நிறப்பாகுபாட்டின் மீது தாக்குதல்
ஆப்ரிக்க மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் கறுப்பின மக்களின் தேசிய முன்னேற்ற கழகம் (NAACP), சிக்காகோ நகரில் நடைபெறவுள்ள தனது நான்காவது ஆண்டு மாநாட்டில் உரையாற்றிட அப்துல் பஹாவுக்கு அழைப்பு விடுத்திருந்தது. அவர் 1912ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி செவ்வாய்க் கிழமையன்று இரண்டு முறை அம்மாநாட்டில் உரையாற்றினார். பிறகு, அதே நாளன்று பிற்பகலில் தென் சிக்காகோவிலுள்ள ஹுல் ஹவுஸ் மண்டபத்தில் ஒரு முறை உரையாற்றினார். அதன் பிறகு, மாலையில், லூப் அண்டையர்ப் பகுதியிலுள்ள 40, ஈஸ்ட் ரண்டோல்ப் தெருவிலும் உரையாற்றினார். ஹண்டெல் மண்டபத்தில் உரையாற்றிபோது, அப்துல் பஹா தமது உரையை பழைய ஏற்பாட்டு திருநூலிலுள்ள ஒரு மேற்கோளுடன் தொடங்கினார்: “மனிதனை எமது சாயலில் படைப்போம், எம்மைப் போன்று”. மனிதன் எங்கே, எப்படி ஆண்டவருடைய சாயலிலும், அவரைப் போன்றும் இருக்கின்றான் என்பதையும், மனிதன் அளவிடப்படுவதற்கான அளவுகோல் என்ன என்பதையும் நாம் ஆய்வு செய்வோமாக,” என அப்துல் பஹா அக்கூட்டத்தில் பரிந்துரைத்தார்.
அதன் பிறகு அவர் பின்வரும் ஆணித்தரமான கேள்விகளை எழுப்பினார்: “ஒரு மனிதன் செல்வத்தை உடைமையாகக் கொண்டிருந்தால், அவன் இறைவனின் சாயலில் இருக்கின்றான், இறைவனைப் போன்று இருக்கின்றான் என நாம் கூற முடியுமா? அல்லது, மானிட மதிப்பை அடிப்படையாகக் கொண்டு அவன் இறைவனைப் போன்று இருக்கின்றான் என நாம் கூற முடியுமா? அல்லது தோல் நிறச் சோதனை யை நாம் அதற்கு ஓர் அளவுகோலாகப் பயன்படுத்தி, இன்னார் இந்த நிறத்தில் இருப்பதால் அவருக்கு இறைவனின் சாயல் உள்ளது எனக் கூற முடியுமா? உதாரணமாக, பச்சை நிறம் கொண்ட மனிதர் இறைவனின் சாயல் உள்ளவர் என நாம் கூற முடியுமா?” “எனவே, தோலின் நிறம் முக்கியமானது அல்ல என நாம் முடிவு செய்கின்றோம். நிறம் என்பது இயற்கையில் ஒரு சந்தர்ப்ப நிகழ்வு…… ஒரு மனிதன் நீல நிறமாகவோ, வெண்ணிறமாகவோ, பச்சை நிறமாகவோ மாநிறமாகவோ இருந்து விட்டு போகட்டும். அது முக்கியமானதல்ல! சரீர அடையாளங்களினால் மனிதன் மதிப்பீடு செய்யப்படக் கூடாது. மனிதன் அவனுடைய அறிவு மற்றும் ஆன்ம பலத்தால் மதிப்பிடப்பட வேண்டும். இதுவே இறைவனின் சாயல்.
வாஷிங்டன் நகரில் கூறியதுபோலவே அப்துல் பஹா இங்கும் எளிமையான கறுப்பு வெள்ளை உதாரணங்களைக் கொண்டு பின்வரும் முடிவை எடுத்துரைத்தார்: ” மனிதனின் தன்மை வெண்மையாக இருந்தால், அவனது இதயம் வெள்ளையாக இருந்தால், அவனது உடலின் தோல் கறுப்பாக இருந்து விட்டு போகட்டும்; அவனது இதயம் கறுமையாகவும், அவனது தன்மை கறுமையாகவும் இருந்தால், அவன் அழகாக இருந்து விட்டு போகட்டும். அது முக்கியமல்ல.” வேறு விதத்தில் சொல்வதென்றால், தோல் நிறம் ஒரு மனிதனின் குணவியல்பில் எவ்வித தாக்கமும் செலுத்துவது இல்லை. ஹண்டெல் மண்டபத்திற்கு எதிர்ப்புறத்தில் 29, ஈஸ்ட் ரண்டோல்ப் தெருவில் அமைந்திருந்த மெசொனிக் டெம்பலில் அன்று மாலையில் இன்னொரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.

