கடமை என்றால் என்ன? – கடவுள் சமயத்திருக்கரம் திரு ஃபுருட்டான் அவர்களின் கடைசி நிமிடங்கள்


திரு ஃபுருட்டான் அவர்கள் உலக வாழ்வின் கடைசி தருணங்களின் குறிப்பிடத்தக்க வர்ணனை. உண்மையிலேயே வியப்பூட்டுவது…

338px-Ali-akbar-furutan
பிறப்பு: 29 ஏப்ரல் 1905
சப்ஸிவார், இரான்
மரணம்: 26 நவம்பர் 2003
ஹைஃபா, இஸ்ரேல்

எனக்கு ஓர் ஆன்மீக பாடமாகவும், என் துருவ நட்சத்திரமாகவும், என் வாழ்க்கை முழுவதற்கும் அறிவொளி ஊட்டிய என் புனித யாத்திரையின் நினைவில் நிற்பதும், தனிச்சிறப்பு மிக்கதுமான ஒரு தருணத்தை இங்கு பகிர்ந்துகொள்ள விரும்பிகின்றேன் அது, ஒப்பந்தத் திருநாளான 26 நவம்பர் மாதம் நடந்தது… யாத்திரிகர் வரவேற்பு மையத்தில் அன்று மாலை கடவுள் சமயத் திருக்கரமான திரு ஃபுருட்டான் அவர்களை சந்திப்பதாக இருந்தது. சந்திப்பு மாலை 6.00 மணிக்கு ஏற்பாடாகியிருந்தது. ஆனால், அவரை சந்திப்பது அது முதன் முறையல்ல. முதன் முறையாக, புணித யாத்திரையின் முதல் நாளான 24 நவம்பர் அன்று அவரை நான் சந்தித்தேன். அவர் ஓர் அருமையான உரையாற்றி, எங்களை அனுதினமும் வந்து சந்திப்பதாக வாக்களித்தார். புனித யாத்ரிகர்கள் பஹாவுல்லாவின் விருந்தினர்கள் என ஷோகி எஃபெண்டி குறிப்பிட்டிருந்ததால், யாத்திரிகர்களைச் சந்திக்க தாம் அதற்கு முன் அனுதினமும் வந்ததாக அவர் கூறினார். ஆனால், இப்போது அவரது வயதின் காரணமாக, இரண்டு நாள்களுக்கு ஒரு முறை வந்தால் போதும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாக கூறினார். புதன்கிழமை சமயத்தைப் போதிப்பது பற்றி தாம் உரையாற்றவிருப்பதால், பிள்ளைகளுடன் வருமாறு அவர் எங்களைக் கேட்டுக்கொண்டார். ஆனால், அன்று வரமுடியாமல் இருக்கின்றார் என எங்களுக்கு அறிவிக்கப்பட்ட போது எங்களின் ஏமாற்றத்தை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். அவர் யாத்ரிகர்களைச் சந்திப்பதற்காக முதல் முறை வந்த போது, பார்ப்பதற்கு அவர் மிகவும் பலவீனமாகவும், வலுவற்றும் இருந்தது, என ஞாபகத்திற்கு வந்தது. அவர் சக்தி அவரைவிட்டு சிறிது சிறிதாக மறைவது போல் எனக்குத் தோன்றியது. நிச்சயமாக, அவரது உடல்நிலையின் காரணமாகவே அவர் வரமுடியாமல் இருக்கின்றார் என எனக்கு முதலில் மனதில் பட்டது.

யாத்திரிகர்கள் பலர் தங்கள் விடுதிகளுக்குத் திரும்பிச் செல்ல முடிவெடுத்தனர், ஆனால் எங்களுள் பலர், என்னுடன் இருந்த நபிலுடன் சேர்ந்து, சந்திப்பு நிகழும் எனும் நம்பிக்கையோடு அங்கேயே காத்திருக்க தீர்மானித்தோம். ஆறடிக்க பத்து நிமிடம் இருக்கும் போது, திரு ஃபுருட்டான் வருகின்றார் என எங்களுக்குத் தெரிவிக்கப் பட்ட போது, நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அத்தனித்தன்மை மிக்க மனிதர் அறைக்குள் நுழைந்தவுடன், அங்கு வருவதற்கு அவர் எத்தகைய யத்தனம் செய்ய வேண்டியிருந்தது என்பது தெளிவாகியது. அவர் பார்ப்பதற்கு முகம் வெளுத்து, ஒளிபுகும் கண்ணாடியைப் போன்றிருந்தார். அவர் இனிமேல் இவ்வுலகிற்கு உரியவர் அல்லவென எனக்குத் தோன்றியது. இருப்பினும், அவர் தமது பலவீனத்தையும் பொருட்படுத்தாமல், மேடைக்குச் சென்று ஒலிபெருக்கிக் கருவியை எடுத்தார்.

அன்று திரு ஃபுருட்டானின் உரை சமயத்தைப் போதிக்கும் கடமைக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. அவர் முதலில் “பொறுக்குமணிகள்” நூலிலிருந்து பின்வரும் மேற்கோளை வாசித்தார்:

“கூறுவீராக: பஹாவின் மக்களே, இறைவனின் சமயத்தைப் போதிப்பீராக; ஏனெனில் இறைவன் ஒவ்வொருவருக்கும் தனது சமயத்தைப் பிரகடனஞ் செய்யும் கடமையை விதித்து, அதனைச் செயல்களிலெல்லாம் மிகப் போற்றுதலுக்குரிய செயலாகக் கருதுகின்றார். சமயத்தைப் போதிக்கும் அவர், எல்லாம் வல்லவரான, கிருபையாளரும் மேன்மைமிகு பாதுகாவலருமான இறைவனிடத்தில் திட நம்பிக்கை கொண்டிருக்கும் போதுதான், அத்தகையச் செயல் ஏற்புடையதாகும். மேலும், மனிதர்களின் சொல்லாற்றலின் மூலமாகத்தான் அவரது சமயம் போதிக்கப்படவேண்டுமே அல்லாது பலாத்காரத்தை மேற்கொள்வதன் மூலமாக அல்லவென்று அவர் கட்டளையிட்டுள்ளார். இவ்வாறுதான் அதி மேன்மைப்படுத்தப்பட்ட, சர்வவிவேகியான அவரது இராஜ்யத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.” (பஹாவுல்லா, பஹாவல்லாவின் எழுத்தோவியங்களிலிருந்து எடுக்கப்பட்ட பொறுக்குமணிகள், பக். 278)

அதன் பிறகு, “கடமை” எனும் சொல்லின் அர்த்தம் குறித்த தமது விளக்கத்தை திருக்கரம் பகிர்ந்துகொண்டார். அதற்கு உதாரணமாக, ஒரு கதையைச் சொன்னார். அது, 2’ஆம் நிக்கோலாய் ட்ஸார் மன்னராக இருந்த போது நிகழ்ந்தது. ஒரு நாள், 2’ஆம் நிக்கோலாய் தமது அரண்மனையின் முற்றத்தில் நடந்துகொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த காவலர், மிகவும் நோயுற்றவராக, சிவந்து வீங்கிய முகத்துடன் இருப்பதைக் கண்டார். காவலரை அணுகி, அவருக்கு என்ன நோய் என மன்னர் கேட்டார். அதற்குக் காவலர், தமக்கு மலேரியா நோய் கண்டிருப்பதாகக் கூறினார். அதற்கு ட்ஸார் அக்காவலருக்கு விசேஷ கவனிப்பு தேவைப்படுவதால் அவரை இல்லம் திரும்பச் சொன்னார். அதற்கு அக்காவலர், தமது தலைமை அதிகாரியின் அனுமதியின்றி தம்மால் தமது காவலை விடுத்து செல்லமுடியாது, ஏனெனில் தமது கடைசி மூச்சு வரை அரண்மனைக்குக் காவலிருப்பது அவரது கடமை என பதிலளித்தார். அதற்கு நிக்கோலாய், அக்காவலரின் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, அவ்வாறானால், மேலதிகாரி வரும்வரை அக்காவலரின் இடத்தை தாமே நிரப்புவதாகவும், அவர் வந்தவுடன் காவலரைத் தாமே இல்லம் திரும்பச் சொன்னதாகவும் காவலர் தமது கடமையை நிறைவேற்றியதாகவும் தாமே நேரடியாக அதிகாரியிடம் கூறிவிடுவதாக சொன்னார். “இதுவே கடமை எனும் வார்த்தையின் அர்த்தம். நான் இன்று இங்கு வரவேண்டியது என் கடமை என்பதால் நான் இங்கு வந்தேன். அது ஒரு கடமை எனும்போது, அதை நாம் நிறைவேற்றியே ஆக வேண்டும்,” என்றார் திரு ஃபுருட்டான்.

திரு ஃபுருட்டான ருஷ்ய நாட்டில் வாழ்ந்தும் அங்கு படித்தவரும் ஆவார் என்பதைப் பலர் அறிவர். அவர் இன்னமும் ருஷ்ய மொழி பேச விரும்புவதோடு ருஷ்ய மொழி பேசுபவர்களையும் மிகவும் நேசிப்பார். அதிர்ஷ்டவசமாக, ருஷ்ய மொழி பேசும் நண்பர்கள் அனைவரும் அன்பு அக்கூட்டதில் ஒன்றுகூடியிருந்தனர். அவர் தமது கதையைக் கூறிய போது, அவர் பல முறை சில வார்த்தைகளை, குறிப்பாக “கடமை” மற்றும் “பொறுப்பு” எனும் வார்த்தைகளை ருஷ்ய பாஷைக்கு மொழிபெயர்ப்பார். திருக்கரம் தமது உரையை முடித்தவுடன், அவர் உடனடியாக ருஷ்ய மொழி பேசும் யாத்ரிகர்களை அணுகி, “நண்பர்களே, நான் கூறியது உங்களுக்கு விளங்கியதா, கடமை மற்றும் பொறுப்பு என்றால் என்ன என்பதை நீங்கள் புரிந்துகொண்டீர்களா?” எனக் கேட்டார்.

இவையே அவர் தமது வாழ்க்கையில் உச்சரித்த இறுதி சில வார்த்தைகளாகும், ஏனெனில், அதற்குப் பின் சில நிமிடங்களிலேயே அவர் தமது உலக வாழ்க்கையை நீத்தார். அவர் எங்கள் கண் முன்னாலேயே, சாந்தமாகவும், மரியாதையுடனும், அவர் மிகவும் விரும்பிப் பாராட்டிய யாத்திரிகர்களின் கரங்களிலேயே மரணமுற்றார். அவரது வாழ்வும், அவரது மறைவும் எனக்கு உண்மையான சேவகம், திருவொப்பந்தத்தில் பற்றுறுதி, கடவுள் சமயத்திற்கு விசுவாசம் ஆகியவற்றுக்கான உதாரணமாகின. அவர் தமது வாழ்க்கையின் மூலமாகவே கடமை என்றால் என்ன, அதை நமது கடைசி மூச்சு வரை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை எடுத்துக்காட்டினார்!

அன்புடனும் பிரார்த்தனையுடனும், ஐரினா மூஸுக்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: