அப்துல் பஹாவும் ஆஃப்கானியரும்.
அப்துல்-பஹா வாழ்ந்த காலத்தில் அவருக்குப் பல எதிரிகள் இருந்தனர். சிலர் சமயத்திற்குள்ளும் சிலர் சமயத்திற்கு வெளியில் இருந்தும் செயல்பட்டனர். அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலரே அவருக்கு எதிராக பல சதி வேலைகளைச் செய்து இறுதியில் சமயத் துரோகிகள் ஆயினர். இந்தக் கதை அத்தகைய ஒரு சூழலில் மாஸ்டரவர்கள் எப்படி நடந்துகொண்டார் என்பதை விவரிக்கின்றது.
மாஸ்டர் அப்துல்-பஹா அக்கா நகருக்கு வந்தபோது, அங்கு ஓர் ஆப்கானியர் வசித்து வந்தார். மாஸ்டர் அப்துல் பஹா எப்போதும் மதங்கள் பற்றி எதிர்மாறான பேதங்கள் கொண்டவர் என்று அந்த மனிதர் கருதி வந்தார். மாஸ்டரின்பால் அவர் ஒரு பகைமை போக்கையே கடைப்பிடித்து வந்ததுடன், மற்றவர்களை அப்துல் பஹாவுக்கு எதிராகவும் தூண்டி விட்டார். மக்கள் ஒன்றுகூடுமிடங்களில் சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் அவர் அப்துல்-பஹாவை கடும் வார்த்தைகளைக் கொண்டு இழித்துரைத்து வந்தார்.
மற்றவர்களிடம் அப்துல்-பஹாவைப் பற்றி பேசியபோது அந்த மனிதர் அவர்களிடம், “அவர் ஒரு வஞ்சகர். அவருடன் ஏன் பேசுகின்றீர்கள்? அவருடன் ஏன் தொடர்பு வைத்துள்ளீர்கள்?” என்று கூறி வந்தார். அப்துல்-பஹாவை அந்த மனிதர் தெருவில் காண நேர்ந்தபோது, அவர் தனது உடையின் ஒரு பகுதியைத் தூக்கி தனது கண்களை மறைத்துக் கொள்வார். அப்துல்-பஹாவைக் காண்பதனால் தனது கண்கள் கரை படிந்து விடக்கூடாது என்பதில் அம்மனிதர் கவனமாக இருந்தார்.
இம்மாதிரியான செயல்களை அந்த ஆப்கானிய மனிதர் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். அவ்வாறு இருந்தும் கூட மாஸ்டர் அப்துல்-பஹா பின் வருமாறு தனது செயல்களை காண்பித்தார்: ஓர் ஏழையான அந்த ஆப்கானிய மனிதர் ஒரு மசூதியில் வசித்து வந்தார். அம்மனிதருக்கு அடிக்கடி உணவும் உடையும் தேவைப்பட்டன. அவை இரண்டையும் மாஸ்டர் அப்துல்-பஹா அம்மனிதருக்கு அனுப்பி வைத்தார். அவ்வுதவிகளை அம்மனிதர் பெற்றுக் கொண்டு அதற்கு நன்றி தெரிவிக்காமலேயே இருந்து வந்தார். அம்மனிதர் நோயுற்றபோது அப்துல்-பஹா அவரிடம் ஒரு மருத்துவரை அழைத்து வந்து உணவு, மருந்து, பணம் ஆகியவற்றை அம்மனிதருக்கு வழங்கினார். அவற்றையும் அம்மனிதர் பெற்றுக் கொண்டார். ஆனால், மருத்துவர் அம்மனிதருடைய நாடியைப் பரிசோதித்துக் கொண்டிருந்தபோது, தனது இன்னொரு கையால் முகத்தை தனது அங்கியைக் கொண்டு மூடிக் கொண்டு அப்துல்-பஹாவின் மீது தனது பார்வை விழுவதைத் தவிர்த்தார் அந்த மனிதர். இருபத்து நான்கு வருடங்களுக்கு அம்மனிதரின்பால் அப்துல்-பஹா தனது அன்பான இரக்கத்தைக் காட்டி வந்தார். இருபத்து நான்கு வருடங்களுக்கு அம்மனிதரும் அப்துல்- பஹாவின்பால் தனது பகைமையையே வெளிப்படுத்தி வந்தார். இறுதியில் ஒரு நாள் அந்த ஆப்கானிய மனிதர் அப்துல்-பஹாவின் வீட்டின் வாசலுக்கு வந்து அப்துல் பஹாவின் காலடியில் விழுந்து அழுது புலம்பினார்.
“என்னை மன்னித்து விடுங்கள் ஐயா,” என அம்மனிதர் புலம்பினார். “இருபத்து நான்கு வருடங்களாக நான் உங்களுக்கு தீங்கு இழைத்து விட்டேன். இருபத்து நான்கு வருடங்களாக நீங்கள் எனக்கு நன்மையே செய்துள்ளீர்கள். நான் செய்தது தவறு என்று இப்பொழுது எனக்குத் தெரிகின்றது.” என்று கூறினார்.
அப்துல் பஹா அவரை எழச் செய்து, அதன் பிறகு அவர்கள் இருவரும் நண்பர்களாயினர்.