பஹாவுல்லாவின் விண்ணேற்றம்


பஹாவுல்லா நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கும் அறை, புனித சன்னதி.

பஹாய் சமயத்தில் ஒன்பது நாள்கள் புனித நாள்களாகவும், அத்தினங்களில் பணிகளுக்கு செல்லாமல் அத்தினங்கள் அனுசரிக்கப்பட வேண்டுமென பஹாய் சமயத்தின் பாதுகாவலரான ஷோகி எஃபெண்டி கூறியுள்ளார். மத ஸதாபகர்கள் தொடர்பான சில நிகழ்வுகள், குறிப்பாக அவர்களின் பிறந்தநாள்கள், மறைந்தநாள்கள், மற்றும் வேறு சில நாள்கள் புனிதநாள்களாகக் கருதப்படுகின்றன. அத்தினங்களுக்கு விசேஷ புனிதத்துவமும் தெய்வீக சக்தியும் உண்டு.

பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லா மறைந்து இன்றுடன் (2023) 131 வருடங்கள் பூர்த்தியாகி விட்டன. உலகம் முழுவதுமுள்ள பஹாய்கள் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 28/29`ஆம் நாள்களில் அவரது விண்ணேற்ற தினத்தை அனுசரித்து வருகின்றனர். அவர் அதிகாலை 3.00-மணிக்கு விண்ணேற்றம் அடைந்தார். பஹாய்கள் அவர் மறைந்த அந்த நேரத்தில் பிரார்த்தனைகள் செய்யவும், புனிதவாசகங்களைப் படிக்கவும், பாப் பெருமானார், பஹாவுல்லா இருவருக்காகப் பிரத்தியேகமாகத் தொகுக்கப்பட்ட நேர்வு நிருபத்தை வாசிக்கவும் ஊக்குவிக்கப்படுகின்றனர். பஹாவுல்லாவின் விண்ணேற்றம் பற்றி பின்வரும் விவரக்குறிப்பு, பஹாவுல்லாவின் பேத்திகளுள் ஒருவரால் வழங்கப்பட்டது.

என் தாயார், என் அத்தை, என் மூன்று சகோதரிகள் ஆகியோருடன் நான் அக்காநகரிலுள்ள பெரிய வீட்டில் எங்கள் தந்தையுடன் வாழ்ந்து வந்தோம். பஹாவுல்லா பாஹ்ஜியில் வாசம் செய்தார். அக்காலத்தில், அவ்விடத்தின் மக்கள் அவரையும் மாஸ்டரையும் பெரிதும் மதித்து அவர்களுக்கு மரியாதை செலுத்தினர். நாங்களும் அக்காநகரின் ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் முடிந்த அளவு மகிழ்ச்சியாக இருந்தோம். துயரமிகு இந்த நாளில் பாஹ்ஜியிலிருந்து ஒரு சேவகர் பஹாவுல்லாவிடமிருந்து மாஸ்டருக்கான ஒரு நிருபத்துடன் வந்து சேர்ந்தார்; “நான் நலக்குறைவாக இருக்கின்றேன், எம்மிடம் வருக, காஃனுமையும் உடன் அழைத்து வருக.” அவ்வூழியர், அவர்களுக்காக தம்மோடு குதிரைகளையும் கொண்டு வந்திருந்தார். என் தந்தையும் அத்தையும் பாஹ்ஜிக்கு உடனே விரைந்து சென்றனர்;பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் எங்கள் வீட்டிலேயே எங்கள் தாயாருடன், பதட்டத்துடன் இருந்தோம். ஒவ்வொரு நாளும், எங்கள் ஆராதனைக்கினிய பஹாவுல்லாவின் காய்ச்சல் தனியவில்லை என்னும் செய்தி வந்த வன்னமாக இருந்தது. அவருக்கு ஒரு விதமான மலேரியா கண்டிருந்தது. ஐந்து நாள்களுக்குப் பிறகு நாங்கள் அனைவரும் பாஹ்ஜி சென்றோம்; நோய் மிகவும் தீவிரமடைந்திருந்தது கண்டு நாங்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்திருந்தோம். நோய் கண்டிருந்த பதினைந்தாவது நாள், பாரசீக யாத்ரீகர்களும் அக்காநகர் பஹாய் நண்பர்களும் அவரது முன்னிலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பாஹ்ஜி மாளிகையில் பஹாவுல்லாவின் அறை

ஷிராஸ் நகரிலிருந்து மிர்ஸா அன்டலீப், மற்றும் பார்வையற்ற கவிஞரான மிர்ஸா பஸ்ஸாரும் அங்கிருந்தனர். அவர்கள், கண்ணீர் வழிந்தோட, அவரது படுக்கையைச் சுற்றிச் சுற்றி வலம் வந்து, இவ்வுலகத்திற்காக, மேலும் சிறிதளவு நேரத்திற்காவது, அவரது விலைமதிப்பற்ற ஜீவனை காப்பாற்றிட, அவர்கள் தங்கள் உயிரை அர்ப்பணித்திட அனுமதிக்குமாறு பிரார்த்தனையுடன் மன்றாடினர். பஹாவுல்லா அவர்களிடம் சாந்தியும் அமைதியும் நிறைந்த அன்பான வார்த்தைகள் பேசி, கடவுளின் சமயத்திற்கு நம்பிக்கையுடனும், விசுவாசமாகவும், பற்றுறுதியோடும் இருந்து, அவர்களின் நற்பண்புகள் உலகிற்கு எடுத்துக்காட்டாக இருக்கும்படி அறிவுறுத்தினார். “உங்கள் அனைவரிடமும் நான் பெரும் மகிழ்ச்சியோடு இருக்கின்றேன். உங்கள் செயல்கள் பஹாய் சமயத்திற்கு மதிப்புமிகு எடுத்துக்காட்டுகளாக இருந்திடும் என்பதே என் எதிர்ப்பார்ப்பு – கடவுள் சட்டமெனும் ஒளியின் உண்மையான பற்றாளர்களாக என்றும் இருப்பீர்களாக.

மாஸ்டர் பல்வேறு விஷயங்களுக்காக, நண்பர்களைச் சந்தித்து, அவரது தந்தையார் சிறிது நலமாக இருக்கின்றார் என்னும் நற்செய்தியை வழங்கிட அக்காநகர் சென்றார். அதன் பின், அக்காநகர் ஏழை சிறைக் கைதிகளிடையே இரண்டு அர்ப்பண ஆடுகள் பகிர்ந்தளிக்கப்படுவதை மேற்பார்வையிட்டார். மாலையில் அவர் பாஹ்ஜி திரும்பி வந்தார்.

பஹாவுல்லா, பெண்களாகிய எங்களையும் பிள்ளைகளையும் தம்மிடம் அழைத்துவரும்படி கேட்டுக்கொண்டார். எங்களின் எதிர்கால வழிநடத்தலுக்கான வழிகாட்டிகளை அவர் தமது உயிலில் எழுதிவைத்துள்ளதாகவும் அதிவுயரிய கிளை, அப்பாஸ் எஃபெண்டி, குடும்பத்தினர், நண்பர்கள், மற்றும் சமயம் சார்ந்த அனைத்திற்கும் மாஸ்டர் ஏற்பாடுகள் செய்வார் எனவும் எங்களிடம் கூறினார். “அன்டலீப்’பின் அன்பார்ந்த பக்தியும் அவர்கள் அனைவரின் அன்பும் என் மனதை மிகவும் தொட்டுள்ளது, அவர்கள் ஒவ்வொருவரும் உண்மையும் விசுவாசமும் நிறைந்த ஊழியர்களாக இருப்பார்கள் என நம்புகின்றேன்.

நோய் கண்டிருந்த பத்தொன்பதாவது நாள், வைகறையில், அவர் எங்களை விட்டுப் பிரிந்தார். உடனடியாக, ஒரு குதிரைவீரர் முஃப்டியிடம் தகவல் தெரிவிப்பதற்காக அக்காநகர் விரைந்தார்.

“கடவுள் சக்திமிக்கவர். அவர் உயிரளிக்கின்றார்! அதை மீண்டும் எடுத்துக்கொள்கின்றார்! அவர் மரணிப்பதில்லை, என்றும் நிலையாக வாழ்கின்றார்.

