சமுதாயத்தில் பாலின வன்முறை அதிகரிப்புக்கு எதிரே பாப்புவா நியூ கினி பஹாய்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்


சமுதாயத்தில் பாலின வன்முறை அதிகரிப்புக்கு எதிரே பாப்புவா நியூ கினி பஹாய்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்


8 அக்டோபர் 2021


பெண் ஆண் சமத்துவம் குறித்து பாப்புவா நியூ கினி பஹாய் தேசிய ஆன்மீக சபை ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது, மற்றும் அதில், தொற்றுநோயின் போது அதிகரித்துள்ள ஓர் உலகளாவிய கவலை குறித்து உரைத்துள்ளது.

ஒரு தேசிய தினசரியிலும், சமுதாய ஊடகங்களிலும் பிரசுரிக்கப்பட்ட அந்த அறிக்கை, தலைநகரான போர்ட் மோரெஸ்பியிலும் அதற்கு அப்பாலும் ஆக்கரமான உரையாடல்களைத் தூண்டுவதாக இருக்கின்றது.

“பாலின அடிப்படையிலான வன்முறை நம் நாட்டில் மிகவும் ஆழமாகப் பதிந்துள்ளது” என்று தேசிய சபை அந்த அறிக்கையில் எழுதுகிறது. “இது நம் சமூகத்தை பாதிக்கும் ஒரு நாள்பட்ட நோயின் வெளிப்பாடு ஆகும். நமது முன்னேற்றம் மற்றும் செழிப்பை மிகவும் கடுமையாக முடக்கியுள்ள இந்த நோய், ஆண்களின் மற்றும் பெண்களின் சமத்துவத்தை அங்கீகரிக்கத் தவறியதன் ஒரு பகுதியாகும் என்று பஹாய் சமூகம் நம்புகிறது.”

இந்த அறிக்கையை பிரதிபலிக்கும் வகையில், தேசிய ஆன்மீக சபையின் செயலாளர் கன்பூசியஸ் இகோய்ரேரே கூறுவதாவது, “நமது சமூகம் அதன் கலாச்சாரம் மற்றும் மரபுகள் பெண்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி ஆழமாக சிந்திக்கும் தருணம் இது. வழிகாட்டுதலின் ஆதாரமாகவும், பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் மூடநம்பிக்கைகளை அகற்றவும் சமயம் சார்ந்த சமூகங்களுக்கு ஒரு பொறுப்பு உள்ளது. இந்த அறிக்கை தனிநபர்களுக்கு இந்த முக்கியமான விஷயத்தைப் பற்றி பேசுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்பதே நம்பிக்கை, இதனால் இந்த உரையாடல் எல்லா வீடுகளிலும் வேரூன்றி சமூகங்களுக்குள் ஊடுருவிடக்கூடும்.”

பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவத்தைப் பிரதிபலிக்க வேண்டிய ஒரு சமூகத்திற்கு இன்றியமையாதது என்று கூறும் பல பஹாய் கொள்கைகளை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. சமுதாய ஊடகங்களில் அறிக்கை பரவியபோது, ஆண்களையும் பெண்களையும்–பறவை பறக்க சமமாக பலப்படுத்தப்பட வேண்டிய–ஒரு பறவையின் இரண்டு சிறகுகளுடன் ஒப்பிடும் பஹாய் திருவாக்குகளில் இருந்து மேற்கோள் காட்டப்பட்ட ஒரு பத்தி குறிப்பாக கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது.

