
21 டிசம்பர் 2020
கொங்கோ ஜனநாயகக் குடியரசு சஞ்சாவ், (BWNS) – நீரினால் பரவும் நோய்கள் அதிகரிக்கும் போது, கொங்கோ ஜனநாயகக் குடியரசின் சஞ்சாவ் கிராமத்தில் உள்ள ஒரு சுகாதார மையம், உடல்நலம் பற்றிய ஓர் உள்ளூர் சொல்லாடலை ஊக்குவிப்பதன் மூலம் உடல்நல பிரச்சினையைத் தீர்க்க ஒரு புதிய அணுகுமுறையை மேற்கொண்டது.
“முயற்சிகள் நிலையானவையாக இருப்பதற்குரிய முயற்சிகளுக்கு, நோய்களுக்கான காரணங்கள் உட்பட, உடல்நலம் குறித்த உரையாடலில் பலர் ஈடுபட வேண்டும் என்பதை நாங்கள் அறிவோம்” என்று நாட்டின் தென் கிவு பகுதியில் பஹாய்களால் நிறுவப்பட்ட சுகாதார மையத்திற்கு ஆதரவளித்து வரும் ஒரு மருத்துவரான அலெக்சிஸ் போவ் கிண்டி கூறுகிறார்.
“சுகாதார மையத்தின் நிர்வாகக் குழு, உள்ளூர் மட்டத்தில் உடல்நலம் குறித்த ஒரு சொல்லாடலை ஊக்குவிக்க பயிற்சி பெறக்கூடிய நபர்களை அடையாளம் காண கிராமத் தலைவர் மற்றும் பஹாய் உள்ளூர் ஆன்மீக சபையுடன் கலந்தாலோசித்தது.” கடந்த ஆண்டு பதின்மூன்று பேருக்கு சுகாதார கல்வியாளர்களாகப் பயிற்சி அளிக்கப்பட்டது, அவர்கள் ஒவ்வொருவரும் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஒன்றிணைந்து ஆலோசிக்க குடும்பங்களின் கூட்டுகளுக்கு கலந்துரையாடல் தளங்களை உருவாக்கி வருகின்றனர்.

கிளினிக்கால் பயிற்சியளிக்கப்பட்ட சுகாதார கல்வியாளர்களில் ஒருவரான எலிசபெத் பாலிபுனோ, கிராமத்தின் நல்வாழ்வில் இந்த உரையாடல்களின் விளைவுகளை விவரிக்கிறார். “நாங்கள் அனைவரும் மாற்றங்களைக் காண்கிறோம். ஆற்றங்கரைகள் சுத்தமாக வைக்கப்பட்டு வருகின்றன, இது நீரின் தரத்தை மேம்படுத்தி ஜூன் மாதத்திலிருந்து நீரினால் பரவும் நோய்களைக் குறைக்க வழிவகுத்துள்ளது. ”
அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கும் அதே வேளை, கலந்துரையாடல்களில் அதிகமான மக்கள் பங்கேற்பதால், சஞ்சாவ் கிராமத்தில் பிற கூட்டு முயற்சிகள் உருவாகின்றன. எடுத்துக்காட்டாக, அருகிலுள்ள மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் பயன்படுத்தும் மூன்று கிலோமீட்டர் நீளமான சாலையை மேம்படுத்த ஏராளமான மக்கள் சமீபத்தில் வந்திருந்தனர்.
கொரோனா வைரஸைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் சுகாதார கல்வியாளர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். முக்கியமான தகவல்கள் பகிரப்படும் கூட்டங்களுக்கு வசதி செய்வதும் இதில் அடங்கும்.

உடல்நலம் தொடர்பான விஷயங்களைப் பற்றி ஆலோசிக்க சமூகத்தின் வளர்ந்து வரும் திறன் குறித்து திரு பௌவ் கருத்துரைக்கிறார்: “குடும்பக் குழுக்கள் மற்றும் சுகாதார கல்வியாளர்களின் கட்டமைப்பானது கிராமத்தில் பெருகிவரும் மக்களிடையே உடல்நலம் குறித்த உள்ளூர் சொற்பொழிவைத் தூண்டுகிறது. அதன் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான மிகவும் சக்திவாய்ந்த கருவி சில மருந்துகள் அல்லது தொழில்நுட்பங்களுக்கான அணுகல் மட்டுமல்லாமல், தன் சொந்த மெய்நிலையைக் கண்டுணர்ந்து, தீர்வுகளைச் செயல்படுத்த ஒரு சமூகமாக ஆலோசிக்கும் திறனையும் இது உள்ளடக்கியது என்பதை சமூகம் கண்டறிந்துள்ளது. ”
கிராமத்தின் தலைவரான லியோன் கர்மா இந்த முன்னேற்றங்கள் பற்றி பிரதிபலிக்கிறார்: “இந்த முயற்சிகள் ஆரோக்கியத்தைப் பற்றி ஒரு புதிய நனவுநிலையை உருவாக்குகின்றன. உண்மையில், சுகாதார கல்வியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.”

கிளினிக்கால் பயிற்சியளிக்கப்பட்ட மற்றொரு சுகாதார கல்வியாளரான ஜோசபின் டிஷியோவா சிபோங்கா, சமூக வாழ்க்கையின் வடிவங்கள், அதாவது பிரதிபலித்தல், பிரார்த்தனை, கலந்தாலோசனை மற்றும் ஒன்றாகச் செயல்படுவது போன்றவை பல தசாப்தங்களாக மண்டல பஹாய்களின் கல்வி முயற்சிகள் மூலம் சுகாதாரம் தொடர்பான இந்த முயற்சிகள் வளர்க்கப்பட்டதை விளக்குகிறார். .
“நாங்கள் ஒன்றுகூடும் போது, நோய்க்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகளைப் புரிந்துகொள்வது மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து போன்ற சில கருப்பொருள்களைப் பார்க்கிறோம். இந்த கூட்டங்கள் நாங்கள் ஒன்றாகப் பிரார்த்திக்கும் இடமாகவும், பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் உள்ளிட்ட பரந்த சமூக பிரச்சினைகளைப் பற்றி பிரதிபலிக்கும் இடமாகவும் மாறிவிட்டன. ”
சஞ்சாவில் சமூக நிர்மாணிப்பு முயற்சிகளின் பரந்த விளைவுகள் குறித்து மேலும் கருத்துரைக்கையில், பஹாய் உள்ளூர் ஆன்மீக சபை உறுப்பினரான மஷியத் புலோண்டா ரூசா கூறுகிறார்: “எங்கள் சஞ்சாவ் சமூகத்தில் ஒற்றுமையும் ஒத்துழைப்பும் தெளிவாக இருப்பதை நான் காண்கிறேன். நாங்கள் சந்தித்து ஒன்றுகூடுகிறோம், மத அல்லது இன பாகுபாடின்றி நாங்கள் ஒன்றாகப் பணிபுரிகின்றோம், நாங்கள் எங்கள் வட்டாரத் தலைவருடன் ஒத்துழைக்கிறோம். ஐக்கியமாக இருப்பதன் மூலம் சமூகம் அதன் சொந்த நல்வாழ்விற்குப் பொறுப்பேற்க முடிந்துள்ளது.”
மூலாதாரம்: https://news.bahai.org/story/1475/