பாப்புவா நியூ கினி: வழிபாட்டு இல்லம் உருபெற்று வருகின்றது
8 அக்டோபர் 2021
போர்ட் மோரெஸ்பி, பாப்புவா நியூ கினி – பாப்புவா நியூ கினி, போர்ட் மோரஸ்பி’யின் வாய்கானி பகுதியை அணுகும் போது, தற்போது கட்டுமானத்தில் இருக்கும் பஹாய் வழிபாட்டு இல்லத்தின் உயர்ந்து வரும் கட்டமைப்பு எல்லா திசைகளிலிருந்தும் கண்களுக்குப் புலப்படுகின்றது. பூர்த்தியான பிறகு, எல்லா பின்னணிகளையும் சார்ந்த மக்களுக்குத் திறந்திருக்கும் இந்த வழிபாட்டு இல்லம், வழிபாட்டிற்கும் சமுதாய சேவைக்குமான ஒரு மையமாக செயல்படும்.
பாப்புவா நியூ கினி தேசிய வழிபாட்டு இல்லத்தின் ஒரு மெய்நிகர் வடிவம் (இடம்). அருகில் (வலம்) அக்கட்டமைப்பு கட்டுமானத்தின் தற்போதைய மேம்பாடு. மைய கட்டிடத்தின் ஒரு நுண்ணிய வேலைப்பாட்டுடனான எஃகு கட்டமைப்பு வெளிப்புறத்தின் தனித்துவமான பின்னல் வடிவத்தைக் காட்டுகிறது.
“800’க்கும் மேற்பட்ட மொழிகளையும் அதே அளவு பல பழங்குடியினரையும் கொண்ட பப்புவா நியூ கினியில், வழிபாட்டு இல்லம் நாட்டின் அனைத்து மக்களுக்குமான ஒற்றுமையைக் குறிக்கிறது” என்று நாட்டின் பஹாய் தேசிய ஆன்மீக சபையின் செயலாளர் கன்ஃபூசியஸ் இகோய்ரேரே கூறுகிறார். “பாரம்பரிய நெசவு முறைகளை அடிப்படையாகக் கொண்ட கோவிலின் வடிவமைப்பு, ஒற்றுமையை அடையாளப்படுத்துகின்றது. இந்தக் கலை வடிவமானது, சிறப்பு சந்தர்ப்பங்களுக்காக உருவாக்கப்பட்ட கூடைகளிலிருந்து அன்றாட வாழ்க்கையில் அல்லது விசேஷ நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும், குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு நெய்யப்பட்ட பாய்கள் வரை நாட்டில் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. எங்கள் மாறுபட்ட பின்னணிகள் மற்றும் பழக்கவழக்கங்களுக்கிடையில் நாங்கள் எவ்வாறு ஒன்றாக வருகிறோம் என்பதை நெசவு நினைவூட்டுகின்றது.”
கடந்த டிசம்பரில் வழிபாட்டு இல்லத்தின் அஸ்திவாரங்கள் நிறைவடைந்ததிலிருந்து, வெளிப்புறத்தின் தனித்துவமான நெசவு வடிவத்தை அடையாளப்படுத்தும் மைய கட்டமைப்பின் நுண்ணிய எஃகு கட்டமைப்பில் பணிகள் மேம்பாடு கண்டுள்ளன. ஜெர்மனி மற்றும் போலந்தை தளமாகக் கொண்ட ஒரு பொறியியல் நிறுவனமான Werkstudio’வினால் வடிவமைக்கப்பட்ட எஃகு குவிமாடத்திற்கான ஒரு புதுமையான வடிவமைப்பு, பொருள்களின் சிக்கனமான பயன்பாட்டுடன் அதற்குத் தேவையான பலத்தை வழங்குகிறது.
கோவிலுக்கு பக்கவாட்டு வலிமையை வழங்கும் ஒன்பது நுழைவு விதானங்களுடன் கட்டமைப்பின் முறைமை இடைமுகம் ஆகின்றது. அதன் பகுதிகள் நிறைவடையும் தருவாயிலுள்ள இந்த அமைப்பு, இறுதியில் அதன் உச்சியில் தரை மட்டத்திலிருந்து சுமார் 16 மீட்டர் உயரத்தை எட்டும் ஒரு எஃகு குவிமாட வலையைத் தாங்கி நிற்கும்.
உள்ளூர் மரக்கட்டைகளைப் பயன்படுத்தி கோயிலின் நுழைவாயில்களை அலங்கரித்திட விருக்கும் மரப் பேனல்களுக்கான வடிவமைப்புகள் முடிவு செய்யப்பட்டு வருகின்றன. மத்திய கட்டிடத்தைச் சுற்றியுள்ள தோட்டங்களுக்கான திட்டமிடலும் நடைபெற்று வருகிறது.
திரு இகோய்ரேரே, “மக்கள், ஆறுதலையும் அமைதியையும் காண்பதற்கும் தங்களின் சிருஷ்டிகர்த்தாவிற்கு நேரம் ஒதுக்கவும் மனிதகுலத்திற்கு சேவை செய்வதற்கான உத்வேகத்தைப் பெறுவதற்கும் வழிபாட்டு இல்லம் ஒரு சூழ்நிலையை வழங்கிடும்.
ஐநா தீர்மானம் இரான் நாட்டில் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கின்றது
19 நவம்பர் 2020
BIC நியூ யார்க் — ஐக்கிய நாட்டு பொது சபையின் செயற்குழு ஒன்று கடந்த புதன்கிழமையன்று, இரான் நாடு அதன் பஹாய் சமய உறுப்பினர்கள் உட்பட அதன் பிரஜைகள் அனைவர்பாலும் மனித உரிமைகளைக் கடைப்பிடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
பொதுச் சபையின் மூன்றாவது செயற்குழு 79 வாக்குகள் சாதகமாகவும் 32 வாக்குகள் எதிராகவும் பங்கெடுப்பில் கலந்துகொள்ளாத 64 வாக்குகளுடன் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்தது.
