீதியிலும், லௌகீக ரீதியிலும் ஒத்திசைவான ஓர் உலக நாகரிகத்தின் வெளிப்படுதலையும் முன்னுணர்கின்றது.

“அடுத்த வாரம் நியூ யார்க் நகரில் ஐக்கிய நாடுகள் பொது சபையின் 73’வது அமர்விற்கு உலகத் தலைவர்களின் ஒன்றுகூடலை சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் பஹாவுல்லா முன்னுணர்ந்த தொலைநோக்கு குறிப்பிடத்தக்க முறையில் நமது தற்போதைய சூழ்நிலையின் மீது கவனம் செலுத்துகின்றது”, என்கிறார் பஹாய் அனைத்துலக சமூகத்தின் தலைமைப் பிரதிநிதியான பானி டுகால்
“இன்று இந்த தலைவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மிகவும் கடுமையானவை: அமைதியும் பாதுகாப்பும், அணு ஆயுதக் கலைவு, பருவநிலை மாற்றம், செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்குமிடையிலான விரிவடைந்துவரும் இடைவெளி, மனிதக் கடத்தல், புலம் பெயர்வு, என பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது,” என திருமதி டுகால் தொடர்கிறார். “அனைத்துலக ஒத்துழைப்பிற்கான தேவை முன் எப்போதையும் விட இன்று பேரதிகமாக இருக்கின்றது.”
பஹாவுல்லாவின் காலத்து உலகத் தலைவர்களுக்கான கடிதங்கள் இன்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, ‘வானவ சேனைகள் அதிபதியின் அழைப்பாணை எனும் நூலில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இந்த திருவாக்குகளில் மிகவும் மகத்தானதாக, துருக்கி நாட்டின் எடிர்னே நகரில் வெளிப்படுத்தப்பட்ட சூரிஃ-இ-முலுக், அல்லது அரசர்களுக்கான சூரிஃ’யே உள்ளது என்கிறார் ஷோகி எஃபெண்டி. இந்த நிருபத்தில், கிழக்கிலும் மேற்கிலும் உள்ள ஆட்சியாளர்கள், சமயத் தலைவர்கள், தத்துவ ஞானியர், சட்டமியற்றுவோர் என மேலும் பலரை பஹாவுல்லா குறித்துரைக்கின்றார். அதில் அவர் தமது தூதுப்பணியின் இயல்பு மற்றும் தலைவர்களின் நடத்தையை நிர்ணயிக்கக்கூடிய நியாயமுறைகளைப் பதிவு செய்கின்றார். சூரிஃ-இ-ஹைக்கால் அல்லது திருக்கோவிலுக்கான சூரிஃ எனும் தனித்தன்மைமிக்க ஒரு சக்திவாய்ந்த மற்றும் தொலைநோக்குடைய படைப்பு, ஐந்து தலைவர்களுக்கான தனித் தனி கடிதங்களை உள்ளடக்கியுள்ளது: 9’வது போப்பாண்டவர் பையஸ், பிரான்ஸ் நாட்டின் 3’வது நெப்போலியன், ரஷ்யாவின் 2’வது ட்ஸார் அலெக்ஸாந்தர், விக்டோரியா மஹாராணி, மற்றும் இரான் நாட்டின் நாசிரித்’தின் ஷா.