
பெய்ரூட் இளைஞர்கள் பேரழிவு மீட்சி வலையமைப்பை உருவாக்குகிறார்கள்
8 அக்டோபர் 2021
பெய்ரூட், 16 அக்டோபர் 2020, (BWNS) – ஆகஸ்ட் மாதத்தில் பெய்ரூட்டை உலுக்கிய வெடிப்புக்குப் பின்னர், பஹாய் சமூக நிர்மாணிப்பு முயற்சிகளில் ஈடுபட்டிருந்த இளைஞர் குழு ஒன்று விரைவாகச் சந்தித்து நிவாரணம் மற்றும் மீட்புக்கு உதவுவதற்கான திட்டங்களை உருவாக்கியது. தங்களைச் சுற்றியுள்ள மக்களின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க “உதவி மையம்” என்று அழைக்கப்படும் ஒரு தன்னார்வ வலையமைப்பை அவர்கள் உருவாக்கினர், இது அடுத்தடுத்து வந்த மாதங்களில் தொடர்ந்துவரும் தேவைகளின்பால் கவனம் செலுத்தும் ஒன்றாக பரிணமித்தது.
“நாங்கள் எந்த வகையிலாவது உதவ வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும்,” என்று இந்த முயற்சியின் முன்னணியில் உள்ள இளைஞர்களில் ஒருவரான கரீம் மோஸஹேம் கூறுகிறார்.
ஆன்மீக மற்றும் தார்மீக வலுவூட்டலை நோக்கமாகக் கொண்ட இளைஞர்களின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் அவர்களுக்கு ஒத்துழைப்பைப் பேணுவதற்கான அனுபவத்தையும், சிறு குழுக்களிடையே பகிரப்பட்ட முயற்சியின் ஓர் உணர்வையும் அளித்தன. இப்போது அவர்கள் ஒரு தன்னார்வ வலையமைப்பை உருவாக்குவதற்கு இந்த திறனை வாய்க்காலிடலாம்.
“நாங்கள் ஒரு மிகச் சிறிய நடவடிக்கையை எடுக்க முடிவு செய்தோம், இது உதவி தேவைப்படும் மற்றவர்களைக் கண்காணிக்கவும், ஏற்கனவே இருந்த முயற்சிகளை அடையாளம் காணவும் ஒரு செய்தியிடல் குழுவை ஆரம்பித்து, எங்கள் சமூக நிர்மாணிப்பு முயற்சிகளின் மூலம் நாங்கள் சந்தித்த எங்கள் நண்பர்கள் மற்றும் மக்கள் அனைவரையும் அழைக்க வழிவகுத்தது.

“நாங்கள் தொடங்கியபோது, ‘நாம் 10 இளைஞர்கள் மட்டுமே. நாம் எவ்வாறு உதவ முடியும்?’ என சிந்தித்தோம். ஆனால் நாங்கள் எங்கள் சமூகத்திற்கும் நம் நாட்டிற்கும் சேவை செய்ய விரும்பினோம். அந்த 10 பங்கேற்பாளர்கள் விரைவாக பல்வேறு வயது மற்றும் பின்னணியைச் சேர்ந்த உதவி வழங்கிடும் 80 தன்னார்வலராக அதிகரித்த போது நாங்கள் நம்பிக்கை அடைந்தோம்”
சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் சேவையின் உணர்வைப் பகிர்ந்து கொண்டனர். அது கடினமான சூழ்நிலைகளில் பணியாற்ற தேவையான சக்தியை அவர்களுக்கு வழங்கியது. ஒரு மாதத்திற்கும் மேலாக, அவர்கள் தினமும் 300 உணவுகளை விநியோகித்து வந்தனர், அத்துடன் ஆடை நன்கொடைகளையும் ஏற்பாடு செய்தனர், சேதமடைந்த சொத்துக்களை சுத்தம் செய்ய உதவினர், உடைந்த ஜன்னல்களை மூடினர், மற்றும் பிற பணிகளை மேற்கொண்டனர். தங்களையும் பிறரையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க பொருத்தமான உபகரணங்களைப் பயன்படுத்துவது, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது ஆகியவற்றில் அவர்கள் எச்சரிக்கையாக இருந்தனர்.
