பேரொளியின் மைந்தன்-மிர்ஸா மிஹ்டியின் தியாக மரணம்


மிர்ஸா மிஹ்டி

பிரார்த்திப்பதற்கு மிகவும் ஏதுவான கோட்டையின் மேல்தளத்தில், தூய்மையான கடல் காற்று வீச, கடலின் அலைகள் ஒசையெழுப்ப, கையில் ஜபமாலையுடன், அந்த அந்திப் பொழுதில் ஆழ்ந்த பிரார்த்தனையில் அவர் இருந்தார். எப்போதுமே திறந்திருக்கும் மேல்தள சாளரத்தைத் தவிர்ப்பதற்காக, தமது காலடிகள் ஒவ்வொன்றையும் கணக்கிட்டவாறு அவர் முன்னும் பின்னுமாக நடந்திடுவார். எப்போதும் அந்த சாளரத்தில் கவனமாக இருந்த அப்பேரொளியின் மைந்தன் அன்று காலடிகளின் கணக்கில் தவறிவிட்டார். அதன் விளைவு, சாளரத்தின் வழி தடுமாறி கீழே விழுந்தார். விழுந்தவர், சாளரத்திற்கு நேர் கீழே வைக்கப்பட்டிருந்த ஒரு மரப்பெட்டியின் மீது, அப்பெட்டியின் முனை ஒன்றின் மீது விழுந்தார். பெட்டியின் முனை அவரது நெஞ்சகத்தைத் துளைத்தது. விழுந்த அவரிடமிருந்து வேதனையின் ஒலியேதும் வரவில்லை. ஆனால், விழுந்த சத்தம் அங்கிருந்தோர் செவிகளில் பலமாகக் ஒலித்தது; அனைவரும் ஓடி வந்து பார்த்தனர். அங்கே துவண்ட நிலையில் பேரொளியின் மைந்தனான மிர்ஸா மிஹ்டி தரையில் இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்தார்.

அதிதூய கிளை விழுந்த
இடம்

அரவம் கேட்டு பஹாவுல்லாவும் அங்கு வந்தார். வந்து, என்ன நடந்ததென தன் மகனிடம் கேட்டார். அதற்கு அதிதூய கிளையான மிர்ஸா மிஹ்டி, தான் எப்போதும் அந்த சாளரத்தின் தூரத்தை கணக்கிட்டே நடந்துவந்துள்ளதாகவும், ஆனால் அன்று அதில் தவறிவிட்டதாகக் கூறினார். அந்த விபத்தின் இறுதிமுடிவை பஹாவுல்லா முன்ணுணர்ந்தார். இத்தாலியரான மருத்துவர் ஒருவர் வரவழைக்கப்பட்டார், ஆனால் அவரது மருத்துவம் எவ்வித பலனையும் அளிக்கவில்லை. பெரும் வேதனையில் இருந்த போதும், அதிதூய கிளை தம்மைக் காண வந்த அனைவர்பாலும் நனவுடனேயே இருந்தார். படுகாயம் அடைந்திருந்த நிலையிலும் வருகை தந்தோர் அனைவரும் நின்றுகொண்டிருக்கும் போது தான் மட்டும் படுத்திருப்பது ஒளியின் மைந்தனான அத்தூய ஆன்மாவுக்குப் பெரும் சங்கடமாக இருந்தது.

