முன்னோடி மண்பாண்டக் கலை கிழக்கு மற்றும் மேற்கின் ஐக்கியத்தை நாடியது


முன்னோடி மண்பாண்டக் கலை கிழக்கு மற்றும் மேற்கின் ஐக்கியத்தை நாடியது


8 அக்டோபர் 2021


லண்டன் – நூறு ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டு குயவுக் கலைஞர்கள்-ஒருவர் ஆங்கிலேயர், மற்றவர் ஜப்பானியர்-கிழக்கு மற்றும் மேற்கின் கலை மற்றும் மரபுகளை ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் ஒரு படைத்தல் மாமுயற்சியைத் தொடங்கினர்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் ஸ்தாபிக்கப்பட்ட மட்பாண்ட பாரம்பரியம் மனிதகுல ஒற்றுமை குறித்த பஹாய் கோட்பாட்டினால் ஈர்க்கப்பட்டு கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளை ஒன்றிணைக்க முயன்றது.

பெர்னார்ட் லீச் 1887’இல் ஹாங்காங்கில் பிறந்து ஜப்பான் மற்றும் சிங்கப்பூரில் வளர்ந்தார். தமது ஆரம்ப ஆண்டுகளிலிருந்தே, கிழக்கு மற்றும் மேற்கு நாடுகள் சந்திக்கவும் ஒன்றிணையவும் வேண்டியதன் அவசியத்தை அவர் ஆதரித்தார். அவரது கருத்தியல் மற்றும் மனிதகுலத்தின் மீதான தீவிர அக்கறை, அவரது கைவினை மூலம் வெளிப்பாடு கண்டது; பின்னர், அவர் பஹாய் சமயத்தைத் தழுவியதால் அது பலப்படுத்தப்பட்டு விரிவடைந்தது.

1920 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, லீச் தனது நண்பரான ஷோஜி ஹமாடாவுடன் இங்கிலாந்தின் செயின்ட் ஐவ்ஸ்’இல் ஸ்தாபித்த லீச் மட்பாண்டம், உலகின் மிக முக்கியமான மற்றும் செல்வாக்குமிக்க கைவினைப் பட்டறைகளில் ஒன்றாக மாறியது. அதன் நூற்றாண்டு விழா இப்போது பல சிறப்பு கண்காட்சிகளால் குறிக்கப்பட்டுள்ளது, இதில் ஃபார்ன்ஹாமில் உள்ள கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகத்தை அடிப்படையாகக் கொண்ட கைவினை ஆய்வு மையம் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க வைட் சேப்பல் கேலரி ஆகியவை அடங்கும். லீச் மட்பாண்ட மையத்திலேயே, படைப்பு முன்முயற்சிகளின் ஒரு நிகழ்ச்சிநிரலும் ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.

கைவினை ஆய்வு மையத்தின் இயக்குனர் பேராசிரியர் சைமன் ஓல்டிங் கூறுகையில், “லீச் பானை ஒரு பொருள் மட்டுமல்ல, யோசனைகள், எண்ணங்கள், குணாதிசயங்கள் போன்ற ஒரு வகையான களஞ்சியமாகவும் அது கருதப்படுகிறது. “கை, இதயம் மற்றும் தலை ஆகியவை ஒன்றிணைந்து செயல்படுகின்றன எனவும், அவற்றை ஆன்மீக மற்றும் மனிதநேய வாழ்க்கை சார்ந்த தனது சொந்த உணர்வுடன் இணைத்துக்கொள்ளவும் முடியும் எனவும் அவர் ஆழமாக நம்பினார்.”

புஜீமாவின் மருசன் சூளையில் ஜப்பானிய மாணவர்களுக்கு பெர்னார்ட் லீச் கற்பிக்கின்றார். கிராப்டிவ் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் கைவினை ஆய்வு மையத்தில் உள்ள பெர்னார்ட் லீச் காப்பகத்திலிருந்து, பி.எச்.எல் / 12677.

கிழக்கு மற்றும் மேற்கின் ஓர் இணைப்பாக்கம்

இளம் லீச் லண்டனில் சித்திரம் மற்றும் அச்சு தயாரித்தல் ஆகியவற்றைப் பயின்று, 1908’இல் பொறித்தல் (etching) போதிப்பதற்காக ஜப்பானுக்குத் திரும்பினார். வரி சித்திரத்தில் அவரது தேர்ச்சியைக் காட்டும் – அவரது முதல் படைப்புகள் சில ஃபார்ன்ஹாமில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல 1970’களில் லீச்சிற்காக பணியாற்றிய ஒரு பஹாய் ஆன மறைந்த ஆலன் பெல் தொகுப்பிலிருந்து கிடைத்தவையாகும். இது சமீபத்தில் கைவினைப் படிப்பாய்வு மையத்தால் கையகப்படுத்தப்பட்ட பெல் காப்பகம், இதற்கு முன்பு பகிரங்கமாகக் காட்டப்படாத பல கைவிணைகளை உள்ளடக்கியுள்ளது.

“கண்காட்சியின் தொடக்கமானது அவரது ஆரம்பகால மற்றும் இதுவரை பார்க்கப்படாத மாணவ வரைபடங்களை அவரது ஆரம்பகால ஜப்பானிய பொறிப்புகளுடன் தொடர்புபடுத்துகிறது” என்று பேராசிரியர் ஓல்டிங் கூறுகிறார். “ஜப்பானில் லீச் தனது சுய உருவப்படங்களில் மட்டுமின்றி, நிலப்பரப்பை சித்தரிப்பதிலும் தன்னைத்தானே நிலைப்படுத்திக்கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இது. ஜப்பான் அவரது மனதிலும் அவரது நடைமுறையிலும் ஆழமாக பதிந்துள்ளது.”

டோக்கியோ, 1911 அறியப்படாத ஒருவரின் உதவியுடன் லீச் தயாரித்த முதல் ராகு வகை பானைகளில் ஒன்று. © கைவினை ஆய்வு மையம், கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகம், பி .75.67.

ஜப்பானில், அந்நாட்டின் பீங்கான் மரபுகளால் லீச் ஈர்க்கப்பட்டு, கைவினைக் கற்றலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, கிழக்கு மற்றும் பழைய ஆங்கில நுட்பங்களை இணைக்கும் அணுகுமுறையை உருவாக்கினார். பின்னர், 1920’இல், அவரும் ஹமாடாவும் செயின்ட் ஐவ்ஸ்’இல் ஒரு மட்பாண்ட மையத்தை அமைப்பதற்கான ஒரு நல்கையை (sponsorship) ஏற்றுக்கொண்டனர். ஆனால், சூளைகளுக்கு எரிபொருளைத் தருவதற்கு அவசியமான, கார்ன்வாலின் மரப் பற்றாக்குறை, மற்றும் உள்ளூர் களிமண் மற்றும் மெருகூட்டல்களுக்கான இயற்கை பொருட்களின் மோசமான கிடைக்கை ஆகியவை அவர்கள் செய்யத் திட்டமிட்டிருந்த சூழலுக்கும் குறைவான ஒரு சூழலை உண்டாக்கின. பல சவால்கள் மற்றும் மோசமான சூழல்களிலும் விடாமுயற்சியுடன், கலைஞர்-கைவினைஞர் குயவுக் கலைஞருக்கு ஒரு புதிய சகாப்தத்தை நிறுவுவதாகவும், பொருள்களுக்கு சத்தியத்தின் கருத்தை மீண்டும் நிலைநிறுத்துவதாகவும், எளிய வடிவமைப்பு மற்றும் நுட்பமான வண்ணங்களின் அழகை உறுதிப்படுத்துவதாகவும் லீச்’சும் ஹமாடா’வும் நம்பினர். கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளின் இணைப்பாக்கம் குறித்த அவர்களின் நம்பிக்கை அவர்களின் அணுகுமுறைக்கு அடித்தளமாக இருந்தது.

“லீச் கிழக்கு ஆசிய மட்பாண்டங்களிலிருந்து தனது சொந்த படைப்புகளில் ஐக்கொனோ கிராஃ முறையை அறிமுகப்படுத்தினார்” என்று பேராசிரியர் ஓல்டிங் கூறுகிறார். “இங்கிலாந்திற்கும் ஜப்பானுக்கும் இடையிலான முறைசார்தல், முறைசாராமை இரண்டையுமே நீங்கள் காணலாம்.” எளிய அலங்கார கருக்களான இலைகள், பறவைகள் மற்றும் மீன் ஆகியவற்றை  லீச் தனது பானைகளில் நிறைவடையச் செய்தார்.

லண்டனின் வைட் சேப்பல் ஆர்ட் கேலரியில் கெய் ஆல்டோஃப் கோஸ் உடன் பெர்னார்ட் லீச் எனும் கண்காட்சியில் ‘லில்லிகளுடன் சாலமன்’ என்ற தலைப்பில் பெர்னார்ட் லீச்சின் ஒரு குவளை. பட உபயம் லெய்செஸ்டர் அருங்காட்சியகங்கள் © பெர்னார்ட் லீச் எஸ்டேட்.

