பஹாவுல்லா

சேதிமம்
பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லாவின் இயற்பெயர் மிர்ஸா ஹுஸேய்ன் அலி. ஆனால், அவர் தம்மை இறைவனின் அவதாரம் என பாக்தாத்தில் அறிவித்த பிறகு அவர் பஹாவுல்லா என்னும் திருநாமத்தால் அழைக்கப்பட்டார். பஹாவுல்லா என்றால் கடவுளின் ஜோதி அல்லது கடவுளின் பேரொளி அல்லது கடவுளின் மகிமை என பொருள்படும். பஹாய்களுக்கு பஹாவுல்லா எனும் நாமம் அதிவுயரிய நாமமாகும். பஹாவுல்லா கடவுளின் ஜோதி என்பது பஹாய்களின் நம்பிக்கை. அவர் இக்காலத்திற்கான கடவுளின் அவதாரம். கடவுளின் சாம்ராஜ்யத்தை உலகில் நிறுவ வந்தவர்.
கடவுளின் ஜோதி என்றால் என்ன?
வானில் பிரகாசிக்கும் சூரியன் அதன் ஒளிக்கதிர்களினால் அறியப்படுகிறது. சூரியனுக்கு பெயர் கொடுப்பதே அதன் ஒளிக்கதிர்களாகும். அதே போன்று பஹாவுல்லாவும் அந்த சூரியனின் ஒளிக்கதிர்கள் போன்றவர். அவர் கடவுளின் அவதாரம் எனும் முறையில் கடவுளின் ஒளியை, கடவுளின் பண்புகளை, ஒரு ஜோதியைப் போன்று பிரதிபலிக்கின்றார். பஹாவுல்லா கடவுளின் ஆன்மீகப் பண்புகளை ஒரு ஜோதியைப் போன்று பிரிபலிப்பது போன்றே மனிதர்களும் பஹாவுல்லா வெளிப்படுத்தும் ஜோதியை தங்கள் வாழ்வில் பிரதிபலித்திட வேண்டும்.
பேரொளி குறித்த நேரடி அனுபவம்
ஒரு முறை, விசுவாசி ஒருவர் பஹாவுல்லாவின் தரிசனம் பெற அக்காநகர் வந்திருந்தார். பஹாவுல்லாவை இரண்டு முறை தரிசித்த பிறகு, அவர் மனதில் பஹாவுல்லா எல்லாரையும் போல சாதாரன மனிதராகவே தோன்றினார். அவர் எதிர்பார்த்தபடி பஹாவுல்லாவிடமிருந்த எவ்வித மாயாஜாலங்களையும் அவர் பார்க்க முடியவில்லை. பிறகு சில நாள்களில் பஹாவுல்லா அவரை தமது அறைக்கு தனியே வரும்படி அழைத்திருந்தார். சேவகர் ஒருவர் அவரை பஹாவுல்லாவின் அறைக்கு அழைத்துச் சென்றார். அறைக்குள் நுழைந்தவுடன், அவ்விசுவாசி அங்கு பஹாவுல்லா நம்பமுடியாத பிரகாசத்துடனும் திகைப்பூட்டும் பேரொளியாகவும் இருந்திடக் கண்டார். இந்த ஒளியைப் பற்றிய அவரது அனுபவத்தின் தீவிரத்தினால் அவர் அக்கனமே சுயநினைவை இழந்து தரையில் வீழ்ந்தார். அதன் பின்னர் பஹாவுல்லா கடவுளின் அவதாரங்கள் ஏன் மனிதரின் போர்வையில் வாழ்கின்றனர் என்பதற்கான விளக்கத்தை அவ்விசுவாசிக்கு அருளி அவரது குழப்பத்தைப் போக்கினார்.

