
பஹாய் உலக மையம் – சில மாதங்களுக்கு முன்பு ‘அப்துல்-பஹா நினைவாலயத்திற்கான வடிவமைப்பு கருத்துரு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தக் கட்டிடத்தின் அஸ்திவாரங்கள் இப்போது போடப்பட்டு, கட்டுமானம் ஒரு புதிய கட்டத்தை நெருங்கியுள்ளது. தொற்றுநோய் தொடங்கியதிலிருந்தே இந்த திட்டம் தொடர்வதுடன், சம்பந்தப்பட்ட அனைத்து பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொருத்தமான சுகாதார நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன.
கடந்த மாதங்களில் ஆழமான நிலத்தடி தூண்களால் ஆதரிக்கப்படும் நிலையான அஸ்திவாரங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஒரே இரவில் கான்கிரீட் ஊற்றப்பட்டு, 2,900 சதுர மீட்டர் பரப்பளவிலான ஒரு தளமேடை சமீபத்தில் தளத்தின் மையத்தில் போடப்பட்டது. இது மத்திய அடித்தல பணிகளை நிறைவு செய்தது.

தளத்தின் பரந்த வட்டத்திற்குள், சரிவான தோட்டங்களுக்கு அடித்தலம் அமைக்கப்பட்டுள்ளது. அவை சுற்றிவரும் பாதையிலிருந்து உயர்ந்து, ‘அப்துல்-பஹாவின் புனித உடல் நல்லடக்கம் செய்யப்படவிருக்கும் இடத்தின் உச்சக்கட்டத்தை அடைகின்றன.
கட்டுமானத்தின் இறுதி கட்டங்களுக்குத் தேவையான அனுமதியைப் பெறுவதற்கான பல்கூறான செயல்முறை இப்போது நிறைவடைந்துள்ளது. நினைவாலயத்தின் வடிவமைப்பைச் செயல்படுத்த உள்ளூர் அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். இது மைய கட்டமைப்பை அடிவாரத்திற்கும் அஸ்திவாரத்திற்கும் மேலாக உயர்த்த அனுமதிக்கிறது.


உலகளாவிய சுகாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த முக்கியமான முயற்சியை மேற்கொள்வதில் பஹாய் உலகம் ‘அப்துல்-பா’வின் உதாரணத்திலிருந்து அதன் உத்வேகத்தைப் பெறுகிறது.
அக்காநகரத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டிருந்தாலும், ‘அப்துல்-பஹா கார்மல் மலையில் ஒரு பொருத்தமான நினைவாலயத்தின் கட்டுமானத்தை வழிநடத்தினார். இந்த சன்னதி, இறுதியில் பாப் பெருமானார் திருவுடலின் நிரந்தர ஓய்விடமாக இருக்கும்.
“அந்தக் கட்டிடத்தின் ஒவ்வொரு கல்லும், அதற்குச் செல்லும் சாலையின் ஒவ்வொரு கல்லும், எல்லையற்ற கண்ணீருடனும் பெரும் செலவிலும் எழுப்பப்பட்டு நிலைநிறுத்தப்பட்டுள்ளன,” என அப்துல்-பஹா குறிப்பிட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1454/