

தன்னிறைவைப் பேணுதல்: உள்ளூர் உணவு உற்பத்தியை ஃபன்டேக் (FUNDAEC) ஊக்குவிக்கின்றது
8 அக்டோபர் 2021
காலி, கொலம்பியா – கொலம்பியாவில் தொற்றுநோய் பரவியதால், வாழ்க்கையின் பல அம்சங்களைப் பற்றிய நிச்சயமற்ற நிலைமைகள் விரைவாக உருவாகின. நாட்டின் பஹாய் ஊக்கம் பெற்ற அமைப்பான FUNDAEC, நெருக்கடியினால் நீண்டகால பாதிப்புகள் இருக்கும் என்பதை உணர்ந்து, அது எவ்வாறு மிகுந்த தேவைகள் நிலவும் இந்த நேரத்தில் சமூகத்திற்கு நடைமுறையான சேவையை வழங்கிடக்கூடும் என்பதைப் பற்றி சிந்தித்தது.
ஃபன்டேக்’கின் நிர்வாக இயக்குநரான லெஸ்லி ஸ்டூவர்ட், உள்ளூர் உணவு உற்பத்தி முன்முனைவுகளுக்கு ஆதரவளிப்பதன்பால் அந்த அமைப்பு அதன் கவனத்தை எப்படி மிக விரைவாக திருப்பியது என்பதை விளக்கினார். நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது; ஒரு கோடி மக்களுக்கும் மேல் வேலையில்லாமல் இருக்கின்றனர்.
“சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அபிவிருத்தியைக் குறிக்கோளாகக் கொண்ட எங்களின் பல்வேறு கல்வியல் திட்டங்களின் ஓர் அம்சமாக உணவு உற்பத்தி உள்ளது. கடந்த மார்ச் மாதத்திலிருந்து உணவு உற்பத்தியைக் குறிக்கோளாகக் கொண்ட முன்முனைவுகளை ஆதரிக்கும் நான்கு பரந்த துறைகளில் ஃபன்டேக் கவனம் செலுத்தி வந்துள்ளது: வீட்டுத் தோட்டங்கள், பெரிய விவசாய நிலங்களின் சாகுபடி, உணவு உற்பத்தி செயல்முறை ஆகியவற்றுடன் விநியோகம் மற்றும் வணிகமயமாக்கல்.
FUNDAEC (Fundación para la Aplicación y Enseñanza de las Ciencias) எனும் அமைப்பு, கொலம்பியாவில் 1974’இல் நிறுவப்பட்டது, மேலும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் சமூகங்களின் நல்வாழ்வுக்கு பங்களிக்கும் வகையில் அவர்களில் திறனாற்றலை வளர்ப்பதற்காகத் தன்னை அர்ப்பணித்துள்ளது. இந்த மிகச் சமீபத்திய முயற்சியில், இணைய பணிமனைகளை உருவாக்குவதற்கு, உணவு உற்பத்தித் துறையில் அதன் பல தசாப்த கால அனுபவம், ஆராய்ச்சி ஆகியவற்றைப் பயன்படுத்தி, விவசாயத்தின் வெவ்வேறு அம்சங்களைப் பற்றி, உதாரணத்திற்கு விதைகளைத் தேர்வு செய்வது, பூமியின் ஆரோக்கியம், பூச்சிகள் மற்றும் நோய் நிர்வாகம், அறுவடை ஆகியவற்றை மக்கள் கற்றுக்கொள்வதற்கு உதவியது.

அபிவிருத்தி குறித்த ஃபன்டேக்கின் அணுகுமுறையானது, அறிவியல் மற்றும் சமயத்திற்கிடையிலான நல்லிணக்கம், மனிதகுல ஒருமை, சமுதாயத்திற்கான தன்னலமற்ற சேவை ஆகிய பஹாய் கோட்பாடுகளின் ஊக்கம் பெற்றதாகும். லௌகீக மற்றும் ஆன்மீக பரிமாணம் சார்ந்த சமுதாய முன்னேற்றத்திற்குப் பங்களிப்பதற்கான எங்களின் முயற்சியில் அறிவியலுக்கும் சமயத்திற்கும் இடையில் கலந்துரையாடலுக்கான ஒரு தேவை உள்ளதென நாங்கள் நம்புகின்றோம். நாகரிக நிர்மாணிப்பில் விவசாயம் ஒரு முக்கிய பங்காற்றுகின்றது. அது சமூக வாழ்வு குறித்த செயல்முறைகளுக்கு முக்கியமாகும், மற்றும் அறிவியல், சமயம் இரண்டிலும் காணப்படும் நுண்ணறிவுகளின் பயனை அது பெற வேண்டும்.
“இருப்பினும், விவசாய அமைப்புகளின் வளர்ச்சியை வழிநடத்தும் லௌகீகவாதம், அனைவருக்கும் செழிப்பைக் கொண்டுவர முடியவில்லை, மேலும் உணவுப் பிரச்சினை அந்த விவாதத்திற்கான மையமாகி வருகிறது. வளர்ச்சியையும் உணவு உற்பத்தியையும் நாம் புரிந்துகொள்ளும் விதத்திற்கு ஆன்மீகக் கொள்கைகள் எவ்வாறு உதவ முடியும்? எடுத்துக்காட்டாக, விவசாய நடைமுறைகள் நேர்மை மற்றும் ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதையும், நிலம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து முயற்சிகள் பணிவு மற்றும் மதிப்புணர்வுடன் மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

