
இரான் நாட்டில் பஹாய்கள் துன்புறுத்தப்படுவதில் அதிகரிப்பு: அவர்களின் நம்பிக்கைக்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, சிறைப்படுத்தப்படுகின்றனர்.
8 அக்டோபர் 2021
நியூ யார்க் ப.அ.ச. — இரான் நாட்டு அதிகாரிகள் பஹாய்களைத் துன்புறுத்துவதை அதிகரித்துள்ளனர்; சமீபமான வாரங்களில், நாட்டைப் பாதித்து வரும் சுகாதார நெருக்கடியையும் கருதாமல், நாடு முழுவதும் குறைந்தது 77 தனிநபர்களை குறிவைத்துள்ளனர்.

ஃபார்ஸ், தென் கோராஸான், மஸந்தரான், இஸ்ஃபஹான், அல்போர்ஸ், கெர்மான், கெர்மான்ஷா, யாஸ்ட் ஆகிய மாநிலங்களில் வாய்மை, ஆண் பெண் சமத்துவம், எல்லா மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது, அறிவியலுக்கும் சமயத்திற்கும் இடையில் நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தும் பஹாய் சமயம் மற்றும் அதன் போதனைகளின்பாலான ஆழ்ந்த விரோதம் காரணமாக பஹாய்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்திற்கு வரும்படி ஆணையிடப்பட்டு, அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், விசாரனைக்குப் பிறகு சிறை தண்டனை அல்லது சிறையிலிடப்பட்டுள்ளனர்.
கூடுதலாக, அவதூறு செய்வதற்கும், ஒதுக்கித் தள்ளுவதற்கும் ஈரான் அரசுடன் இணைந்த ஊடகங்கள், தொலைக்காட்சி சேனல்கள், செய்தித்தாள்கள், வானொலி நிலையங்கள், வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதன் மூலம் பஹாய்களை பகிரங்கமாக அவதூறு செய்வது அதிகரித்துள்ளது. இதற்கிடையில், பஹாய்கள் பகிரங்கமாக பதிலளிக்க அனுமதிக்கப்படாத நிலையில், சக குடிமக்கள் உண்மையை சுயமாக விசாரிப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகின்றது.
ஒரு சந்தர்ப்பத்தில், தென் கோரசன் மாகாணத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்பது பஹாய்களுக்கு மூன்று முதல் ஆறு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதித்துள்ளது. இவர்களில் ஒரு வயதான மனிதரும் அடங்குவார், அவரது வயது முதிர்ச்சியின் காரணமாக, சிறையில் அடைக்கப்படுவது அவரது உடல்நிலைக்குப் பெரும் ஆபத்தை விளைவிப்பதாக இருக்கும். ஃபார்ஸ் மாகாணத்தில் 12 பஹாய்களுக்கு ஒன்று முதல் 13 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சமீபத்திய நாட்களில், சிறைவாசம் அனுபவிப்பதற்காக தெற்கு கோரசன் மாகாணத்தில் ஆறு பஹாய்கள் அழைப்பாணையிடப்பட்டனர்; மேலும் நான்கு பேர் கெர்மான் மற்றும் யாஸ்ட் மாகாணங்களில் கைது செய்யப்பட்டனர்; அல்போர்ஸ் மாகாணத்தில் உள்ள மற்றொரு பஹாய்க்கு ஒரு வருடம் சிறைத்தண்டனையும், இரண்டு ஆண்டுகள் உள்நாட்டு நாடுகடத்தலும் விதிக்கப்பட்டது; இஸ்ஃபாஹான் மாகாணத்தில் உள்ள மற்றொரு பஹாய் சிறைத் தண்டனையை அனுபவிக்க அழைப்பாணையிடப்பட்டார்.
கைது செய்யப்பட்டு பெருந்தொகையான ஜாமீன்களில் விடுவிக்கப்பட்ட பின்னர், இந்த நபர்கள் கைது, விசாரணை, மேல்முறையீட்டு நீதிமன்றம், சிறைத் தண்டனையின் ஆரம்பம் ஆகியவற்றுக்கு இடையில் பல மாதங்கள் வரையிலும் சில நேரங்களில் சில வருடங்கள் வரை காத்திருக்கிறார்கள், மனவியல் ரீதியில் இது ஒரு கூடுதல் கூடுதல் சுமையாக இது இருக்கின்றது. ஒட்டுமொத்த பஹாய் சமூகத்தையும் திட்டமிட்டு துன்புறுத்துவதன் ஒரு பகுதியாக, இத்தகைய கொடூரமான தந்திரோபாயங்கள் சமீபத்திய ஆண்டுகளில் அதிகாரிகளால் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன.
“சமீபத்திய சம்பவங்கள் பல குடும்பங்களுக்கு பெரும் அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளன” என்று பஹாய் அனைத்துலக சமூகத்தின் முதன்மை பிரதிநிதி திருமதி பானி டுகால் கூறினார். “இந்த சூழ்நிலைகளில் சிறைவாசத்தின் தொடர்ச்சியான அச்சுறுத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய உணர்ச்சிகரமான வேதனைகளுக்கு அவர்களை உட்படுத்துவது சமூகத்தின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் மற்றொரு முயற்சியாகும். எந்தவொரு நியாயமும் இல்லாமல் ஆபத்தான முறையில் அதிகரித்த விகிதத்தில், ஒரு சுகாதார நெருக்கடியின் போது இதையெல்லாம் செய்வது, மிகவும் கொடூரமானது மற்றும் மூர்க்கத்தனமானது.”
இரான் நாட்டு பஹாய்கள் சூழ்நிலை குறித்த கூடுதல் தகவலுக்கு பஹாய் அனைத்துலக சமூகத்தின் இணையத்தளத்திற்கு விஷயம் செய்யவும். அதில் இரான் நாட்டில் பஹாய் துன்புறுத்தல்கள் குறித்த காப்பகமும் உள்ளடங்கியுள்ளது.