
“சுகாதார நெருக்கடியின் மூலம் நாம் என்ன கற்றுக்கொண்டுள்ளோம்?” அமைதி இருக்கை வினவுகின்றது.
8 அக்டோபர் 2021

காலேஜ் பார்க், மேரிலாந்து, அமெரிக்கா – கடந்த மாதங்களில், மில்லியன் கணக்கானவர்களை நோய், பொருளாதார கஷ்டங்கள் மற்றும் பிற நெருக்கடிகளால் தொற்றுநோய் பாதித்துள்ளது. இது அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும், குறிப்பாக முன்னணி தொழிலாளர்களிடமிருந்தும் ஒரு வீரமிகு பிரதிசெயலைத் தூண்டுகிறது. இந்த அசாதாரன காலங்கள் சமூக முன்னேற்றம் குறித்த ஆழமான விவாதங்களையும் தூண்டின.
மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் உலக அமைதிக்கான பஹாய் இருக்கை “கோவிட்-19 தொற்றுநோய்களின் போது கற்றல்” என்ற தொடருக்கான கட்டுரைகளை வழங்க ஆராய்ச்சியாளர்களுக்கு அழைப்பு விடுத்தது.
“இந்த நெருக்கடி மனித இயல்பின் இரு பக்கங்களையும் வெளிப்படுத்துகிறது, இந்த காலகட்டத்தில் இருந்து நாம் எவ்வாறு வெளிவர விரும்புகிறோம் என்பதைப் பற்றி சிந்திக்க வழிவகுக்கிறது” என்று உலக அமைதிக்கான பஹாய் இருக்கையின் தலைவர் ஹோடா மஹ்மூதி கூறுகிறார். “அதிக ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அடைவதில், தோற்றங்களில் மட்டுமல்ல, உண்மையான நேர்மறையான முன்னேற்றங்களை நாங்கள் அடைந்திருப்போமா?”
பொருளாதாரங்கள், சுற்றுச்சூழல், ஊடகங்கள் மற்றும் வாழ்க்கையின் பிற பகுதிகளில் தொற்றுநோயின் விளைவுகளைக் கட்டுரைகள் ஆராய்கின்றன. சுகாதார நெருக்கடி எவ்வாறு சமூகத்தில் பரந்த ஏற்றத்தாழ்வுகளை வெளிப்படுத்தியுள்ளது என்பது ஒரு பொதுவான கருப்பொருளாகும்.
சாண்ட்டா பார்பரா, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் அலிசன் ப்ரிஸ்க், இனவெறி மற்றும் மனித உரிமை மீறல்களை ‘பிறத்துவம்’ மற்றும் ‘சமுதாய அணுவாக்கம்/துகள்களாக்கம்’ மூலம் சமூகத்தில் பரப்பப்படும் நோய்கள் என்று விவரிக்கிறார். டாக்டர் ப்ரிஸ்க் குறிப்பிடுகையில், வரலாற்று ரீதியாக துன்பத்தையும் அடக்குமுறையையும் சமாளிப்பது சமூக ஒற்றுமையைப் பொறுத்துள்ளது. “மனிதநிலை அழிப்பு எனும் தொற்றுநோயை எதிர்கொள்ளும் நமது திறன் கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து தப்பிக்க மட்டுமல்ல, நாகரிகமாக உயிர்வாழ்வதற்கும் முக்கியமாக இருக்கும் என்று இது அறிவுறுத்துகிறது.”