தன்னார்வலர்கள் உணர்ந்த ஆற்றல் மற்றும் அவசர உணர்வு முறைமையான நடவடிக்கை மூலம் மிகவும் திறம்பட மாற்றப்படும் என்பதை முன்முயற்சியின் மையத்தில் உள்ள இளைஞர்கள் அனுபவத்தின் மூலம் அறிந்திருந்தனர். ஒவ்வொரு காலையிலும், உதவியளிப்புக்கு வெளியே செல்வதற்கு முன், தொண்டர்களிடையே பணிகளின் விவரம் விநியோகிக்கப்படும். மாலை நேரங்களில், அந்தக் குழு அந்த நாளின் அனுபவத்தைப் பற்றி சம்பந்தப்பட்ட அனைவருடனும் பிரதிபலிக்கும், தேவைகளை மதிப்பீடு செய்யும் மற்றும் அடுத்த நாளுக்கான புதிய பணிகளின் பட்டியலைத் தீர்மானிக்கும்.
லெபனானின் பஹாய் தேசிய ஆன்மீக சபை உறுப்பினரான ஹோடா வாலஸ், “இந்த சிறிய இளைஞர் குழு எவ்வாறு நடவடிக்கைக்காக முன்னெழுந்தது என்பதைப் பார்ப்பது மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது” என்கிறார். இளம் வயதினராக இருந்தாலும், அவர்கள் பல ஆண்டுகளாக தங்கள் சமூகங்களுக்கு சேவை செய்து வருகின்றனர், மேலும் பஹாய் போதனைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கல்வி செயல்முறை மூலம் அவர்களின் திறன்களை வளர்த்து வருகின்றனர்.
அது அவர்கள் சமூகத்தின் தேவைகளை நிவர்த்தி செய்வதில் தங்களை முகவர்களாக பார்ப்பதற்கு அவர்களுக்கு உதவுகிறது. அடிப்படை புள்ளிவிவரங்களை பராமரித்தல், வளங்களை அடிப்படையாகக் கொண்டு திட்டமிடுதல் மற்றும் உதவி மையத்தை ஒழுங்கமைக்கும்போது இயற்கையாகவே வந்த கற்றல் முறையில் செயல்படுவது போன்ற ஒழுங்கமைப்புத் திறன்களை அவர்கள் பெற்றுள்ளனர். ”

முன்முயற்சியின் மையத்தில் பணிபுரிபவர்கள் இணையதள கூட்டங்களில் தங்கள் சமூகத்துடன் சேர்ந்து பிரார்த்தனை செய்வது தங்களுக்கு ஆதரவாக இருப்பதைக் கண்டனர். திருமதி வாலஸ் கூறுகிறார், “பிரார்த்தனையானது, அதிர்ச்சி மற்றும் சோகம் சார்ந்த அந்த நாட்களில் பலரைத் தக்க வைத்துக் கொண்டதுடன், நம்பிக்கையையும் தந்தது. ஒரு பக்தி மனப்பான்மையின் முக்கியத்துவத்தை நாங்கள் காண்கிறோம், இது இந்த பேரழிவை எதிர்கொள்வதில் நமக்கு மேலும் மீட்சித்திறம் வழங்கும் சமூக உறவுகளுக்கு வலுவூட்டவும் ஆன்மீக வேர்களை ஆழப்படுத்தவும் உதவுகிறது.”
தன்னார்வலர்களில் பலர் இந்த நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளபோதும், மற்றவர்களுக்கு சேவை செய்வதில் நம்பிக்கையைக் கண்டனர். மருத்துவ மனோத்ததுவ நிபுணரான மஹா வாகிம் கூறுகிறார்: “என் அலுவலகம் அழிக்கப்பட்டது, அது எனக்கு பேரழிவை ஏற்படுத்தியது. ஒன்றும் செய்யாமல், நிராதரவானவர் என நினைப்பதற்குப் பதிலாக, ஒரு நண்பர் என்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்தியபோது நான் ஹெல்பிங் ஹப் உதவி மையத்தில் சேர்ந்தேன். இது என்னை குணப்படுத்தும் பயணத்தின் முதல் படியாகும். எழுந்து, நான் ஏதாவது செய்கிறேன், மற்றவர்களுக்கு உதவுகிறேன் என்று உணர இது எனக்கு உதவியது. எல்லோரும் எப்படி ஒன்று சேர்ந்துள்ளனர் என்பது எனக்கு ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது.”

பெய்ரூட் வெடிப்பிற்குப் பின்னர் உடனடியாக பதிலளிக்கும் வகையில் ஹெல்பிங் ஹப் உதவி மையம் தோன்றினாலும், சமீபத்திய வாரங்களில் இது நீண்டகால வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளதுடன், தொடர்ச்சியான சவால்களை எதிர்கொள்ள மற்ற குழுக்கள் மற்றும் அமைப்புகளுடன் அதிகரிக்கும் முறையில் ஒத்துழைத்துள்ளது. அடித்தட்டில் இருந்து தகவல்களை சேகரிக்கும் நிலையில் இளைஞர்கள் உள்ளனர், இது உன்னிப்பாக பதிவு செய்யப்பட்டு, வெவ்வேறு தேவைகளை, சிறப்பாக உதவி வழங்கிடும் நிலையில் உள்ள பிற அமைப்புகளின் கவனத்திற்குக் கொண்டுவர பயன்படுகிறது.
முதல் நாட்களில் இருந்து ஹெல்பிங் ஹப் உதவி மையத்துடன் பணிபுரிந்து வந்துள்ள லாரா மன்சூர் இவ்வாறு கூறுகிறார்: “பஹாய் கல்விச் செயல்பாட்டின் ஒரு முக்கிய அம்சம் மக்களிடையே ஒற்றுமையை அதிகரிப்பதன் மூலம் நீண்டகால நடவடிக்கைக்கான திறனை மேம்படுத்துவதாகும். நாங்கள் அடித்தளத்தில் இருந்தபோது ஒழுங்கமைப்பின் அவசியத்தை உணர்ந்தோம். உதாரணமாக, பெய்ரூட்டின் ஒரு பகுதி உணவு, நீர் மற்றும் பிற உதவிகளால் நிரப்பம் அடைந்தன,
அதே வேளை மற்ற பகுதிகள் குறைந்த கவனத்தை அல்லது எந்த கவனத்தையும் பெறவில்லை. எனவே, அமைப்புகள் தங்களுக்குள் ஒன்றுடன் ஒன்று முயற்சிகளை ஒருங்கிணைக்க உதவும் மற்றொரு முயற்சியை இப்போது தொடங்கினோம்.
“இது வெவ்வேறு சமூக நடிப்பாளர்களை ஐக்கியத்துடன் ஆலோசிக்கவும் செயல்படவும் அனுமதித்துள்ளது. நாங்கள் அனைவரும் நாங்கள் ஒன்றுபட்டுள்ள இலக்குகளைப் பற்றி பேசுவதற்கு 50 பேருடனான இணையதள சந்திப்புகள் இப்போது உள்ளன. ஒரு கூட்டுத் தொலைநோக்கு மற்றும் குறிக்கோள் உணர்வை மேம்படுத்திக் கொண்டிருப்பது வெளிப்புற உதவிகளின் ஆதரவுடன் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான கூடுதல் திறனை நம் அனைவருக்கும் அளிக்கிறது.” இந்த அனுபவம் இளைஞர்களுக்கு எப்படி அர்த்தமாகின்றது என்பதன் மீது கரீம் பிரதிபலிக்கிறார். “இளைஞர்களான நம் அனைவருக்கும் வாழ்க்கையில் நம் உண்மையான நோக்கம் பற்றி ஒரு மெய்நிலை சோதனை உள்ளது. நாங்கள் அடித்தட்டு மக்களுடன் காலையிலிருந்து இரவு வரை மக்களுக்கு உதவி வந்த அந்த வாரங்கள் மிகவும் கடினமானவை. ஆனால், நாங்கள் ஒன்றுபட்டு இருந்ததால் அது மிகவும் நேர்த்தியாக இருந்தது, எங்கள் சேவை எங்களுக்கு நம்பிக்கையளித்தது. நாம் அன்றாட வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பும்போது, ஒரு நோக்கம் இல்லாமல் நாளுக்கு நாள் வேலை செய்வதில் நாம் திருப்தி அடையவில்லை என்பதை உணர்கிறோம். நமது சமூகங்களுக்கு நாம் சேவை செய்ய வேண்டும், ஏனெனில் உண்மையான மகிழ்ச்சி அங்கிருந்துதான் தோன்றுகிறது.”
மூலாதாரம்: https://news.bahai.org/story/1459/