நம்பிக்கை மற்றும் நடைமுறை

1940 ஆம் ஆண்டில் லீச் முறையாக ஏற்றுக்கொண்ட–அவரது நண்பரான அமெரிக்க ஓவியர் மார்க் டோபியால் அறிமுகப்படுத்தப்பட்ட–பஹாய் சமயத்தை அவர் கண்டுபிடித்ததன் மூலம் அவரது தனிப்பட்ட நம்பிக்கைகள் பலப்படுத்தப்பட்டன. அவருடன் குறிப்பாக ஒத்திசைவு கண்ட பஹாவுல்லாவின் போதனைகளில் ஒன்று, “… கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் உண்மையான மதிப்பு பாராட்டப்பட வேண்டும், ஏனென்றால் அவர்கள் மனிதகுலத்தின் விவகாரங்களை முன்னேற்றுகிறார்கள்,” என்பதாகும்.

அழகான, கையால் செய்யப்பட்ட கைவினைப்பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் சமூகத்தின் நல்வாழ்வுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க முடியும் என்று லீச் எப்போதும் நம்பியிருந்தார். ஆனால், காலப்போக்கில், மனிதகுலம் எதிர்கொள்ளும் பெரிய சவால்களை எதிர்கொள்வதற்கான ஒரே தீர்வு அதிக அளவில் ஒற்றுமையை அடைவதே என்பதை அவர் உணர்ந்தார். “பஹாவுல்லா ஓர் அவதாரம் என நான் நம்புகிறேன், மனிதகுல சமுதாயத்தை ஸ்தாபிக்கக்கூடிய ஆன்மீக அடித்தளத்தை வழங்குவதே அவரது பணி” என்று அவர் எழுதினார். 1954’இல் அவர் புனித பூமிக்கு யாத்திரை மேற்கொண்டபோது அவரது ஆன்மீக உணர்வுகள் மேலும் தூண்டப்பட்டன. கிழக்கு மற்றும் மேற்கு இடையே அதிக ஒற்றுமைக்கு பங்களிப்பதற்கான தனது முயற்சிகளை முடுக்கிவிட வேண்டும் என்ற அவரது உணர்வை பஹாய் ஆலயங்களில் அவரது பிரார்த்தனைகளின் அனுபவம் வலுப்படுத்தியது.

“பூரணத்துவத்தை நோக்கி முயல்வோமானால், ​​கலை மதத்துடன் இணைவான ஒன்றாகும், மற்றும் இந்த உண்மை கிழக்கில் சிறப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது” என்று லீச் தனது நீண்ட வாழ்க்கையின் முடிவில் எழுதினார். “புத்தியையும் உள்ளுணர்வையும், இதயத்திலிருந்து தலையையும், மனிதனைக் கடவுளிடமிருந்தும் பிரித்தபோது நமது இருமைவாதம் தொடங்கியது.”

தமது மகன் டேவிட் மற்றும் மாணவர்களுடன் இங்கிலாந்தின் செயின்ட் இவ்ஸில் உள்ள பழைய மட்பாண்ட மையத்தில் . கிராஃப்ஸ் ஸ்டடி சென்டரில் உள்ள பெர்னார்ட் லீச் காப்பகத்திலிருந்து, கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகம், பி.எச்.எல் / 8999A

பயிற்றலின் முக்கியத்துவம் லீச் மட்பாண்டத்தின் நடைமுறையின் மையமாக இருந்தது. சுற்றியுள்ள பகுதி மற்றும் வெளிநாடுகளில் இருந்து மாணவர்கள் மற்றும் பழகுனர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டனர், இது ஒரு தனித்துவமான சர்வதேச சூழலை உருவாக்கியது. முட்டைக் கோப்பைகள் முதல் பெரிய சமையல் பானைகள் வரை 100’க்கும் மேற்பட்ட நிலையான வடிவமைப்புகளை மீண்டும் மீண்டும் தயாரிக்கும் பணியில் பயிற்சி பெற்றவர்கள் பணிபுரிந்ததால், குயவுக் கலைஞர்கள் எனும் முறையில் கடுமையான பட்டறை ஒழுக்கம் மாணவர்களின் எதிர்கால வெற்றிக்கு அத்தியாவசிய அடித்தளமாகக் காணப்பட்டது.

பேராசிரியர் ஓல்டிங் குறிப்பிடுகையில், “சாராம்சத்தில், இந்த ஸ்தாபகக் கோட்பாடுகள் மற்றும் பானைகளாக அவர் கருதியவற்றிலிருந்து லீச் விலகிச் செல்லவில்லை. இந்த பயிற்சி பெற்றவர்கள் பின்னர் தங்கள் சொந்த மட்பாண்ட மையங்களை நிறுவி, அதே மரபுவழியில் பணிபுரிந்து, சிறிய அளவிலான ஸ்டுடியோ மட்பாண்டவியலை, கடினமான ஆனால் நிறைவான படைப்பு மற்றும் உணர்ச்சிபூர்வமான வாழ்க்கையை நடத்தக்கூடிய வழிமுறையாக அவர்கள் கண்டனர். ”