மத்திய கொலம்பியாவின் ஐப்பே’யில், ஒரு சிறிய மக்கள் குழுமம், பஹாய் உள்ளூர் ஆன்மீக சபையுடன் உடனுழைத்து ஒரு சிறிய பண்ணையைத் தொடங்கினர். மேயரின் அலுவலகம் மற்றும் ஒரு உள்ளூர் வேளாண் விஞ்ஞானியுடன் உறவுகளை வளர்த்துக் கொண்டதால், இந்த முயற்சி நியமிக்கப்பட்ட நிலத்தைச் சுற்றியுள்ள சுமார் 13 குடும்பங்களுக்கு தங்களின் சொந்த தோட்டங்களைத் தொடங்க உத்வேகமளித்து, 70’க்கும் மேற்பட்டவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படக்கூடிய ஒரு முதல் அறுவடைக்கு வழிவகுத்தது. இதையொட்டி அறுவடையிலிருந்து பயனடைந்த நபர்கள் அந்த முயற்சிகளின்பால் ஈர்க்கப்பட்டு, ஆரோக்கியமான, உயிர்மான மற்றும் நியாயமான முறையில் விநியோகிக்கப்படும் உணவு மூலம் தங்கள் சமூகத்திற்கு சேவை செய்வதில் ஓர் உயர்ந்த நோக்கத்தைக் கண்டறிந்துள்ளனர்.
FUNDAEC’இன் திட்டங்களின் ஒருங்கிணைப்பாளரான எவர் ரிவேரா கூறுகையில், “மக்கள் தங்கள் சமூகங்களுக்கான உணவை உற்பத்தி செய்வதில் உள்ள உதாரணம் தொற்றிக்கொள்வதாகும். “இதற்கு முன் உணவை உற்பத்தி செய்யாத நபர்களுக்கு அவர்களைச் சுற்றியுள்ளவர்களின் முன்மாதிரியும் ஆதரவும் துணையும் உண்டு. அண்டையர்களுக்கிடையிலான அன்றாட உரையாடல்கள் கூட உணவு உற்பத்தி குறித்த உள்ளூர் அறிவை உருவாக்குகின்றன.”

துச்சின்’னில் உணவு உற்பத்தி முன்முனைவுகளின் பங்கேற்பாளர்களுள் ஒருவரான அரெலிஸ், மக்கள் தங்களைச் சுற்றியுள்ள நிலத்தின் மீது இப்போது எவ்வாறு வேறு வகையில் தொடர்பு கொள்ள ஆரம்பித்துள்ளனர் என்பதைக் கண்டு வியப்படைந்துள்ளார். அவர் கூறுகிறார், “குடும்பங்கள் தாங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் இடங்களில் உணவு உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என்பதை உணர்ந்து ஊக்கமடைந்துள்ளனர். மேலும், நெருக்கடி தருணங்களின் போது என்ன நேர்மறையான விஷங்கள் ஏற்படக்கூடும் என்பதையும் மக்கள் கண்டிருக்கிறார்கள்.”
ஐப்பி’யைச் சேர்ந்த யெஸ்னேயர் தனது ஊரில் விவசாய கலாச்சாரம் கிடையாது எனவும், உணவு பொதுவாக கிராமப்புறங்களிலிருந்து எவ்வாறு இறக்குமதி செய்யப்படுகிறது என்பதையும் விளக்குகிறார். இருப்பினும், FUNDAEC’இன் இணைய பயிற்சிகள் மக்கள் தங்கள் நிலத்தை வித்தியாசமாகக் கண்ணுறு உதவுகின்றன. “மண் உள்ள எந்தவொரு நிலத்திலும் விதைகளை நடவு செய்வதற்கான இயலாற்றலை நாங்கள் உணர்ந்துள்ளோம்!”