பெரிதும் மதிப்பிற்குறிய,கற்றறிந்த,புனித ஆன்மாக்கள் இறைவனடி சேரும் போது ஸ்தூபிகளிலிருந்து செய்யப்படும் இப்பிரகடனம், ஓர் இஸ்லாமிய மரபாகும்.

இத்துயரச் செய்தி அந்த மாநிலம் முழுவதும் காட்டுத்தீயைப் போல் பரவி, எல்லா பள்ளிவாசல்களிலிருந்தும் பிரகடனம் செய்யப்பட்டது. நாட்டுப்புறத்தின் எல்லா கிராமங்களிலிருந்தும் தங்கள் மரியாதையை தெரிவிப்பதற்காகவும், துக்கத்தில் பங்குகொள்ளவும் மக்கள் பாஹ்ஜியில் வந்து கூடினர். ஷேய்க்குகள் பலர் ஆடுகள், அரிசி, சர்க்கரை மற்றும் இதர பொருட்களை கையோடு கொண்டுவந்தனர். இது ஓர் அரபு சம்பிரதாயமாகும். இத்தகைய அன்பளிப்புகளை ஏழைகளுக்கு செய்தால், மறைந்த ஆன்மாவுக்காக அவர்கள் பிரார்த்திப்பர் என்பது எண்ணமாகும்.

இஸ்லாமிய நன்பர்கள், முஃப்டி, முல்லாக்கள், ஆளுனரும் அதிகாரிகளும், கிருஸ்துவ மதத்தலைவர்கள், லத்தீன், கிரேக்க, அபு சினான் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ட்ரூஸ்களும், வேறு பல நண்பர்களும் பெரும் எண்ணிக்கையில் பேரன்பருக்கு மரியாதை செலுத்த ஒன்றுகூடினர்.

அவரது புகழ்பாடும் மார்திய்யே எனப்படும் பாடல்கள் கவிஞர்களால் பாடப்பட்டன. துக்கப் பாடல்களும் பிரார்த்தனைகளும் ஷேய்க்கிகளால் ஓதப்பட்டன.  அவரது அற்புத சுய-தியாக வாழ்க்கையை வர்ணிக்கும் நல்லடக்க உரைகள் நிகழ்த்தப்பட்டன.

வருகையாளர்களுள் பலர், பாஹ்ஜி மாளிகையைச் சுற்றியிருந்த மரங்களுக்குக் கீழ் முகாமிட்டிருந்தனர். சுமார் ஐந்நூறு பேருக்கும் மேற்பட்டோருக்கு அங்கு ஒன்பது நாள்களுக்கு விருந்தோம்பல் நடைபெற்றது. இந்தக் கவனிப்பு மாஸ்ட்டருக்கு பெரும் சிரமத்தைக் கொடுத்தது; எல்லா ஏற்பாடுகளையும் அவரே செய்தார், ஒவ்வொரு விஷயத்தையும் அவரே மேற்பார்வையிட்டார்; அந்த ஒன்பது நாள்களிலும் ஏழைகளுக்கு அவர் பணம் கொடுத்தார்.

இந்த நாட்களில் விடியற்காலையில் “பிரார்த்தனைக்கான அழைப்பு” மற்றும் பஹாவுல்லாவின் சில “முனாஜத்” (பிரார்த்தனைகள்) அரண்மனையின் பால்கனியில் இருந்து ஓதப்பட்டன. எங்கள் பிரார்த்தனைக்கான அழைப்பை முழக்கமிடும் அரேபிய பஹாய் நண்பரின் அழகான குரலைக் கேட்பதற்கு மிகவும் மனதைக் கவர்வதாக இருந்தது. அதன் ஒலியில் மாஸ்டர் எழுந்தார்; நாங்கள் அனைவரும் அவரை நல்லடக்க சன்னதிக்குப் பின்தொடர்ந்தோம்; அங்கு அவர் இறுதிச் சடங்கிற்கான பிரார்த்தனை மற்றும் நேர்வு நிருபத்தை ஒதினார்.

(Lady Blomfield, the Chosen Highway)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: