கடவுள் இப்பிரபஞ்சத்தையும் அதனுள் வாழ்வன ஊர்வன அனைத்தையும் படைத்து, படைப்பினம் ஒவ்வொன்றுக்கும் தமது பண்புகள் ஒன்றினை வழங்கியுள்ளார். அவை ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட வழியில் வாழவும் விதித்துள்ளார். புலியின் பண்பு அது புலால் உண்ணி, புல் தின்னாது, பசு தாவரபட்சினி அது புலால் உண்ணாது. ஒவ்வொன்றும் அதனதன் விதிக்கு ஏற்ப செயல்படுகின்றன. மனிதனைப் பொறுத்த வரை அவன் புலால் உண்ணியும் அல்ல, தாவர பட்சினியும் அல்ல. அவனுடைய ஜீரண உறுப்புகள் புலால் மற்றும் புல்பூண்டுகள் உண்பதற்கல்ல, பழங்கள், தானியங்கள், பருப்பு வகைகள், காய்கள், எண்ணெய் வகைகள் போன்றவற்றை உண்பதற்கே படைக்கப்பட்டுள்ளன.

“உலகையும் அதனுள் வாழ்வன, ஊர்வன ஆகிய அனைத்தையும் படைத்து, அவர் தமது கட்டுப்படுத்தவியலாத மாட்சிமை பொருந்திய கட்டளையின் தெளிவான இயக்கத்தின் மூலமாக மனிதனை மட்டுமே தேர்ந்தெடுத்து, அவனுக்குத் தம்மை அறிந்து கொள்ளும், அன்பு கொள்ளும் தனிச்சிறப்பையும், ஆற்றலையும் வழங்கியுள்ளார். படைப்பு முழுமைக்கும் உயிரளிக்கும் தூண்டுதல் சக்தியாகவும் அடிப்படை நோக்கமாகவும் கருதப்பட வேண்டிய ஆற்றல் இதுவே. ஒவ்வொரு தனிப்படைப்பின் மெய்ம்மையின் ஆழத்தினுள் அவர் தமது திருநாமம் ஒன்றின் பிரகாசத்தினைப் பாய்ச்சி அதனைத் தமது தன்மைகளின் ஒளி ஒன்றினைப் பெறுவதாய் ஆக்கியுள்ளார், ஆனால் அவர் மனிதனின் மெய்ம்மையின் மீது மட்டும் தமது எல்லா நாமங்களின், பண்புகளின் பிரகாசத்தினை ஒரு கூறாக விழச் செய்து, அதனையே தம்மைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாக ஆக்கியுள்ளார். படைப்புப் பொருட்கள் மத்தியில் இருந்து மனிதனை மட்டுமே தனிமைப்படுத்தி அவனை இப்பெரும் சலுகைக்கும், இவ்வழியா வல்லமைக்கும் உடையவனாக ஆக்கியுள்ளார்.”
ஆக, மனிதன் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகப் படைக்கப்பட்டுள்ளான் என்பது தெளிவு, அதாவது அவன் தன்னைப் படைத்த கடவுளை அறிந்து வழிபடுவதற்காகவே படைக்கப்பட்டுள்ளான். சரி, இதை அவன் செயல்படுத்த வேண்டுமானால் அதற்கென முறைகள் இருக்க வேண்டுமல்லவா. உதாரணத்திற்கு அவன் ஐந்து நாள்களுக்கு மேல் உணவு உண்ணாமல் இருக்க முடியாது. பதினாறு நாள்களுக்கு மேல் நீரில்லாமல் வாழ முடியாது. இதை மீறினால் அவன் தன்னை படைத்தவரிடமே திரும்பிச்செல்ல நேரிடும். சுமார் நான்கு நாள்கள் தூக்கமின்றி இருந்தால் மனிதனுக்கு பிரமை பிடித்து விடும். சுருங்கக் கூறின் மனிதன் விதிமுறைகளுக்கு உட்பட்டவன், குறிப்பிட்ட அவ்விதிமுறைகளுக்கு ஏற்ப வாழவே அவன் படைக்கப்பட்டுள்ளான்.
மனிதனுக்கு என பிரத்தியேகமாக விதிக்கப்பட்ட பல விதிமுறைகள் உள்ளன. அவற்றுக்கேற்ப அவன் வாழும் போது, அவன் தெய்வீக உறுதிப்பாடுகளை ஈர்க்கின்றான். இதை பஹாவுல்லா பின்வருமாறு கூறுகின்றார்:
உயிருருவின் புத்திரனே! என்னை நேசிப்பாயாக, அதனால் யான் உன்னை நேசிக்க இயலும். நீ என்னை நேசிக்காவிடில் எனதன்பு எவ்வகையிலும் உன்னை வந்தடைய இயலாது. ஊழியனே, இதனை நீ அறிவாயாக. (பஹாவுல்லா)
இது கடவுளின் ஒரு விதி. மனிதன் இதை மீறுவானாயின் கடவுளின் அன்பு, அவரது பாதுகாப்பு அவனை வந்தடையாது. அத்தகைய சூழ்நிலையில் அவன் பலவித இன்னல்களுக்கு தன்னை ஆளாக்கிக் கொள்கின்றான். மற்றொரு விதி:
ஒற்றுமை எனும் திருகோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது; நீங்கள் ஒருவர் மற்றவரை அந்நியராக கருதாதீர்கள். நீங்கள் ஒரு மரத்தின் கனிகள், ஒரு கிளையின் இலைகள். (பஹாவுல்லா)
இந்த விதியை மனித மீறும் போது, ஒற்றுமையின்மை, போர்கள், பேரழிவுகளே விளைவுகளாகின்றன. இரண்டாம் உலக யுத்தத்தை நினைவுகூர்ந்திடுவோமாக. அதில் கோடிக்கணக்கில் மக்கள் மடிந்தனர்.
மாமிசம் உண்பது மற்றும் அதனின்று ஒதுங்கியிருப்பது குறித்து, சிருஷ்டியின் ஆரம்பத்திலேயே ஒவ்வொரு ஜீவராசியின் உணவையும் கடவுள் தீர்மானித்துள்ளார், அத்தீர்மானத்திற்குப் புறம்பாக புசிப்பது அங்கீகரிக்கப்படவில்லை. (அப்துல்-பஹா)
மனிதனின் உடலமைப்பைப் பொறுத்த வரை அவன் புலால் உண்ண வேண்டியதில்லை. அவனுடைய குடலமைப்பு, பற்களின் வடிவம் ஆகியவை புலால் உண்பதற்கோ புல் உண்பதற்கோ படைக்கப்பட்டவை அல்ல. உதாரணத்திற்கு இந்திய நாட்டில் சைவ உணவையே உண்போர் உண்டு. அவர்கள் புலால் உண்பதில்லை, ஆனால் புலால் உண்போருடன் ஒப்பிடும் போது அவர்கள் வலிமையிலோ சக்தியிலோ துடிப்பிலோ, புலனுணர்விலோ, அறிவாற்றல் பண்புகளிலோ எவ்வகையிலும் தாழ்ந்தவர்கள் அல்ல.
…நான் காணும் எதனிலும் அது உம்மை எனக்கு அறிமுகம் செய்கின்றது என்பதையும், அது உந்தன் அடையாளங்கள், உந்தன் சின்னங்கள், உந்தன் சாட்சியங்கள் ஆகியவற்றைப் பற்றி எனக்கு நினைவூட்டுகின்றது என்பதையும், நான் நன்கறிவேன். உந்தன் பேரொளியின் பெயரால்! (பஹாவுல்லா)
இங்கு சிருஷ்டி அனைத்திலும் கடவுளையும், அவரது அடையாளங்களையும், சின்னங்களையும், சாட்சியங்களையும் தமக்கு நினைவூட்டுவதாக பஹாவுல்லா கூறுகின்றார். படைப்பினம் அனைத்துமே ஏதாவது ஒரு வகையில் கடவுளைப் பிரதிபலிக்கின்றன. ஆனால், இன்று எங்கு பார்த்தாலும் அபிவிருத்தி திட்டங்கள் எனும் பெயரில் காடுகள் அழிக்கப்படுகின்றன, விளைச்சல் நிலங்கள் கைவிடப்படுகின்றன. “இருபதாம் நூற்றாண்டின் மறுபாதியின் போது, வளமான மேல்மண்ணின் மறைவினால் பூமியின் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான விளைச்சல் நிலங்கள் கைவிடப்பட்டன என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இயற்கை, மேல்மண்ணை மிகவும் மெதுவாகவே மறுநிரப்பம் செய்கின்றது. மேல்மண்ணை மறுபடியும் 2.5 சென்டிமீட்டர் நிரப்புவதற்கு சுமார் ஐந்நூறு ஆண்டுகளாகும், மற்றும் விளைச்சலுக்கு சுமார் 15 சென்டிமீட்டர் மண் தேவைப்படுகிறது. தற்போதைய விகிதத்தில் வருடம் 2080’க்குள் நமக்கு மேல்மண் தீர்ந்துவிடும் என விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.”
மேல்குறிப்பிட்ட அனைத்து விஷயங்களையும் கணித்துப் பார்க்கையில், இன்று பூமியில் நிலவும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு மனிதனே காரணம் என்பது தெளிவுை. நாம் வாழ்க்கை முறை நோய்கள் விருத்தியடைவதற்கு வளமான இடமாக இருக்கின்றது.
மனிதன் எப்பொழுது கடவுள் தன்னை எதற்காக படைத்துள்ளார் என்பதை அறிந்து அதற்கேற்ப வாழ்கின்றானோ, அப்போதுதான் உலகில் நிலவும் பிரச்சினைகளுக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும்.