ஏழை மக்களுடன் அப்துல் பஹா
அப்துல் பஹா எனும் தலைப்பில் எச். எம். பால்யூசி எழுதியுள்ள புத்தகத்தில், அன்புமிகு மாஸ்டர் அப்துல் பஹா எவ்வாறு ஏழைகளை நடத்தினார் என்பதைப் பற்றிய பல செழிப்பான கதைகள் உள்ளன. அவற்றில் இரண்டு கதைகள் மட்டுமே கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஐக்கிய அமெரிக்காவில் அவர் தங்கியிருந்தபோது நண்பர்கள் அவருக்கு பரிசுகள் வழங்கினர். அந்தச் செயலுக்கு அவர் மறுமொழியாக அளித்த ஒளிர்வுமிகு சொற்பொழிவு ஒன்றும் இங்கு கொடுக்கப்பட்டுள்து.

போஸ்டன் நகரிலுள்ள டெனிசன் இல்லத்திற்கு அப்துல் பஹா ஒரு முறை வருகை புரிந்தார். அமெரிக்காவில் குடியேற வந்த சிரியா மற்றும் கிரேக்க நாட்டு ஏழை மக்களின் நலன்களைப் பாதுகாத்து வரும் ஒரு தொண்டூழியக் கழகத்தின் தலைமையகம் அந்த டெனிசன் இல்லத்தில் அமைந்திருந்தது. அப்துல் பஹா அங்கு வந்தபோது, அவருக்கு மதிய உணவு வழங்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டது. அப்போது அவர் அக்கழக நிதிக்கு பத்து பவுண்ட் நிதியை தமது நன்கொடையாக வழங்கினார். அவருடன் சேர்ந்து அந்த மதிய உணவு விருந்தில் கலந்து கொண்ட விருந்தினர்களை நோக்கி, ஏழை மக்களுக்கு சேவையாற்றும் பாக்கியம் அவர்களுக்குக் கிடைத்துள்ளது என்றும், அந்த ஏழை மக்களில் தாமும் ஒருவர் எனும் மரியாதை தமக்கும் உண்டு என்றும் அப்துல் பஹா கூறினார்.
டப்ளின் நகருக்கு அப்துல் பஹா ஒரு முறை சென்றிருந்தபோது, அதே நிகழ்வில் கலந்து கொண்ட ஒரு நண்பர் அந்நிகழ்ச்சி குறித்து பின்வரும் தகவலைப் பகிர்ந்து கொண்டார். அப்துல் பஹா தங்கியிருந்த விடுதியில் அவர் தமது செயலாளரிடம் ஒரு பணிக்கு உத்தரவிட்டுக் கொண்டிருந்தபோது, தெருவில் ஒரு வயோதிகர் ஓட்டமும் நடையுமாக விரைந்து வந்தார். அப்துல் பஹா அவ்வயோதிகரைப் பார்த்து விட்டு அவரைத் தம்மிடம் அழைத்து வருமாறு தமது செயலாளருக்குப் பணித்தார். அம்மனிதர் வந்தவுடன் அப்துல் பஹா அம்மனிதரின் அழுக்கு நிறைந்த கைகளை தமது கரங்களால் இறுகப் பற்றிக் கொண்டு அன்புடனும், பாசத்துடனும் உரையாடினார். சோர்வும், வாழ்க்கையில் விரக்தியும் அடைந்த அம்மனிதருடன் ஏற்கனவே நீண்டகாலமாக நட்பு கொண்டிருந்தவரைப் போல் அப்துல் பஹா உரையாடினார். அதன் பிறகு, அம்மனிதரின் கால் சட்டை எவ்வளவு மோசமான நிலையில் கிழிந்துள்ளது என்பதையும், எவ்வளவு அசுத்தமாக இருக்கின்றது என்பதையும் அப்துல் பஹா கண்டார். அந்நேரத்தில் அவ்விடுதியின் வளாகத்தில் யாரும் இல்லை. அப்துல் பஹா நேராக விடுதியின் முகப்பு வாயிலின் மறைவான இடத்திற்குச் சென்று, தமது மேலங்கியினால் தம்மை மூடிய நிலையில் தமது சொந்தக் கால்சட்டையைக் கழற்றி அந்த வயோதிக மனிதருக்குக் கொடுத்து விட்டு, “இறைவன் உங்களுடன் இருப்பாராக!” என்றார். (புனித பூமியில் பல முறை அவர் ஒரு நாடோடி மனிதரையோ அல்லது ஓர் ஏழையையோ அழைத்து தமது பக்கத்தில் அமர வைத்து தமது உணவைப் பங்கிட்டுக் கொண்டுள்ளார்).
