ஜினாப்-இ-முகம்மத் கூலி காஃன்-இ-நாக்காயி, ஒரு செல்வாக்குமிக்க உள்ளூர் செல்வந்தராவார். அவர் பஹாவுல்லாவின் நம்பிக்கையாளர்களுள் ஒருவர், பிர்ஜான்ட்’டின் ஒரு பகுதியான கூஸேஃபில் வசித்து வந்தார். அவர் சமயத்தை ஏற்றுக்கொண்டதன் விளைவாக, அவரது உறவினர்களுள் பெரும்பாலானோர் பஹாய் சமயத்தைத் தழுவினர். இந்த ஜினாப்-இ-நாக்காயி புன்யரான பஹாவுல்லாவின் பிரசன்னத்தைப் பெற்றிட அக்காநகருக்கு புனிதப் பயணம் மேற்கொண்டார்.
பஹாவுல்லாவின் முன்னிலையை அடைந்து அவரை தரிசிப்பதற்கான முதலாம் மற்றும் இரண்டாம் வருகையின் போது, அவருடன் பிற புனிதப்பயணிகளும் உடன்சென்றனர், ஆனால் அவர் புனிதப்பயணிகளுக்கான விடுதிக்கு திரும்பி வந்தபோது, ஆறு மாதங்கள் கொண்ட அவரது நீண்ட பயணத்தின் கடுமைகளையும் சிரமங்களையும் பொருத்துக்கொண்டதை நினைத்து, ஏதாவது அசாதாரண நிகழ்வை கண்ணுற எதிர்ப்பார்ப்பு கொண்டார், ஆனால் பஹாவுல்லாவைக் கண்ணுற்ற போது, பேசும் மற்றும் பிற மனிதர்களைப் போன்று கட்டளைகள் இடும் எல்லாரையும் போன்ற ஒரு சாதாரன மனிதரையே அவர் கண்டார். “ஒரு வேளை, இங்கு அசாதாரனமான அல்லது அருள்நிகழ்வுகள் எதுவும் கிடையாது போலும்,” என நினைத்தார். அவர் இத்தகைய சிந்தனைகளில் ஆழ்ந்திருந்தார்; அப்போது அவர்கள் விஜயத்தின் மூன்றாம் நாளன்று, சேவகர்களுள் ஒருவர் வந்து, பஹாவுல்லா அவரைத் தனியாகவும், உடன் எவரும் இல்லாமலும் பார்க்க விரும்புவதாக அறிவித்தார். அவர் உடனடியாக திவ்ய பேரழகின் முன்னிலையை அடைந்து, திரையை விலக்கி அவருடயை அறையில் நுழைந்து, தலைவணங்கிய அத்தருணமே திவ்ய பேரழகரை ஓர் நம்புதற்கரிய பிரகாசமான கண்ணைப் பறிக்கும் ஒளியாகக் கண்டார்.