விழுந்த இருபத்து இரண்டு மணி நேரத்தில் மிர்ஸா மிஹ்டி தமது இறுதி மூச்சை விட்டார். ஓர் இறை அவதாரம் எனினும், அவரும் மனித உணர்வுகளுடைய ஒரு தந்தையே. அவரும் பெரும் துக்கத்திற்கு ஆளானார். தாம் பெரும் துயரத்தில் ஆழ்ந்திருந்த போதும் மரணத்தின் வாசலிலிருந்த மிர்ஸா மிஹ்டியின் விருப்பம் என்னவென பஹாவுல்லா வினவினார். அதற்கு, தன்னலம், உலகப்பற்று ஆகியன சிறிதளவு கூட இல்லாத அதிதூய கிளையானவர், “பஹாவின் மக்கள் உங்கள் முன்னிலையை அடைய வேண்டும் என்பதே விருப்பமாகும்” அதற்கு என்னை பிணையாக ஏற்றுக்கொள்ளுங்கள் எனக் கூறினார். தமது செல்ல மகனாரின் உளக்கிடக்கையை நன்குணர்ந்தவரான, சர்வஞானி பஹாவுல்லா அவ்வாரே ஆகட்டும் என பதிலளித்தார், பேரொளி மைந்தனுக்கு தமது அந்த வரத்தை வழங்கினார். “அது அவ்வாறே நடக்கும்,” என பஹாவுல்லா கூறினார். “கடவுள் உன் விருப்பத்தைப் பூர்த்தி செய்வார்.” மிர்ஸா மிஹ்டியின் மரணம் 23 ஜூன் 1870’இல் நிகழ்ந்தது. எவ்வாறு இறை அவதாரமான அபிரஹாம் தமது மூத்த மகனான இஷ்மாயிலை பலி கொடுக்கும்படி கடவுளால் கட்டளையிடப்பட்டாரோ, அவ்வாரே பஹாவுல்லாவும் தமது மகனை கடவுளுக்கு அர்ப்பணித்தார். பஹாவுல்லா மிர்ஸா மிஹ்டியின் மரணத்தை இயேசு சிலுவையில் அரையப்படுதல், இமாம் ஹுஸேய்னின் தியாக மரணம் ஆகியவற்றுக்கு இணையானதாக ஆக்கியுள்ளார்.

பாதுகாவலர் ஷோகி எஃபெண்டி, பாப்’யி சகாப்தத்தில், பாப் பெருமானார் உலக மக்களின் உய்விற்காக தமது உயிரைத் தியாகம் செய்தார், பஹாய் சகாப்தத்தில் அதே காரணத்திற்காக மிர்ஸா மிஹ்டி தமது உயிரை அர்ப்பணித்தார் எனக் கூறியுள்ளார். “இறைவா, உமது சேவகர்கள் உயிர்ப்பூட்டப்படவும், உலகவாசிகள் அனைவரும் ஒன்றுமையடையவும் நீர் எனக்கு வழங்கியதனை நான் அர்ப்பணித்து விட்டேன்,” என ஒரு பிரார்த்தனையில் பஹாவுல்லா எழுதியுள்ளார்.

மிர்ஸா மிஹ்டி ஆரம்பத்தில் அடக்கம் செய்யப்பட்ட நபி சாலே நினைவாலயம். கீழே நடுவில் மிர்ஸா மிஹ்டியின் கல்லறை

பெருந்துக்கத்தின் சாயல் முகத்தில் படர, அப்துல்-பஹா, சிறையின் முற்றத்தில் போடப்பட்டிருந்த ஒரு கூடாரத்திற்கு வெளியே முன்னும் பின்னுமாக விரைவாக நடந்தவாறு நல்லடக்கத்திற்கான ஏற்பாடுகளைக் கண்காணித்துக் கொண்டிருந்தார். கூடாரத்தில் மிர்ஸா மிஹ்டியின் உடல், பஹாவுல்லாவின் நம்பிக்கையாளர் ஆகியிருந்த ஒரு பிரபல அக்காநகரவாசியான  ஷேய்க் மஹ்மூட் அர்ராபி என்பவரால், நல்லடக்கத்திற்காக நீராட்டப்பட்டு முக்காடிடப்பட்டது. அதற்கு முன்பாக, இந்த ஷேய்க் மஹ்மூட் அப்துல்-பஹாவிடம் சென்று, புனிதவுடலை சிறைக் காவலாளிகளின் கைகள் தீண்டாதிருக்க, மிர்ஸா மிஹ்டியின் உடலை நீராட்டும் மற்றும் முக்காடிடும் கௌரவம் தமக்கே அளிக்கப்பட வேண்டுமென கோரினார். அக்கோரிக்கையை அப்துல்-பஹா ஏற்றுக்கொண்டார். அதன் பின்னரே சிறை முற்றத்தில் கூடாரம் போடப்பட்டு மிர்ஸா மிஹ்டியின் உடல் அங்கு கொண்டுசெல்லப்பட்டது. உடலை ஆயத்தம் செய்யும் பணிக்கு சில நண்பர்கள் உதவினர், அவர்களுள் பஹாவுல்லாவின் சமையல்காரரான அஃகா ஹுஸேய்ன் அஸ்ச்சி’யும் ஒருவராக இருந்தார். நீராட்டுக்குத் தேவையான நீரையும் பிற பொருட்களையும் அஸ்ச்சி கொண்டு வந்தார். ஷேய்க் மாஹ்முட் பஹாவுல்லாவின் இந்தத் தியாகமரணமுற்ற மகனை நல்லடக்கத்திற்கு ஆயத்தமாக்கினார்.

