
20 மே 2020
புக்கனாக்கெரே, இந்தியா — கொரோனா நச்சுயிரியின் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் இன்னமும் அமுலில் இருக்கும் வேளை, தங்களின் சக குடிமக்களை ஆதரிக்கவும் மேம்படுத்தவுமான முயற்சிகளை இந்திய பஹாய்கள் தொடர்ந்து மேற்கொள்கின்றனர். நாடு முழுவதும் நடப்பிலிருக்கும் இது போன்ற பிற எண்ணிலடங்கா முயற்சிகளுள் புக்கனாக்கரே கிராமத்தில் மேற்கொள்ளப்படும் முன்முயற்சி ஓர் உதாரணமாகும். அனைவரின் நன்மைக்காகவும் தங்களின் அடக்கமான பொருள்வளங்களை மக்கள் ஒன்றுகுவிக்கும் போது என்ன சாதிக்கப்பட முடியும் என்பதை இது வெளிப்படுத்துகின்றது.

“ஒற்றுமையைப் பேணுதல் எங்கள் சமூகத்தில் எப்போதுமே ஒரு வழிகாட்டும் கோட்பாடாக இருந்துவந்துள்ளது; அது எங்கள் உள்ளத்தின் மையத்தில் குடிகொண்டுள்ளது,” என்கிறார் புக்கனாக்கெரே உள்ளூர் ஆன்மீக சபையின் திரு குமார் நாயக். “சிரமமான சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கு ஒற்றுமையுடன் பணிபுரிவதன் மதிப்பை நாங்கள் உணர்ந்துள்ளோம்.
நடமாட்ட கட்டுப்பாட்டினால் தினசரி ஊதியம் பெறுபவர்களும் அவர்தம் குடும்பத்தினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பல பகுதிகளில் புக்கனாக்கெரே ஒன்றாகும். அவர்களின் நல்வாழ்வைப் பற்றிய அக்கறையின் காரணமாக, இந்த கிராமத்தின் பஹாய்கள் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பிற குடியிருப்பாளர்களுடன் ஒத்துழைத்து இப்பகுதியில் சுமார் 100 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.

இந்த முயற்சிக்கு, தாங்களும் குடும்ப விஜயங்களில் பங்கேற்ற உள்ளூர் நிர்வாக அதிகாரமான கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஆதரவு நல்கினர். ஆரவாரமின்றி மேற்கொள்ளப்பட்டாலும், இந்த முயற்சிகள் கர்நாடகாவில் உள்ள ஒரு மாநிலம் தழுவிய தொலைக்காட்சி செய்தி சேனலால் அண்மையில் ஒளிபரப்பப்பட்டது: “இந்த நேரத்தில், பொருள்வளமுடைய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக கடைகளில் இருந்து தேவையான பொருட்களை வாங்குகிறார்கள், ஆனால் அன்றாட ஊதியத்தை நம்பியுள்ள பல குடும்பங்கள் கடுமையான கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்.
“இந்த சூழ்நிலையில், பஹாய் உள்ளூர் ஆன்மீக சபையின் உறுப்பினர்களும் புக்கனாக்கெரே’யின் பிற குடியிருப்பாளர்களும், உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கு உணவு பொட்டலங்களை விநியோகிப்பதன் மூலம் உதவிட முன்வந்துள்ளனர்”
இந்த முயற்சி குறித்து பிரதிபலித்த உள்ளூர் ஆன்மீக சபையின் மற்றொரு உறுப்பினர் சந்தோஷ்குமார் கூறுகிறார்: “அனைவரின் நல்வாழ்வுக்கும் பங்களிக்க நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது. ஒருவருக்கொருவர் உதவ நாம் முயற்சிகளை மேற்கொள்ளும்போது, அது கூட்டு நடவடிக்கைக்கு ஊக்கமளிக்கிறது; எல்லோரும் பங்களிக்க தூண்டப்படும் சூழலை உருவாக்குகிறது. கிராமத்தில் இன்னும் பல மக்கள் குழுக்கள் தங்கள் சொந்த வழியில் நெருக்கடியை எதிர்கொள்ள முன்வருவதை இப்போது நாங்கள் காண்கிறோம்.”
மூலாதாரம்: https://news.bahai.org/story/1428/