இந்த ஒளி குறித்த அவருடைய அனுபவம் அத்தகைய தீவிரமாக இருந்ததன் பயனாக அவர் தரையில் வீழ்ந்து, மயக்கம் அடைந்தார். அவர் “ஃபீ அமானில்’லா” (கடவுளின் பாதுகாப்பில் சென்றுவா என்பது அதன் அர்த்தம்) என பஹாவுல்லா கூறியதை மட்டுமே அவரால் நினைவுகூற முடிந்தது. சேவகர்கள் அவரைத் தாழ்வாரத்திற்கு இழுத்துச் சென்றனர்; அதன் பிறகு அவரை புனிதப்பயணிகள் இல்லத்திற்கு கொண்டு சென்றனர். அந்த நிகழ்வுக்குப் பிறகு அவரால் இரண்டு நாள்கள் வரை சாப்பிடவோ தூங்கவோ இயலவில்லை, மற்றும் எங்கெங்கிலும் பஹாவுல்லாவின் ஆட்கொள்ளும் பிரசன்னைத்தை அவரால் உணர முடிந்தது. அவர் (பஹாவுல்லா) இங்கு நம்மோடுதான் இருக்கின்றார் என மற்ற புனிதப் பயணிகளிடம் சதா சொல்லிக்கொண்டிருந்தார். அதைப் பொறுக்க முடியாமல் பெரிதும் சோர்வுற்ற சக புனிதப் பயணிகள் அப்துல்-பஹாவின் உதவியை நாடினர். இரண்டு நாளுக்குப் பிறகு, அந்த சேவகர் திரும்பவும் வந்து அவரை பஹாவுல்லாவின் முன்னிலைக்கு அழைத்துச் சென்றனர். பஹாவுல்லாவின் பிரசன்னத்தை அடைந்தவுடன், பஹாவுல்லா அவர் மீது தமது அன்புக் கருணையையும் அருளார்ந்த மொழிகளையும் பொழிந்து அவரை அமரச் சொன்னார். பின்னர் பஹாவுல்லா, ஜினாப்-இ-முகம்மத் கூலி காஃன்! தெய்வீக சாரத்தின் அவதாரபுருஷர்கள் மனிதர்களின் மேலாடையிலும் உடைகளிலும் தோன்ற வேண்டியவர்களாக இருக்கின்றனர். மறைவிடம் என்னும் திரைக்குப் பின்னால் இருக்கும் அவர்களின் உண்மை சொரூபம், வெளிப்படுத்தப்படுமானால், உம்மைப் போன்ற எல்லா மானிடர்களும் பிரக்ஞையிழந்து, மூர்ச்சையுற்று நினைவிழப்பு என்னும் இராஜ்யத்திற்கு செல்வர்.

தொடர்ந்து பஹாவுல்லா: “கிளிகளுக்கு எவ்றாறு பேசக் கற்றுக் கொடுக்கப்படுகின்றது என்பது உமக்குத் தெரியுமா” என்றார். நான் தலைவணங்கி, “எனக்குத் தெரியாது” என்றேன் “கிளியின் சொந்தக்காரர்கள் ஒரு கூண்டிற்குள் கிளியை வைத்திருப்பர். பிறகு அவர்கள் ஒரு பெரிய கண்ணாடியை அக்கூண்டிற்கு முன் கொண்டுவந்தும், அதன் பின்னால் ஒரு மனிதன் மறைந்துகொண்டு சொற்களையும் சொற்றொடர்களையும் மீண்டும் மீண்டும் உச்சரிக்க ஆரம்பிப்பார். கூண்டிற்குள் உள்ள கிளி தன்னைப் போன்ற (கண்ணாடியில் பிரதிபலிக்கப்படும்) கிளி ஒன்று தன்னிடம் பேசுவதைக் காண்கின்றது; பேசுவது தன்னைப் போன்ற வேறொரு கிளிதான் என நினைத்த கிளி தானும் அச்சொற்களை எதிரொலித்துப் பேசக் கற்கின்றது. ஆனால், ஆரம்பத்திலிருந்தே கண்ணாடியின் பின்னால் உள்ள மனிதன் தன்னை உண்மையில் வெளிப்படுத்திக் கொண்டால், அந்தக் கிளி பேசக் கற்கவே போவதில்லை. ஆதலால், தெய்வீகத் திருவுருவின் அவதாரபுருஷர்கள் மனித உருவிலும் மேலாடையிலும் வருவது அவசியமாகும், அதன் மூலம் அவர்கள் தங்களின் அற்புத ரூபத்தினால் மானிடத்தை அச்சங்கொள்ள செய்திட மாட்டார்…” இந்த மனிதர் முற்றாகத் தன்மைமாற்றமடைந்தும், ஊர் திரும்பியவுடன், பஹாவுல்லாவின் முன்னிலையிலிருந்து அவரது இறுதி நாள்கள் வரை பிறருக்கு போதிப்பதில் ஈடுபட்டு வந்தார். இந்த உலக நிலையிலிருந்து தாம் மரணிக்கப்போகும் இரவை தாமே முன்கணிக்கும் அளவிற்கு அவர் அத்தகைய ஆன்மீக நுண்ணறிவை அடைந்திருந்தார்.
(ஹாடி ரஹ்மானி ஷிராஸி)