தீர்மானம் ஈரானை “சட்டம் மற்றும் நடைமுறையாக, … பொருளாதார கட்டுப்பாடுகள் உட்பட சிந்தனை, மனசாட்சி, மதம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையில், பஹாய் சமூகத்தின் உறுப்பினர்கள் உட்பட, கல்வி பெறுவதற்கான மறுப்பு மற்றும் கட்டுப்பாடுகள் உட்பட அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்க வேண்டும் … “தீர்மானம், அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத மத சிறுபான்மையினருக்கு எதிரான பிற மனித உரிமை மீறல்களுக்கும் “முற்றுப்புள்ளி” வைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
40 ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரானில் உள்ள ஒட்டுமொத்த பஹாய் சமூகமும் அரசினால் ஆதரிக்கப்படும் துன்புறுத்தல்களுக்கு உட்பட்டுள்ளது, பஹாய் அனைத்துலக சமூகம் (BIC) இதைப் பல தலைமுறைகளாக அதன் ஒவ்வொரு உறுப்பினர்களையும் ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்க்கை, மற்றும் மரணத்திலும் கூட பாதிக்கும் பல பரிமாணங்கள் கொண்ட ஒரு செயலாக விவரிக்கிறது.
BIC, “ஈரானிய அதிகாரிகள் பயன்படுத்தும் குறிப்பிட்ட தந்திரோபாயங்கள் சில நேரங்களில் மாறிவிட்டாலும், ஒரு சாத்தியமிக்க அமைப்பு எனும் முறையில் பஹாய் சமூகத்தை அழிக்கும் நோக்கம் ஈரானில் முழு ஆற்றலுடன் தொடர்கிறது.”
ஐக்கிய நாடுகள் சபை BIC’யின் முதன்மை பிரதிநிதி பானி டுகால், “அதிகாரிகள் உன்னிப்பான கவனத்துடன் பல்வேறு வழிகளில், பஹாய்களை பொதுத் துறையிலிருந்து விலக்குவதற்கும், தங்கள் நம்பிக்கைகளை வெளிப்படுத்துவதைத் தடுப்பதற்கும், பொருளாதார ரீதியாக அவர்களை வறுமைப்படுத்துவதற்கும், அவர்களின் அறிவுசார் முன்னேற்றம், அவர்களின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தடயங்களை அழிப்பதுடன், அவர்களைப் பற்றிய தவறான தகவல்களையும் பரப்பி, அவர்களுக்கு எதிராக வெறுப்புமிக்க ஒரு சூழலை உருவாக்குவதற்கு அவர்களுக்கு எதிராக பொதுமக்களைத் தூண்டுவதன் மூலம், இதைச் செய்துவருகின்றனர்.
“ஈரான் நாடு இந்த தீர்மானத்தில் உள்ள பரிந்துரைகளுக்கும், அதன் குடிமக்களின் மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான சர்வதேச சமூகத்தின் கோரிக்கைக்கும் இனி கவனம் செலுத்தும் என்று நம்புவோமாக.”
தீர்மானம் டிசம்பர் மாதம் பொதுச் சபையின் பிரதான அமர்வில் உறுதிப்படுத்தப்படும்.
அப்துல் பஹாவின் நினைவாலயம்: கட்டமைப்பு அஸ்திவாரங்களுக்கு மேல் உயர்கின்றது
8 அக்டோபர் 2021
பஹாய் உலக மையம் – அப்துல்-பஹா நினைவாலயத்தின் அஸ்த்திவாரங்களின் பூர்த்திக்குப் பிறகு, முதல் செங்குத்தான அம்சங்கள் இப்பொழுது எழுப்பப்படுகின்றன. வட்ட வடிவவியலின் அடியில் அமைந்திருக்கும் கட்டமைப்பின் நிலத்தடி பகுதியும் வடிவம் பெறத் தொடங்குகிறது.
அப்துல்-பஹா நினைவாலயத்தின் அஸ்த்திவாரங்களின் பூர்த்திக்குப் பிறகு, முதல் செங்குத்தான அம்சங்கள் இப்பொழுது எழுப்பப்படுகின்றன.
மத்திய சதுக்கத்தின் இருபக்கங்களிலும் உள்ள விளிம்புகளுக்கு ஸ்திரத்தன்மையை வழங்கும் கான்கிரீட் தளங்களைப் போடுவதற்கான பணி தீவிரமடைகின்றது.
கீழே வழங்கப்பட்டுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் தற்போது நடப்பிலிருக்கும் பணிகளின் ஒரு காட்சியை வழங்குகின்றன.
மத்திய அடித்தலங்கள் போன்றே, பல ஆதரவுத் தூண்கள் தரைக்குள் மிக ஆழமாக பதிக்கப்பட்டும், இப்போது இவை பல கட்டங்களிலான, நிலக்காட்சி விளிம்புகளுக்கான தளங்கள் அமைக்க வலுவூட்டப்பட்ட கான்கிரீட் அடுக்குடன் மூடப்பட்டிருக்கின்றன.
கட்டமைப்பின் ஒரு பகுதியின் நெருக்கக் காட்சி
சன்னதியின் வடிவமைப்பு மத்திய சதுக்கத்தை உள்ளடக்கிய இரண்டு சாய்வான விளிம்புகளை உள்ளடக்கியுள்ளது. பிளாசாவுக்கு மேலே உள்ள ஒரு சிக்கலான குறுக்கு நெடுக்கான தட்டி கட்டமைப்பின் உள் பகுதிக்கு விளிம்புகளை இணைக்கிறது. ஒவ்வொரு விளிம்புக்கும் ஒரு கான்கிரீட் தளம் தயாரிக்கப்பட்டு, மேலே அமரும் நிலப்பரப்புக்கு ஸ்திரத்தன்மையை வழங்குகிறது.
கான்கிரீட் தளங்களை மண்ணிலிருந்து பிரித்திட “முந்தைய வெற்றிட” தொகுதிகள் ஒன்றாகப் பொருத்தப்படுகின்றன.
“முந்தைய வெற்றிட” தொகுதிகள் பொருத்தப்பட்டவுடன், கான்கிரீட் ஊற்றப்பட வலுப்படுத்தும் கம்பிகள் போடப்படுகின்றன.
தளத்தின் ஒரு பிரிவு முடிந்ததும், அடுத்ததின் தயாரிப்பு தொடர்கிறது. விளிம்புகளுக்கான கான்கிரீட் தளங்களின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.
கட்டுரைகள் மற்றும் சுருக்கமான அறிவிப்புகள் மூலம் செய்திச் சேவை திட்டத்தின் முன்னேற்றங்களைத் தொடர்ந்து வழங்கிவரும், அவை வலைத்தளத்தின் சிறப்புப் பிரிவில் காணப்படலாம்.
பிரார்த்திப்பதற்கு மிகவும் ஏதுவான கோட்டையின் மேல்தளத்தில், தூய்மையான கடல் காற்று வீச, கடலின் அலைகள் ஒசையெழுப்ப, கையில் ஜபமாலையுடன், அந்த அந்திப் பொழுதில் ஆழ்ந்த பிரார்த்தனையில் அவர் இருந்தார். எப்போதுமே திறந்திருக்கும் மேல்தள சாளரத்தைத் தவிர்ப்பதற்காக, தமது காலடிகள் ஒவ்வொன்றையும் கணக்கிட்டவாறு அவர் முன்னும் பின்னுமாக நடந்திடுவார். எப்போதும் அந்த சாளரத்தில் கவனமாக இருந்த அப்பேரொளியின் மைந்தன் அன்று காலடிகளின் கணக்கில் தவறிவிட்டார். அதன் விளைவு, சாளரத்தின் வழி தடுமாறி கீழே விழுந்தார். விழுந்தவர், சாளரத்திற்கு நேர் கீழே வைக்கப்பட்டிருந்த ஒரு மரப்பெட்டியின் மீது, அப்பெட்டியின் முனை ஒன்றின் மீது விழுந்தார். பெட்டியின் முனை அவரது நெஞ்சகத்தைத் துளைத்தது. விழுந்த அவரிடமிருந்து வேதனையின் ஒலியேதும் வரவில்லை. ஆனால், விழுந்த சத்தம் அங்கிருந்தோர் செவிகளில் பலமாகக் ஒலித்தது; அனைவரும் ஓடி வந்து பார்த்தனர். அங்கே துவண்ட நிலையில் பேரொளியின் மைந்தனான மிர்ஸா மிஹ்டி தரையில் இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்தார்.
அதிதூய கிளை விழுந்த இடம்
அரவம் கேட்டு பஹாவுல்லாவும் அங்கு வந்தார். வந்து, என்ன நடந்ததென தன் மகனிடம் கேட்டார். அதற்கு அதிதூய கிளையான மிர்ஸா மிஹ்டி, தான் எப்போதும் அந்த சாளரத்தின் தூரத்தை கணக்கிட்டே நடந்துவந்துள்ளதாகவும், ஆனால் அன்று அதில் தவறிவிட்டதாகக் கூறினார். அந்த விபத்தின் இறுதிமுடிவை பஹாவுல்லா முன்ணுணர்ந்தார். இத்தாலியரான மருத்துவர் ஒருவர் வரவழைக்கப்பட்டார், ஆனால் அவரது மருத்துவம் எவ்வித பலனையும் அளிக்கவில்லை. பெரும் வேதனையில் இருந்த போதும், அதிதூய கிளை தம்மைக் காண வந்த அனைவர்பாலும் நனவுடனேயே இருந்தார். படுகாயம் அடைந்திருந்த நிலையிலும் வருகை தந்தோர் அனைவரும் நின்றுகொண்டிருக்கும் போது தான் மட்டும் படுத்திருப்பது ஒளியின் மைந்தனான அத்தூய ஆன்மாவுக்குப் பெரும் சங்கடமாக இருந்தது.
விழுந்த இருபத்து இரண்டு மணி நேரத்தில் மிர்ஸா மிஹ்டி தமது இறுதி மூச்சை விட்டார். ஓர் இறை அவதாரம் எனினும், அவரும் மனித உணர்வுகளுடைய ஒரு தந்தையே. அவரும் பெரும் துக்கத்திற்கு ஆளானார். தாம் பெரும் துயரத்தில் ஆழ்ந்திருந்த போதும் மரணத்தின் வாசலிலிருந்த மிர்ஸா மிஹ்டியின் விருப்பம் என்னவென பஹாவுல்லா வினவினார். அதற்கு, தன்னலம், உலகப்பற்று ஆகியன சிறிதளவு கூட இல்லாத அதிதூய கிளையானவர், “பஹாவின் மக்கள் உங்கள் முன்னிலையை அடைய வேண்டும் என்பதே விருப்பமாகும்” அதற்கு என்னை பிணையாக ஏற்றுக்கொள்ளுங்கள் எனக் கூறினார். தமது செல்ல மகனாரின் உளக்கிடக்கையை நன்குணர்ந்தவரான, சர்வஞானி பஹாவுல்லா அவ்வாரே ஆகட்டும் என பதிலளித்தார், பேரொளி மைந்தனுக்கு தமது அந்த வரத்தை வழங்கினார். “அது அவ்வாறே நடக்கும்,” என பஹாவுல்லா கூறினார். “கடவுள் உன் விருப்பத்தைப் பூர்த்தி செய்வார்.” மிர்ஸா மிஹ்டியின் மரணம் 23 ஜூன் 1870’இல் நிகழ்ந்தது. எவ்வாறு இறை அவதாரமான அபிரஹாம் தமது மூத்த மகனான இஷ்மாயிலை பலி கொடுக்கும்படி கடவுளால் கட்டளையிடப்பட்டாரோ, அவ்வாரே பஹாவுல்லாவும் தமது மகனை கடவுளுக்கு அர்ப்பணித்தார். பஹாவுல்லா மிர்ஸா மிஹ்டியின் மரணத்தை இயேசு சிலுவையில் அரையப்படுதல், இமாம் ஹுஸேய்னின் தியாக மரணம் ஆகியவற்றுக்கு இணையானதாக ஆக்கியுள்ளார்.
பாதுகாவலர் ஷோகி எஃபெண்டி, பாப்’யி சகாப்தத்தில், பாப் பெருமானார் உலக மக்களின் உய்விற்காக தமது உயிரைத் தியாகம் செய்தார், பஹாய் சகாப்தத்தில் அதே காரணத்திற்காக மிர்ஸா மிஹ்டி தமது உயிரை அர்ப்பணித்தார் எனக் கூறியுள்ளார். “இறைவா, உமது சேவகர்கள் உயிர்ப்பூட்டப்படவும், உலகவாசிகள் அனைவரும் ஒன்றுமையடையவும் நீர் எனக்கு வழங்கியதனை நான் அர்ப்பணித்து விட்டேன்,” என ஒரு பிரார்த்தனையில் பஹாவுல்லா எழுதியுள்ளார்.
மிர்ஸா மிஹ்டி ஆரம்பத்தில் அடக்கம் செய்யப்பட்ட நபி சாலே நினைவாலயம். கீழே நடுவில் மிர்ஸா மிஹ்டியின் கல்லறை
பெருந்துக்கத்தின் சாயல் முகத்தில் படர, அப்துல்-பஹா, சிறையின் முற்றத்தில் போடப்பட்டிருந்த ஒரு கூடாரத்திற்கு வெளியே முன்னும் பின்னுமாக விரைவாக நடந்தவாறு நல்லடக்கத்திற்கான ஏற்பாடுகளைக் கண்காணித்துக் கொண்டிருந்தார். கூடாரத்தில் மிர்ஸா மிஹ்டியின் உடல், பஹாவுல்லாவின் நம்பிக்கையாளர் ஆகியிருந்த ஒரு பிரபல அக்காநகரவாசியான ஷேய்க் மஹ்மூட் அர்ராபி என்பவரால், நல்லடக்கத்திற்காக நீராட்டப்பட்டு முக்காடிடப்பட்டது. அதற்கு முன்பாக, இந்த ஷேய்க் மஹ்மூட் அப்துல்-பஹாவிடம் சென்று, புனிதவுடலை சிறைக் காவலாளிகளின் கைகள் தீண்டாதிருக்க, மிர்ஸா மிஹ்டியின் உடலை நீராட்டும் மற்றும் முக்காடிடும் கௌரவம் தமக்கே அளிக்கப்பட வேண்டுமென கோரினார். அக்கோரிக்கையை அப்துல்-பஹா ஏற்றுக்கொண்டார். அதன் பின்னரே சிறை முற்றத்தில் கூடாரம் போடப்பட்டு மிர்ஸா மிஹ்டியின் உடல் அங்கு கொண்டுசெல்லப்பட்டது. உடலை ஆயத்தம் செய்யும் பணிக்கு சில நண்பர்கள் உதவினர், அவர்களுள் பஹாவுல்லாவின் சமையல்காரரான அஃகா ஹுஸேய்ன் அஸ்ச்சி’யும் ஒருவராக இருந்தார். நீராட்டுக்குத் தேவையான நீரையும் பிற பொருட்களையும் அஸ்ச்சி கொண்டு வந்தார். ஷேய்க் மாஹ்முட் பஹாவுல்லாவின் இந்தத் தியாகமரணமுற்ற மகனை நல்லடக்கத்திற்கு ஆயத்தமாக்கினார்.
அக்காநகர் நிலவழி நுழைவாயில்
உடலை அடக்கம் செய்வதற்குத் தேவையான சவப்பெட்டியை வாங்குவதற்கு வசதியில்லாத நிலையில், தமது அறையில் இருந்த ஒரு கம்பளத்தை பஹாவுல்லா விற்க வேண்டியதாயிற்று. சிறைக் காவலர்களால் வழிநடத்தப்பட்டு, மிர்ஸா மிஹ்டியின் நல்லுடல், நகர எல்லைக்கு அப்பால், ஓர் அரபு இடுகாட்டில், திருக்குரானில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்க்கதரிசிகளுள் ஒருவரான நபி சாலே’யின் கல்லறைக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது. நல்லடக்க ஊர்வலத்தில் அக்காநகர பிரமுகர்களும் சேர்ந்து கொண்டனர். ஷோகி எஃபென்டி, ‘பஹாவின் ஒளியில் படைக்கப்பட்ட அவர்’, அதிவிழுமிய எழுதுகோல், அவரது சாந்தகுணத்திற்கு சான்றளித்த, அவரது விண்ணேற்றத்தின் மர்மங்களை அதே எழுதுகோல் குறிப்பிட்டிருந்த அவரின் உடல் சிறைக் காவலர்களால் வழிநடத்தப்பட்டு நகர எல்லைக்கு அப்பால், நபி சாலே’யின் கல்லறைக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது. அவ்விடத்திலிருந்து எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு, டிசம்பர் 1939’இல் அவரது தாயாரின் உடலுடன், மிர்ஸா மிஹ்டியின் உடலும் கார்மல் மலைச் சாரலில், தமது தமக்கையாரின் கல்லறைக்கு அருகே, பாப் பெருமானார் நினைவாலயத்தின் நிழலின்கீழ் இடமாற்றம் செய்யப்பட்டது.
மிர்ஸா மிஹ்டியின் பழைய கல்லறையின் தலைக்கல்
மிர்ஸா மிஹ்டி அடக்கம் செய்யப்பட்ட அதே நேரத்தில், முப்பதைந்து கிலோமீட்டர்கள் தாண்டி நாஸரெத் நகர்வரை உணரப்பட்ட பலமான நிலநடுக்கம் ஒன்று அம்மண்டலத்தை உலுக்கியது. அவ்வேளை, நாஸரெத்தில் தங்கியிருந்த நபில்-இ-காயினி அதைப் பதிவு செய்துள்ளார்.
பஹாவுல்லா, மறைந்த தமது மகனுக்கு எழுதிய ஓர் உரைப்பகுதியில் அந்த நிலநடுக்கத்தைக் குறிப்பிட்டு, “நீர் பூமியில் அடக்கம் செய்யப்பட்டபோது, உம்மை சந்திக்கும் ஆவலில் இப்பூமியே அதிர்வுற்றது,” என எழுதியுள்ளார். காஸ்வின் மாநில பஹாய்களுக்கு அன்றே ஒரு நிருபத்தை வரைந்தார். அதில், <strong><em>”இத்தருணம், அதிபெரும் சிறையில் அவரை பலி கொடுத்த பிறகு எம் முகத்திற்கு எதிரே எமது மகனின் உடல் நீராட்டப்படுகின்றது. அதனைக் கண்டு அப்ஹா திருக்கூடாரவாசிகளும், கதறியழுதனர், இவ்விளைஞருடன், வாக்களிக்கப்பட்ட திருநாளின் தேவரான இறைவனின் பாதையில் சிறைவாசத்தை அனுபவித்தோரும் புலம்பியழுதனர்” என எழுதியுள்ளார்.
அப்துல் பஹாவுடன் மிர்ஸா மிஹ்டி
மிர்ஸா மிஹ்டி மறைந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு, அவரது தந்தையை தரிசிக்க வருவோருக்கான வழி திறக்கப்பட வேண்டுமெனும் அவரது இறுதி விருப்பம் நிறைவேறியது. தேசப்பிரஷ்டிகள் அனைவரும் அந்த இராணுவ முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு, அக்கா நகரில் குடியிருப்புகளைப் பெற அனுமதிக்கப்பட்டனர், வருகையாளர்கள் அங்கு அவர்களைச் சந்திக்கவும் வாய்பேற்பட்டது.