இறைவனின் 99 பண்புகள்
இஸ்லாமிய சமய மரபுகளின்படி கடவுளுக்குப் பல திருநாமங்கள் உள்ளன எனவும் அதில் ஒன்று மட்டும் கடவுளின் அதிவுயரிய நாமம் எனக் கூறப்படுகின்றது. பொதுவாக, இஸ்லாமிய மரபுகளில் கடவுளின் திருநாமங்கள் 99 உள்ளதென கூறப்படுகின்றது.. இந்த 99 திருநாமங்களில் ஒன்று கடவுளின் அதிவுயரிய நாமம் என இஸ்லாமிய மரபுகள் கூறுகின்றன. ஆனால், அது எந்த நாமம் என்பது வெளிப்படுத்தப்படவில்லை. காலம் கனியும் போது இது வெளிப்படுத்தப்படும் என்பது தீர்க்கதரிசனம். பஹாய்களைப் பொறுத்த வரை அத்திருநாமம் இன்று பஹாவுல்லாவின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அது ‘பஹா’ அல்லது ‘அப்ஹா’ என்னும் நாமமாகும், அதாவது ‘ஜோதி’ அல்லது ‘பேரொளி’. இன்று இந்த நாமம் பஹாவுல்லாவின் மூலம் வெளிப்படையாகியுள்ளது.
ஸ்ரீ கிருஷ்னரின் விஸ்வரூபம்
அடுத்து மஹாபாரத இதிகாசத்திற்கு வருவோம். இதில் பாரதப்போரின்போது கிருஷ்னர் தமது விஸ்வரூபத்தை அர்ஜுனனுக்கு வெளிப்படுத்தும் காட்சி ஒன்று வருகின்றது:
மஹாபாரத யுத்தத்தின் போது, பாண்டவர்களாகிய அர்ஜுனனும் அவனது சகோதரர்களும் ஸ்ரீ கிருஷ்னரை அர்ஜுனனின் தேரோட்டியாகக் கொண்டு, தங்களின் ஒன்றுவிட்ட சகோதரர்களாகிய கௌரவர்களை எதிர்த்து போரிட வேண்டியிருந்தது. எதிரே இருந்த தனது உறவினர்களைக் கொல்ல வேண்டுமே எனும் மனவுறுத்தலுக்கு அர்ஜுனன் ஆளாகினான். அவனை சாந்தப்படுத்த, கிருஷ்னர் அவனுடன் வாழ்வு, மரணம், தர்மம் மற்றும் யோகம் குறித்து உரையாடுகின்றார். பகவத் கீதையின் அத்தியாயம் 10 மற்றும் 11’களில் கிருஷ்னர் தமது அதிவிழுமிய திருவுருவை வெளிப்படுத்தி இறுதியில் விஷ்வரூபியாக அர்ஜுனனுக்கு காட்சி தரும் செய்யுள்களைக் காணலாம். இந்த விஷ்வரூபத்தைத் தரிசிப்பதற்கு உதவியாக கிருஷ்னர் அர்ஜுனனுக்கு தெய்வீக அகப்பார்வையை வழங்குகின்றார்.

இந்த விஷ்வரூபம் பின்வருமாறு வர்ணிக்கப்படுகின்றது:
दिवि सूर्यसहस्रस्य भवेद्युगपदुत्थिता |
यदि भा: सदृशी सा स्याद्भासस्तस्य महात्मन:|| 11-12
வானத்தில் ஒருங்கே ஆயிரம் சூரியன்கள் எழுவாராயின் அங்கு தோன்றும் ஒளியை அந்த மகாத்மாவின் ஒளிக்கு நிகராகக் கூறலாம். -பகவத் கீதை 11-12
அதாவது, ஒரே நேரத்தில் வானத்தில் ஆயிரம் சூரியன்கள் ஒன்றாகத் தோன்றுமாயின் அதனால் விளையும் ஒளி அந்த விஷ்வரூபத்தின் பிரகாசத்திற்கு ஒப்பாகும். இங்கு ஒளி என்பது சமஸ்கிருதத்தில் ‘பா’ அல்லது ஆங்கில எழுத்துகளில் ‘Bhah’ என வரும். இதில் விசேஷம் என்னவென்றால் இந்த பா, பஹா, அப்ஹா (‘Bhah, Bahá, Abha’) மூன்றிற்கும் அர்த்தம் ஒன்றுதான், ஜோதி அல்லது பேரொளி. அனைத்தையும் தனது பிரகாசத்தினால் மங்கச் செய்திடும் கடவுளின் பேரொளி.
வள்ளலார் இராமலிங்கர்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

வள்ளலார் கடவுளை அருட்பெருஞ்ஜோதியர் என வர்ணிக்கின்றார். மற்றோர் இடத்தில் கடவுளை ஜோதி வடிவத்தில் வணங்குமாறு தமது சீடர்களுக்குப் போதிக்கின்றார். இதன் தொடர்பில் வள்ளலார் கட்டிய ஞானசபையில் சிலை வணக்கமின்றி கடவுளை ஜோதி வடிவமாக பக்தர்கள் வழிபடுகின்றனர். கடவுள் அருட்பெருஞ்ஜோதியராய் இந்த ஞானசபையில் வீற்றிருக்கின்றார் மற்றும் அவரை அவ்வாறே வழிபடவேண்டுமெனவும் இராமலிங்கர் அறிவுறுத்தினார்.
மாணிக்கவாசகர் திருவெம்பாவை
அடுத்து மாணிக்கவாசகர் என்ன சொல்கிறார் என பார்ப்போம்:
திருவெம்பாவை இறைவழிபாட்டிற்கு மனிதர்களை அழைக்கும் போது:
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம் மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எம் தோழி பரிசேலோர் எம்பாவாய்.. (1)
என இங்கும் இறைவனை அருட்பெருஞ்ஜோதியாய் மாணிக்கவாசகர் வர்ணிக்கின்றார்.
மரண அணிமை அனுபவம் (NDE)
இது போக, NDE எனப்படும் ‘மரண அணிமை அனுபவம்’ எனும் ஒருவித நிலை பலருக்கு ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவர் தற்காலிகமாக சில நிமிடங்களுக்கு இறந்துவிடுகிறார். அந்த சில நிமிடங்களுக்குள் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பார்ப்போம்;
மரணம் சம்பவிக்கும் போது தங்கள் காதுகளில் ஏதோ ரீங்கார ஒலி கேட்பது போன்றும், தாங்கள் ஒரு சுரங்கத்தின் வழி ஈர்க்கப்படுவது போன்றும், அந்த சுரங்கத்தின் முடிவில் பெரொளியான ஆனால் அவ்வாறு வர்ணிக்க முடியாத ஓர் அருட்பெருஞ் ஜோதியர் தங்களை வரவேற்றதாகவும் இவர்கள் கூறியுள்ளனர்.

“அத்தருணத்திலிருந்து நான் அந்த அருளொளியின்பால் தவிர்க்கமுடியாத வகையில் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். அந்த ஒளியை நேசித்தேன். என்னை என் ‘இல்லத்திற்கு’ ஈர்த்த அச்சக்தியை நான் பெரிதும் நேசித்தேன்.”
https://prsamy.wordpress.com/2011/12/07/மரணத்திற்குப்-பின்/
இங்கு அர்ஜுனன் தரிசித்த, வள்ளலார் வணங்கிய, மாணிக்கவாசகர் குறிப்பிட்ட அந்தப் பேரொளியை, இறந்தவர்கள் நேரடியாக காணும் வாய்ப்பைப் பெறுகின்றனர் என்பது ஒன்றிலிருந்து அல்ல பல நூற்றுக்கணக்கான விவரங்களிலிருந்து வெளிப்படுகின்றது.
பஹாவுல்லாவின் திருவாக்குகள்
சூரியனுக்கான நிரூபணம் அந்த சூரியனே ஆகும். வேறெதனையும் கொண்டு சூரியனை அளவிட முடியாது. அதே போன்று பஹாவுல்லா இறைவனின் ஜோதி என்பதற்கு அவரே சாட்சி. அவர் வெளிப்படுத்திய திருவாக்குகளைப் படித்து ஆராய்வதன் மூலம் பஹாவுல்லா இறைவனின் ஜோதி என்பதற்கான நிரூபணங்களை நாம் கண்டிப்பாகக் காணலாம்.
“உங்கள் செவிகளைத் தூய்மைப் படுத்தி, அவரை நோக்கி உங்கள் இதயங்களைத் திருப்புங்கள், அதன்மூலம் அதிபெரும் ஜோதியான உங்கள் பிரபுவின் வாசஸ்தலமான சைனாயில் இருந்து அதி அற்புதமான அழைப்பை நீங்கள் செவிமடுத்திடக் கூடும்.“