அமெரிக்காவின் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தின் டஃப்னா லெமிஷ் டிஜிட்டல் ஏற்றத்தாழ்வுகள் பற்றி எழுதுகிறார். குழந்தைகள் ஊடகங்களைப் பயன்படுத்துவது பற்றிய பொது சொற்பொழிவில் ஆதிக்கம் செலுத்தும் கருப்பொருள், “திரை நேரம்” பற்றியது என டாக்டர் லெமிஷ் விளக்குகிறார். ஆனால் இப்போது கவனம் மாற்றம் காண்கின்றது: “… இந்த நெருக்கடியின் போது பல ஆழமான டிஜிட்டல் ஏற்றத்தாழ்வுகளின் தெளிவான அறிகுறிகளாக சமூக ஏற்றத்தாழ்வு சார்ந்த கட்டமைப்புகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன: ஊடக உரிமையின் ஏற்றத்தாழ்வுகள், மேலும் இணையம் மற்றும் ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கான அணுகல்; சரியான/விரும்பிய ஊடக பயன்பாட்டை அனுமதிக்காத வாழ்க்கை நிலைமைகளால் உருவாக்கப்பட்ட ஏற்றத்தாழ்வுகள்; மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு, அறிவு மற்றும் ஊடகங்களின் சிறந்த பயன்பாட்டிற்கான திறன்களில் ஏற்றத்தாழ்வுகள்.”
அடிலெய்ட் பல்கலைக்கழகத்தின் மெலிசா நர்சி-ப்ரே நகர்ப்புற அமைப்புகளில் முதலாளித்துவமும் நுகர்வுமையும் எவ்வாறு ஒருவருக்கொருவரிலிருந்தும் இயற்கையிலிருந்தும் மக்களைத் துண்டித்துக் கொண்டிருக்கின்றன என்பதை ஆராய்ந்து, தொற்றுநோய் எவ்வாறு பல்வேறு வாழ்க்கை முறைகளுக்கு நம்பிக்கையின் ஒரு பிரகாசத்தை அளிக்கிறது என்பதைப் பற்றிய எண்ணங்களை வழங்குகின்றார்.
“முன்னர் ஓய்வு நேரம் மற்றும் (பொருள்களை) வாங்குவதற்கான விருப்பத்தால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட பிற, ஆனால் மிக முக்கியமான, அன்றாட நடைமுறைகள், நமது குடும்பத்தை உள்ளடக்குகின்றவை, மேலும் உள்ளூர் வாழ்க்கை முறைகள் மற்றும் முன்னுரிமைகள் ஆகியவற்றிற்கு கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தின்பால் நமது கவனம் திருப்பப்பட்டுள்ளது” என்று டாக்டர் நர்சி-பிரே எழுதுகிறார். நிலைப்படுத்தப்படக்கூடிய வாழ்க்கைமுறை பற்றிய உரையாடலில் மக்கள் கூடி, ஈடுபடக்கூடிய நகர்ப்புற இடங்களை உருவாக்குவதன் அவசியத்தையும் கட்டுரை ஆராய்கிறது.

வரிசையின் மற்றொரு கருப்பொருளைப் — பெண்களின் சக்தியளிப்பு — பற்றி கருத்து தெரிவிக்கையில் டாக்டர். மஹ்மூதி கூறுகிறார்: “தொற்றுநோய்களின் போது அத்தியாவசியத் தொழிலாளர்களில் அதிகமானோர் பெண்கள். சமுதாயத்திற்கு மகத்தான பங்களிப்புகளைச் செய்யும் அதே வேளை, சுகாதார வழங்குநர்கள் மற்றும் சுகாதாரத் தொழிலாளர்கள் என, பல பெண்கள் தங்கள் குடும்பத்தின் இளம் மற்றும் வயதான உறுப்பினர்களைக் கவனித்துக்கொள்வதன் மூலம், வீட்டிலேயே அதிக வேலைகளைச் செய்து வருகின்றனர். இன்னும், துரதிர்ஷ்டவசமாக, பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது.
“எந்தவொரு சமுதாயத்திலும் பெண்கள் எப்போதும் ஒரு குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளனர், ஆனால் அவர்களின் முக்கியமான பங்களிப்புகள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை, பாராட்டப்படுவதில்லை. கல்வி மற்றும் வாய்ப்புகளின் முழு சமத்துவமும், முடிவெடுப்பதில் சமமான குரலும் கொண்ட வேறுபட்ட உலகத்தை உருவாக்குவதில் பெண்களின் முழு பங்கேற்பு, நித்தியமான சமூக ஒழுங்கை உருவாக்குவதற்கு இன்றியமையாததாகும். அவர்களுக்கு முழு சமத்துவம் கிடைக்கும் வரை, அமைதி ஒருபோதும் நனவாகாது. ”
இதுவரை அளித்த பங்களிப்புகளைப் பற்றி பிரதிபலிப்பதில் டாக்டர் மஹ்மூதி கூறுகிறார்: “இந்தத் தொடரின் நோக்கம் புரிதலையும் அறிவையும் விரிவுபடுத்துவதாகும், இதன் விளைவாக அதிக நடவடிக்கைகள் சாத்தியமாகும். உயர்ந்த மற்றும் யதார்த்தமான இலட்சியங்களும் நம்பிக்கையின் உணர்வும் கொண்ட ஒரு சிறிய மக்கள் குழுமம் உறுதியான நடவடிக்கை எடுக்கத் தொடங்கும் போது மாற்றம் உண்டாகின்றது. ”
இந்தத் தொடரின் கட்டுரைகளை பஹாய் இருக்கை வலைப்பதிவில் காணலாம்.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1440/