பஹாவுல்லாவுக்கும் ஆஸிய்யி காஃனுமிற்கும் ஏழு பிள்ளைகள் பிறந்தனர். அவர்களுள் நால்வர் குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்டனர். எஞ்சியிருந்த மூவரில் அப்துல் பஹாவே மூத்தவர், இரண்டாவது பாஹிய்யா காஃனும், மூன்றாவது மிர்ஸா மிஹ்டி.
பஹாவுல்லா சிய்யாச் சால் சிறையில் இருந்த போது, மிர்ஸா மிஹ்டிக்கு இரண்டே வயது. அவ்வேளை பஹாவுல்லாவின் தெஹரான் நகர இல்லம் சூரையாடப்பட்டு, சூரையாட வந்தவர்களிடமிருந்து தப்பிக்க பேரச்சமுற்ற, ஆறே வயதினரான பாஹிய்யா காஃனும் தமது தம்பியை இருக அனைத்தவாறு ஒளிந்துகொண்டிருந்ததாகக் கூறியுள்ளார். பஹாவுல்லாவுக்கு நாடுகடத்தல் ஆணை பிறப்பிக்கப்பட்ட போது, வயது காரணமாக ஆஸிய்யி காஃனும் மிர்ஸா மிஹ்டியைத் தம்முடன் அழைத்துச் செல்ல இயலவில்ல. ஆஸிய்யி காஃனும் தாயாரின் பாதுகாப்பில் மிர்ஸா மிஹ்டியை விட்டுச்செல்ல வேண்டியதாயிற்று. பின்னர் மிர்ஸா மிஹ்டிக்குப் பன்னிரண்டு வயதான பிறகே அவர் பாக்தாத்தில் இருந்த தமது குடுப்பத்தாருடன் சேர்ந்துகொண்டார்.
மிர்ஸா மிஹ்டி மற்றும் அவரின் தாயாரின் நினைவுக்கல்லறைகள்
தன் தாயாருக்கு செல்லப் பிள்ளையான மிர்ஸா மிஹ்டி, அதன் பிறகு சுமார் பத்து வருட காலமே, தமது இருபத்து இரண்டாவது வயது வரை வாழ்ந்திருந்தார்.
தமது செல்வ மகனின் மரணம் ஆஸிய்யி காஃனுமை என்ன செய்திருக்கும் என்பதை நம்மால் கற்பன செய்திட இயலாது. ஓர் இறை அவதாரமும், கணவரும் ஆகிய பஹாவுல்லா, தம் மனைவியின் வேதனையின் ஆழத்தை, அவர் தமது இழப்பின் வேதனையை கடவுளின் திருவிருப்பத்துடன் எவ்வாறு சமரசப்படுத்த முயன்றார் என்பதை அவர் பூரணமாகப் புரிந்துகொண்டிருந்தார். தமது மனைவியின் வேதனையை அவர் தமது இன்சொற்களின் மூலம் தனித்தார்.
பழை அக்காநகர கட்டிடம் (அக்கால காவல் நிலையம்)
தமது தந்தையாரின் செயலாளராகப் பணியாற்றிய மிர்ஸா மிஹ்டி, புதிய நிருபம் ஒன்று வெளிப்படுத்தப்பட்ட போதெல்லாம் அவர் தம்மைச் சுற்றியிருந்தோரை ஒன்றுகூட்டி அந்தப் புதிய நிருபத்தை வாசித்து மகிழ்வார். அவரது மரணம் அவரைச் சுற்றியிருந்த அணைவரையும் வாட்டியது. பழைய கலகலப்பெல்லாம் மறைந்து அக்கா சிறையில் இருள் சூழ்தது போலாகிவிட்டது. அவரது இல்லாமையின் துயரம் தனிய வருடமாகியது.
இவ்வாறாகவே, மிர்ஸா மிஹ்டியின் மரணம் உலகில் ஒரு பெரும் மாற்றத்திற்கு வழிவகுத்தது. அவரது மரணத்தின் முழு மகத்துவமும் மர்மமும் வருங்காலத்தில்தான் முழுமையாக உணரப்படும்.
ஆஸ்திரேலிய பிரதமரும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அச்சமூகத்தின் நூறாம் ஆண்டுவிழாவை குறிக்கின்றனர்
13 நவம்பர் 2020
கேன்பரா, ஆஸ்த்திரேலியா – ஆஸ்த்திரேலிய பிரமரான, ஸ்காட் மொரிஸன், மற்றும் பிற தேசிய தலைவர்களும் ஆஸ்த்திரேலிய பஹாய் சமூகம் அந்த நாட்டில் ஸ்தாபிக்கப்பட்டு நூறு வருடங்கள் ஆனதையொட்டி அச்சமூகத்திற்குத் தங்களின் கனிவான பாராட்டைத் தெரிவித்துள்ளனர்.
பிரதமரும் பிற பாராளுமன்ற உறுப்பினர்களும் பஹாய் சமயத்தின் நூறாம் ஆண்டு விழாவை பாராளுமன்ற மற்றும் பிற நிகழ்ச்சிகளில் குறிக்கின்றனர்.
“பஹாய் நம்பிக்கை உள்ளிணைவு, மரியாதை ஆகியவற்றைக் கொண்டதாகும்” என்று பிரதமர் கூறினார். “பஹாய் சமயத்தின் மக்கள் சமத்துவம், உண்மை, மரியாதை ஆகிய விழுமியங்களின் மூலம் நமது சமூக நன்மைக்குப் பங்களிப்பு செய்கிறார்கள். இந்த விழுமியங்கள் ஒரு வளமான, பன்முக கலாச்சார, பல சமய சமுதாயத்திற்கான நமது தேசிய உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன. … கடந்த 100 ஆண்டுகளாக பஹாய் சமூகம் நமது ஆஸ்திரேலிய சமூகத்தில் ஒரு தாராள மற்றும் மதிப்புடைய சமயக் குழுவாக இருந்து வருகிறது. சமயம் என்பது நம்பிக்கை சார்ந்தது மட்டுமின்றி அது இணைப்பைப் பற்றியதும் ஆகும். அது சமூகம் பற்றியது. இது பல வழிகளில் நம்மை ஒன்றிணைக்கிறது.”
இந்த நூறாம் ஆண்டைக் குறிக்கும் சவால்மிகு சூழ்நிலைகளைக் குறிப்பிட்டு, பிரதமர் தொடர்ந்து, “கோவிட்-19 தொற்றுநோயின் இந்த நேரத்தில் உங்கள் சமூகத்தை ஒட்டுமொத்தமாக பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான உறுதிப்பாட்டை மதிக்கும் அதே வேளையில், உங்கள் நம்பிக்கையை கொண்டாடுவதற்கும், உங்கள் சமூகத்தை இணைப்பதற்கும் தொடர்ந்து வழிகளைக் கண்டுபிடிப்பதற்கு பஹாய் சமூகத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். … நாம் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் நம்பிக்கையும் சமய நம்பிக்கையின் முக்கியத்துவமும் நாம் ஒன்றாக எதிர்கொள்ளும் இந்த சவால்களினூடே நமக்கு வழிகாட்டட்டுமாக.”
கான்பெர்ராவில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பஹாவுல்லா பிறந்த இருநூறாம் ஆண்டு விழாவிற்கான பாராளுமன்ற வரவேற்பறையில் பிரதமரின் பதிவு செய்யப்பட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. பாராளுமன்றத்தின் 14 உறுப்பினர்களும் அரசாங்க விருந்தினர்களும் இராஜதந்திரிகளும் உட்பட – சமய சமூகங்களும் பிற அமைப்புகளும் கலந்துகொண்டன — ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையினர் நேரடியாகவும் பிறர் இணையதளத்தின் வழியாகவும்.
பிரதமர் வெளிப்படுத்திய உணர்வுகளில் மற்ற தேசிய தலைவர்களும் இணைந்து கொண்டனர். எதிர்க்கட்சித் தலைவரான அந்தோனி அல்பானீஸ் தமது செய்தியில், “இந்தப் பூமியை நமது பொதுவான பந்தமாகப் பகிர்ந்து கொள்ளும் நாம் அனைவரும் ஒரே மனித குடும்பத்தின் சமமான உறுப்பினர்கள் என்று பஹாய் சமயம் கற்பிக்கிறது. … உங்கள் சமூகத்தின் உணர்வுகள் மற்றும் அன்பின் மூலம் உங்கள் ஒற்றுமை மற்றும் சமூக ஒத்திசைவு கொள்கைகள், நிச்சயமாக மனிதகுலம் அனைத்திற்குமான மரியாதை, என கொண்டாடுவதற்கு உங்களுக்கு நிறையவே இருக்கிறது.”
இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, வியாழக்கிழமையன்று “பஹாவுல்லாவின் பிறப்பைக் கொண்டாடுவதிலும், ஆஸ்திரேலியாவில் 100 வருடமான பஹாய் சமூகத்தை நினைவுகூர்வதிலும் (சபை) மகிழ்ச்சியடைகிறது,” என ஆஸ்திரேலிய செனட் சபை ஒருமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
ஆஸ்திரேலியாவில் பஹாய் சமயத்தின் வரலாறு 1920’ஆம் ஆண்டில் அமெரிக்காவிலிருந்து ஜான் ஹென்றி ஹைட் டன் மற்றும் கிளாரா டன் ஆகிய இரு பஹாய்களின் வருகையுடன் தொடங்கியது. அவர்களின் ஆரம்பகால முயற்சிகளிலிருந்து, இந்த சமூகம் அதன் சமூகத்தின் லௌகீக மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் மக்களின் பெரும் பல்வகையான மக்களை உள்ளடக்கியதாக வளர்ந்துள்ளது.
நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் கடந்த வாரம் சிட்னியில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லத்திற்கு விஜயம் செய்தபோது, நாடாளுமன்ற உறுப்பினர் ஜேசன் ஃபாலின்ஸ்கி, “பஹாய்கள் தங்கள் நூற்றாண்டு விழாவை, மக்களை ஒன்றுகூட்டுவதன் மூலம் கொண்டாடுகிறார்கள். இது ஆஸ்திரேலியாவிற்கும் உண்மையில் உலகத்துக்கும் அவர்கள் அளித்த பங்களிப்பு குறித்து நிறையவே உரைக்கின்றது.
“நமது சமூகத்திற்கான உங்கள் பங்களிப்பு வளர்ந்து வருகிறது. … உங்கள் செய்தியும், ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் ஞானம் பற்றிய உங்கள் நம்பிக்கைகளும், நாம் அனைவரும், குறிப்பாக ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள சமூகங்களைப் பிரதிநிதிக்கும் நம் அனைவரும், இதை மனதில் பதித்துக்கொள்வது மட்டுமின்றி, தினசரியும் அதை நடைமுறைப்படுத்த முயலவும் வேண்டும்.”
அமைதி வாரம்: அமைதியை ஸ்தாபிப்பதில் உலகளாவிய ஆளுகையின் பங்கு
11 நவம்பர் 2020
BIC ஜெனீவா – கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்த ஜெனீவா அமைதி வாரத்தில் பஹாய் சர்வதேச சமூகத்தின் ஜெனீவா அலுவலகம் (BIC) உலகம் முழுவதும் அமைதி-நிர்மாணிப்பு முயற்சிகள் பற்றிய விவாதங்களில் பங்களிக்க பொது சமூக நடவடிக்கையாளர்கள், கல்வியாளர்கள், மற்றும் ஐ.நா. முகமைகளுடன் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளோடு இணைந்து கொண்டது.
“அமைதி இன்று மானிடத்தின் மிகப்பெரிய கவலைகளில் ஒன்றாகும்,” என்கிறார் ஜெனீவா அலுவலகத்தின் பிரதிநிதியான சிமின் ஃபஹண்டெய். “எதிரே ஒரு நீண்ட பாதை உள்ளது என்றாலும், இன்னும் அதிக கூட்டு முதிர்ச்சியை நோக்கி மானிடத்தை நகர்த்தும் ஆக்கபூர்வமான சக்திகள் உள்ளன. வெவ்வேறு நடவடிக்கையாளர்களை ஒன்றுதிரட்டுவதன் மூலம், குறிப்பாக சமாதானத்திற்கான பல சவால்கள் COVID-19 தொற்றுநோயினால் அதிகரிக்கப்பட்டுள்ள ஒரு நேரத்தில், சமாதான வாரம் கருத்துப் பரிமாற்றத்திற்காக ஒரு முக்கியமான அனைத்துலக மன்றத்தை வழங்குகிறது,.”
ஜெனீவா அலுவலகத்தின் பங்களிப்புகள், BIC’யின் சமீபத்திய அறிக்கையான “ஒரு பொருத்தமா நிர்வாக”த்தின் அடிப்படையில் உலகளாவிய ஒத்துழைப்பு முறைமைகளை பலப்படுத்துவதற்கான முக்கிய தேவையின் மீது கவனம் செலுத்தியது. கடந்த வாரம் அலுவலகம் நடத்திய ஒரு கருத்தரங்கில், ஆளுகை, பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற பஹாய் சமூகத்தின் மூன்று உறுப்பினர்கள் BIC அறிக்கையின் தாக்கங்கள், “உலகளாவிய குடிமை நன்னெறி”க்கான அதன் அழைப்பு ஆகியவற்றை ஆராய்ந்தனர்.
சர்வதேச சுற்றுச்சூழல் மன்றத்தின் தலைவர் ஆர்தர் லியான் டேல், BIC அறிக்கை சுற்றுச்சூழல் தொடர்பான சட்ட கட்டமைப்புகளை வலுப்படுத்தவேண்டியதன் அவசியத்தின்பால் எவ்வாறு கவனத்தை ஈர்க்கிறது என்று கூறுகிறார். “தற்போதைய உலகளாவிய சுற்றுச்சூழல் ஆட்சி முறை பெரும்பான்மையாக தன்னார்வமானது. தேசிய அல்லது பொருளாதார சுயநலத்தால் உந்தப்படும் சிலரின் எதிர்மாறான செயல்களால் சில அமைப்புகளின் சிறந்த முயற்சிகள் ஆற்றலற்றவையாக ஆக்கப்படுகின்றன.
“சுற்றுச்சூழல் நெருக்கடியானது, மனித இனத்தின் எந்தவொரு பிரிவின் நலன்களும் பிரிக்க முடியாத வகையில் ஒட்டுமொத்த நலன்களுடன் பிணைந்திருப்பதை நாம் காணும் போது, நமது உலகளாவிய பரஸ்பர தொடர்பை ஒப்புக்கொள்ள நம்மைத் தூண்டுகிறது.”
உலகளாவிய ஆளுகை மன்றத்தின் நிர்வாக இயக்குனரான அகஸ்டோ லோபெஸ்-கிளாரோஸ், அறிக்கை “நெருக்கடியானது, குறிப்பிடத்தக்க சமூக மாற்றத்திற்கு அடிக்கடி திறக்கக்கூடிய சாத்தியங்களைப் பற்றி பேசுகிறது என்றார்.
“என்னைக் கவர்ந்த விஷயங்களில் ஒன்று … உலகில் இன்று செலவின முன்னுரிமைகள் பற்றி நடைபெறும் மறுசிந்தனையாகும். அரசின் வளங்களை நாம் ஒதுக்கீடு செய்த விதம், பல விளைவுத் திறமின்மைகள், தவறான முன்னுரிமைகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது என்பதைத் திடீரென்று அரசாங்கங்கள் உணர்ந்துள்ளன என்று நான் நினைக்கிறேன். உதாரணமாக, இராணுவ அடிப்படையில் பாதுகாப்பைப் பற்றி சிந்திப்பதைவிட, சமூக மற்றும் பொருளாதார நலன்களின் அடிப்படையில் பாதுகாப்பை மறுவரையறை செய்ய வேண்டிய அவசியத்தைப் பற்றி கேள்விப்படுகிறோம், மற்றும் 1945ல் ஐ.நா உருவாக்கப்பட்டதில் இருந்து நாம் இதே இராணுவ அடிப்படையில்தான் பாதுகாப்பைப் பற்றி சிந்தித்து வந்துள்ளோம்.”
நெதர்லாந்த், ஹேக்கில் உள்ள ஒரு சர்வதேச வழக்கறிஞரான மயா கிராஃப், மனித திறனாற்றல் பற்றிய கருத்தை முன்னிலைப்படுத்தி, BIC அறிக்கையின் கூற்று: “உலகளாவிய சவால்களைத் தீர்ப்பதற்கான நமது திறனைப் பொறுத்த வரை, மனிதகுலத்திற்கு மிகவும் சாதகமான தொலைநோக்கை இது கொண்டுள்ளது. … நாம் கூட்டாக, அடிப்படையாக, பின்னர் இறுதியில், நமது பொதுமைத்தன்மையை ஏற்றுக் கொண்டால், … நமது அத்தியாவசிய ஒற்றுமைக்கு இந்த தெளிவான அங்கீகாரம் இருந்தால், புதிய சாத்தியங்கள் உருவாகும்.” அமைதி வாரத்தின் மீது நடைபெற்ற கலந்துரையாடல்களைப் பிரதிபலிக்கும், திருமதி ஃபஹான்டே கூறுகிறார்: “சமாதானத்தை நிறுவவேண்டிய அவசியம் பற்றிய அறிவு போதாது. BIC அறிக்கை கூறுவது போல், சர்வதேச அரசியல் மற்றும் அதிகாரத்தின் இயந்திரமானது பெருகிய முறையில் ஒத்துழைப்பு மற்றும் ஐக்கியத்தை நோக்கி செலுத்தப்பட வேண்டும். நாம் அனைவரும் ஒரே மனித குடும்பத்தின் ஒரு பகுதியினர் என்பதை ஒருவருக்கொருவர் பார்க்க வேண்டும். இதுவே இந்த காலகட்டத்தின், இந்த தருணத்தின் தவிர்க்க முடியாத தேவையாகும்.”
மாணவர் அனைவருக்கும் சேவை செய்திட கடுமையாக உழைத்தல்
8 அக்டோபர் 2021
லாஸ் மோராஸ், எல் சால்வடார் – மார்ச் மாதத்தில், தொற்றுநோய் காரணமாக எல் சால்வடார் முழுவதும் உள்ள பள்ளிகள் நேர்முகக் கல்வியைக் கைவிட நேர்ந்தபோது, நாட்டில் பஹாய் உதவேகம் பெற்ற பள்ளி ஒன்று, குடும்பங்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற சமூக உறுப்பினர்களில் அதன் 200 மாணவர்களுக்கும் உயர் தரமான கல்வியைப் பராமரிக்க உதவும் மகத்தான திறனாற்றல் களஞ்சியத்தை கண்டது.
ரித்வான் பள்ளியின் ஆசிரியரான மார்செல்லா கான்ட்ரெராஸ் கூறுகிறார், “எல்லோரையும் போலவே, நாங்கள் முன்னோடியற்ற ஒரு வருடத்தை அனுபவித்து வருகிறோம். ஆயினும்கூட, சேவையைப் பற்றிய பஹாய் போதனைகளினால், நம்பிக்கையின் ஒளி பெற்றோர்களுக்காகவும் எனது சகாக்களுக்காகவும் பிரகாசித்து, இந்த விலைமதிப்பற்ற ரத்தினங்களான, எங்கள் மாணவர்களுக்கு சேவை செய்ய ஊக்குவிக்கின்றது. இந்த நேரத்தில், ஆசிரியர்கள் இச்செயல்முறைக்கு ஒருங்கிணைவாக இருக்கும் மாணவர்களின் குடும்பங்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்கக் கற்றுக்கொண்டனர்.
1989 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ரித்வான் பள்ளியின் முதல்வர் வனெசா ரெண்டெரோஸ் கூறுகையில், “இந்த நெருக்கடியின் போது மேம்பாட்டிற்கு ஒற்றுமை இன்றியமையாதது.” குழந்தைகளுக்கு தொடர்ந்து கல்வி கற்பிப்பதற்காக முழு சமூகத்துடனும் ஒரு குழுவாக பணியாற்ற நாங்கள் கற்றுக் கொண்டிருக்கிறோம். ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்காக தங்கள் பணிகளுக்கும் அப்பாற்ட்டு செரல்படுகிறார்கள், தரமான கல்வியை அடைய முயல்கிறார்கள் மற்றும் இந்த நெருக்கடியின் போது ஒரு தூண் போன்று இருக்கின்ற தார்மீகக் கருத்தாக்கங்களை ஊக்குவிக்கின்றனர்.”
ரித்வான் பள்ளியின் ஆசிரியரான மார்செல்லா கான்ட்ரெராஸ், “எல்லோரையும் போலவே, நாங்கள் முன்னோடியற்ற ஒரு வருடத்தை அனுபவித்து வருகிறோம். ஆயினும்கூட, சேவையைப் பற்றிய பஹாய் போதனைகளினால், நம்பிக்கையின் ஒளி பெற்றோர்களுக்காகவும் எனது சகாக்களுக்காகவும் பிரகாசித்து, இந்த விலைமதிப்பற்ற ரத்தினங்களான, எங்கள் மாணவர்களுக்கு சேவை செய்ய ஊக்குவிக்கின்றது. இந்த நேரத்தில், ஆசிரியர்கள் இச்செயல்முறைக்கு ஒருங்கிணைவாக இருக்கும் மாணவர்களின் குடும்பங்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்கக் கற்றுக்கொண்டனர்,” என்றார்
ஆரம்பத்தில், ஒவ்வொரு குடும்பத்தின் சூழ்நிலைகளையும் மதிப்பிடுவதற்காக பள்ளி தொடர்ச்சியான ஆய்வு வரிசைகளை அனுப்பியது. ஆண்டு கடந்து செல்லும்போது, பெற்றோர்களுக்கு சிரமங்கள் நேரும்போது, பள்ளி ஒவ்வொரு பிரச்சினைக்கும் அவற்றின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் பதிலளித்துள்ளது.
இணையதள வகுப்புகளை வழங்குவதோடு மட்டுமின்றி, குடும்பங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அல்லது இணைய அணுகல் இல்லாத அண்டைப்புற வீதிகளில் ஆசிரியர்கள் பாதுகாப்பான தூரத்திலிருந்து பாடங்களை நடத்துகின்றனர். பொது சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றி, எல்லைக்குட்பட்ட நேர்முக கற்றலை மீண்டும் அறிமுகப்படுத்த அரசாங்க வழிகாட்டிகளின்படி இந்தப் பள்ளி இப்போது செயல்படுகிறது. ஒவ்வொரு வயதினரின் தேவைகளுக்கும் கல்வி முறைகள் பதிலளிக்க வேண்டும் என்று பள்ளியின் உடன்பணியாளரான ரெனே லெமுஸ் விளக்குகிறார். “இளைய குழந்தைகள் திறம்பட கற்றுக்கொள்ள பெற்றோரிடமிருந்து அதிக ஈடுபாடு தேவை. இந்தக் குழந்தைகள் தங்கள் கல்வியில் நிகழும் இடைவெளியினால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். மேலும், இணையவழி வகுப்புகளின் முறை அவர்களுக்கு அவ்வளவு பயனுள்ளதாக இருக்கவில்லை. எனவே, ரித்வான் பள்ளி ஓர் இல்லமுறை திட்டத்தை உருவாக்கியுள்ளது, அங்கு ஆசிரியர்கள் வீட்டுக்கல்விக்கு இளைய குழந்தைகளின் பெற்றோருடன் உடன்வருகிறார்கள்.”
தார்மீக மற்றும் ஆன்மீக கல்வி என்பது பள்ளியில் மாணவர்களின் கற்றலின் இன்றியமையாத அம்சங்கள் மற்றும் நெருக்கடியின் போது திட்டங்களில் அவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
ஒரு மாணவர் கூறுகிறார்: “மிக முக்கியமானவற்றைப் பற்றி சிந்திப்பதன் மூலம் எங்கள் உற்சாக ஆவிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இன்னொருவர் மேலும் கூறுவதாவது, “இந்த கடினமான காலங்களில் முன்னேற எனக்கு தேவையான அனைத்து வலிமையையும் எங்கள் ஆய்வுகளின் ஆன்மீக அம்சம் உதவியுள்ளது. என் ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு தோழர்கள் மீது எனக்கு மிகுந்த அன்பு இருக்கிறது, ஏனென்றால் எல்லோரும் தங்களைப் பற்றி அதிகமாக கவலைப்படாமல் மற்றவர்களின் தேவைகளைப் பற்றி அக்கறை கொண்டுள்ளனர்.”
திரு. லெமுஸ் சமீபத்திய மாதங்களில் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பு மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தில் இது ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றைப் பற்றி பிரதிபலிக்கின்றார். “பள்ளியை வீட்டிற்கு கொண்டு வருவதானது, அவர்கள் இளமையாக இருக்கும்போது முறையான கல்விக்கான வாய்ப்பைப் பெறாத சில பெற்றோர்களுக்கு பரந்த கல்வி மற்றும் கல்வியறிவு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் கணிணிதிரையின் முன்னால் இருந்து கற்கின்றார், அதே நேரத்தில், தங்கள் பிள்ளையின் அருகில் அமர்ந்திருக்கும் பெற்றோரும் கற்கிறார்கள்.
“கடந்த காலத்தில், கல்வி தொடர்பான அனைத்து விஷயங்களும் பள்ளியிடமே விடப்பட்டிருந்தன. ஆனால், புதிய சூழ்நிலைகள் பள்ளி-ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என எல்லோருமே பங்களிக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்துகின்றன. ஒரு முழு சமூகத்தின் அறிவுசார் மற்றும் ஆன்மீக கல்விக்கான புதிய பாதை உருவாகி வருகிறது.”