பட்டறைகளுக்கு மேலதிகமாக, FUNDAEC நாடு முழுவதும் பங்கேற்பாளர்களை உள்ளூர் முன்முயற்சிகளிலிருந்து உருவாக்கப்படும் அறிவு வளர்ச்சியுடன் இணைக்கின்ற, மாத சஞ்சிகை ஒன்றைத் தயாரித்து விநியோகித்து வருகிறது.
அதன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, அரசாங்க அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடையே விவசாயம் குறித்த சொற்பொழிவுக்கும் இந்த அமைப்பு பங்களிக்கிறது. “இது, ஆழ்ந்த பாரம்பரிய அறிவைக் கொண்ட விவசாயிக்கும் நவீன அறிவியலின் சிறந்த நடைமுறைகளைக் கொண்டுவரும் வேளாண் அறிவியல் மாணவருக்கும் இடையில் ஓர் உரையாடலைத் ஆரம்பிப்பது பற்றியதாகும்” என்று திருமதி ஸ்டீவர்ட் கூறுகிறார். “இந்த உரையாடல் ஒருபுறம், கடந்த காலங்களின் ‘எளிமையான வழியை’ தேவையில்லாமல் ஒரு காவியமாக்குதலையும், மறுபுறம், நவீன தொழில்நுட்பங்களை ஆராயாமல் ஏற்றுக்கொள்வதையும் தவிர்க்கிறது. அதற்கு பதிலாக, விவசாயியின் ஆழ்ந்த மரபுகளையும் ஆன்மீகக் கொள்கைகளையும் ஒன்றிணைக்கும் ஒரு மாற்று அமைப்பை உருவாக்க இது அனுமதிக்கிறது-இயற்கைக்கு நன்றி செலுத்துவதுடன், நவீன வேளாண்மையின் நுண்ணறிவு மற்றும் சிறந்த நடைமுறைகளுடன் எதிர்கால தலைமுறையினருக்காக நிலத்துடனான ஒருவரின் உறவின் தாக்கத்தை புரிந்துகொள்வது.

தொற்றுநோயின் ஆரம்பத்திலிருந்து நாடு முழுவதும் 1,500 க்கும் மேற்பட்ட மக்கள் இப்போது FUNDAEC’ஆல் வழிநடத்தப்பட்ட கிட்டத்தட்ட 800 விவசாய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த முயற்சிகளிலின் ஆரம்ப அறுவடைகளைப் பற்றி பிரதிபலிக்கும் திருமதி ஸ்டீவர்ட் இவ்வாறு கூறுகிறார்:
அறுவரை நேரம் ஒரு விசேஷமான நேரம். இது பிரதிபலிப்பைத் தூண்டுகிறது மற்றும் தாவரங்கள் வளர்வதைப் போலவே, நாமும் மக்களாகவும் ஒரு சமூகமாகவும் நம் திறன்களில் வளர்கிறோம் என்பதை மக்கள் மதித்துணர அது வகை செய்கிறது. இந்த முயற்சிக்கு குறிப்பிட்ட சில ஆன்மீகப் பண்புகள் இன்றியமையாதவை என்பதை பங்கேற்பாளர்கள் உணர்கின்றனர். நெருக்கடி நேர தேவைகளின்போது, விரைவான கூட்டு பிரதிசெயலுக்கு ஒற்றுமை அவசியம். விதைக்கப்பட்ட விதைகள் முளைவிடும் என்பதில் நம்பிக்கை கொள்வதற்கு சமயநம்பிக்கை அவசியம். தாவரங்கள் வளர்ந்து மேம்பாடு காண காத்திருப்பதற்கும், அதன்போது நிகழக்கூடிய பின்னடைவுகளை எதிர்கொள்வதற்கு பொறுமை அவசியம். அன்றாட பணிகளை மேற்கொள்வதற்கு அன்பு, விடாமுயற்சி மற்றும் தளரா ஊக்கம் தேவை.
“இந்தக் காலம், பூமியைக் கவனித்து பாதுகாப்பதன் மூலம் அதன்” தாராளத்தன்மைக்கு “நன்றி செலுத்துவதற்கான ஒரு காலமாகும்.”
மூலாதாரம்: https://news.bahai.org/story/1445/