படிப்படியான (சமய) வெளிப்பாடு


படிப்படியான (சமய) வெளிப்பாடு

கடவுள் மனிதர்களைப் படைத்தார் என்பது சமயப் பற்றாளர்களின் நம்பிக்கையாகும். அறிவியலாளர்கள் மனிதன் தானாக உற்பத்தியானான் என வாதிடுகின்றனர். கடவுள் மனிதனை ஏன் படைத்தார் என்பது குறித்து பஹாய் சமய ஸ்தாபகரான பஹாவுல்லா பின்வருமாறு கூறுகின்றார்:

என் கடவுளே, தங்களை அறிந்து வழிபடுவதற்கெனவே என்னைப் படைத்திருக்கின்றீர் என்பதற்கு நானே சாட்சி. இத்தருணம் என் பலவீனத்திற்கும் உந்தன் வல்லமைக்கும், என் வறுமைக்கும் உந்தன் செல்வாக்கிற்கம் சாட்சியம் கூறுகிறேன். ஆபத்தில் உதவுபவரும், தனித்தியங்க வல்லவரும் தாங்களன்றி வேறெவருமிலர். -பஹாவுல்லா-

அவரை அறிந்து வழிபடுவதற்காகவே கடவுள் மனிதனைப் படைத்துள்ளார் என பஹாவுல்லா கூறுகின்றார். ஏன் மனிதனைப் படைத்தார் என்பதற்கான காரணத்தை பின்வருமாறு கூறுகின்றார்:

நினைவுக்கெட்டாத எனது நிலையிலும், எனது சாராம்சம் எனும் புராதன நித்தியத்திலும் மறைந்திருக்கும் யான், உன்பால் எனக்குள்ள அன்பினை உணர்ந்தேன், ஆகவே உன்னைப் படைத்தேன்; எனது உருவத்தை உன்னில் செதுக்கியுள்ளேன்; எனது அழகையும் உனக்கு வெளிப்படுத்தினேன். -பஹாவுல்லாவின் மறைமொழிகள்

ஆதலால், கடவுளி நம்மிடம் எதை எதிர்ப்பார்த்து நம்மைப் படைத்துள்ளார்? நிச்சயமாக அவர் நம்மைக் காரணமின்றி படைக்கவில்லை. மேற்கண்டவற்றிலிருந்து, பின்வருவனவற்றை நாம் காணலாம்:

நமக்கான அவரது நோக்கம்
• நாம் அவரை அறிந்துகொள்ள வேண்டும்
• நாம் அவரை வழிபட வேண்டும்

அவர் நமக்கு வழங்கியிருக்கும் ஆற்றல்:
• அவரது உருவத்தை நம்மில் செதுக்கியுள்ளார்
• அவரது அழகை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார்

இப்பொழுது கடவுள் நமக்காக கொண்டிருக்கும் நோக்கத்தைப் பார்ப்போம். நாம் அவரை அறிந்துகொள்ள வேண்டும். இங்கு பிரச்சனை அவரை நாம் எப்படி அறிந்துகொள்வது என்பதாகும். மனித சக்தி ஒரு வரம்பிற்கு உட்பட்டது. கற்றது கையளவு, கல்லாதது உலகளவு என ஔவையார் கூறிச் சென்றுள்ளார். இதன்வழி எல்லா அறிவுக்கும் மூலாதாரமான கடவுளைப் பற்றிய அறிவை நாம் எவ்வாறு பெறுவது? இதை எவ்வாறு, எங்கு, அல்லது யாரிடமிருந்து நாம் பெறக்கூடும்? அதே போன்று அவரை வழிபடுவது என்றால் உண்மையில் என்ன? பூஜை புனஸ்காரங்கள் செய்வதுதான் வழிபாடா?

அடுத்து, அவரை அறியவும், வழிபடவும் நமக்குத் திறனாற்றல் தேவை. அத்தகைய திறனாற்றலை எவ்வாறு பெறுவது? அவரது உருவம் நம்மில் செதுக்கப்பட்டுள்ளது என்றால் என்ன? அவரது அழகை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார் என்பதன் அர்த்தமென்ன?

மேற்கண்ட அனைத்திற்குமான பதிலை பின்வரும் மேற்கோளில் காண முயல்வோம்:

“தொன்மையானவரைப் பற்றிய அறிவு எனும் கதவு, மனிதர்களின் முகங்களிலிருந்து எப்போதும் மூடப்பட்டிருந்துள்ளது; என்றென்றும் தொடர்ந்து மூடப்பட்டேயிருக்கும். எந்த மனிதனுடைய அறிவும் அவரது புனித சபையை எட்டவே முடியாது. எனினும் அவர், தமது கருணையின் அடையாளமாகவும், தமது அன்புமிக்கப் பரிவின் ஆதாரமாகவும், மனிதர்களுக்காகத் தமது தெய்வீக வழிகாட்டுதலின் பகல் நட்சத்திரங்களைத் தமது தெய்வீக ஒற்றுமையின் சின்னங்களை வெளிப்படுத்தி, இப்புனிதத் தன்மை வாய்ந்தவர்களைப் பற்றிய அறிவு தம்மைப் பற்றிய அறிவுக்கு ஒப்பானது என விதித்துள்ளார். அவர்களை அறிந்து கொள்பவர்கள் இறைவனை அறிந்து கொள்பவர்களாவர். அவர்களது அழைப்பிற்குச் செவிமடுப்பவர் இறைவனின் குரலுக்குச் செவிமடுப்பவர் ஆவார், மற்றும் அவர்களது வெளிப்பாட்டின் உண்மைக்கே அத்தாட்சியளிப்பவர் இறைவனின் உண்மைக்கே அத்தாட்சியளிப்பவராவர். அவர்களிடமிருந்து அப்பால் திரும்புகின்றவர்கள், இறைவனிடமிருந்து அப்பால் திரும்பியவர்கள். அவர்களை நம்பாதவர்கள், இறைவனையே நம்பாதவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் இவ்வுலகினை மேலுலகங்களுடன் இணைக்கும் இறைவனின் வழியும், விண்ணுலக மற்றும் மண்ணுலக இராஜ்ஜியங்களில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவரது உண்மையின் முன்மாதிரி உயர்வு நயமும் ஆவர். அவர்களே, மனிதர்களின் மத்தியில் இறைவனின் அவதாரங்கள்; அவரது உண்மையின் ஆதாரங்கள்; அவரது புகழின் அடையாளங்கள்.”

ஒரு தாய் தனக்கு ஒரு குழந்தை பிறந்து அதற்கு முறைப்படி கல்வியூட்ட வேண்டிய காலம் வரும்போது அக்குழந்தையை பள்ளிக்கு அனுப்பும் அளவிற்கு அவருக்கு அறிவிருக்கின்றது. ஆதாவது ஒரு குழந்தையை ஈன்றெடுத்த தாய்க்கே தன் மகவுக்கு கல்வியூட்ட வேண்டுமெனும் அறிவிருக்கும் போது, நம் அனைவரையும் படைத்த கடவுள் அவ்வாறு செய்யாமல் விட்டுவிடுவாரா. ஒரு தாய் தன் பிள்ளையை கல்விக்காக ஓர் ஆசிரியரிடம் அனுப்புகின்றார். கடவுள் நம்முடைய கல்விக்காக தமது அவதாரப்புருஷர்களை நம்மிடையே அனுப்புகின்றார்.

மேற்கண்ட திருவாக்குப் பகுதியிலிருந்து கடவுளைப் பற்றி அறிவை நாம் அவரது அவதாரப்புருஷர்களிடமிருந்தே பெறுகின்றோம் என்பது தெளிவு. அத்தகைய கல்வியைப் பெறுவதற்குத் தேவையான சக்தியையும் கடவுள் நமக்கு வழங்கியுள்ளார் என்பது பின்வரும் திருவாக்கிலிருந்து தெளிவாகின்றது.

“உலகையும் அதனுள் வாழ்வன, ஊர்வன ஆகிய அனைத்தையும் படைத்து, அவர் தமது கட்டுப்படுத்தவியலாத மாட்சிமை பொருந்திய கட்டளையின் தெளிவான இயக்கத்தின் மூலமாக மனிதனை மட்டுமே தேர்ந்தெடுத்து, அவனுக்குத் தம்மை அறிந்து கொள்ளும், அன்பு கொள்ளும் தனிச்சிறப்பையும், ஆற்றலையும் வழங்கியுள்ளார். படைப்பு முழுமைக்கும் உயிரளிக்கும் தூண்டுதல் சக்தியாகவும் அடிப்படை நோக்கமாகவும் கருதப்பட வேண்டிய ஆற்றல் இதுவே. ஒவ்வொரு தனிப்படைப்பின் மெய்ம்மையின் ஆழத்தினுள் அவர் தமது திருநாமம் ஒன்றின் பிரகாசத்தினைப் பாய்ச்சி அதனைத் தமது தன்மைகளின் ஒளி ஒன்றினைப் பெறுவதாய் ஆக்கியுள்ளார், ஆனால் அவர் மனிதனின் மெய்ம்மையின் மீது மட்டும் தமது எல்லா நாமங்களின், பண்புகளின் பிரகாசத்தினை ஒரு கூறாக விழச் செய்து, அதனையே தம்மைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாக ஆக்கியுள்ளார். படைப்புப் பொருட்கள் மத்தியில் இருந்து மனிதனை மட்டுமே தனிமைப்படுத்தி அவனை இப்பெரும் சலுகைக்கும், இவ்வழியா வல்லமைக்கும் உடையவனாக ஆக்கியுள்ளார்.”

இப்பொழுது கடவுளைப் பற்றிய நமது அறிவுக்கு மூலாதாரமாக விளங்கும் கடவுளின் அவதாரப்புருஷர்களைப் பற்றி சிறிது தெரிந்துகொள்வோம்.

பஹாவுல்லா உலகில் கடைசியாகத் தோன்றிய அவதாரபுருஷராவார். அவரிடமிருந்தே நாம் கடந்தகாலங்களில் வந்து சென்ற அவதாரப்புருஷர்களின் உண்மையைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்கின்றோம். அவர் கூறியவற்றிலிருந்து கடந்த ஐந்தாயிரம் வருடங்களாக உலகில் தோன்றிய அவதாரப்புருஷர்களின் பட்டியலை பின்வருமாறு கணிக்கலாம்:

1. கிருஷ்ணர் – கிமு 3000
2. ஆபிரஹாம் – கிமு 2000
3. மோஸஸ் – கிமு 1000
4. ஸோராவெஸ்டர் – கிமு 1000
5. புத்தர் – கிமு 550
6. இயேசு – கிமு 5
7. முகம்மது – கிபி 571
8. பாப் பெருமானார் – கிபி 1819
9. பஹாவுல்லா – கிபி 1817

மேற்கண்ட பட்டியலிலிருந்து அவதாரபுருஷர்கள் தொடர்ந்தாற் போன்று சுமார் ஆயிரம் வருட இடைவெளியில் தோன்றி வந்துள்ளனர் என்பது தெளிவு. இது கவனிக்க வேண்டிய ஒரு விஷயமாகும். அனைவரும் ஒன்றாகத் தோன்றாமல் பெரும்பாலும் ஓர் இடைவெளிக்குப் பிறகே படிப்படாயாகத் தோன்றியுள்ளனர். இதற்கான விளக்கம் பின்வருமாறு:

ஒரு குழந்தை எடுத்த எடுப்பிலேயே பல்கலைக்கழகம் அனுப்பப்படுவதில்லை. முதலில் பாலர் பள்ளிகளுக்கும், பிறகு ஆரம்பப் பள்ளிகளுக்கும், அதன் பிறகு உயர்நிலைப் பள்ளிகளுக்கும், இறுதியில் பல்கலைக்கழகங்களுக்கும் பிள்ளைகள் செல்கின்றனர். இது படிப்படியாகக் கல்வி பெறுதலாகும். முதலில் ஒரு குழந்தை எழுதப்படிக்கக் கற்றுக்கொள்கின்றது, பிறகு எளிமையான பாடங்களையும், பிறகு சற்று கடினமான விஷயங்களையும் இறுதியில் அறிவியல், பௌதீகம் போன்ற பலக்கிய விஷயங்களையும் கற்றுக்கொள்கின்றது. கடந்த ஐந்து அல்லது ஆராயிரம் வருடங்களாக சமயங்களும் அது போன்றே எளிமையான விஷயங்களிலிருந்து பலக்கிய விஷயங்கள் வரை மனிதர்களுக்குப் படிப்படியாக வெளிப்படுத்தி வந்துள்ளன.

சமய போதனைகள் அந்தந்த கால மக்களின் அறிவு வளர்ச்சி,கலாச்சாரம், மொழி சூழ்நிலை போன்றவற்றை கருத்தில் கொண்டே வழங்ப்பட்டு வந்துள்ளன. மனிதர்களின் ஆற்றலுக்கு ஏற்பவே சமய போதனைகள் வழங்கப்பட்டன.

இக்கால அவதாரபுருஷரான பஹாவுல்லா, உலக ஒற்றுமைக்கான போதனைகளைத் தாங்கி வந்துள்ளார். சமயங்கள் அனைத்திற்குமே உலகத்தை ஒற்றுமைப் படுத்துவதற்கான ஆற்றல் இருப்பினும், அதை நனவாக்கும் ஆற்றல் அக்கால மக்களுக்கு இருக்கவில்லை. இன்று பரவலாக இருக்கும் தகவல் தொடர்பு சாதனங்கள் முற்காலத்தில் கிடையாது. நினைத்தபடி இன்று உலகத்தினர் எவரோடும் தொடர்புகொள்ள முடியும், உலகம் முழுவதையுமே வலம் வருவதற்கான வசதிகள் இன்று உண்டு. ஆதலால், இன்று உலக ஒற்றுமைக்கான அவசரத் தேவையை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. ஒரே பொது மொழி, பொது நாணயம் என பல இன்றியமையா தேவைகள் உருவெடுத்துள்ளன. மனிதன் ஒரு புதிய நிலைக்கு உயர்ந்துள்ளான்.

சுருங்கக் கூறின், மனிதனின் பௌதீக பரிணாம வளர்ச்சி ஒரு முடிவிற்கு வந்துவிட்டது. இனி மனிதன் ஆன்மீக மற்றும் அறிவாற்றல் ரீதியில் வளர்ச்சி காணவிருக்கின்றான்.

கூடுதல் வாசிப்பிற்கு: https://prsamy.wordpress.com/2009/05/26/மனிதன்-என்றுமே-மனிதன்-அவ/