“உண்மை என்னவென்றால், சமுதாயத்தில் பொதுவான சில அணுகுமுறைகள் பெண்களை ஆண்களை விட தாழ்ந்தவர்களாக்கி வைக்கின்றன, அவர்களை வீட்டிற்குள் கட்டுப்படுத்தி வைக்கின்றன, முடிவெடுப்பதில் இருந்து அவர்களை விலக்கி வைகின்றன” என்று பாப்புவா நியூ கினியில் உள்ள பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் இயக்குனர் கெஸினா வால்மர் கூறுகிறார். அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்ட பஹாய் சமயத்தின் மிகவும் ஆழ்ந்த கொள்கை என்னவென்றால், ஆன்மாவுக்கு பாலினம் இல்லை என்பதாகும். இதையும் பிற தொடர்புடைய ஆன்மீக உண்மைகளையும் மக்கள் மதித்துணர ஆரம்பித்தவுடன், சமூகத்தில் சமத்துவமின்மைக்கு எந்த அடிப்படையும் இல்லை என்பதை அவர்கள் உணர்கிறார்கள். இது பெண்களைப் பற்றிய கருத்து மற்றும் நடத்தை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு வழிவகுக்கிறது. இது ஒற்றுமையைப் பற்றிய அதிக புரிதலை உருவாக்குகிறது மற்றும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான நியதிகளைப் பற்றி ஆலோசிக்க அனுமதிக்கிறது.”

தற்போதைய சுகாதார நெருக்கடிக்கு முன்னர் எடுக்கப்பட்ட படம். போர்ட் மோரெஸ்பி, பாப்புவா நியூ கினியில் உள்ள எதிர்கால பஹாய் வழிபாட்டுத் தலத்தில் ஒரு வழிபாட்டுக்கான ஒன்றுகூடல்.

தேசிய ஆன்மீக சபை உறுப்பினரான ஃபெலிக்ஸ் சிமிஹா கூறுவதாவது, “தொற்றுநோயின் போது பிரார்த்தனை செய்ய ஒன்று சேரும் பழக்கத்தை குடும்பங்கள் வலுப்படுத்தி வருகின்றன, இது பஹாய் கலந்தாலோசனை செயல்முறைக்கு அவசியமான ஒன்றாகும். ஒரு குடும்பம் ஆலோசனையின் மூலம் முடிவுகளை எடுக்கும்போது, பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒரு குரல் இருக்கிறது, வன்முறைக்கு இடமில்லை. ”

இந்த அறிக்கை சமத்துவம் குறித்த சொல்லாடலுக்கு நாட்டிலுள்ள பஹாய் சமூகத்தின் ஒரு பங்களிப்பாகும். அது வழங்கிடும் கோட்பாடுகள், பாப்புவா நியூ கினியில் பஹாய் சமூக நிர்மாணிப்பு மற்றும் கல்வியல் முயற்சிகளின் நடுமையத்தில் வீற்றிருக்கின்றன.

“நமது கலாச்சாரத்தின் அம்சங்கள் மாறக்கூடும், குறிப்பாக சிறு வயதிலிருந்தே நம் குழந்தைகளுக்கு புதிய விழுமியங்களைக் கற்பிக்கும் போது,” என்று நாட்டின் பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் ஸா அகபே-கிரான்ஃபர் கூறுகிறார். “பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஒற்றுமையாகவும் ஒத்துழைப்புடனும் எவ்வாறு தொடர்பு கொள்ள கற்றுக்கொள்கிறார்கள் என்பதை நாங்கள் நேரில் காண்கிறோம், பின்னர் இந்தப் பாடங்களை அவர்களது குடும்பங்களுக்கு அவர்கள் கொண்டு வருகின்றனர்.

“பெரிய நகரங்களிலிருந்து தொலைதூரப் பகுதிகள் வரை, பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவத்தை வெளிப்படுத்த முயற்சிக்கும் சமூகங்களில் நேர்மறையான மாற்றங்களை நாங்கள் காண்கிறோம். பெண்கள் படிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள், அவர்களின் குரல்களுக்கு மதிப்பளிக்கப்படுகின்றது, அவர்கள் முடிவெடுக்கும் பாத்திரங்களில் ஈடுபடுகிறார்கள், முன்பு அவர்களை முழு பங்கேற்பிலிருந்து விலக்கிய தடைகள் அகற்றப்படுகின்றன.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1439/