
8 அக்டோபர் 2021
போர்ட் விலா, வானுவாத்து, 7 ஜனவரி 2021, (BWNS) – வானுவாத்து தனது 40 ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடி தனது எதிர்காலத்தைப் கண்ணுறும்போது, சிறார்கள் மற்றும் இளைஞர் கல்வியின் திசை பற்றிய ஒரு தேசிய உரையாடல் உந்தமடைகிறது.
இந்த கலந்துரையாடல்களில் பங்களிக்க, நாட்டின் பஹாய்கள் சமீபத்தில் பிரதமரின் அலுவலகம் மற்றும் கல்வி அமைச்சின் பிரதிநிதிகள், கிராமத் தலைவர்கள் மற்றும் பல்வேறு சமூக நடவடிக்கையாளர்களை ஒன்றிணைத்து சமூகத்தில் தார்மீகக் கல்வியின் பங்கைப் பற்றி ஒன்றாகப் பிரதிபலித்தனர்.
பிரதம மந்திரி அலுவலகத்தின் இயக்குனர் ஜெனரல் கிரெகோரி நிம்ப்டிக், மற்ற பங்கேற்பாளர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினார்: “நிலையான மகிழ்ச்சி, ஒற்றுமை பராமரிக்கப்படும், எல்லோரும் அமைதியான சூழலில் வாழும், எல்லோரும் ஒருவருக்கொருவர்அக்கறை கொண்ட ஒரு சமூகத்தைப் பெற்றிருக்க விரும்புகிறோம். கேள்வி என்னவென்றால், நம் பிள்ளைகளின் திறனை எவ்வாறு உருவாக்கி, இந்த வகையான சமுதாயத்தை உருவாக்க அவர்களுக்கு எவ்வாறு உதவுவது? இந்த விஷயத்தில் கல்விக்கு முக்கிய பங்கு உண்டு.”

இந்தக் கேள்வி பல தசாப்தங்களாக வனுவாத்துவில் பஹாய் கல்வி முயற்சிகளின் மையத்தில் உள்ளது, இதில் கல்வியறிவு திட்டங்கள், முறையான பள்ளிகள் மற்றும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சமூகத்திற்கு சேவை செய்வதற்கான திறனை வளர்க்கும் அடிமட்டத்தில் உள்ள முயற்சிகள். போர்ட் வில்லாவின் பஹாய் சமூகத்தின் உறுப்பினரும் நிகழ்வின் அமைப்பாளர்களில் ஒருவருமான ஹென்றி தமாஷிரோ கூறுகிறார், “நம் நாடு எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கிராமத் தலைவர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில், நாம் அனைவரும் ஒரு கேள்விக்கு வருகிறோம்: தனிமனிதனின் தார்மீகத் தன்மை எவ்வாறு உயர்த்தப்பட முடியும்?
“இது போன்ற கூட்டங்கள் சமூகத்தின் பல்வேறு பிரிவுகள் கல்வி முறையின் விடுபட்ட பகுதிகளைப் பற்றி பேச அனுமதிக்கின்றன: பாரம்பரிய தலைவர்கள் இதயத்தின் கல்வி என அழைக்கின்றார்கள், கல்வியாளர்கள் தார்மீக கல்வி என அழைக்கின்றார்கள், சமயம் சார்ந்த சமூகங்கள் ஆன்மீகக் கல்வி என்று குறிப்பிடுகின்றன.”
போர்ட் விலா பகுதியில் உள்ள மிகப் பெரிய வட்டாரங்களில் ஒன்றான ஃப்ரெஷ்வோட்டாவின் தலைமை கென் ஹிவோ கூட்டத்தில், “தார்மீகக் கல்வி மிக முக்கியமானது. நமது தற்போதைய கல்வி முறை பெரும்பாலும் நம் குழந்தைகளை தொழிலுக்குத் தயார்படுத்துவதற்கான ஒரு கருவியாகக் கருதப்படுவதோடு, சிந்தனா கல்வியில் கவனம் செலுத்துகிறது. ஆனால் திறம்பட செயல்படும் சமூகத்திற்குக் தூய இதயங்கள் தேவை. ஆன்மீகக் கொள்கைகள் ஒரு நபரை வழிநடத்த வேண்டும். லௌகீகவாத கொள்கைகளால் மட்டுமே நிர்வகிக்கப்படும் சமூகங்கள் மேலும் மேலும் மோசமடையும். ஆனால் ஆன்மீகக் கொள்கைகளும் நம் சமூகங்களை நிர்வகித்தால் நமது சமூகப் பிரச்சினைகள் பல மறைந்துவிடும். ”

தென் பசிபிக் பல்கலைக் கழகத்தின் ஆண்ட்ரியா ஹிங்கே இந்த எண்ணத்தை எதிரொலித்தார்: “இதன் பொருள், ஒரு குழந்தைக்கு ஒரு தேர்வில் தேர்ச்சி பெறுவதில் உதவுவதில் கவனம் செலுத்துவது மட்டுமின்றி, சமூகத்தில் மற்றவர்களுடன் எவ்வாறு வாழ்வது என்பது பற்றியும் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் தேவை.”
குழந்தைகள் தன்னலமற்ற சேவையின் கருத்தைப் பற்றி ஆரம்பத்திலேயே அறிந்து கொள்ளும்போது, அவர்கள் சிறு வயதிலிருந்தே சமூக முன்னேற்றத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்புகளைச் செய்ய முடியும் என கூட்டத்தில் பஹாய் சமூகத்தின் பிரதிநிதிகள் விளக்கமளித்தனர். வழங்கப்பட்ட பல உதாரணங்களில், பஹாய் கல்வி முன்முனைவுகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்களின் பல முயற்சிகளுள், பூர்வீக உயிரினங்களை பாதுகாப்பதற்காகத் தங்கள் கிராமங்களைச் சுற்றியுள்ள காடுகளில் பாதுகாப்பு பகுதிகளின் நிர்வாகமும் அடங்கும்.
எதிர்கால கூட்டங்களைப் பார்க்கும்போது, திரு. தமாஷிரோ கூறுவதாவது, “இந்த உரையாடல் ஒரு புதிய கதவைத் திறக்கிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பாளர்கள் சமுதாயத்தின் நிலை குறித்து சற்றே மனம் வருந்தினர், ஆனால் இளைஞர்கள் எதிர்நோக்கும் சவால்களை எதிர்கொள்ளும் தங்களின் ஆவலில் அவர்கள் தனியாக இல்லை என்பதையும், முன்னோக்கி செல்வதற்கு ஒரு பயனுள்ள பாதை இருப்பதைக் கண்டதும், அனைவரும் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தனர்.”
மூலாதாரம்: https://news.bahai.org/story/1479/