காய் ஆல்டோஃப் பெர்னார்ட் லீச்சுடன் பயணிக்கின்றார், லண்டனின் வைட் சேப்பல் கேலரியில் 7 அக்டோபர் 2020 – 10 ஜனவரி 2021’இல், ஓர் இளம் பார்வையாளர் நிறுவலில் ஒரு பெர்னார்ட் லீச் குடத்தை ஆய்வு செய்கிறார்,. புகைப்படம்: பாலி எல்டெஸ்

லீச் ஸ்தாபித்த மரபு, இருபதாம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் ஆதிக்கம் செலுத்தி, உலகம் முழுவதும் எண்ணற்ற இரசிகர்களை ஈர்த்தது. வைட் சேப்பல் கேலரியில், சமகால ஜெர்மன் கலைஞர் காய் ஆல்டோஃப் முக்கிய சேகரிப்பிலிருந்து லீச்’சின் 45 பொருட்கூறுகளைத் தேர்ந்தெடுத்துள்ளார், இதற்காக அவர் சிறப்புக் கண்ணாடிக் கூடுகளை (vitrines) வடிவமைத்துள்ளார்.

“அல்தாஃப் பெர்னார்ட் லீச்சின் வேலை மற்றும் பொருள்களை உருவாக்குவதற்கான அவரது அணுகுமுறை ஆகியவற்றினால் ஈர்க்கப்பட்டுள்ளார்” என்று கியூரேட்டர் எமிலி பட்லர் கூறுகிறார். “கலைகளுடனும் பொருள்களுடன் எவ்வாறு வாழ முடியும் மற்றும் பயனுள்ளதாகவும் இருக்கும் அழகு மற்றும் பயன்பாட்டின் இந்த இணைப்பாக்கத்தில் அவர் மிகவும் ஆர்வமாக உள்ளார். காய் ஆல்டோஃப் பெர்னார்ட் லீச்சுடன் பயணிக்கிறார் எனும் கண்காட்சியின் தலைப்பின் மூலம், எனது பணி தத்துவம் பெர்னார்ட் லீச் போன்றதாக இருக்க விரும்புகிறேன் என்று அவர் கூறுகிறார்.”

பெர்னார்ட் லீச் மற்றும் ஷோஜி ஹமாடா, ஒரு ஆங்கில இடைக்கால குடத்தை இரசிக்கிறார்கள், 1966. கிராஃப்டிவ்ஸ் ஸ்டடி சென்டரில் உள்ள பெர்னார்ட் லீச் காப்பகத்திலிருந்து, கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகம், பி.எச்.எல் / 12872.

ஹமாடா 1978 இல் இறந்தார், அடுத்த ஆண்டு 92 வயதில் லீச் மரணித்தார், ஆனால் கலாச்சாரங்களுக்கிடையில் ஒரு நீடித்த நட்பையும் புரிந்துணர்வையும் உருவாக்க இந்த இரண்டு குயவுக் கலைஞர்களும் வேலை செய்வதற்கான ஒரு வழியை எங்கு நிறுவினார்கள் என்பதைப் பார்க்க பார்வையாளர்கள் இன்னும் உலகம் முழுவதிலுமிருந்து செயின்ட் ஐவ்ஸ்’க்குப் பயணம் செய்கின்றனர். அதன் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில், லீச் மட்பாண்டம் ஓராண்டு கால நடவடிக்கைகளைத் திட்டமிட்டிருந்தது, மற்றும் அவற்றில் பெரும்பாலானவை தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கவோ அல்லது மாற்றவோ கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.

அதன் தற்போதைய இயக்குனர் லிப்பி பக்லி கூறுகையில், “லீச் மட்பாண்டம் எப்போதுமே மாறிவரும் பின்னணியில் மீள்திறத்தை வெளிப்படுத்தியுள்ளது, மேலும் காலத்தின் சோதனையினின்று தப்பிப்பிழைத்து வருகிறது, தொடர்ந்து சவால்களின் எதிரில் புதுமைகளைப் புகுத்தி சவால்களுக்கு பதிலளிக்கிறது. மேலும், எங்கள் நிறுவனர்களின் உறுதியான மனப்பான்மையில், நாங்கள் இவ்வாறுதான் தொடர்ந்து தடையின்றி செயல்படுகிறோம்.”

“நவீன மற்றும் உற்சாகமான வழிகளில், நமது மிகவும் நெருக்கடியான வருடத்திலும், இனி வரும் காலத்திலும், கற்றுக்கொள்வது, கௌரவிப்பது மற்றும் பெர்னார்ட் லீச் மற்றும் ஷோஜி ஹமாடாவின் மரபுகளைத் தொடர்வதில் இந்த முக்கியமான ஆண்டு முழுவதும் மக்கள் தொடர்ந்து எங்களுடன் சேர்ந்து கொண்டாடுவார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1458/