அமெரிக்க கண்டத்தில் அப்துல் பஹா மேற்கொண்டிருந்த தமது எட்டு மாதப் பயணங்களின்போது அவரது பயணச் செலவுகளுக்காக நம்பிக்கையாளர்கள் பணம் கொடுக்க பல முறை மீண்டும் மீண்டும் முயற்சித்தனர். அது குறித்து அப்துல் பஹாவுடன் நேரடியாகவும், அவரது குழுவினருடனும் அந்நண்பர்கள் பேசினர். அதற்கு நன்றி தெரிவித்த அப்துல் பஹா அவ்வுதவிகளை ஏற்றுக் கொள்ளவேயில்லை. முன்பு எகிப்து நாட்டில் பெரும் தொகை ஒன்று அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதனை அவர் திருப்பி அனுப்பி வைத்து விட்டார். திருமதி பெர்சன்ஸ், திருமதி கூடால், திருமதி கூப்பர் மற்றும் சிலரும் அப்போது செல்வ வளம் பெற்றிருந்தனர். அவர்கள் அனைவரும் தங்களுடைய பொருள் உதவிகளை ஏழை எளியோருக்கு வழங்கிட வேண்டும் என அப்துல் பஹா அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஐக்கிய அமெரிக்காவை விட்டு அப்துல் பஹா புறப்பட வேண்டிய பயண நாள் நெருங்கி வந்தபோது, பல நண்பர்கள் அப்துல் பஹாவிடம் சென்று தாங்கள் அளிக்கும் பொருள் உதவிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு அவரிடம் கேட்டுக் கொண்டனர். அவர்களுக்குப் பதிலளித்த அப்துல் பஹா பின்வருமாறு கூறினார்: “நீங்கள் எமக்கு வழங்கிய சேவைகளுக்கு நன்றி கூறுகின்றேன். உண்மையாகவே நீங்கள் எனக்குச் சேவையாற்றியிருக்கின்றீர்கள். அல்லும் பகலும் எனக்கு சேவையாற்றி தெய்வீக நறுமணங்களை பரப்புவதில் நீங்கள் பாடுபட்டுள்ளீர்கள். நான் உங்களது தியாகம் மிக்க சேவைகளை ஒரு போதும் மறக்க மாட்டேன். இறைவனுடைய நல்விருப்பத்தினை அடைவதைத் தவிர உங்களுக்கு வேறெந்த நோக்கமும் இருந்ததில்லை. அவரது இராஜ்த்தினுள் பிரவேசித்தலைத் தவிர நீங்கள் வேறெந்த ஸ்தானத்திற்கும் நீங்கள் ஆவலுற்றதில்லை. இப்பொழுது நீங்கள் எனது குடும்பத்தாருக்காக சில பரிசுகளைக் கொண்டு வந்துள்ளீர்கள். இப் பரிசுகள் போற்றுதலுக்குரியவை. ஆனால், இவற்றை விட மிக விலை உயர்ந்த பரிசுகள் என்னவெனில், இதயங்களில் நிலையாக குடிகொள்ளப்பட வேண்டிய இறையன்புதான். முன்னது, தற்காலிகமானவை. ஆனால், பின்னதோ, நித்தியமானவை. நீங்கள் கொண்டு வந்த பரிசுகளை பெட்டியில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பதுடன், அவை இறுதியில் அழிந்து விடும். ஆனால், மற்றதோ, உள்ளங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இறைவனின் எல்லா உலகங்கிலும் நித்தியகாலத்திற்கு நிலையாக இருக்கும். எனவே, எல்லா பரிசுகளிலும் உயரிய பரிசான உங்களது அன்பை மட்டும் நான் புனித குடும்பத்திற்காக இங்கிருந்து எடுத்துச் செல்கிறேன்.”
“இப்பொழுது நான் இப் பரிசுகளை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அவற்றை விற்று சிக்காகோ வழிபாட்டு இல்லத்திற்கு நிதியாக வழங்கிடும்பொருட்டு அவற்றை உங்களிடமே கொடுத்து விடுகின்றேன்.”
ஆனாலும், அந்நண்பர்கள் அப்துல் பஹாவிடம் மீண்டும் அதே கோரிக்கையை முன் வைத்தனர். ஆனால், அப்துல் பஹா மீண்டும் இவ்வாறு பதிலளித்தார்: “நித்திய உலகில் பழுதுபடாதிருக்கவல்ல ஒரு பரிசை உங்கள் சார்பாக நான் கொண்டு செல்ல விரும்புகின்றேன்: அதாவது, இதயங்களின் பொக்கிஷ பேழைகளுக்குச் சொந்தமான ஆபரணங்கள் அவை; அதுவே சிறந்தது.”