அக்காநகர் நிலவழி நுழைவாயில்

உடலை அடக்கம் செய்வதற்குத் தேவையான சவப்பெட்டியை வாங்குவதற்கு வசதியில்லாத நிலையில், தமது அறையில் இருந்த ஒரு கம்பளத்தை பஹாவுல்லா விற்க வேண்டியதாயிற்று. சிறைக் காவலர்களால் வழிநடத்தப்பட்டு, மிர்ஸா மிஹ்டியின் நல்லுடல், நகர எல்லைக்கு அப்பால், ஓர் அரபு இடுகாட்டில், திருக்குரானில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்க்கதரிசிகளுள் ஒருவரான நபி சாலே’யின் கல்லறைக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது. நல்லடக்க ஊர்வலத்தில் அக்காநகர பிரமுகர்களும் சேர்ந்து கொண்டனர். ஷோகி எஃபென்டி, ‘பஹாவின் ஒளியில் படைக்கப்பட்ட அவர்’, அதிவிழுமிய எழுதுகோல், அவரது சாந்தகுணத்திற்கு சான்றளித்த, அவரது விண்ணேற்றத்தின் மர்மங்களை அதே எழுதுகோல் குறிப்பிட்டிருந்த அவரின் உடல் சிறைக் காவலர்களால் வழிநடத்தப்பட்டு நகர எல்லைக்கு அப்பால், நபி சாலே’யின் கல்லறைக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது. அவ்விடத்திலிருந்து எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு, டிசம்பர் 1939’இல் அவரது தாயாரின் உடலுடன், மிர்ஸா மிஹ்டியின் உடலும் கார்மல் மலைச் சாரலில், தமது தமக்கையாரின் கல்லறைக்கு அருகே, பாப் பெருமானார் நினைவாலயத்தின் நிழலின்கீழ் இடமாற்றம் செய்யப்பட்டது.

மிர்ஸா மிஹ்டியின் பழைய கல்லறையின் தலைக்கல்

மிர்ஸா மிஹ்டி அடக்கம் செய்யப்பட்ட அதே நேரத்தில், முப்பதைந்து கிலோமீட்டர்கள் தாண்டி நாஸரெத் நகர்வரை உணரப்பட்ட பலமான நிலநடுக்கம் ஒன்று அம்மண்டலத்தை உலுக்கியது. அவ்வேளை, நாஸரெத்தில் தங்கியிருந்த நபில்-இ-காயினி அதைப் பதிவு செய்துள்ளார்.

பஹாவுல்லா, மறைந்த தமது மகனுக்கு எழுதிய ஓர் உரைப்பகுதியில் அந்த நிலநடுக்கத்தைக் குறிப்பிட்டு, “நீர் பூமியில் அடக்கம் செய்யப்பட்டபோது, உம்மை சந்திக்கும் ஆவலில் இப்பூமியே அதிர்வுற்றது,” என எழுதியுள்ளார். காஸ்வின் மாநில பஹாய்களுக்கு அன்றே ஒரு நிருபத்தை வரைந்தார். அதில், <strong><em>”இத்தருணம், அதிபெரும் சிறையில் அவரை பலி கொடுத்த பிறகு எம் முகத்திற்கு எதிரே எமது மகனின் உடல் நீராட்டப்படுகின்றது. அதனைக் கண்டு அப்ஹா திருக்கூடாரவாசிகளும், கதறியழுதனர், இவ்விளைஞருடன், வாக்களிக்கப்பட்ட திருநாளின் தேவரான இறைவனின் பாதையில் சிறைவாசத்தை அனுபவித்தோரும் புலம்பியழுதனர்” என எழுதியுள்ளார்.

அப்துல் பஹாவுடன்
மிர்ஸா மிஹ்டி

மிர்ஸா மிஹ்டி மறைந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு, அவரது தந்தையை தரிசிக்க வருவோருக்கான வழி திறக்கப்பட வேண்டுமெனும் அவரது இறுதி விருப்பம் நிறைவேறியது. தேசப்பிரஷ்டிகள் அனைவரும் அந்த இராணுவ முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு, அக்கா நகரில் குடியிருப்புகளைப் பெற அனுமதிக்கப்பட்டனர், வருகையாளர்கள் அங்கு அவர்களைச் சந்திக்கவும் வாய்பேற்பட்டது.