நகரங்களைச் சேர்ந்த 58 பேராளர்கள் பஹாய் டெம்பள் யூனிட் என்ற ஒன்பது உறுப்பினர் கொண்ட அமைப்பைத் தேர்ந்தெடுக்க ஒன்று திரண்டுக் கொண்டிருந்தனர். வட அமெரிக்காவில் வசித்து வந்த பஹாய் நம்பிக்கையாளர்களினால் சிக்காகோவின் வட பகுதியில் ஒரு கோவிலை எழுப்பும் மிகப் பெரிய திட்டத்தை ஒருங்கிணைப்பதற்கான தேசிய அமைப்பு அது. பேராளர்கள் இரகசிய வாக்கெடுப்பின் வாயிலாக அந்த அமைப்பின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தபோது, அவர்களைச் சுற்றிலும் கலைவேலைப்பாடு கொண்ட கொரிந்தியன் மண்டபத்தின் கம்பீரமான கல் தூண்கள் அணிவகுத்து நின்றன. முதல் வாக்கெடுப்பின் முடிவில், சம எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்று இருவர் 9வது இடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். சிக்காகோவைச் சேர்ந்த ஒரு வெள்ளைக்கார டாக்டரான பெரடெரிக் நட் அவர்களும், வாஷிங்டனைச் சேர்ந்த ஒரு கறுப்பின வழக்கறிஞரான லூயிஸ் கிரகெரி அவர்களுமே அந்த இருவர். ஆயினும், 1912ம் ஆண்டின் கடுமையான தலைவர் தேர்தலிலிருந்து முற்றாக வேறுபட்ட நிலையில் அவர்கள் இருவரும் ஒருவர் மற்றவரைத் தெரிவு செய்யப்படுவதையே விரும்பினர்.

இந்நிலையில், நியூயார்க் பகுதியின் இதாகா சமூகத்தைச் சேர்ந்த பேராளரான திரு. ரோய் வில்ஹெல்ம் எழுந்து நின்று ஒரு கருத்தை முன்மொழிந்தார். அவரது கருத்து டாக்டர் ஹொமர் இஸ் ஹார்பர் அவர்களினால் ஆமோதிக்கப்பட்டது. தெரிவு செய்யப்பட வேண்டிய நிலையிலிருந்து வெள்ளைக்கார டாக்டர் நட் அவர்கள் தன்னை தேர்தலிலிருந்து விடுவித்துக் கொள்வதை பேராளர் மாநாடு ஏக மனதாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அந்தக் கருத்தாகும். அக்கருத்தை பேராளர் மாநாடு ஏகமனதாக ஏற்றுக் கொண்டது.
மத்தியத்தர வர்க்கத்தைச் சேர்ந்த வெள்ளைக்காரர்கள் பெரும்பான்மை வகித்த ஒரு தேசிய வாரியத்தில் ஆப்ரிக்க பின்னணியைச் சேர்ந்த ஓர் அமெரிக்கர் தேர்ந்தெடுக்கப்படுடிருப்பதானது – அதாவது, கறுப்பினத்தவர்களுக்கு எதிரான ஜிம் க்ரோ சட்டம் 1912ம் ஆண்டில் மிகத் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில், ஓர் கறுப்பின அமெரிக்கர் அந்த தேசிய வாரியத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட செயல் ஓர் அரிதான செயல். ஆப்ரிக்க மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் கருப்பின மக்களின் தேசிய முன்னேற்ற கழகம் (NAACP) கூட 1909ம் ஆண்டு அமைப்பு கண்டபோது, தனது உயர்மட்ட செயற்குழுவில் ஒரேயொரு கறுப்பினத்தவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தா. நிறப்பாகுபாட்டின் மீது அப்துல் பஹா தொடுத்த தாக்குதல் பலன் கொடுக்கத் தொடங்கியது.