
ஹூத்திகளால் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஆறு பஹாய்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்
8 அக்டோபர் 2021
BIC (பிஐசி) ஜெனேவா – பல வருடங்களாக சனா’ஆ, யேமன் நாட்டு அதிகாரிகளால் பொய்க்குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்த ஆறு முக்கிய பஹாய்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என பஹாய் அனைத்துலக சமூகம் உறுதிப்படுத்தியுள்ளது.

திரு ஹமெட் பின் ஹைடாரா, திரு வலீட் அய்யாஷ், திரு அக்ரம் அய்யாஷ், திரு கைவான் காடெரி, திரு படியுல்லா சனாயி, மற்றும் திரு வாயெல் அல்-அரீகீ என பெயர் கொண்ட அந்த அறுவரும் ஏறத்தாழ மூன்றிலிருந்து ஏழு வருடங்கள் வரை மிகவும் மோசமான சிறைவாசத்தை அனுபவித்த பின்னர், உடல்நலம் மீள்ச்சி பெறக்கூடிய ஒரு பாதுகாப்பான இடத்தில் உள்ளனர்.
இந்த விடுதலைகளைத் தொடர்ந்து, பஹாய் அனைத்துலக சமூகம் இந்த அறுவர் உட்பட, குற்றம் சாட்டப்பட்ட மற்ற பஹாய்கள் அனைவருக்கும் எதிரான எல்லா குற்றச்சாட்டுகளையும் நீக்கவும், அவர்களின் சொத்துக்கள் மற்றும் உடைமைகளை திருப்பித் தரவும், மிக முக்கியமாக, யேமன் நாட்டில் உள்ள பஹாய்கள் அனைவரும் துன்புறுத்தலின் அபாயமின்றி தங்கள் நம்பிக்கைகளின்படி வாழ்வதற்கான உரிமைகள் பாதுகாக்கப்படவும் கோரிக்கை விடுத்துள்ளது.
“இன்று, இவ்விடுதலைகளை நாங்கள் வரவேற்றாலும், நாங்கள் சற்று கவலையுடனேயே இருக்கின்றோம் என்று பஹாய் அனைத்துலக சமூகத்தின் பிரதிநிதி டயேன் அலாயி கூறினார். “யேமனின் நீடித்த, சமுதாய அமைதிக்கான தேடல் தொடர்கையில், பஹாய்கள்-எல்லா யேமனியர்களையும் போலவே, மத அல்லது (சமய)நம்பிக்கை சுதந்திரம் குறித்த சர்வலோக கொள்கைகளுக்கு இணங்க, தங்கள் (சமய)நம்பிக்கையை பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் கடைப்பிடிக்க முடிய வேண்டும். ஆனால், குற்றச்சாட்டுகள் நீக்கப்படும் வரை இது சாத்தியமில்லை.”
“பஹாய் சர்வதேச சமூகம் யேமனுக்கான ஐ.நா. சிறப்பு தூதர் மற்றும் மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த செயல்முறை முழுவதும் தங்கள் ஆதரவை வழங்கிய அரசாங்கங்களுக்கும் அரசு சாரா நிறுவனங்களுக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம்.”
தொடர்புடைய பின்னணி தகவல்
ஒரு பொறியியலாளரான திரு. ஹைடாரா, 2013 டிசம்பரில் தமது சமய நம்பிக்கை காரணமாக அவரது பணியிடத்தில் கைது செய்யப்பட்டார். சரியான செயல்முறை இல்லாத, ஒரு நீண்ட நீதிமன்ற வழக்கைத் தொடர்ந்து, அவருக்கு 2018’இல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவரது மேல்முறையீடு 2020 இல் நிராகரிக்கப்பட்டது
பணித்திட்ட அதிகாரியான திரு. காடெரி, 2016’இல் ஓர் ஒன்றுகூடல் மீது நடத்தப்பட்ட சோதனையின் போது கைது செய்யப்பட்டார். ஏப்ரல் 2017’இல், யேமன் நாட்டின் ஒரு பழங்குடித் தலைவரான திரு. வலீட் அய்யாஷ், ஹுடாய்தாவுக்குச் செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு, யாருக்கும் தெரியாத ஓர் இடத்தில் தடுத்து வைக்கப்பட்டார். அதற்கு அடுத்த மாதம், தமது அறுபதாவது வருடங்களைத் தாண்டும் நிலையில் இருந்த ஒரு பொது உரிமை ஆர்வலரான திரு. அல்-அரீகீ, சனா’ஆவில் அதிகாரிகளால் கடத்தப்பட்டார். யேமனில் ஒரு முக்கிய சிவில் பொறியியலாளரான திரு. சனாயி தனது பணியிடத்தின் முன் கைது செய்யப்பட்டார். அக்டோபர் 2017’இல், ஓர் இலாப நோக்கற்ற அமைப்பின் மேலாளரான திரு. அக்ரம் அய்யாஷ், பஹாய் கொண்டாட்டம் ஒன்றின் போது பாதுகாப்புப் படையினர் நடத்திய திடீர் சோதனையின் போது கைது செய்யப்பட்டார். செப்டம்பர் 2018’இல், வேறு பத்தொன்பது பேருடன் இந்த ஐவரும், சனா’ஆவில் ஒரு நீதிமன்ற விசாரணையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
இந்த ஆறு பேரின் விடுதலையானது சனா’ஆவில் உள்ள உச்ச அரசியல் பேரவையின் தலைவர் திரு மஹ்தி அல் மஷாத் தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் அனைத்து பஹாய் கைதிகளையும் விடுவிக்கவும் திரு ஹைடராவுக்கு மன்னிப்பு வழங்கப்படவும் ஆணையிட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு, 2020 மார்ச் மாத இறுதியில் வருகிறது.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1443/