பஹாவுல்லாவுக்கும் ஆஸிய்யி காஃனுமிற்கும் ஏழு பிள்ளைகள் பிறந்தனர். அவர்களுள் நால்வர் குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்டனர். எஞ்சியிருந்த மூவரில் அப்துல் பஹாவே மூத்தவர், இரண்டாவது பாஹிய்யா காஃனும், மூன்றாவது மிர்ஸா மிஹ்டி.

பஹாவுல்லா சிய்யாச் சால் சிறையில் இருந்த போது, மிர்ஸா மிஹ்டிக்கு இரண்டே வயது. அவ்வேளை பஹாவுல்லாவின் தெஹரான் நகர இல்லம் சூரையாடப்பட்டு, சூரையாட வந்தவர்களிடமிருந்து தப்பிக்க பேரச்சமுற்ற, ஆறே வயதினரான பாஹிய்யா காஃனும் தமது தம்பியை இருக அனைத்தவாறு ஒளிந்துகொண்டிருந்ததாகக் கூறியுள்ளார். பஹாவுல்லாவுக்கு நாடுகடத்தல் ஆணை பிறப்பிக்கப்பட்ட போது, வயது காரணமாக ஆஸிய்யி காஃனும் மிர்ஸா மிஹ்டியைத் தம்முடன் அழைத்துச் செல்ல இயலவில்ல. ஆஸிய்யி காஃனும் தாயாரின் பாதுகாப்பில் மிர்ஸா மிஹ்டியை விட்டுச்செல்ல வேண்டியதாயிற்று. பின்னர் மிர்ஸா மிஹ்டிக்குப் பன்னிரண்டு வயதான பிறகே அவர் பாக்தாத்தில் இருந்த தமது குடுப்பத்தாருடன் சேர்ந்துகொண்டார்.

மிர்ஸா மிஹ்டி மற்றும் அவரின் தாயாரின் நினைவுக்கல்லறைகள்

தன் தாயாருக்கு செல்லப் பிள்ளையான மிர்ஸா மிஹ்டி, அதன் பிறகு சுமார் பத்து வருட காலமே, தமது இருபத்து இரண்டாவது வயது வரை வாழ்ந்திருந்தார்.

தமது செல்வ மகனின் மரணம் ஆஸிய்யி காஃனுமை என்ன செய்திருக்கும் என்பதை நம்மால் கற்பன செய்திட இயலாது. ஓர் இறை அவதாரமும், கணவரும் ஆகிய பஹாவுல்லா, தம் மனைவியின் வேதனையின் ஆழத்தை, அவர் தமது இழப்பின் வேதனையை கடவுளின் திருவிருப்பத்துடன் எவ்வாறு சமரசப்படுத்த முயன்றார் என்பதை அவர் பூரணமாகப் புரிந்துகொண்டிருந்தார். தமது மனைவியின் வேதனையை அவர் தமது இன்சொற்களின் மூலம் தனித்தார்.

பழை அக்காநகர கட்டிடம் (அக்கால காவல் நிலையம்)

தமது தந்தையாரின் செயலாளராகப் பணியாற்றிய மிர்ஸா மிஹ்டி, புதிய நிருபம் ஒன்று வெளிப்படுத்தப்பட்ட போதெல்லாம் அவர் தம்மைச் சுற்றியிருந்தோரை ஒன்றுகூட்டி அந்தப் புதிய நிருபத்தை வாசித்து மகிழ்வார். அவரது மரணம் அவரைச் சுற்றியிருந்த அணைவரையும் வாட்டியது. பழைய கலகலப்பெல்லாம் மறைந்து அக்கா சிறையில் இருள் சூழ்தது போலாகிவிட்டது. அவரது இல்லாமையின் துயரம் தனிய வருடமாகியது.

இவ்வாறாகவே, மிர்ஸா மிஹ்டியின் மரணம் உலகில் ஒரு பெரும் மாற்றத்திற்கு வழிவகுத்தது. அவரது மரணத்தின் முழு மகத்துவமும் மர்மமும் வருங்காலத்தில்தான் முழுமையாக உணரப்படும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: