
ஒரு மகத்தான பெருமுயற்சி ஆரம்பிக்கின்றது: அப்துல்-பஹாவின் நினைவாலயத்திற்கான அடித்தள பணிகள் ஆரம்பிக்கின்றன
13 ஜனவரி 2020

பஹாய் உலக நிலையம் – அப்துல்-பஹாவின் நினைவாலயத்திற்கான பணிகள் ஆரம்பித்துள்ளன. அதற்காக ரித்வான் பூங்காவிற்கு அருகே தேர்வு செய்யப்பட இடம் தயார் செய்யப்பட்டுள்ளது, மற்றும் கட்டிடத்திற்கான அடித்தல கட்டுமானம் மேம்பாடு கண்டுவருகின்றது.
கடந்த ஏப்ரல் ரித்வான் கொண்டாட்டத்தின் போது, பஹாய் உலகிற்கு உற்சாகமூட்டும் ஓர் அறிவிப்பை உலக நீதிமன்றம் செய்தது: அப்துல்-பஹாவின் புனித பூதவுடலுக்கான இறுதி நல்லடக்கத்தலமாக இருக்கப்போகும் ஒரு பொருத்தமான நினைவாலயத்தைக் கட்டுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஒரு தனிச்சிறப்பான ஸ்தானமுடைய ஒருவருக்கு மரியாதை செலுத்தவிருக்கும் ஒரு தனித்தன்மைமிக்க கட்டுமானத்திற்கான கட்டிடக் கலைஞர் குறித்த அறிவிப்பு, வடிவத்தின் கருத்தாக்கம் வெளிப்படுத்தப்படல் ஆகியவற்றின் அறிவிப்புக்குப் பிறகு வந்த மாதங்களில் உற்சாகம் அதிகரித்து வந்துள்ளது.

வில்லைக்காட்சி
இந்த மேம்பாடுகள் நடத்துவரும்போது, சுமார் 29 இடங்களில் ஆய்வுத்துளைகளை உட்படுத்திய, அந்த இடத்தின் தரை அமைப்பு மற்றும் வடிகால் நிலை குறித்த ஒரு தீவிர ஆய்வுடன் கட்டுமானப் பணி ஆரம்பித்தது.
அடுத்து, ஈரம் நிறைந்த குளிர்கால சூழல்களிலும் கனரக யந்திரங்களுடனான பணிகள் தொடர்வதற்கு ஏதுவாக, நினைவாயத்தையும் சுற்றியுள்ள நிலப்பரப்பையும் சூழ்ந்திடக்கூடிய 50 சென்டிமீட்டர் மொத்தமான—170 மீட்டர்கள் குறுக்களவுடன்—இறுக்கப்பட்ட கற்களினால் ஆன ஒரு மேடை அந்த இடம் முழுவதும் பரப்பப்பட்டது. சிமிட்டிப் பதிகால்கள் 15 மீட்டர் ஆழத்திற்கு அடித்திறக்கப்பட்டுள்ளன. அந்த அஸ்திவாரத்தில் மையக் கட்டிடம் தற்போது கட்டப்பட்டு வருகின்றது.

வில்லைக்காட்சி
அதே நேரத்தில், திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கான ஆயத்தங்கள் தொடங்கிவிட்டன: வடிவமைப்புக் கோட்பாட்டை நனவாக்கும் விரிவான கட்டிட நிர்மாண மற்றும் நில அமைப்பு பற்றிய திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதோடு, பொருத்தமான கட்டுமான பொருள்களுக்கான மூலாதாரங்களின் தேடலும் நடைபெற்று வருகின்றது.
தேவைப்படும் அனுமதிகளைப் பெறுவதிலோ, கட்டுமானத் திட்டம் குறித்த அண்டைப் பகுதியினரின் புரிதலைப் பேணுவதிலோ, அந்த இடத்தின் வளமான சரித்திரம் மதிக்கப்படுதல் மற்றும் பாதுகாக்கப்படுதலை உறுதிப்படுத்திட இஸ்ரேலிய தொல்பொருள் ஆணையத்துடன் சேர்ந்து பணிபுரிதல் ஆகியவற்றிக்காக உள்ளூர் ஆணையங்களுடன் உடனுழைத்தல் இன்றியமையாததாக இருக்கின்றது.
வடிவமைப்புப் பணி முழுவதும் சுற்றுச்சூழல் காரணிகளைக் கணக்கில் எடுத்துக்கொள்வதற்கு கவனம் கொடுக்கப்பட்டுள்ளது. மத்தியதரைக் கடலின் கரையில் தாழ்வான சமவெளியில் அமைந்துள்ள ரித்வான் தோட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சுவர்கள் மற்றும் மண் வேலையால் பாதுகாக்கப்படுகிறது. உயரும் கடல் மட்டங்களை கருத்தில் கொண்டு மைய கட்டிடத்தை பல மீட்டர்கள் உயர்த்தும் ஒரு மெல்லிய சரிவில் உள்ள சமதளத்தில் நினைவாலயம் கட்டப்படும்.

வில்லைக்காட்சி
அப்துல்-பஹா நான்கு ஆண்டுகாலம் அக்காநகரில் வசித்துவந்தார். தமது தந்தையாரான பஹாவுல்லாவோடு ஒரு கைதியாகவும் நாடுகடத்தப்பட்டவராகவும் அங்கு வந்தார். அங்கு அவர் அனுபவித்த பல துன்பங்கள் மற்றும் பேரிடர்களையும் பொருட்படுத்தாமல், அவர் அக்காநகரைத் தமது இருப்பிடமாக்கியதோடு, அந்த நகரின் மக்களுக்கு, குறிப்பாக அதன் ஏழை மக்களுக்கு சேவை செய்வதில் தம்மை அர்ப்பணித்துக்கொண்டார். விரைவில், அந்த மண்டலம் முழுவதும் அவர் நன்கு அறிமுகமானவராகவும், மரியாதைக்குறியவராகவும் விளங்கினார்.
அப்துல்-பஹா தமது வாழ்நாளின் இறுதி வருடங்களை ஹைஃபாவிலேயே கழித்து, அங்கு பாப் பெருமானாரின் நினைவாலயத்தில் ஒரு கல்லறைக்குள் அடக்கம் செய்யப்பட்டார். நிரந்தரமான நினைவாலயத்திற்கு அவரது பூதவுடல் இடமாற்றம் செய்யப்படும் போது, அக்காநகரில் தமது நிலையான அடையாளத்தை விட்டுச்சென்ற ஒருவரின் மறுவரவை அந்த நகரம் காணும்.
இந்த மகத்தான பெருமுயற்சி குறித்த மேம்பாடுகளை, கட்டுரைகள் மற்றும் சுருக்க செய்திகளின் மூலம் பஹாய் செய்தி சேவை தொடர்ந்து வழங்கி வரும், மற்றும் அவை யாவும் அதன் இணையத்தளத்தின் ஒரு புதிய பகுதியில் திரட்டப்பட்டு வரும்.